Monday, 26 December 2022

பட்டுப்போன மரத்தை தளிர்விடச் செய்த சித்தர்கள்

 *பட்டுப்போன மரத்தை தளிர்விடச் செய்த சித்தர்கள்*

   

கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர்.


கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர். 


இந்த ஆலயம் ஆரம்பத்தில் மண்சுவரால் சுற்றுச் சுவர் எழுப்பி, பனை ஓலையால் கூரை வேயப்பட்டதாக இருந்தது. 


சித்தர்கள் அருள் கடாட்சத்தால் பல நன்மைகளைப் பெற்ற பக்தர்களால், நாளடைவில் ஆலயம் வளர்ச்சியடைந்தது.


இந்த ஆலயத்தில் தனியாக குறி சொல்பவர் என்று யாரும் கிடையாது. தனக்கு வேண்டியதைக் கேட்டு வரும் பக்தர்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் வாயிலாகவே சில வார்த்தைகள் கேட்கும். 


அதனையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நன்மைகள் விளைவதாக கூறப்படுகிறது. 


அப்படித்தான் ஒரு முறை ஒருவர் மூலமாக வாலாம்பிகை அன்னை, ஆலயத்தின் வளர்ச்சியை உணர்த்தினார்.


‘இவ்விடம் வளரும் திருச்செந்தூராக விளங்கும். கருங்கல்லிலே கற்பக் கிரகம் கட்டப்படும். 


தொடர்ந்து பல மண்டபங்கள் எழுப்பப்படும். கொடிமரம் உருவாகும். வருடத்துக்கு இரண்டுமுறை கொடி ஏறும். கோபுர வாசல் முன்பே, தெப்பம் தோன்றும்’ என்றார். 


அந்த அருள் வாக்கு பலித்தது. தற்போது அன்னை கூறியபடியே இக்கோவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.


ஞானியார்கள் விரும்புவது அன்பு, நீதி, தர்மம் நேர்மை மட்டுமே.. இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபட்டால், மகான் களின் ஆசி உண்டு. 


இங்கு வந்து வணங்கி நின்றால் அனைத்து செயலும் வடிவம் பெறும். குருவின் தரிசனமும், ஸ்ரீவாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற் புதம்.


அன்பர்களுக்கெல்லாம் இருபெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள்பாலிப்பது ஸ்ரீ வாலையின் லீலா வினோதம். 


எனவேதான் இந்த ஆலயத்தில் பக்தியோடு பூஜிப்பவர்களுக்கு கேட்டவரமும், தியானம் செய்பவர்களுக்கு ஞானமும் கைகூடுகிறது. 


அமைதியாய் வந்து அன்னை சன்னிதானத்திலும், குரு சிஷ்யர்கள் பீடம் முன்பும் அமர்ந்து வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடக்கிறது. 


சாதி மதம் கடந்து இவ்வாலயத்தில் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.


இந்த நவீன யுகத்தில் பல அற்புதங்கள் இந்த பீடத்தில் நடை பெறுகிறது என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று பட்டமரம் தளிர்ந்த வரலாறு.


கோவிலின் தல விருட்சம் மஞ்சணத்தி மரம். இந்த மஞ்சணத்தி மரத்தின் அடியில்தான் வாலை குருசாமியும், காசியானந்தரும் வாலையம்பிகைக்கு பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 


இம்மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி காட்சி தரு கிறார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை கோவிலின் பழமையை பறைசாற்றும் விதமாக இந்த மரம் விளங்கியது. திடீரென ஒரு நாள் மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது.


பக்தர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர். என்ன செய்வது? எனத் தெரியாமல் தவித்தனர். 


‘புதிய மஞ்சணத்தி மரக்கன்றை நட்டு வளர்க்கலாம்’ என்று ஊர் மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ‘பட்டமரம் துளிர்க்கும்’ என்ற உத்தரவு கிடைத்தது. 


அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவில் தளிர் விட்டது. அந்த புதிய தளிர் செடிதான் வளர்ந்து, தற்போது தல விருட்சமாக காணப்படுகிறது. 


பழைய மரம் கோவில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதிய மரத்தடியில் உச்சிஷ்ட கணபதி அருளாசி தருகிறார்.


பக்தர் ஒருவர் சுவாமிக்கு பொருள் கொடுப்பதாக நினைத்து, அதை தனது வீட்டின் பீரோவில் வைத்து விட்டார். 


சில நாட்களில் அதை முற்றிலுமாக மறந்து விட்டார். ஒரு நாள் அவர் கோவில் சன்னிதானத்தில் நின்று வணங்கிய போது ‘எனக்குரிய பொருள் உன் வீட்டு பீரோலில் உள்ளது' என சுவாமி உணர்த்தினார். 


அதன் பிறகே அவருக்கு நினைவு வந்தது. உடனே சென்று அந்த பொருளை எடுத்து வந்து கோவிலில் ஒப் படைத்தார். 


இதுபோலவே பல நிகழ்வுகள் பக்தர்கள் வாழ்வில் நடந்தேறி இருக்கிறது.


சித்தர் பெருமக்களை நம்பி வருவோருக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. 


இன்றும் பலர் இந்த ஆலயத்திற்கு வந்து, தொழில் தொடங்குவது, அரசு வேலை தேடுவது போன்ற காரியங்களுக்கு குரு - சிஷ்யர்களின் உத்தரவை வேண்டி நிற் கிறார்கள்.


இந்த ஆலயத்தில் எப்போது சென்றாலும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது. 


அன்னதானம் சாப்பிடும் போது பக்தர்கள் தங்களுக்கு என்ன பிரார்த்தனை உள்ளதோ அதை வேண்டி சாப்பிட அது உடனே கைகூடுகிறது.


*ஆலய அமைப்பு*


முதலில் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளியில் இருந்து நேர் எதிரே உள்ள சாலையில் செல்லும்போது அங்கே பாலா சேத்திரம் உள்ளது. 


நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், இடது புறம் அகத்திய பெருமான் அருளாசி தருகிறார். எதிரே ஆலய முகப்பு நம்மை வரவேற்கிறது.


வலது புறம் திரும்பினால் கல் மண்டபம் பிரமாண்டமாக காட்சியளிக்க, உள்ளே குருவும் சிஷ்யரும் ஒரு கருவறையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்கள். வாலை குருசாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்திகேஸ்வரப் பெருமான் காட்சியளிக்கிறார்.


குரு - சீடர் சன்னிதிக்கு வலப்புறம் சந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி உள்ளது. 


‘மனோன்மணி’ என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. ‘மன இருளை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள்’ என்பது இதன் பொருள். 


பின்புறம், சுற்றுப் பிரகாரத்தில் கன்னி விநாயகரும், பாலமுருகனும், சண்டிகேஸ்வரரும், இடப்புறத்தில் தெற்குநோக்கி நடராஜர் - சிவகாமி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.


தனிச்சன்னிதியில் தனி விமானத்துடன் பாலாம்பிகை வீற்றிருக்கிறார். அதற்கு வலப்புறம் வராகி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. 


வெளிப் பிரகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் வட கிழக்கு மூலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். 


ஆலயத்தின் பின்புறம் திருமாத்திரை தயாரிக்கும் கூடம் உள்ளது. மூலிகையை அம்மியில் அரைத்து மாத்திரைகள் உருவாக்கப்படுகிறது. 


இந்த திருமாத்திரையை 41 நாள் சாப்பிட்டு வந்தால், தீராத வியாதிகள் கூட நீங்கும் என்பது நம்பிக்கை.


வருடம்தோறும் சித்திரை, ஆவணி மாதங்களில் 11 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. 


ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 


திருமணம் தடை ஏற்படு பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடை நீங்கி செல் கிறார்கள். 


இரவு சீர் கொண்டு செல்லுதல், அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வருகிறார்கள்.


அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. 


பவுர்ணமி அன்று மாலை வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள்வார். அப்போது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறும். 


*ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன*


மாதம் இரு பிரதோஷமும், உச்சிஷ்ட கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.


வாலைகுருசாமிக்கும், காசியானந்தா சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். 


நாகருக்கு மஞ்சள் பொடி சாத்தி வர கடன் தொல்லை விலகுகிறது.


சித்தர்கள் அனைவரும் குரு முகமாக தீட்சை பெற்றே, வாலை அம்மனை அடைந்தனர். 


அதேபோல, வாலைகுருசாமி, அவரது சீடர் காசியானந்தர் இருவரையும் முழுமையாக வணங்கிய பின்னரே, வாலையம்மனை வழிபட வேண்டும். அப்போதுதான் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


*சிறுவர்கள் மீது விழுந்த பனைமரம்*


சுமார் 70 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு சம்பவம் ஆலயத்திற்கு மேலும் புகழ் சேர்க்கிறது.


வாலை குருசாமியின் வருஷாபிஷேக பூஜையின் இரண்டாவது நாள், அங்கிருந்த பனைமரத்தின் அடியில் ஆறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். 


அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றில், பனைமரத்தின் மட்டைக் கிளைகளுடன் கூடிய மேல்பகுதி ஒடிந்து விழுந்தது. 


மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது அந்த மட்டை கிளை விழுந்து, அவர்களை மூடி விட்டது. 


அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘என்ன ஆயிற்றோ’ என்ற அச்சத்துடன், அனைவரும் ஓடி வந்து மட்டைகளை அப்புறப் படுத்த, அதன் அடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களும் சிறு காயம் கூட இல்லாமல் சிரித்தபடியே வெளியே வந்தனர். 


இந்த சிறுவர்களின் ஒருவர் 84 வயது பெரியவராக, அந்த சம்பவத்திற்கு சாட்சியம் கூறியபடி இன்றும் அந்த ஊரில் வலம் வருகிறார். 


*அமைவிடம்*


திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் இருந்தும், சாத்தான்குளம் மற்றும் உடன்குடியில் இருந்தும் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொம்மடிக்கோட்டை. உடன்குடி, சாத்தான்குளத்தில் இருந்து பஸ்வசதிகள் உள்ளன.

No comments:

Post a Comment