🟥🟥🟥🚩🚩🟨🟨🟨
*ஈசன் அடி போற்றி* *எந்தை அடி போற்றி*
*சர்வம் சிவமயம்*
🟥🟥🟥🚩🚩🟨🟨🟨
*சமயபுரத்துக்கு அருகே உச்சினிமாகாளி கோயில்*!
பலருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயில் குறித்துத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு அருகே மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரத்தையும், விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி மாகாளிக் கோயிலையும் தெரிந்திருக்காது. திருச்சிக் காரர்கள் பலருக்குமே இது குறித்துத் தெரியவில்லை. நான் ஏற்கெனவே பதினைந்து வருடம் முன்னர் இந்தக் கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். இப்போதும் இரண்டு வருடம் முன்னர் விருந்தாளிகள் வந்திருந்த ஒரு சமயத்தில் இனாம் சமயபுரம் மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம். இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன்.
முதலில் நாங்கள் சென்றது மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி. சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது. முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம். அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம். நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன். அப்போது படங்கள் எடுக்காததால் படங்கள் போடவில்லை. இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம். காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
விக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி. காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா? அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில். அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள். அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது. வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம். அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே ஏக கலசம் காணப்படும். ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.
நுழைவாயில் இது தான்
மூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை. மாறாக ரிஷபம் காணப்படுகிறது. வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர். இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார். மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.
கோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம். எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம். சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது. ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம். கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார். படங்கள் எடுக்க அனுமதி இல்லை.
இந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது. விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.
கீழே வேதாளமும், சுளுவனும் காணப்படும் சந்நிதி
மேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர். முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது. தற்சமயம் இல்லை. வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது. சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர். இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.
இவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார். கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.
சந்தான கிருஷ்ணன் வேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.
இவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.
மதுரை வீரன் மனைவியருடன்
அம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர். தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம். இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது. நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.
இக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம். கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது. இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.
கோயில் ப்ழமையாகவே காணப்பட்டது. தற்சமயம் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டபடியால் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. சமயபுரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டரில் இருக்கும் மாகாளிபுரத்தில் இந்தக் கோயில் உள்ளது. அடுத்து ஆதி சமயபுரம் என்னும் இப்போதைய சமயபுரம் மாரியம்மனின் தாய் எனப்படும் மாரியம்மன் கோயிலைக் காணலாம்.
🟥🟥🟥🚩🚩🟨🟨🟨
*ஓம் நமசிவாய வாழ்க*
*நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி*
*மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி*
🟥🟥🟥🙏🙏🟨🟨🟨
No comments:
Post a Comment