#இரண்டு கோவில்களின் அதிசய ஒற்றுமைகள்..!
காஞ்சிபுரத்தில் இருக்கும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கும், கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவிலுக்கும் கால இடைவெளி 300 ஆண்டுகள்.
வைகுண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகே அங்கோர் வாட் கோவில் கட்டப்பட்டது.
அந்த இரு கோவில்களுக்கும் இடையே உள்ள ஆகாசவெளி 2,500 கிலோ மீட்டர் தூரம்.
ஆனால் இந்த இரு கோவில்களும் அசாத்தியமான பல ஒற்றுமைகளைத் தாங்கி இருக்கின்றன என்பது வினோதமாக இருக்கிறது.
வைகுண்ட பெருமாள் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டே அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு அவை இடம் தருகின்றன.
பெரும்பாலான இந்துக்கோவில்கள் கிழக்கு நோக்கியே கட்டப்படும். ஆனால், விதிவிலக்காக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் மட்டும் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் போலவே கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் மிக வித்தியாசமாக மேற்கு நோக்கி இருக்கிறது.
இந்துக்கோவில்களின் கோபுரங்கள் பல அடுக்குகளாக இருந்தாலும், சன்னிதி இருக்கும் இடம் தரைத்தளத்திலேயே காணப்படும். பிரமிட் போன்ற அடுக்குகளில் சன்னிதி பெரும்பாலும் அமைக்கப்படுவது இல்லை.
ஆனால், வைகுண்ட பெருமாள் கோவில், மூன்று அடுக்கு களாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு ஒவ்வொரு அடுக்கிலும் விஷ்ணு, ஒவ்வொரு கோலத்தில் இருப்பது போல உள்ளது. (காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரத பெருமாள் கோவிலும், மதுரை கூடலழகர் கோவிலும் மூன்று அடுக்குகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது).
வைகுண்ட பெருமாள் கோவில் போலவே, அங்கோர்வாட் கோவிலும் மூன்று அடுக்குகளாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது.
வைகுண்ட பெருமாள் கோவில் என்று இப்போது அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவில் ‘பரமேசுவர விண்ணகரம்’ என்ற பெயரைக் கொண்டே விளங்கியது. அதாவது, ‘விஷ்ணுவின் நகரம்’ என்று இதைக்கொள்ளலாம்.
அங்கோர்வாட் என்று அழைக்கப்படும் கோவிலின் ஆதி காலப்பெயர் ‘விஷ்ணுலோக்’ என்பதாகும். விஷ்ணுவின் உலகம் என்பதைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட இரு கோவில்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பெயரைத் தாங்கி இருப்பது நோக்கத்தக்கது.
தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களின் உள் பகுதியில், சன்னிதியைச் சுற்றி அகழி அமைக்கப்படுவது இல்லை.
ஆனால், வைகுண்ட பெருமாள் கோவிலின் சன்னதியை சுற்றிலும் 3 அடி ஆழத்துக்கு அகழி காணப்படுகிறது.
இதைப்போலவே அங்கோர்வாட் கோவிலிலும் சன்னதியை சுற்றி 4 அடி ஆழத்துக்கு அகழி இருப்பதையும் அதற்கு தண்ணீர் வருவதற்கும், வழிந்து செல்வதற்கும் தூம்புகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் காணமுடிகிறது.
பாற்கடலில் அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்தார்கள் என்ற புராண செய்தி, தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டாலும், அந்தக் காட்சி பெரும்பாலான தமிழகக் கோவில்களில் சிற்பமாக இடம்பெறுவது இல்லை.
அந்தக்காட்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் சிற்பமாகக் காணப்படுகிறது. அதைப் போலவே அங்கோர் வாட் கோவிலிலும், பாற்கடல் கடையப்படும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில தமிழக கோவில்களில் வரலாற்று சம்பவம் கல்வெட்டாக எழுத்தில் காணப்படும். ஆனால் அதற்கான காட்சிகள் சிற்ப வடிவில் இருப்பது இல்லை.
வைகுண்ட பெருமாள் கோவிலில் மட்டுமே, பல்லவ குலத்தின் வரலாறு, சுமார் 160 அடி நீளத்துக்கு சுவரில் தொடர் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. அந்தக் கோவிலின் சன்னதியை சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தின் 4 பக்க சுவர் முழுவதும் இந்த அழகிய சிற்பத்தொகுதியைப் பார்க்க முடியும்.
இதைப் போலவே அங்கோர்வாட் கோவிலின் பிரகார சுவர் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அந்த சிற்பத் தொகுதியில், கோவிலைக் கட்டிய மன்னர் சூரிய வர்மன் நடத்திய போர்க்காட்சிகள் வரலாற்று ஆவணமாக செதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல வகையிலும் வைகுண்ட பெருமாள் கோவிலும், அங்கோர்வாட் கோவிலும் ஒரே மாதிரியான ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ஓர் அந்தணர், வைகுண்டபெருமாள் கோவில் அடிப் படையில் அங்கோர் வாட் கோவிலை அமைக்கலாம் என்று கம்போடிய மன்னர் சூரிய வர்மனுக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாம் என்றும், அதன்படி அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நினைக்க இடம் இருக்கிறது.
வைகுண்ட பெருமாள் கோவிலையும், அங்கோர்வாட் கோவிலையும் நேரில் பார்வையிட்ட வெளிநாட்டு அறிஞர்கள் பலர், இந்த இரு கோவில்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் ரியா (தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை நடத்தியவர்), அமெரிக்காவில் உள்ள ஸ்மித் பல்கலைக்கழகத்தில் மதத்துறை பேராசிரியராக பணியாற்றிய டென்னிஸ் ஹட்சன் போன்ற பலர், வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்களை ஆய்வு செய்து புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த சி. மீனாட்சி என்பவர், 1936-ம் ஆண்டு வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
34 வயதிலேயே மரணம் அடைந்துவிட்ட அவர் வெளியிட்ட அறிக்கை தான், வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணமாகத் திகழ்கிறது.
வைகுண்ட பெருமாள் கோவிலின் சன்னதியைச் சுற்றி, 40 அடி நீளம், 40 அடி அகலம் என்ற அளவில் பிரகாரம் அமைந்துள்ளது.
இந்த பிரகாரத்தின் சுவர் முழுவதும் பல்லவ குல வரலாறு, தொடர் சிற்பங்களாக, இரண்டு அடுக்குகளாக செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்குள் நுழைந்ததும், இடதுபுறமான மேற்குப்பகுதி சுவரில் இருந்து சிற்பத் தொகுதி தொடங்குகிறது. பல்லவர்கள், பிரம்மாவின் வாரிசு என்பதில் இருந்து சிற்பம் ஆரம்பம் ஆகிறது.
பின்னர் படிப்படியாக ஒவ்வொரு சிற்பத்திலும் பல்லவர் குல வரலாறு பல காட்சிகளாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு மன்னருக்கும் நடைபெற்ற முடிசூட்டு விழா காட்சிகளும், முக்கிய வரலாற்று நிகழ்வுகளும் சிலைகளாக செதுக்கப்பட்டு உள்ளன.
மன்னர் 2-ம் நந்திவர்மன், தூர தேசத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அழைத்து வரப்படுவது, பின்னர் மன்னராக முடி சூட்டிக்கொள்வது ஆகிய காட்சிகள் தெற்குப்புற சுவரை அலங்கரிக்கின்றன.
கம்போடியாவில் இருந்து வந்த 2-ம் நந்திவர்மன், வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டியது வரை உள்ள காட்சிகளுடன் சிற்பத்தொகுதி நிறைவு பெறுகிறது.
இந்த சிற்பங்களின் இறுதித்தொகுப்பில், வைகுண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்ட காட்சி, மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் சிறிய மாதிரி வடிவத்துடன், மிக அழகாக அந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
வெறும் சிற்பங்கள் மட்டும் அமைக்கப்பட்டால், அது என்ன சிற்பம், அது சொல்லும் தகவல் என்ன என்பது தெரியாமல் எதிர்கால சந்ததியினர் திகைக்க நேரிடும் என்பதால், ஒவ்வொரு சிற்பத்திற்குக் கீழேயும், அது பற்றிய குறிப்பு பல்லவ கிரந்த எழுத்துக்களால் கல்வெட்டாக பதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், கால வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, கல்வெட்டின் பல பகுதிகள் அழிந்துவிட்டன. என்ன காரணத்தாலோ கல்வெட்டு முழுமை அடையாமலும் இருக்கிறது. இப்போது இருப்பவற்றில் ஒரு சில வரிகள் மட்டுமே படிக்கும் வகையில் உள்ளன.
வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டிய 2-ம் நந்திவர்மன், கம்போடியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு காஞ்சிபுரம் மன்னரானவர் என்று கூறப்பட்டாலும் அதை விளக்கும் சரித்திர சான்றுகள் வேறு ஏதும் இல்லை.
பட்டாட்டாள் மங்களம் மற்றும் காசக்குடி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகள், 2-ம் நந்திவர்மன் பற்றிய தகவலை ஓரளவு தெரிவித்தாலும், அந்த மன்னர் வேறு தேசத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்தது எப்படி என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.
அந்த மன்னரின் வரலாறு வைகுண்ட பெருமாள் கோவிலில் மட்டுமே காணப்படுகிறது.
வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள சிற்பத்தொகுதியில், மன்னர் மகேந்திர வர்மன் மறைவுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற குழுவினர், வேறு தேசத்தில் உள்ள மன்னர் ஹிரண்ய வர்மனை சந்திப்பது போலவும், அவரிடம் காஞ்சிபுர நிலையை விளக்கிக் கூறுவது போலவும், அதன் பின்னர் ஹிரண்ய வர்மனின் மகன் பல்லவ மல்லாவை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வருவது போலவும், காஞ்சிபுரத்தில் பல்லவ மல்லாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது போலவும் பின்னர் அவர், 2-ம் நந்தி வர்மனாக முடி சூட்டிக் கொள்வது போலவும் தொடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலின் தெற்குப்புற பிரகார சுவரில் உள்ள அந்த சிற்பங் களுக்கு அடியில் கல்வெட்டாக, அந்த நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு வாசகங்கள் காணப்படுகின்றன.
அந்த வாசகத்தில், ‘பல்லவ மல்லா, ஏராளமான மலைகளையும், அடர்ந்த காடுகளையும், நதிகளையும் தாண்டி அழைத்து வரப்பட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.
வெகு தொலைவில் உள்ள கம்போடியா நாட்டில் இருந்து அவர் தரை மார்க்கமாக அழைத்து வரப்பட்டதையே இந்த வர்ணனை சுட்டிக்காட்டுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல்லவ மல்லா, கம்போடியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு இருக்கலாம் என்பதற்கு இது ஒன்று தான் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
2-ம் நந்திவர்மன் காலம் மட்டும் அல்லாமல், தமிழகத்தை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த காலம் முழுவதும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.
பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இந்தத் தொடர்பு நீடித்தது.
ஒரு சமயம், ஆட்சிப்பொறுப்பை இழந்த கம்போடியா நாட்டு மன்னருக்காக தமிழகத்தில் இருந்து சென்ற சோழ மன்னரின் படைகள், மிகப்பெரிய போர் நடத்தி அந்த மன்னருக்கு ஆட்சியை மீட்டுக் கொடுத்தனர் என்பதும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.
இந்த உதவிக்காக கம்போடியா நாட்டு மன்னர், சோழ மன்னருக்கு பரிசுகள் வழங்கி நன்றி பாராட்டினார்.
தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்கு பெரிய கோவில் கட்டியபோது அந்தக் கோவில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர், சிதம்பரம் கோவிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.