Monday, 18 December 2017

உபாசனை

உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.
எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள் உதவும். தியானம் என்பது, மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையேபதித்து,மந்திரஜபம் செய்வது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வது சிறப்பு. ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. ஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
ஜபம்செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன. முக்கியமாக, மனம் இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.
1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.
2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும். நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்
3.வீட்டில்ஒரு குறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.
6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும். இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.
9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.
10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்
13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 -
13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
· சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். · பூஜை அறை, பசுக்கொட்டகை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
· கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
· சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
· கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாது. ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள். மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்? யட்சணி வித்தை செய்பவா்கள் யார்? மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்? உண்மையான மகான்கள் யார்? சித்தா்கள் யார்? தெய்வ அவதாரங்கள் யார்? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும். அனுபவ அறிவு வேண்டும். எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.
எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது.

3 comments:

  1. Semma super sir, really thanks sir

    ReplyDelete
  2. Engilsh Translation available ah ??

    ReplyDelete
  3. உபாசனை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.

    ReplyDelete