Thursday 1 August 2019

ஹனுமத்தாசன் அய்யா ஜீவ நாடி அனுபவங்கள் தொகுப்பிலிருந்து

அகஸ்தியர்.      (ஜீவ நாடி )

ஹனுமத்தாசன் அய்யா ஜீவ நாடி அனுபவங்கள் தொகுப்பிலிருந்து.......

அற்புதம்
ஒரு இளம் வயது வாலிபன் வெகு வேகமாக ஓடிவந்தான். உடலெங்கும் வியர்வை. கண்களில் துக்கம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். காலில் செருப்பு கூட அணியாமல் கடும் வெயிலில் ஓடி வந்திருக்கிறான்.

அவனது நிலையை உணர்ந்த நான் ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து குளிர்ந்த நீர் கொடுத்து எதற்காக இந்த அவசரம்? என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.

என் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அம்மா உயிரோடு இருப்பாரா? இல்லை போய் விடுவாரா? அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்? என்றான்.
அம்மாவுக்கு பேச்சு மூச்சு இல்லை என்றால் இவன் அம்மாவின் பக்கம் தானே இருக்க வேண்டும். எதற்காக அம்மாவைத் தனியாக விட்டு விட்டு இங்கு ஏன் ஓடோடி வரவேண்டும் எனறு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது.

‘சரி, எதற்கும் ஜீவநாடியைப் படித்துப் பார்ப்போம் என்று நாடியை பிரித்தேன்.
அகஸ்தியர் சொல்ல ஆரம்பித்தார்…
.
‘இவன் தாய்க்கு ஒரே மகன். இளம் வயதில் தந்தையை இழந்தவன். பிறந்திட்ட இந்த மகனை, நன்றாகப் பாடுபட்டு படிக்க வைத்து மிக உயர்ந்த நிலையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாகப் பாடுபட்டு படிக்க வைத்தாள்.

ஆனால் இவனோ -

தந்தை இல்லாத பையனாக செல்லமாக வளர்ந்ததினால், எந்தெந்த பழக்கங்கள் கூடாதோ, அந்தந்தப் பழக்கங்களைக் கற்றான். படிப்பில் நாட்டமில்லாமல் எங்கெங்கோ கூடாத நட்போடு சுற்றினான்.

அந்த தாய்க்குக் கவலையும், வருத்தமும் ஏற்பட்டது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் இவன் திருந்துவதாகத் தெரியவில்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டார்.

பருவம் அடைந்த வாலிபனாக இவன் உலா வரும் பொழுது திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று யாரோ சொல்ல, பலரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி பல்வேறு பொய்களைச் சொல்லி ஒரு அழகான இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தாள்.

திருமணம் செய்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த இவன், திருமணத்திற்கு பின், மேலும் பல்வேறு தீய நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப் போக ஆரம்பித்தான். போலீஸ் இவனைத் தேடி அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தது.

கேடி என்பதை உணர்ந்த அவனது இளம் மனைவி ஒரு நாள் சொல்லாமல், கொள்ளாமல் தன் பிறந்த வீட்டிற்கே போய் விட்டாள். தன் கணவன் சரியான
இதற்கெல்லாம் காரணம் தன் தாய் என்று தவறாகப் புரிந்து அவளைத் தாயென்றும் பாராமல் கண்ணை மூடிக் கொண்டு அடிக்க ஆரம்பித்தான். அதன் உச்சகட்டம் தான் இன்று காலை நடந்திருக்கிறது. ஒரு இரும்புக் கம்பியைக் கொண்டு தன் தாயை இவன் தாக்கியிருக்கிறான். அவள் இப்போது ஆஸ்பத்திரியில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறாள்.
தன் தாயை இப்படித் துன்புறுத்தி விட்டோமே, கட்டிய மனைவியும் கண் கலங்கி ஓடிவிட்டாளே என்ற கவலையில் இப்போதுதான் இவனுக்கு ஞானம் பிறந்திருக்கிறது. யாரோ சொல்ல அதைக் கேட்டு அகத்தியனிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறான் இவன் என்று வந்திருப்பவனது வாழ்க்கை வரலாற்றைச் சொன்ன அகத்தியர் இனி மேல் இவன் திருந்துவான் என்று சொல்லி, தன் தாய் உயிர் பிழைக்க இன்று முதல் குடிப் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். தினமும் முருகன் சன்னதிக்கு சென்று ஐந்து முகம் தீபம் ஏற்ற வேண்டும். வேலை செய்து பிழைக்க வேண்டும். பிரிந்து போன இவன் மனைவி மீண்டும் திரும்பி வர, கெட்ட சகவாசம் உள்ள நண்பர்களை விட்டுப் பிரிந்து வர வேண்டும். அதோடு குல தெய்வ கோவிலுக்கு வாராவாரம் சென்று நெய்விளக்கு ஏற்ற வேண்டும். செய்வாயா? என்றார் அகஸ்தியர்.

‘கண்டிப்பாக’ என்றான்.

அகத்தியன் வாக்குப் பொய்யாகாமல் இருக்க வேண்டுமானால், மேற்கூறிய பிரார்த்தனைகளைத் தவறாது செய்க. இல்லையெனில் உன் தாய் ஆயுளுக்கு அகத்தியன் உத்திரவாதம் அளிக்க முடியாது. பிரிந்து போன உன் மனைவி மீண்டும் திரும்பி வரமாட்டாள். என்ன சொல்கிறாய்? என்று கண்டிஷன் போட்டார்.

ஐயா, அப்படிச் சொல்லாதீகய்யா, இப்போ தான் எனக்கே புத்தி வந்தது. போலீசுக்குப் பயந்து மறைந்து வாழ்வதைக் காட்டிலும் அகத்தியர் சொற்படி நல்லவனாக நடந்து காட்டுகிறேன். எனக்கு பெண்டாட்டி வேணும். குழந்தை குட்டிகள் வேணும் என்று கைகூப்பி கண்ணீர் மல்க வேண்டி என்னிடம் அனுமதி பெற்று மீண்டும் தன் தாயைப் பார்க்க ஓட்டம் பிடித்தான்.

இரண்டு மாதம் ஆயிற்று.

அகத்தியர் சொன்னபடி அத்தனைக் காரியங்களையும் செய்து முடித்த பிறகு ஒரு நாளில் பிரிந்து போன அவனது மனைவி மனம் திருந்தி வந்தாள். இதற்குள் அவன் ஒரு பெரிய கம்பெனியில் கூலி வேலையாளாக சேர்ந்து விட்டான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவன் தாய் பிழைத்துக் கொண்டாள். இருந்தாலும் முன்பு மாதிரி இல்லை. எனினும் அகத்தியர் சொற்படி தன் பையன் நடந்து கொண்டு வருகிறானே என்பதைக் கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு நாள் அவன், தன் தாய், மனைவியோடு மீண்டும் என்னிடம் ஜீவ நாடி பார்க்க வந்தான்.

‘மூன்று வருஷமாச்சு. எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை’ என்றான். அப்போது இவன் முற்றிலும் மாறுபட்டிருந்தான். ஒரே சிவப்பழமாக காட்சி அளித்தான். இன்னும் ஒன்பது மாதத்திற்குள் உன் மனைவி கர்ப்பம் தரிப்பாள். பயப்படாதே என்று அகத்தியர் அருள்வாக்கு கொடுத்தார்.

ஆனால் டாக்டர்களோ அவனுக்கு ஆண்மைக் குறைவு இருப்பதால் அவனால் தந்தையாக முடியாது என்று சொல்லியிருந்தார்கள். இதனால் மனமுடைந்து போய்த்தான் கேட்டான் அவன்…. என்பது எனக்கே பின்புதான் தெரிந்தது.

அப்போது அவன் தாய் என்னிடம் சொன்னாள். ‘என் மகனுக்கு வாரிசு வேணும். அகத்தியர் அருள் கிடைக்குமானால் என் உயிரைப் பரித்துக் கொள்ளட்டும். என் மகனுடைய வயிற்றில் நான் பிறக்க வேண்டும்’ என்று கண்ணீர் விட்டுக் கேட்டாள்.

அந்த தாயின் வேண்டுகோளை அகத்தியர் ஏற்றார். இதனைக் கேட்டு மிக்க மனநிறைவோடு சென்றாள் அந்த தாய். ஒரு செவ்வாய். அன்றைக்கு சஷ்டியும் கூட.

அந்த இளைஞன் ஓடோடி வந்தான். அம்மாவுக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லை. நீங்கள் தான் என் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்றான் பதறியபடி.

உடன் வீட்டிற்குச் செல். சஷ்டி கவசத்தை மூன்று முறை படி. தாய் தலையை உன் மடியில் வைத்துக்கொள். அவள் ஆத்மா சாந்தியடைய. இன்றிலிருந்து பத்தாவது மாதம் உனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும். அது உன் தாயின் மறு பிறவியாக இருக்கும் என்றார் அகத்தியர்.

அகத்தியர் வாக்குபடியே அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போது அவன் தன் தாயை குழந்தையின் வடிவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான