Thursday, 28 December 2017

அகத்தியர் அருள்வாக்கு - பூக்கள்!

அகத்தியர் அருள்வாக்கு - பூக்கள்!

ஒருமுறை, நாடி வாசிக்க யாரும் இல்லாத பொழுது, "பூக்களில் எத்தனையோ விதங்கள் உள்ளது. அவைகளை பற்றிய விஷயங்களை சொல்லித்தர முடியுமா" என்று அகத்தியப் பெருமானிடம் வினவியபொழுது, அவர் மனம் மகிழ்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவைகளை உங்கள் கவனத்திற்காக, கீழே தருகிறேன்.

மனிதர்களை படைத்த இறைவன், அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தான். அதோடு மனிதர்களாலேயே துன்பங்களையும் தந்தான். பின்னர் மனிதர்களை வென்று நிம்மதியாக வாழ்வதற்கு பலமுறைகளையும், வழிகளையும் காட்டினான்.

இந்த வழிகாட்டுதலில் ஒன்றுதான் பக்தி. இதை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  ஞான பக்தி, ஆசாரிய பக்தி, ஆண்டவனுக்கு அருட்பணி செய்கின்ற பக்தி, கடைசியாக, பிடித்தமான மலர்களால் ஆண்டவனை நினைத்து அர்ச்சனை செய்யும் பக்தி.  இந்த நான்கு வகை பக்திகளும் அவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, நம்பிக்கைக்கு ஏற்ப செய்யப்படுவது.

ஞானபக்தி என்பது மிகப்பெரிய தவத்தினால் பெறப்படுவது.  இது எல்லோராலும் செய்யக்கூடியது அல்ல. அத்தனை வாய்ப்பு ஒரு சிலருக்கே ஏற்படும்.  ஆசாரியபக்தி என்பது ஆண்டவனை வழிபாடு செய்து பெறுவது. இதும் எல்லாவித மனிதர்களால் செய்யக் கூடியது அல்ல.

ஆண்டவனுக்கு நேரடியாக அருட்பணி செய்கிற பக்தி, இது கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, தம் தம் மத வழக்கத்துக்கு ஏற்ப, மனித நேயத்தை போற்றும் வகையில், நான்கு பேர்களுக்கு உதவிடும் வகையில் செய்யக் கூடிய, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய பக்தி.

இவை எல்லாம் தாண்டி நிற்கும் பக்திதான் மலர்களைக் கொண்டு நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு, அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தனை செய்வது.  இது ஒன்றுதான் சகலவிதமான மனிதர்களுக்கும் ஏற்ற பக்தி.  நிம்மதியை தரக் கூடிய பக்தி மாத்திரமல்ல, எந்த வித இடையூறும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை அழைத்து பக்தியினால் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடியது.

இதற்கு மலர்கள் அவசியம். சரி எந்தெந்த மலர்கள் எந்தெந்த கிரகங்களுக்கு, இறைவனுக்கு ஏற்றது என்பதை நமது முன்னோர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தானோ என்று சொல்லவில்லை.  ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான சூட்சுமத்தை வைத்து சொல்லி, இதை பின்னர் அனுபவ ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர், மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஞானிகள் மூலம், ரிஷிகள் மூலம், வேதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

சூரியன்:- உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 8, 12ம் வீட்டில் இருந்தால், "செந்தாமரைப்" பூவால் சூரியனை, ஞாயிறு தோறும் வழிபாட்டு வந்தால் உத்தியோகம், கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் விறுவிறு என்று விலகிவிடும். வேறு எந்த மலரைக் கொண்டும் சூரியனை வழிபடக்கூடாது. அப்படி ஒரு வேளை செந்தாமரைப் பூ கிடைக்கவில்லை என்றால் தாமரை தண்டு இதழால் திரியிட்டு விளக்கேற்றி வருவது கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

சந்திரன்:- ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்த சமயம் அவருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி அல்லது சந்திர அந்தரம் நடந்து கொண்டிருந்தால் அந்த நபர் சந்திரனுக்கு உரிய வெண்மை நிறத்துடைய "அல்லி மலரை" வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் நீர் சம்பத்தப் பட்ட வியாதிகள் வெளிநாடு செல்ல முடியாமல் ஏற்படும் தடங்கல்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வந்து விடலாம். "வெள்ளல்லி" மலர் கிடைக்காவிட்டால் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்று.

செவ்வாய்:- ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12இல் செவ்வாய் இருந்து செவ்வாய் தசையோ அல்லது புக்தி, அந்தரமோ நடை பெற்று - வியாதியினால், போட்டி, பொறாமையினால் முன்னேற முடியாமல் துன்பப்பட்டுக் கிடந்தால், அதிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரே வழி "சண்பக" மலரால் - செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது முருகப் பெருமானையோ வழிபட்டால் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் சட்டென்று விலகி வெளியே வந்து விடலாம்.

புதன்:- ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தேவை அற்ற பாதிப்புகள் எற்ப்படத்தான் செய்யும். கோர்ட் விவகாரம், தோல் சம்பந்தமான வியாதிகள், மாமன் உறவுமுறை பகை, தொழில் நஷ்டம் ஆகியவை வரலாம். இதிலிருந்து விடுதலை பெற "வெண் காந்தள்" மலரை வைத்து புதன் கிழமை தோறும் பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமானது. சிறந்த பரிகாரமும் கூட.

குரு:- ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12இல் குரு பகவான் இருந்து அதே சமயம் அவருக்கு குரு மகாதசை, புத்தி, அந்தரம் நடந்து கொண்டிருந்தால், குரு அனுகூலமாக மற்ற பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்வதை விட, குரு பகவானுக்கு பிரியமான "முல்லை" பூவால், வியாழன் தோரும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால், பயம் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றலாம்.

சுக்கிரன்:- ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், 12ம் வீட்டில் மறைந்திருந்தாலும், பகை வீடான குரு வீட்டில் தனித்திருந்தாலும், சுக்கிர தோஷம் என்று பெயர்.  இந்த சுக்கிர தோஷம் போக வேண்டுமானால் "வெண் தாமரை" புஷ்பத்தினால், சுக்கிரனுக்கு வெள்ளி தோறும் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரன் இரண்டு மடங்கு அனுகூலமாக மாறி சகல விதமான சௌபாக்கியங்களையும், கல்யாண சந்தோஷங்களையும் தருவார்.

சனி:- ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8,12இல் சனி பகவான் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப் படலாம். இதிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமானால் "கருங்குவளை" மலரால் சனீஸ்வரனுக்கு, அல்லது சனி கிரகத்திற்கு சனிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்துவரின் சனி பகவானின் அனுக்ரகத்திற்கு பாத்திரமாகலாம்.

ராகு:-  ஒருவரது ஜாதகத்தில் "ராகு" 2,4,5,7,8,12இல் இருந்தால், அவருக்கு ராகுவால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.  இதனைத் தடுக்க "மந்தாரை" புஷ்பத்தால் முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால், ராகுவினால் எந்தவித தொந்தரவும் கடைசிவரை இருக்காது.

கேது:- ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் 2,4,5,7,8,12இல் தனித்து இருந்தாலும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், கேது தோஷம் உண்டு.  இந்த தோஷத்தை நீக்க மிக சுலபமான வழி "செவ்வல்லி" மலரால் கேது கிரகத்திற்கு முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால் போதும். கேது பகவானது பரிபூரண அனுக்ரகம் கிடைத்து விடும்.

இவை எல்லாம் எளிய, ஆனால் பலன் தரும் பரிகாரங்களாகும். மனிதர்கள், இதை நம்பி செய்து வந்து பலனடைய எமது ஆசிகள்.

அகத்தியர் அடியவர்களே, அகத்தியப் பெருமான் ஆசியுடன் இந்த எளிய பரிகாரங்கள் நம் தெளிவுக்கு வந்துள்ளது. இவற்றை செய்து, எல்லோரும் வாழ்க்கையை சுத்தமாக்கி கொள்ளுங்கள். அருள் பெறுங்கள்.

No comments:

Post a Comment