Tuesday, 12 December 2017

"எழுத்துச் சித்தர், ஞானி, மஹான்  பாலகுமாரன்” அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட   "சொர்க்கம் நடுவிலே" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை.....!!!

வாசற்பக்கம் நிழலாடியது.

"யார் அது?" பெரியவர் உற்று நோக்க, நான் பேசினேன். "இவன் ஞானியால் கவரப்பட்டவன். இடைவிடாது அவரை சிந்திப்பவன். கொஞ்சம் களிம்பு ஏறிய பாத்திரம். சுத்தம் செய்ய வேண்டும்."

"வாரும். யார் நீர்?" பெரியவர் வினவினார்.

அவனுக்கு முப்பது வயது இருக்கலாம். மெலிந்திருந்தான். தவசிக்கு அழகு உண்டி சுருக்குதல். "எனக்கு விலாசமில்லை என்றான்."

"பெயர்தானே கேட்டேன்."

"விலாசம் இருப்பவருக்குத்தான் பெயர். எனக்கு இரண்டுமில்லை."

"நல்லது. அப்படியே இருக்கட்டும். என்ன செய்கிறீர்கள்?"

"குருவின் நாமம் இடையறாது சொல்கிறேன்."

"ஏன்?" பெரியவர் கேட்டார். நான் பெரியவரை வியப்போடு பார்த்தேன்.

"நாமஜபம் கலியில் உய்யும் வழி."

"இல்லை. நாமஜபம் ஆரம்பம். முதல் வகுப்பு. மேலேற வேண்டாமா. நாமஜபம் ஒரு வாகனம். ஒரு யுக்தி. யுக்தியே விடிவாகுமா."

"எது விடிவு."

"உள்ளே பார்ப்பது. நாம ஜபம் சொல்வது யார் என்று உற்றுப் பார்ப்பது. பார்க்காது போனால் நாமஜபம் செய்யும் வரை மனம் அந்தத் தாளக்கட்டில் லயித்து பிறகு, பொங்கலில் முந்திரிப்பருப்பு எண்ண ஆரம்பித்துவிட்டு, வேட்டி அவிழ ஆடியவரை பகடி பண்ணி சிரிக்கும்.

"உள்ளே பார்க்கக் கூட்டிப் போகாதா?"

"உள்ளே பார்க்கச் செய்தால் நாம ஜபம் உயர்வு. வெறுமே கூவினால் கூவும் வரைதான் எல்லாம்."

"உள்ளே பார்க்கத் தெரிந்துவிட்டால் நாம ஜபம் வேண்டாமா?"

"வேண்டாம்."

"உள்ளே பார்ப்பது எளிது இல்லையே."

"வேறு வழியில்லை. எதிரி உள்ளே இருக்க, நீர் மயங்கி ஆடுவது பிரச்சினை தீர்க்குமா. உள்ளே இருக்க வேண்டுமெனில் வெளியே அலையாதே."

"பிரம்மச்சரியம் அவசியமா?"

"பெண் உறவு பெரிய சமுத்திரம். உருட்டிப் போடுகிற உணர்வு கொந்தளிப்பு. காசு என்பது சுழல். கர்வம் என்பது முட்புதர். அதிகாரம் புதைமணல். பிறகு வெள்ளம் தாண்டுவதெங்கே?"

"அதனால்?"

"உள்ளே பார்க்க, உள்ளேயே இருக்க ஒரு இடத்திலேயே அடைந்து கிட. உலக விவகாரங்களில் ஈடுபடாது அமைதியாய் இரு. தனிமையில் இரு."

"இது சந்தோஷமா?"

"எது சந்தோஷம் என்று கேட்டுக் கொள். ஆடலா, பாடலா, புத்தியா என்று விசாரி. வேண்டுமெனில் ஆடிப்பாடி அலைந்துவிட்டு வா."

"இது செய்யத்தான் பிறவியா?"

"வேறு எது செய்யவும் பிறக்கவில்லை."

"ஆடி ஒரு ஜன்மம், பாடி ஒரு ஜன்மம், அதிகாரமாய் ஒரு ஜன்மம், அடிமையாய் ஒரு ஜன்மம். ஒவ்வொரு பிறவியிலும் உள்ளே பார்க்கக் கற்று இது முக்கியமில்லை, இது முக்கியமில்லை என்று உதறி சகலத்திலிருந்தும் விடுபட்ட ஒரு ஜன்மமாகப் பிறக்க, உள்ளே பார்க்க முடியும்."

"இப்படி எத்தனை ஜன்மம்?"

"ஒரு புளிய மரத்தில் எத்தனை இலைகளோ அத்தனை ஜன்மம்."

"ஐயோ."

"அதனால் நேரடியாய் பார்க்கத் துவங்கு. உன்னை அறிவது தவிர, உன் ஆன்மா எது என்று புரிவது தவிர, இதுவே நான் என்று தெளிவது தவிர, மற்ற செயல் எல்லாம் வீண்."

"கடவுள் பக்தி...?"

"இது நோக்கியே. உன்னைப் பார்க்க வைப்பதற்கே வேதம், தியானம், ஹடயோகம், அபிஷேகம், ஜபம், அர்ச்சனை, அத்தனையும் இது உணரவே. காரியத்தை விட்டு காரணத்தைப் பிடித்துக் கொள்ளாதே.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு. எது ஆரிய கூத்து? வேதப் படிப்பு, வேதாந்த விளக்கம், மிக உயர்வான இடம். இது செய்யினும் உள்ளே பார். காரியம் என்பது உள்ளே பார்ப்பது. உன்னை உணர்வது."

"விஞ்ஞானம்...?"

"அசுர ஆட்டம். அழிவே அதிகம். உயர்த்துவது போல் உயர்த்தி இன்னும் உழப்பலில் மாட்டி விடும். நீ பறக்க முடியாத காலத்திலும் வாழ்வு இருந்தது. பறந்ததால் எது தீர்ந்தது."

"உள்ளே பார்க்க எது உதவி?"

"எது பகை என்று பார். விலக்கு. விலக்குவதே உதவி."

"நான் ஞானியைத் தேடி வந்தேன். உங்களை பார்த்ததில் ஞானியின் சாயல் எனக்குத் தெரிந்தது எனவே..."

"சத்தியத்துக்கு ஒரே சாயல். சத்தியமாய் இரு. உனக்கும் அந்த சாயல் வரும்.

அந்த இளைஞன் அழுதான். பெரியவர் சிரித்தார்.

(இந்தப் பதிவினை வாசித்த பிறகு ஏற்படும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் முழுவதும் உரித்தானவர் இதை எழுத்தாக்கி படைப்பித்த ஆசிரியர் எழுத்துச் சித்தர் ஞானி, மஹான் பாலகுமாரன் அவர்களே.)

No comments:

Post a Comment