Thursday, 19 March 2026

கணித மேதை ராமானுஜர்

 ஒரு அதி அற்புதமான‌ திரைப்படம் நம்மால் கவனிக்க‌ படாமல்,  பெரிதாக பேசப் படாமல் அமேசான் பிரைம் தளத்தில் நூறோடு நூற்றி ஒன்றாய் நம் பார்வைக்கு காத்துக் கொண்டிருக்கிறது.   அதுதான்  'ராமானுஜன்' எனும் அற்புதமான திரைப்படம்.


வாழும் காலத்தில் மிகப்பெரும் சவால்களை சந்தித்து,  தன்னுடைய அசாத்தியமான திறமை புறக்கணிக்கப் பட்டு,  சக சராசரி இந்தியர்களால் ஏளன படுத்தப்பட்டு,  ஒரு சில உயர்ந்த உள்ளங்களின் உதவியால் உச்சத்தை தொட்டவன் ராமானுஜன்.

இன்றும் கூட அவன் வெளிப்படுத்திய கணித‌ சூத்திரங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறது இன்றைய அதிமேதாவிகள் நிறைந்த அறிவியல் உலகம்.


அவன் வாழ்ந்த காலத்தை சிந்தாமல்,  சிதறாமல்,  உள்ளது உள்ளபடியே,  சுக துக்கங்களை,  சாதனை வேதனைகளை, ஒரு கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது இந்த திரைப்படம்.  வெள்ளையர் ஆட்சியில் பிராமண சமூகங்கள் எத்தனை சவால்களை எதிர்கொண்டனர் ? எப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு படித்தனர் ? ஒரு வேலை வாய்ப்பினை பெறுவதற்கு எத்தகைய சிரமத்திற்கு ஆளாகினர் என்பதை இப்படம் உள்ளது உள்ளபடியே வெளி கொண்டு வருகிறது.  


படத்தில் பாத்திரங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.  ராமானுஜன் ஆக நடித்திருக்கும் நடிகர் 'அபிநய் வாதி' அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.  (இவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரியின் பேரன்) முதலில் இயக்குனர் ஞான சேகரன் நடிகர் மாதவனையோ அல்லது பிரசன்னாவையோ,  ராமானுஜனின் பாத்திரத்திற்கு தேர்வு செய்யலாம் என யோசித்து, பின் அபிநய் வாதியின் தோற்றம் ராமானுஜனின் தோற்றத்திற்கு பொருந்தியதால் அவரை தேர்வு செய்தாராம்.  அந்த தேர்வு மிக மிக சரியானது என படம் முழுதும் மெய்பித்து இருக்கிறார் அபிநய். திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் சுஹாசினி,  நிழல்கள் ரவி, சரத்பாபு, நெடுமுடி வேணு, லிச்சி போர்ன் (ஹார்டி),  தலைவாசல் விஜய், மனோபாலா, டெல்லி கனேஷ் மற்றும் ஒவ்வொரு பாத்திரங்களும் நம்மை 20ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்று அசாத்தியமான யதார்தத்தை பிரதிபலிக்கின்றனர்.  திரைப்பட படபிடிப்பை தொடங்குவதற்கு முன்பே,  பல முன்னோட்டங்களை படமெடுத்து நடிகர்களை தயார் படுத்தினாராம் இயக்குனர் ஞானசேகரன்.


கணிதத்தின் மீது தீராத காதல் கொண்ட ராமானுஜன் பாத்திரம் வெகுளித்தனம்,  அசாத்திய அறிவுச் சுடர்,  பக்தி,  ஆன்மீக ஞானம்,  ஒழுக்கம் என  அவனின் மான்பை வெகு நேர்த்தியாக நாம் உணர வைத்துள்ளார் இயக்குனர்.  கணித சூத்திரங்களின் விடைகளை ஆழமாக மனதுள் ராமானுஜம் தேட,  நாமகிரி தாயார் ஒவ்வொரு முறையும் அவனுக்கு அதை ஆழ் மனதில் வெளிப்படுத்தி உதவுகிறாள்.  இன்றும் கூட உலகம் உற்று நோக்கி புரிந்துக் கொள்ள தவமிருக்கும் அந்த சூத்திரங்கள் நாமகிரி தாயார் அவனுக்குள் வெளிப்படுத்தியவை என்பது பாரதத்தின் பக்திக்கும்,  ஆன்மீகத்திற்கும் ஆதாரமாக திகழ்கிறது.  அறிவியல் எங்கே முடிவடைகிறதோ அங்கே ஞானம் தொடங்குகிறது எனும் விவேகானந்தரின் வார்த்தைகளை நமக்கு அது நினைவு படுத்துகிறது.  


கணித‌த்தில் மேதையாக இருந்தும் மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெறும் ராமானுஜன், சமூகத்தால் புறக்கணிப்படும் காட்சிகள்,  மெக்காலே கல்வி இந்த நாட்டை எத்தனை சீரழித்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.  தியாகராஜரை கணிதம் தெரியாது என ஒதுக்குவதும்,  பாஸ்கராச்சாரியரை சங்கீதம் தெரியாது என ஒதுக்குவதும் எத்தனை அபத்தமோ,  அப்படிப்பட்ட அபத்தம் தான் ஒரு துறையில் சிறப்பாக மிளிரும் ஒரு மானவனை பாராட்டி உற்சாகப் படுத்தாமல் இந்த மெக்காலே கல்வி ஒதுக்குவதை காட்டுகிறது.  "எங்களுக்கு தேவை ஒரு பாடத்துல நூறு மார்க் வாங்கிட்டு மத்த பாடத்துல ஃபெயில் ஆகற மாணவன் இல்லை,  எல்லா பாடத்திலயும் ஏவரேஜ் மார்க் வாங்கற மானவனா இருந்தாலே போதும்" என மெக்காலே கல்வி முறைக்கு அடிமையாகி, கடந்த 150 வருடங்களாக‌ பல கோடி மாணவ செல்வங்களின் தனித்திறமையை அழித்த கல்வியாளர்களைதான் பிரதிபலிக்கிறார்கள் ராமானுஜத்தின் காலத்தில் வாழ்ந்த அந்த குறிப்பிட்ட கல்வியாளர்கள். 


உயர் கணிதத்தில் அசாத்திய திறமை படைத்த ராமானுஜன்,  சாப்பாடுக்கு கூட வழியின்றி,  ஒரு கட்டத்தில் கலெக்டர் சரத்பாபுவிடம்,  "சார் எனக்கு இந்த சாப்பாட்டு பிரச்சனையில் இருந்து விடுதலை வாங்கித் தாங்கோ,  நான் நிம்மதியா கணக்கு போட்டுண்டு இருப்பேன்" எனக் கூறுவது, அறிவுத் தேடலில் இறங்கிய ஒரு சமூகம் எத்தனை சவால்களையும் மீறி எப்படி பல உயரங்களை எட்டியது என்பதை உணர்த்துகிறது.   திராவிடம் பிராமண சமூகம் மீது கட்டவிழ்த்த காழ்ப்புணர்வும், அராஜகங்களும் படத்தின் எச்சமாய் நம் மனத்திரையில் தேங்கி நிற்கிறது.  ராமானுஜன் லண்டன் சென்று அங்கு பல இன்னல்களுக்கு இடையே சாதிக்கும் காட்சிகள் அற்புதம்.  கூடவே ஹார்டி போன்ற அற்புதமான திறமைக்கு மதிப்பளிக்கும் வெள்ளையர்களின் குணாதீசியத்தையும் படம் வெளிக் கொண்டு வருகிறது.


படத்தில் ஒரு காட்சியில், எத்தனையோ முயற்சி செய்து அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் ராமானுஜன் மிகுந்த மன வேதனையில் இருக்கிறான்.  இறுதி முயற்சியாக கலெக்டராக வரும் சரத்பாபுவை சந்தித்து தன் உயர் கணித சூத்திரங்களை காட்ட முனைகிறான்.  ஆனால் அவன் தோற்றத்தை கண்டு அவனை புறந்தள்ளுகிறார் கலெக்டர்.  ராமானுஜனை அழைத்து சென்ற மனோபாலா அவனின் கணித சூத்திரங்கள் அடங்கிய நோட்டு புத்தகத்தை கலெக்டர் மேஜையிலேயே வைத்து விட்டுப் போகிறார்.  சற்று நேரம் கழித்து அதை யதார்த்தமாய் பார்க்கும் சரத்பாபு ஆச்சரியத்தின் உச்சத்திற்கு செல்கிறார்.  ராமானுஜனை அவர் மீண்டும் அழைத்து கௌரவிப்பது மிக நெகிழ்வான தருனம்.


படத்தை முழுமையாக பார்த்துவிட்டு கண்களின் ஓரங்களில் ஒரு காட்சியில் கூட‌

கண்ணீர் தேங்கவில்லை என்றால் அதன் பெயர் Vegetative state   என்பார்கள்.


மொத்தத்தில் அற்புதமான படம். 'அமெசான் பிரைமில்' நீங்கள் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய படம்.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்


Check out this video, "ramanujan movie in tamil" https://share.google/KjaDdeqxUfUksPPen

No comments:

Post a Comment