Monday, 13 May 2019

சித்தர் வாக்கு - ஆரோக்கியம், கண் பார்வை

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
கர்மா, தர்மம், பெரியவர்கள் வழியாக, இவ்வுலகம் இந்த அளவுக்காவது இன்று சிறந்து விளங்குகிறது என்று உணர்கிறேன் அய்யா! ஒரு மனிதன், முதலில் தன் உடலை ஆரோக்கியமாக, சுத்தமாக வைத்துக்கொண்டு வாழ்க்கை பாதையில் நடந்து சென்றால், இந்த சித்த மார்க்கத்தின் எந்த எல்லை வரை செல்ல முடியும்? ஆரோக்கியத்தை மேம்படுத்த சில வழிகளையும்  கூறுங்களேன்!"

*சித்தன் பதில்*:—
தின வாழ்க்கையில் எத்தனையோ வழிகளை, நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து சென்றிருக்கிறார்கள். அதை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், *வாழ்க்கையின் தேவைகளுக்கான தேடல்களுக்கு தன் முழு நேரத்தையும் செலவிடும் மனிதனுக்கு, தன்னை அறிய, தன் கடமைகள் என்ன என்று தேடுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.* எத்தனைநாள், கட்டு சோறும், கொம்புப்புல்லும், சாப்பாடு போடும் என்று யோசிப்பதில்லை. இருந்தாலும், கேட்டதற்காக சொல்கிறேன். *ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான், மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.* ஏன் என்றால் இந்த உடலைதானே "நான்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் தினமும் செய்யலாம் என்று கூறுகிறேன்." என்றார்.

*அடியவர்*:—-
மிக கவனமாக பதிவு செய்ய ஆரம்பித்தார்.

*சித்தன் பதில்*:—-
கண் பார்வை" ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானது. பார்வை இழந்த ஒருவனால், இவ்வுலகில் எதையும் உணர முடியாது. கேள்வி ஞானம் மட்டும்தான் அவன் வாழ்க்கையை நடத்த உதவி புரியும். மேலும் கடைசி வரை தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முழுமையாக, அவன் பிறரை சார்ந்தே இருக்கவேண்டி வரும். "பார்வை குறைவு" என்கிற நிலை இந்த சமூகத்தில் 90 சதவிகிதம் மனிதர்களை பாதித்துள்ளது. *முன் காலத்தில், 90 வயசான பெரியவர் கூட, கண்ணாடி அணியாமல் வாழ்ந்து, தினசரி கடமைகளை தானே நிறைவேற்றி வந்ததை பார்த்திருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் அப்படி பார்ப்பதே மிக மிக அரிது.* பிறந்து 3 வயதிற்குள்ளேயே, கண் குறைபாட்டை அடைந்து, கண்ணாடியுடன் வளரும் குழந்தைகள் ஏராளம். இது ஏன் என்று ஒருவரும் கேட்பதில்லை, கவனிப்பதில்லை. வருடம் செல்லும்தோறும், கண்ணாடியின் அளவு தடிமனாகி, ஒரு நிலையில், அது இல்லை என்றால், ஒன்றுமே தெரிவதில்லை என்கிற நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. நேற்றுவரை, நன்றாக இருந்த கண் பார்வை, இன்று ஏன் குறைந்துபோனது, என்று கூடவா யோசிக்கத் தெரியாது. நீங்கள் தினமும் வாழும் முறையில் செய்கிற தவறுகள்தான், இதற்கு காரணம் என்று கூடவா புரியவில்லை?" என்று நிறுத்தினார்.



சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*