Saturday, 24 December 2022

ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ளது பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.

 *பாலதண்டாயுதபாணி திருக்கோவில் - ஈரோடு*


   

ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ளது பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.  


Sri Balathandayuthapani Temple, Korumaduvu dam Road https://maps.app.goo.gl/fi5bSQfE81j5jU6CA

முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம், பழனியைப் போல மேற்கு நோக்கிய சன்னிதி அமைந்த கோவில், மூன்று கிருத்திகைக்குள் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம், பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் பார்வதி சுயம்வர யாகம் நடைபெறும் ஆலயம், சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக விளங்குவது ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில்.


*தல வரலாறு*


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கெம்ப நாயக்கன் பாளையத்தில் குப்பண்ணக் கவுண்டர் என்ற பிரம்மச்சாரி வாழ்ந்து வந்தார். 


இவர் தன் பிழைப்பிற்காகத் தேனீர் கடை நடத்தி வந்தார். ஒருநாள் முருக பக்தரான இவரின் கனவில் முருகப்பெருமான் தோன்றினார். 


“இவ்வூரின் வடக்கே ஊஞ்ச மரங்கள் நிறைந்த வனத்தில் என் காலடிபட்ட தலம் உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பு, நான் மக்களைக் காத்தருள்வேன்” என்றார்.


அதன்படி அந்த இடத்தை குப்பண்ணன் தேடி கண்டுபிடித்தார். அங்கே ஓரிடத்தில் ஐந்து முழம் பூ, அருகே ஆறு முழம் பூவும், அதன் அருகே ஒன்பது முழம் பூவும் குவியலாக இருந்தன. 


அவ்விடத்தில் விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் சன்னிதி அமைக்க விரும்பினார். வசதியில்லாத நிலையிலும், முருகப்பெருமான் விருப்பத்திற்கு இணங்க, அதற்கான முயற்சியில் இறங்கினார். அவரது ஆர்வத்தைக் கண்ட பலரும் பொருளுதவி அளித்தனர்.


ஆலயத் திருப்பணிக்குத் தங்கள் நிலத்தில் விளைந்துள்ள மரங்களை வெட்டிக்கொள்ள, இருட்டிப்பாளையம் தாசமாதய்யாவும், ஜடையருத்ரே கவுண்டரும் சம்மதித்தனர். 


மரங்களை வெட்டி கெம்பநாயக்கன் பாளையம் வரும் வழியில் கடம்பூர் வன அலுவலரான ஜம்பையர் என்பவர் மாட்டு வண்டியைப் பறிமுதல் செய்து மரங்களை கைப்பற்றினார். 


முருகன் கோவில் திருப்பணிக்காக கொண்டு செல்வதாக எடுத்துரைத்தும் வன அலுவலர் கேட்கவில்லை.


மாடுகள் பூட்டிய வண்டியை அவிழ்த்துவிட வந்தபோது, அவரின் இரு கண்களும் பார்வையிழந்தன. உடலில் இனம்புரியாத எரிச்சல் ஏற்பட்டது. பதற்றம் அடைந்த அந்த அதிகாரி, குப்பண்ணனிடம் சரணடைந்தார். 


அதற்கு அவர் “இது முருகப்பெருமான் செயல். மன்னிப்பை அவனிடம் மனமுருகி கேளுங்கள். கருணை செய்வார்” என்றார்.


அதன்படியே வன அலுவலர், முருகப்பெருமானை நினைத்து மன்னிப்பு வேண்டினார். 


அடுத்த நொடியே அவரது உடலில் ஏற்பட்ட எரிச்சல் நின்றது. கண்பார்வையும் திரும்பக் கிடைத்தது. அதன்பின்னர் அந்த வன அலுவலரே, தன்னுடைய சொந்தப் பொறுப்பில் மரங்களையும் வண்டியையும் கெம்பநாயக்கன் பாளையம் கொண்டு போய் சேர்த்தார். 


அதன்பிறகு கட்டுமானப் பணிகள் நடைபெற்று கோவில் சிறப்பாக எழுந்ததாக தல வரலாறு சொல்லப்படுகிறது.


திருப்பணிகள் நடைபெற்று, ஆலயத்தில் தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வந்தது. 


அதற்காக திருமுருகன்பூண்டியில் இருந்து விநாயகர் மற்றும் மூலவர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட சிலைகளைக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் ஆலயத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக, பஸ் கண்டக்டர் அந்த சிலைகளை பஸ்சில் ஏற்ற மறுப்பு தெரிவித்தார். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர், ஏற்கனவே வன அலுவலர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையைப் பற்றி எடுத்துரைத்தார். உடனே தன்னுடைய தவறை உணர்ந்த பஸ் கண்டக்டர், தெய்வ விக்கிரகங்களை பஸ்சில் ஏற்றி பத்திரமாக கொண்டு செல்ல உதவி புரிந்தார்.


கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு யானைகள் அங்குள்ள நீர்நிலையில் தண்ணீர் பருக வந்தன. ‘யானைகளால் சிலைகள் சேதமடைந்தால் எப்படி கும்பாபிஷேகம் நடத்துவது?’ என்று ஊர்மக்கள் பயந்தனர். அப்போது ஒரு பக்தர் “முருகா, முருகா” என கோஷமிட யானைகள் அங்கிருந்து அகன்று, காட்டிற்குள் ஓடி மறைந்த அதிசயமும் இந்த ஆலயத்தில் நடந்திருக்கிறது.


ஆலய அமைப்பு :


கிழக்கு நோக்கிய விநாயகர் சன்னிதி எதிரே மேற்கு நோக்கிய பால தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி அமைந்துள்ளன. இது தவிர சிவன், பார்வதி, ஏகபாத மூர்த்தி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு, காலபைரவர், நவக்கிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. குலதெய்வமான செல்வநாயகிக்குத் தனி சன்னிதி உள்ளது. கல்லால மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமைந்துள்ளார்.


மேற்கு பார்த்த முருகன் சன்னிதி மிகவும் அபூர்வமானது. பழனி, கோபி பச்சை மலை, மயிலை கபாலீஸ்வரர் கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படும் அமைப்பு ஆகும் இது. சுமார் இரண்டடி உயரத்தில் வலது கையால் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து அருளாசி வழங்கும் கோலம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இவர் சாட்சியாக விளங்குகிறார். பழனி தண்டாயுதபாணியை நினைவுபடுத்தும் கோலத்தில் காட்சி தருகிறார், பாலதண்டாயுதபாணி.


திருமணத் தடைபட்டவர்கள், கிருத்திகை நாளன்று நேரில் வந்து மனமுருக வேண்டிக் கொண்டால், மூன்று கிருத்திகைக்குள் திருமணம் நடந்து முடிவதாக இவ்வூர் பக்தர்கள் உறுதிபட கூறுகின்றனர்.


இதேபோல, ஆண்டுதோறும் வைகாசி 26-ந் தேதி இலவசமாக நடைபெறும் பார்வதி சுயம்வர யாகத்தில் கலந்துகொண்டு, தங்கள் ஜாதகத்தை அவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்பவருக்கு ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.


இப்பகுதி, மலைவாழ் மக்களின் விருப்ப தெய்வமாக பாலதண்டாயுதபாணி திகழ்கின்றார். வியாபார நிமித்தமாக இந்தப் பகுதிக்கு வந்த முருக பக்தர் ஒருவர் கிருத்திகை நாளன்று, தள்ளிப்போகும் தன் மகளின் திரு மணத்திற்கு வேண்டிக்கொள்ள கைமேல் பலன் கிடைத்தது. மனம் மகிழ்ந்த அவர், திருப் பணிக்கு பெரும் தொகையினைத் தந்து, தன் நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த ஆலயத்தில் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, பித்ருக்கள் சாப விமோசனம் பெற பித்ருக்களுக்கான தனி ஆலயம் உள்ளது.


பார்வதி சுயம்வர யாகம்:


ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர். மலையடிவாரக் கிராமத்தில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், சலசலப்பு ஏதும் இன்றி வழி படுவதும் வியப்பாக உள்ளது. இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்பதும், அன்னதானம் நடைபெறுவதும் கூடுதல் சிறப்பு. சின்ன சின்ன விழாக்களுக்கெல்லாம், கட்டணம் வசூல் செய்பவர்களுக்கு நடுவில், ஒரு கிராம மக்கள் இலவசமாக இந்த யாகத்தை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இக்கோவில் புதுப்பொலிவுடன் திகழ, முருகன் அடியார்கள் ஆதரவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


அமைவிடம் :


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெம்பநாயக்கன் பாளையம் கொருமடுவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - கடம்பூர் வழித்தடத்தில், நால்ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது. சத்தியமங்கலம், கோபியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

No comments:

Post a Comment