சோழ வளநாட்டின் தலைநகராம் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன்பேட்டையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைக் குறையாக (ஒரு தீவாக) உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். காவிரியின் கிளைநதியான வெட்டாறு இவ்வூருக்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் இவ்வூருக்குக் கிழக்கில் இணைந்து ஒரே பேராறாக பயணிப்பதால் இவ்வூர், காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கிடையே அமைந்த திருவரங்கம், திருவாைனக்கா போன்று ஆற்றிடைக் குறையாகவே விளங்குகின்றது,
வளைந்து நெளிந்து செல்லும் வெட்டாறு பாம்புடல் போன்றும், நாகத்தி என்னும் ஊர் பாம்பின் படமெடுத்த தலை போன்றும் விளங்குவதால் இவ்வூருக்கு நாகத் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இது காலப்போக்கில் நாகத்தி என மருவிவிட்டதாகவும் கூறுவர். இயற்கை எழில் சூழ்ந்த இவ்வூரின் கண், ஆழி சூழ்ந்த இவ்வுலகத்தில் வேறு எங்கும் காணவியலாத மிக அரிய பல்லவர் கால ஐயனார் திருமேனி ஒன்று விளங்குவதும், மிகப்பழைய சிவாலயம் ஒன்று காலவெள்ளத்தில் கரைந்து அதன் எச்சங்கள் மட்டுமே இன்று ஐயனார் ஆலயத்தில் காட்சி நல்குவதும் சிறப்புக்குரியவையாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வூரின் வரலாற்றுச் சிறப்புகளையும், தனித்தன்மை பெற்ற பூரணையுடன் திகழும் ஐயனார் ஆலயம் இதுவே
நாகத்தி ஐயனார் ஆலயம் பல்லவப் பேரரசர்கள் காலத்திலேயே (இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே) இங்கு ஐயனார் திருவுருவம் அமைக்கப்பெற்றதால் இங்கு ஒரு தேவி மட்டுமே காணப்பெறுகிறார். பீடம் ஒன்றின் மேல் ஐயனார் அமர்ந்திருக்க, அருகே ஒரு தேவி மட்டும் நிற்கும் கோலத்தோடு, ஏறத்தாழ 6 அடி உயரமாக விக்ரகம் வடிக்கப் பெற்றுள்ளது. வலது காலை பீடத்தின் மேல்குத்திட்ட நிலையில் அமர்த்தி, இடது காலை தொங்கவிட்டபடி ஐயன் அமர்ந்துள்ளார். வலக் கரத்தினை குத்திட்ட முழங்கால் மேல் அமர்த்திபக்கவாட்டில் நீட்டியுள்ளார்.
இடக்கரமோ பீடத்தின் மேல் ஊன்றப் பெற்றுள்ளது. கிரீட மகுடத்துடன் பரந்த ஜடாபாரம் காணப்பெறுகின்றது. வலக் காதில் குழையும், இடக்காதில் பத்ர குண்டலமும் விளங்க, மார்பை கழுத்தணி அலங்கரிக்கிறது. தடித்துத் திரண்ட புரிநூல் தோளிலிருந்து வயிறுவரை காணப்பெறுகிறது. தொடைவரை இடுப்பாடை விளங்குகிறது. பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய் ஒன்று நின்றிருக்கிறது.
தேவியோ நின்ற கோலத்தில் வலக்கரத்தில் தாமரை ஒன்றினை ஏந்தியவாறு பேரழகோடு காணப்பெறுகின்றார். இதனை ஒத்த ஒரு திருவடிவம் வேறு எங்கும் காணமுடியாது. இங்கு நிற்கும் தேவி தாமரையை ஏந்தியுள்ளதால் இவள் பூரணா தேவி என அழைக்கப் பெறுகிறாள்.
எழுத்து
குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்
No comments:
Post a Comment