பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN -
75 ''மந்த்ர மஹிமை''
மஹா பெரியவா ஒரு முறை அற்புதமாக ஒரு பிரசங்கம் செய்திருக்கிறார். அது மந்த்ரங்கள் என்றால் என்ன? யார் அவற்றை உருவாக்கியது? . அவற்றின் சக்தி என்ன? இது போன்ற நமக்கு தெரியாத விஷயங்கள் பற்றி நன்றாக யோசித்திருக்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது படிப்பதற்கு. அதன் சாராம்சம் தருகிறேன்.
எவ்வளவு கஷ்டங்கள், சிரமத்தோடு இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறதே. இதையெல்லாம் உருவாக்கி, நிர்வகிப்பது யார்? அந்த பரமாத்மா விடமிருந்து தான் நாம் காணும் அனைத்தும், நாம் கேட்கும் சப்தம், நாம் அனுபவிக்கும் சகலமும் உருவாகியது.
நாம் கண்ணால் காண்கிறோமே, காதால் கேட்கிறோமே, அதற்கு முன்னால் அவை எல்லாம் ஆகாசத்தில் உண்டாகிறது. அங்கிருந்து தான் நமக்கு வருகிறது. பிரபஞ்சமே அப்படி உருவானது தான். பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச பூதங்களும் மனிதனின் உடம்பிலும் உள்ளது. வெளியே காணும் ஆகாசம் நமது ஹ்ருதயத்தில் உள்ளது. ஹ்ருதயாகாசம் என்று அதற்கு பெயர். சமாதி நிலையில் யோகிகளால் அதை அனுபவிக்க முடிகிறது. சாதாரணர்கள் நம்மால் அறிய முடியவில்லை. அப்படி உணரும்போது வெளி, உள்ளே என்று இல்லாமல் எல்லாம் ஒன்றாக கலந்துவிடுகிறது. அந்த நிலையில் யோகிகளால், ரிஷிகளால் ஆகாசத்தில் உருவாகும் சப்தத்தை கேட்க முடிகிறது. அந்த சப்தங்களை அவர்கள் கிரஹித்து நமக்கு சொல் வடிவத்தில் சப்தங்களாக தந்தது தான் வேத மந்திரம். எங்கோ யாரோ பாடுவது காற்றில் செலுத்தப்பட்டு காரிலிருந்து ரேடியோ ஆன்டென்னா ரஹித்து நாம் சிற்றலைகளில் கேட்கிறோமே அது போல் நமக்கு தந்தது. ரேடியோக்கள் தான் ரிஷிகள்.
எந்த யோகியும், எந்த ரிஷியும் மந்திரங்களை உருவாக்க வில்லை. ''கண்டு பிடித்தார்கள்'' . ஆகாசத்தில் இருப்பதை கிரஹித்தார்கள். அவை ஆதி அந்தமில்லாத, அநாதி. ''மந்த்ர த்ரஷ்டா'' என்றால் மந்திரங்களைக் கண்டுபிடித்தவர்கள் என்று அர்த்தம். அவர்களை ''ரிஷி'' என்கிறோம். அவர்கள் , ''மந்த்ர கர்த்தா'' என்று செய்தவர்களோ, உருவாக்கியவர்களோ இல்லை. வேத மந்த்ரங்கள் அனைத்தும் பரமாத்மாவின் மூச்சு.
இந்த வேத மந்திரங்களின் அர்த்தம் முக்கியம் இல்லை. சப்தம் தான் ரொம்ப முக்கியம். உச்சரிப்பு. உச்சாடனம் தான் அதி முக்கியம். அது தான் மந்த்ர சக்தி. மந்த்ர அக்ஷரங்களை சரியான அளவில் ஸ்வரத்தோடு உச்சரிக்கவேண்டும்.
எனக்கு தெரிந்து மாயவரம் பக்கம் ஒரு தேள் கொட்டு, கடிக்கு, மந்திரிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் சொல்லும் மந்திரத்தை தப்பில்லாமல் உச்சரித்தால் கடி விஷம், கொட்டு வலி உடனே நீங்கியதை பலரிடம் அறிந்திருக்கிறேன். பலரால் சொல்ல முடியாது என்பதால் அவர்களுக்காக அவரே உச்சரிப்பார். அந்த மந்த்ரத்தின் அர்த்தம் கேட்டால், தெரியாது என்பார்.
பில்லி சூனியம், போன்ற கெட்டவை செய்யும் மாந்த்ரீக, மந்திரங்களும் அப்படித்தான். சரியான உச்சரிப்பில், உச்சாடனத்தில் தான் அதன் சக்தி. அந்த காலத்தில் இப்படி பலருக்கு கெடுதல் செய்யும் மாந்த்ரீகர்களின் வாயில் பல்லை தட்டிவிடுவார்கள், அது தான் தண்டனை. ''பல் போனால் சொல் போச்சு''. சரியாக உச்சரிக்கமுடியாது. மந்திரம் பலனளிக்காது.
காயத்ரி மந்திரம், பித்ரு ஸ்ரார்த்த மந்திரம், கல்யாண மந்திரம் எல்லாம் சரியாக, அளவோடு, ஸ்வரத்தோடு, சொல்லும் வாத்தியார்கள் மூலம் அறிந்து சொன்னால் தான் பலன். இக பர நன்மைகள் தருபவை இந்த வேத மந்த்ரங்கள்.
''அதெப்படி சார் நமக்கு கேட்காமல் ரிஷிகளுக்கு மட்டும் ஆகாசத்திலிருந்து தனியாக இந்த மந்திரங்கள் காது கேட்கும்?''
அங்கு தான் நமக்கும் யோகிகள், ரிஷிகளுக்கும் உள்ள வித்யாசம் இருக்கிறது. நம்மால் காண முடியாததை , கேட்க முடியாததை, கிரஹிக்க முடியாததை, உணரமுடியாததை அவர்கள் பல வருஷங்கள் தவமிருந்து பெற்ற சக்தி அது. அவர்களால் தான் நாம், நம்மால் அறிய முடியாததைஅறிகிறோம், பலன் பெறுகிறோம். அந்த நன்றி கலந்த பக்தி இருந்தால் போதும். நமது சக்திக்கு, புத்திக்கு எட்டாத அவற்றை அறிந்து எளிதாக வேத மந்திரமாக சப்தமாக அக்ஷரமாக அவர்கள் தந்திருக்கிறார்கள்.
ரஷ்யா அமெரிக்கா ஜப்பான் ஊர்களில் நடப்பதை நாம் நேரில் பார்க்கிறோமா, கேட்கிறோமா?, பத்திரிகை காணொளி மூலமாக தெரிந்து கொள்வது போல் ரிஷிகளின் மந்த்ரங்கள் நமக்கு அறிவூட்டுகிறது.
No comments:
Post a Comment