Tuesday, 7 September 2021

உடம்புக்கு சத்து வேணும்.... சத்தை சாப்பாடு குடுக்குதா?

 உடம்புக்கு சத்து வேணும்....

சத்தை சாப்பாடு குடுக்குதா? 


அருமையான பொங்கலையும், புளியோதரையையும் செஞ்சு... வயித்துல போட்டுட்டா... அது சத்தாக உருமாறி, ஆற்றலைக் கொடுத்திடுமா? 


சரி உடம்பை விட்டுடுவோம்.... 

எதை நம்பி.... எண்ணம், புத்தியெல்லாம்... நம்மிடம் கொடுக்கப் பட்டிருக்கிறது? 


தின்னுட்டு, தின்னுட்டு தூங்கிகிட்டு, அக்கம் பக்கத்துல இருக்கறவங்ககிட்டே வம்பு வளர்த்துகிட்டு,

        கெடைச்ச மிருகங்களை, அடிச்சி கொன்னு  தின்னுகிட்டு,

             மரம், மட்டை, தண்ணி எல்லாத்தையும், இருக்கற வரைக்கும் தீர்த்துப்புட்டு, மேற்கொண்டு கெடைக்கம இருக்கறத்துக்கு.... என்னென்ன வழியுண்டோ... அத்தனை அட்டூழியத்தையும் பண்ணிக்கிட்டு கெடக்கறத்துக்கா... இந்த மனம், எண்ணம், புத்தியெல்லாம்... நம்மள நம்பி ஒப்படைக்கப் பட்டிருக்கு? 


நமது உடல் உறுப்புகள்.... நமது காயம் ஆகும்.

எண்ணங்கள், மனம், புத்தி போன்றவை.... புரியட்ட காயம்.


"புரியட்ட காயம் புலப்பட எனக்கு"

             - விநாயகர் அகவலில் அவ்வையார்.


நம்ம ஒடம்போட சேர்ந்திருக்கற ஒன்னு, ஆனா, இந்த சேர்ந்திருக்கற ஒன்றை, புலன்களால உணர முடியாது. அதே சமயம் அது நம்மிடையே இருக்கறதை மறுக்க முடியாது.


அது என்ன?

                என்னாங்காணும் புதிர் புண்ணாக்கு போட்டிட்டு இருக்கறே ஓய்? சட்டுப் புட்டு'னு சொல்லுங்காணும்.

       அட, நம்ம மனம், புத்தி  இதுகளை யெல்லாம் உணர மட்டுந்தானே முடியுது? தொட்டுப் பாக்க முடியாமில்லே?


இல்லை.


இதெல்லாம் எம்பட ஊட்டுது இல்லை அப்புடீ'னு சொல்லறத்துக்கு வழி இருக்கா?


வழி இல்லை. இதெல்லாம் ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கற சங்கதிதேங்.


அப்படினா … அதுதான், புரியட்ட காயம்'ங்கறது!

அப்போ  மொதல்லேருந்து ஒரு பாடம் சொல்லிடுவோம். நமது உடல் உறுப்புகள், நமது காயம் ஆகும்.

எண்ணங்கள், மனம், புத்தி போன்றவை.... புரியட்ட காயம்.


"அத்தன் அமைத்த உடல் இரு கூற்றினில்

சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்

சத்த பரிச ரூப ரசகந்தம்

புத்திமன் ஆங் காரம் புரியட்ட காயமே"

                   - திருமந்திரம்


இயற்கை அளித்த  உடலில் இரு பகுதிகளாக வகைப்படுத்தப் படுகின்றது. கை, கால், மூக்கு, உடம்பு'னு.... ஸ்தூல உடல் பற்றி யாவரும் அறிவோம். 

          ஒளி, ஒலி, நாற்றம், சுவை, ஊறு உணர்வு இவையும், இவற்றை அறியும் மனம், புத்தி அகங்காரமும் -புரியட்ட காயமாகும்


காயத்துக்கும், புரியட்ட காயத்துக்கும் இணைப்பு, பந்தம், கட்டுப்பாட்டாளர் யாரு?


நானாபுறமும் உடலில் பரவி,  வியாபித்து வரும்.... அசையும் காற்றாகிய பிராணனும், ஒரே பாதையில் நிலை பெற்று நிற்கும்.... குண்டலினியும்,

          இருவரும் சேர்ந்து  அந்த இணைப்பு, பந்தம், கட்டுப்பாட்டை செயல் படுத்துகின்றனர்.


இதில் "நான்" என்ற உருவகம் எங்கு வந்தது?


அதை தெளிவான சொல்ல முடியாது. நாம நெனப்புல இருக்கற சங்கதி அத்தனையையும் தூக்கி வெளியே கடாசிட்டோம்'னா...  நான் என்கிற உருவகம் மட்டும் போயிடாம...  திருட வந்த ஊட்டுல...  கையும் களவுமா மாட்டிக்கிட்டு இருட்டுல முழிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்க திருட்டுப்பயலை மாதிரி,  தனியா "நான்" ஒக்காந்திருக்கறதை கண்டுபிடிச்சிடலாம்.


நான் எங்கே இருந்து வந்தது? 


திருட்டுப் பயலையே புடிச்சிப்புட்டோம். அவேன் ஊட்டைக் கண்டுபுடிச்சி என்ன பண்ண போறீய?


நிச்சயமாக, 'நான்' வேறு உயிர் வேறு... என்பது மட்டும் மனசுல வச்சிக்கிட்டா போதும். 


இந்த உயிர்தான் 'நான்' என்று சொல்வது தவறானது என்பதை assume பண்ணிக்கிட்டா போதும். பல கொழப்பங்களை தவிர்த்து விடலாம்.


நான் என்கிற உணர்வை உண்டாக்குவது ஆணவ மலம் என்று சொல்வது சைவ சித்தாந்தம்.


நான் என்கிற உணர்வைத் தருவது பிரகிருதி என்று சொல்கிறது.. பதஞ்சலி யோகம்.


உயிருக்கு அறியாமையைத் தருவது... பிரகிருதி. அந்த அறியாமை.. அவத்தை எனப் பெயர் பெற்றது.


அறியாமை அனைவரிடமும் உள்ளது.


"பல்லைப் பேத்துப் புடுவேன். நான் ரெண்டு டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்கேன். மூனாவதா ஒன்னுக்கு கலிபோர்னியா யுனிவர்சிடி accorded sanction!… என்னையப் பாத்து அறியாமையில் உழல்கிறேன்'னு… நாக்கு மேல பல்லைப் போட்டு பெணாத்திக்கிட்டு இருக்கே?"


கொஞ்சம் அமைதியா இருங்க, சொடலை சார்.


Prof. Dr. சொடலைமுத்து, HoD, Department of Behavioral Science, SA diago university, USA.


இந்த அறியாமை வேற. எந்த அறியாமைய பத்தி  நான் சொல்றேன்'றதை அறியாமையே … கத்திக்கிட்டு கெடக்கீங்க?


Mr. சொடலை முத்து, உங்க வானளாவிய PhD க்களும், உலகளாவிய அனுபவ சேகரங்களுமே… நான் சொல்லுற இந்த அறியாமைக்கு காரணம்!


மறுபடியும் என் பல்லைப் பேத்துப் புடாதீங்க. அப்புறம் முறுக்கு, சீடை பட்டாணியை எல்லாம் சாப்புட முடியாத போயிடும்.


இந்த பிரகிருதி என்கிற, அவித்தை என்கிற அறியாமையானது... 

நம் உயிர் தோன்றும்போதே,  அதுவும் தோன்றிவிடுகிறது. எண்ணங்களை உருவாக்கி,  நம்மை வேறு பாதைக்கு இட்டுச் சென்று ... உண்மைப் பொருளை அறியவிடாமல் செய்வதும்,  இந்த பிரகிருதிதான்.


எனவே எண்ணங்கள்தாம், அறியாமைக்கு காரணம்.


அதேசமயம்,

      நம் இருப்பை நாம் உணருவதற்கும் பிற எண்ணங்களை உணர்ந்து கொள்வதற்கும், உடலில் உகந்ததான அமைப்புகள் உள்ளன. 

பிராணன் என்பது இவற்றிற்கெல்லாம் விடை தருவதானது. பிராணன் என்பது எண்ணங்கள் கொள்ளும் போது -'நான் சிந்திக்கிறேன்'- என்னும் உணர்வை தந்து நிற்கும் காற்று. 

எண்ணங்களுக்கு உயிரும், அறிவும் 

- இத்துடன் கூடுதலாக பிராணனும் முக்கியமான காரணம். 

இது உயிரால் திசை மாறும் காற்று. பிராணனைக் குறித்து சொல்லப் போனால்,


பிராணன், உடல் முழுவதும் உள்ளது. பாதாதிகேசமென  பாதம் முதல் தலை உச்சி வரை உணரப் படுவதானது. பிராணனின்றி மனம் செயல் படாது. பிராணக் காற்றாலேயே எண்ணங்கள் உருவாகிறது. மனம் என்கிற ஒன்று உண்டாகிறது. பிராணனானது  ஆத்மாவோடு இணைக்கப் பட்ட காற்று. மற்றும் பிராணனே சுவாசத்தோடும் இணைக்கப்பட்ட காற்று. நாம் சுவாசிக்கும் காற்றினில் முக்கியமானது பிராணன் & அபானன். 


இவை தான் எண்ணங்கள் உருவாகக் காரணமானவை. பிராணனை சூரிய ஒளிக்கும் அபானனை சந்திர ஒளிக்கும் ஒப்பிடுவர். பிராணனை செலுத்துவது ஜீவனே ஆகும். அறிவது ஆத்மாவே ஆகும்.


பிராணன் மனத்தொடும் பேராதடங்கிப்

பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை

பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்

பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே

                   - திருமந்திரம்.


பிராணனானது மனத்தோடு கூடி பெயர்ந்து போகாமல் அடங்கி இருந்தால்  'நான்' என்ற நினைப்பே வராது.  பிராணனானது மடை மாறி சென்றால்  உண்டாவது எண்ணங்கள். அந்த எண்ணங்களை தன்னுடையதாக எண்ணும் இயல்புடையவர்கள் நாமெல்லாம்.


"திகழும் படியே செறிதரு வாயு

அழியும் படியை அறிகில ராரும்

அழியும் படியை அறிந்தபின் நந்தி

திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே"

                         - திருமந்திரம்


'திகழும்-படியே- செறிதரு-வாயு' என்பது நிலை பெற்ற காற்று.  அந்த வாயுவை நீங்கும் வழியை அறியவில்லை. அவ்வாறு நீங்கும் வழியை அறிந்த பின் சிவபெருமான் இருக்கும் வாயுவை சேர்தல் உண்டாகும்.


"வாயு வாயு"னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க? 

வாயுனா காத்து, அது ஒன்னுதானே… அதில் ஒரு வாயு, இதில் ஒரு வாயு... இப்போ புதுசா மொளைக்க வச்சிருக்கியே.... "சிவபெருமான் இருக்கும் வாயு"  துக்கிரித்தனமா இருக்கு.


தெள்ளத் தெளிவா சொல்லுறேன் கேட்டுக்குங்கங்க சார். பத்து விதமான வாயு இருக்கு. ஒரே ஒரு காத்து, ஆனா அது செய்யற செயலின் அடிப்படையில் பத்தாக பிரிச்சி வச்சிருக்காங்க நம் முன்னோர்கள். எல்லாவற்றையும் அறிவதும் ஒரு வாயுவின் வழியே என்பதும் வெளிப்படை. சரி இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட, அந்த 'நான்' என்ன செய்யணும் ?


"வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு

வாசிவரு மிடத்தில்மனம் வைத்துக் காத்து

நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு

நினைவதனி லடங்கிவரும் வரிசை காணே"

                      - போகர் 


காற்று உண்டாகும் மூலாதாரத்தில் மனத்தை வைத்து, காற்றோடு மனத்தையும் நீக்க வேண்டும்.


"காணரிதே யெவராலு மிருசு வாசம்;

காண்பவனே சிவசித்த னவனே யாகும்;

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;

வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;"

                         - வால்மீகர்


"காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்

கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;

ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு

உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்

பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்"

                - கைலாய கம்பளி சட்டைமுனி.


"இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று

மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி"

                         - திருமூல நாயனார்


"அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்,

குமத சகாயன் குணத்தையும் கூறி"

                          -ஔவையார்


ஹம் என்று பிராணன் வெளிச் சென்று "ஸ" என்று பிறகு உட்புகுந்து "ஹம்ச ஹம்ச" என்ற மந்திரம் இயற்கையாகவே மூச்சு விடும், எல்லோராலும், ஜபிக்கப் படுகிறது. 


சுவாச கதியாகிய "ஹம்... ஸ என்ற ஓட்டத்தை மடைமாற்றி... "ஸோ... ஹம் ஸோ... ஹம்" என்ற மந்திர உச்சாடனத்தை செய்வதே நம் வேலையாக  இருக்க வேண்டும்.


நாளையிலிருந்து "ஸோ… ஹம், ஸோ… ஹம்"னு ஆயிரத்து எட்டுத் தடவை சொல்லட்டுமா?'னு யாராச்சும் கேட்டாங்க'னா… Dr சொடலை முத்துக்கிட்டே சொல்லி வச்சிடுவேன். Dentist வேலை பார்த்து, அவரும் பல்லைப் பேத்துப் புடுவாரு.


நாம் உள்ளுக்குள் கதி எடுக்கும் போது, நாம் கவனித்தாலும் கவனிக்கா விட்டாலும், இந்த ஸோ… ஹம்… சவுண்ட் வரும். 


நாம ஸோ… ஹம் வருதா வருதா' இதை கவனிச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தோம்'னா … வெறும் சோகம்தான் வந்து சேரும்.


இதுவுமது ….


"மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்

ஏறி இழியும் இடைபிங் கலையிடை

ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்

தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே"


பிராணனும் அபானனும் மாறி மாறி ஏறியும் இறங்கியும் வரும் இடகலை பிங்கலை நாடிகளில் ஊறும் உயிர் நடுவில் உயிரின் மூலம் உள்ளதை அறிந்து தெளியுங்கள்


"இரண்டான வாயுவினி லொன்று சத்தி

ஈராகச் சிவமேது பிராண வாயு

ஒன்றாக நாடிநின்றால் சுழுனை யாச்சு

யோகமுமாம் ஞானமுமா முற்றே யேறு"

                        - கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனார் பாடல்


ஒரு சுவாசம் சிவம் என்றும் மற்றது சக்தி என்றும் இரண்டும் புறப்படும் இடம் எது என்று கண்டால் சுழு முனை என்றும் சொல்கிறது. அதை அறிந்து மேலேற வேண்டும் என்கிறது. அதாவது பிரானனையும் அபானனையும் இயக்குவது சூழுமுனையில் உள்ள ஜீவன். அதை அறிந்து பின் மேலேற்ற வேண்டும் என்பது பொருள்.


கைலாயக் கம்பளிச் சட்டை முனி நாயனாரின் இன்னொரு பாடல்.....


"காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகங்

கண்டுகொள்ளு தாமரையில் நூல்போ லாடும்;

ஊணப்பா அதிலிரட்டி யபான வாயு

உற்றுநின்றி ரண்டையுநீ கண்டா யானால்

பூணப்பா விதற்குள்ளே ஞான யோகம்"


பிராண யோகம் செய்ய தாமரையில் நூல் போல் உள்ள குண்டலினியையும், அதில் ஆடும் பிராண அபான வாயுவையும் அறியலாம். அதன் இயக்கங்களை உற்று நோக்கி அறிந்து கொண்டால் அது ஞானமும் யோகமும் ஆகும்.


ஹம் என்று பிராணன் வெளிச் சென்று "ஸ" என்று பிறகு உட்புகுந்து "ஹம்ச ஹம்ச" என்ற மந்திரம் இயற்கையாகவே எல்லா ஜீவர்களாலும் ஜபிக்கப் படுகிறது. 


குரு உபதேசத்தால் ஸூஷூம்ணையில் இதுவே மாற்றி ஜபம் செய்யப் படுகிறது.


"ஸோஹம் ஸோஹம்" என்ற இந்த ஜபம் மந்திர யோகம் எனப் படுகிறது. ஹகாரம் சூரியன், சகாரம் சந்திரன், சூரிய சந்திரர்களின் ஐக்கியம் ஹடயோகம். 


"ஹடயோகத்தால் எல்லா தோஷங்களுக்கும் தோற்றுவாயான ஜடத்தன்மை விழுங்கப் படுகிறது"

                - யோகசிகோப நிஷத்து


"அறிந்திடும் பிராணன் தன்னை

அடக்கியும் விட்டும் ஆன்மா"

                  - சிவஞான சித்தியார்


இவ்வாறு பிராணனை செலுத்துவது ஆன்மா என்பதோடு பிராணனை அடக்கியும் விட்டும் அறிவது ஆன்மாவே என்று சிவஞான சித்தியார் கூறுகிறார். 


ஆக, அறிவது ஆன்மாவே!

                     அந்த ஆத்மா தான் அறிபவன், நினைப்பவன், செல்பவன், ஸ்ருஷ்டிப்பவன், மகிழ்பவன், செயல்புரிபவன், பேசுபவன், ருசி பார்ப்பவன், முகர்பவன், பார்ப்பவன், கேட்பவன், தொடுபவன், உரு படைத்த உடலில் உறையும் பிரபு எனக் கூறப் படுகிறது. 


"எங்கு அறிவு இரண்டு பட்டதோ அங்கேயே அது பார்க்கிறது, முகர்கிறது, சுவைக்கிறது, தொடுகிறது, அனைத்தையும் ஆத்மா உணர்கிறது. எங்கு அறிவு இரண்டற்ற அத்வைதமாகி விட்டதோ காரியமும், காரணமும் இல்லததோ அங்கு அது வாக்கினால் வர்ணிக்க முடியாததாகவும், உவமையற்றதாகவும், விளக்க முடியாததாகவும் உள்ளது."

                        - மைத்ராயணீ உபனிஷத்து


பிராணன்... ஆத்மாவோடு இணைக்கப் பட்ட காற்று, அது சுவாசத்தோடு சம்பந்தப் பட்ட காற்று, அதன் இயக்கம் வயிற்றிலிருந்து தலை உச்சி வரை உணரப் பட்டுள்ளது. 


பிராணன் அபானன் இவை இரு முக்கிய காற்றுகள் இவற்றின் இயக்கம் உணர்வதற்கு அரிது. அவை இரண்டும் உதிக்கும் இடம் சூழுமுனை. அவற்றை இயக்குவது ஜீவன். எல்லாவற்றையும் விட அதன் இயக்கத்தாலேயே எண்ணங்களாகிய மனம் உண்டாகிறது. அறிவது ஆத்மாவே ஆகும். இது ஆகமப் பிரமாணம் எனப்படும்.


நுரையீரல் தானாக சுருங்கி விரிவதில்லை. அதுவும் ஜீவனால் இயக்கப் படுகிறது. உதர விதானம் கீழிறங்குவதாலும் நெஞ்சு விரிவடைவதாலும் காற்று உள்ளிழுக்கப் படுகிறது என்று எண்ணுகிறோம். 


இந்த பிராணன் என்னும் ஜீவனொடு இணைக்கப்பட்ட காற்றின் இயக்கத்தாலேயே நமது சுவாசம் நடைபெறுகிறது. இந்த செயல் நமது எண்ணங்களுக்கு எட்டும் அறிவால் நடக்கவில்லை. தானாக நடைபெறுவதும் இல்லை. இதுவும் உயிரின் செயலே ஆகும். ஆனால் எண்ணங்களுக்கேற்ப இந்த பிராணனின் பாதை மாறுபடுகிறது. இந்த பிராணனே உதர விதானத்தை கீழிழுக்கிறது. பிராணன் ஜீவனால் இயக்கப் படுகிறது. ஜீவன் பிராணனின் உதவியால் அறிகிறது.


The observer become observant. At the same time the observant is doing the business of observer. Hence, the observant become observer.


"கண்டு அறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே

உண்டி வினை இன்றி உயிர்த்தலால் – கண்டு அறியும்

உள்ளம் வேறு உண்டு; ஆய்; ஒடுங்காது உடல் நண்ணிய

உள்ளதாம் உண்டி வினை ஊன்"


கண்டு அறிந்து கொண்டிருந்த இவ்வுடல், பிராணனாகிய காற்று ஒடுங்காதிருக்கும் போதே இன்ப துன்ப உணர்வுகளைக் கொள்ளாமல் உயிர்த்திருக்கும்.


(அதாவது பிராணனாகிய காற்று உடல் அறியும் போதும் (விழிப்பிலும்), அறியாத போதும் (தூக்கத்திலும்) இயங்கும்) எனவே கண்டு அறிகின்ற வேறு ஒன்று உண்டு. அது ஒடுங்காமால் உடலை சேரும் போதே இன்ப துன்ப உணர்வுகளை உடல் அறியும்.


"அறிந்திடும் பிராண வாயு

அடங்குதல் விடுதல் செய்தால்

அறிந்திடாது உடல் உறக்கத்‌து

அறிவு இன்மை கரணம் இன்மை

அறிந்திடும் முதலி ஆகில்

அது நிற்கக் கரணம் போகா

அறிந்திடும் பிராணன் தன்னை

அடக்கியும் விட்டும் ஆன்மா"

                       - சிவஞான சித்தியார்


அறியாத போது (தூங்கும் போது) அடங்கியும், அறியும் போது (விழிப்பில்) உடலோடு கூடியும் இருந்தால், பிராண வாயு அறிவதாக சொல்லலாம். உடல் உறங்கும் போது அறிவதில்லை அறிவும் இல்லை, மனம், புத்தி போன்ற கரணங்களும் இல்லை. பிராணன் தான் அறிந்ததென்றால் அது ஓடும் போதே கரணம் நின்று போகாது (அதாவது மனம் புத்தி இல்லாமல் போகாது). எனவே பிராணனை அடக்கியும் விட்டும் அறிவது ஆன்மாவே ஆகும். (பிராணன் தான் அடங்குவதில்லை அதனால் அறிவதில்லை என்று சொன்ன பிறகு ஆன்மா பிராணனை அடக்கியும் - விட்டும் அறிவதாக சொல்வது ஆன்மாவே பிராணனை பல நாடிகளில் செலுத்தி அறிகிறது என்னும் பொருளை தருகிறது)


"ஏக வெளியில் இருக்கின்ற

சக்கரம் ஏது மறியார்கள்

சாகாக்கால் என்றும் வேகாத்

தலையையென்றும் தானே அறிவாரோ?"

                  - பிரம்மானந்தச் சித்தர் 


சூட்சும உடலில் உள்ள சக்கரங்களை அறிய முடியாதவர்கள் சாகாக் கால், வேகாத் தலை என்றும் சொல்லப் படுகிற குண்டலினியை எவ்வாறு அறிவார்கள்? 


கால் என்றால் பிராணன் சாகாக் கால் என்றால் நிலை பெற்ற பிராணனான குண்டலினியையே அது குறிக்கிறது. 


வேகாத் தலை என்பது அதன் பற்றும் இயல்பைக் குறிக்கிறது.


"மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற

பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற

கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்

ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே"


"எருவிடும் வாசற் கிருவிரல் மேலே

கருவிடும் வாசற் கிருவிரற் கீழே

உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்

கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே"


பிராணனை … புடமிட்டு தீம்பிழம்பாக ஜோதி வடிவில் metamorphosis ஆகி விடும்.

       

"மூலப் பகுதியறத் தாண்டவக்கோனே – உள்ளம்

முளைத்தவேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே"

                   - இடைக்காட்டுச் சித்தர் பாடல்


உயிரானது மூலப் பகுதியிலிருந்து முளைத்து வரக் காரணமான வேரை பிடுங்கி எறிய வேண்டும் என்று பொருள்


"பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு

தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்

பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ

நீங்கல் கொடானே நெடுந்தகை யானே"

                          - திருமந்திரம்


"குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே"

                     - ஒளவையாரின் வரிகள் 


"தவத்தின் வெப்பதாலும் பிராணாயாம வாயுவாலும், மனத்தின் ஒருமைப் பாட்டாலும் எழுப்பப்பட்ட அந்த சக்தி நூலை எடுத்துக் கொண்டு ஊசி செல்வதைப் போல் சூக்ஷம்னா நாடி வழியாக மேலே செல்லுகிறது"

                     - தியான பிந்து உபநிஷத்து


"எந்த வழியால் நோயற்ற பிரம்மாஸ்தானத்தை அடைய வேண்டுமோ அந்த வழியின் வாயிலை முகத்தால் மறைத்துக் கொண்டு குண்டலினி பரமேசுவரி உறங்குகிறாள். தவத்தின் வெப்பதாலும் பிராணாயாம வாயுவாலும், மனத்தின் ஒருமைப் பாட்டாலும் எழுப்பப்பட்ட அந்த சக்தி நூலை எடுத்துக் கொண்டு ஊசி செல்வதைப் போல் சுக்ஷம்னா நாடி வழியாக மேலே செல்லுகிறது. யோகியானவன் அந்த குண்டலினி சக்தியால் சஹஸ்ராரமாகிய மோக்ஷ வாயிலை அடைந்து சாவியால் கதவைத் திறப்பது போல் திறக்கிறான்.  மூலாதாரத்திலிருந்து கிளம்பும் சுக்ஷம்னா நாடி தாமரை நூல் போன்றது. வீணையினின்று எழும் உருவற்ற நாதம் பல வடிவில் பிரகாசிப்பது போல் சங்கம் முதலிய துவனிகள் தோன்றும். குழலோசை போலும் மயில் கூவுவது போலும் நாதம் தோன்றும். கபாலத்தின் நாலு வாயில்களின் மத்தியில் ஆகாயத்தில் சூரியன் பிரகாசிப்பது போல் ஆத்மா பிரகாசிக்கும். இரண்டு வில்லின் மதியைப் போன்ற பிரம்மரந்திரத்தில் ஆத்மாவாகிய தன்னை சாதாகனாகிய புருசன் யோகசக்தியால் காண்கிறான். அங்கு மனது லயமடைகிறது. ரத்னப் பிரகாசம் நிலவில் மறைவது போல் நாதம் அங்கே பிந்துவில் ஒடுங்குகிறது. அது மஹேசுவரன் உறைவிடம். எந்த புருசன் இதை அறிகிறானோ அவன் தான் தானாக விளங்கும் கைவல்யம் எனும் இன்பத்தை அனுபவிக்கிறான்"

                      - தியான பிந்து உபநிஷத்து.


சொடலைமுத்து கேக்கறார் … என் PhD யை அநாயமாக முடிச்சிட்டேன். இது பெரிய தெண்ட கசமாலமா தெரியுதே? 


அப்போ  என் படிப்பெல்லாம் வேஸ்டுதானா?


எதுவுமே வேஸ்டு கெடையாது.


என் பல்லை பேக்க மாட்டேன்'னு உறுதிமொழி குடுத்தீங்க'னா … ஏன் வேஸ்டு கெடையாது'னு சொல்றேன்.

'நீ பட்டாணி, முறுக்கு, சீடை திங்கறத்துக்கு நான் கேரண்டி'

               -சொடலை

பொழைச்சோம்.


கடலுல பாய்மரம் செலுத்தறத்துக்கு, காற்றின் திசையறிந்து பாய்மரத்தை கட்டி உட்டுப்புட்டோம்'னா போதும் ... கையினால் துடுப்பு வலித்தலை நிறுத்திக்கலாம். படகு பாட்டுக்கு போயிட்டே இருக்கும். அப்பப்போ ... பாய்மரத்துணியை தளர்வு இல்லாம செஞ்சிக்கிட்டு இருந்தால் போதுமானது


தொட்டித்தண்ணிய மொத்தமா வெளியேத்தணும்'னா ... சொம்பை வச்சி மொண்டு மொண்டு ஊத்திக்கிட்டு இருக்க வேண்டாம். ஒரு டியூப் கொண்டு ஒருமுறை உறிஞ்சு ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணி வெளியேறச் செஞ்சாப் போதும் அதுக்கப்புறம்  மொத்த தண்ணியும் வெளியேறிடும்.


அப்பப்போ ... நிக்காம வெளியே போகுதா'னு மட்டும் போயி போயி பார்த்துக்கிட்டு இருந்தால் போதுமானது.


காற்று ஆலையில் (wind mill) ... இம்மாம் பெரிய விசிறியை ... முதலில் கொஞ்சம் நேரம் வரைக்கும் மட்டும் சுழல வைக்க மின்சாரம் பாய்ச்சி மோட்டாரை போட்டு வைத்தால் போதுமானது.


பிறகு ... காற்றின் போக்குக்கு ஏற்ப ... விசிறி சுழல ஆரம்பித்துவிடும் ... அதுக்கப்புறம் அந்த சுழலுகின்ற விசிறியானது மின்சாரம் அளிக்க ஆரம்பித்துவிடும்.


இந்த விஷயமெல்லாம் எதைச் சொல்லுது?


சில நுட்பங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு ... ஆரம்பத்தில் சிறிது பிரயாசைப்பட்டு ... நாம் எதிர்ப்பார்க்கும் விஷயத்தை செய்ய ஆரம்பித்துவிட்டால் போதுமானது. பிறகு அந்த காரியம் தன்னாலேயே நடக்கும்! 


பின்னர் அந்த செயலானது அடுத்த அடிக்கான செயல் முறையைக் கற்றளிக்கும். 


அதை நாம் மறந்தாலும், நம்மை trigger செய்து நம்மை செய்யவைத்து ... அந்த செயல் தொடர்ச்சியாக செயல்பட வைக்கும் பணியை ... அந்த system-மே கவனித்துக் கொள்ளும்.


நமது அப்போதைய பணி என்னவாக இருக்க வேண்டும் என்றால் ... அந்த செயலானது தங்குதடையின்றி சென்று கொண்டிருக்கிறதா என்பதை மேற்பார்வை இடுவது மட்டுமே!


தியானம் பழக ஆரம்பிக்கும் அதே வேளையில் ... நமக்கு மிகமிகப் பிடித்தமான ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


தியானத்தையும், அச்செயலையும் உடன்நிகழ்வாக (simultaneously) செய்து கொண்டே வர வேண்டும்.


இரண்டிலுமே கொஞ்சம் சரளம் கிடைத்தபின் ... எப்போது தியானம் செய்ய ஆரம்பிக்க நேரிடினும் ... அச்செயலும் உடன்நிகழ்வாகக் கூடவரும். 


எப்பொழுது அந்த குறிப்பிட்ட செயல் செய்ய ஆரம்பித்தாலும், தியான நிலையும் உடன்நிகழ்வாகத் தலைப்படும்.


உதாரணத்திற்கு, சித்தர்கள் ... மூச்சுப் பயிற்சியை சீரமைக்கும் தியான முறையை பழகி வந்துள்ளார்கள்.


கூடவே, மருத்துவம் என்ற மனித சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலையும் உயிராக நினைத்தார்கள்.


தியானப் பயிற்சி கற்றார்கள். கூடவே மருந்து தயாரிப்பதை தொழிலாகச் செய்து ... அதில் நிபுணத்துவம் பெற்றார்கள்.


இரண்டிலும் சற்றேக் கரைகண்ட பின்னர் ... தியானத்தை ஆரம்பித்து விட்டு உடன்நிகழ்வாக மருந்து தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள் 'உறிஞ்சி விட்ட தண்ணி போல' ... ஆரம்பித்த தியானமானது அத்தனை புலனுணர்வையும் கூட்டி மருந்து தயாரிக்கும் போதெல்லாம் உடன்நிகழ்வாக உள்ளுக்குள்ளே பிரணாயம முறையில் சீரமைக்கப்பட்ட காற்றானது ... சீராக இயங்கி வரும்.


எப்போதெல்லாம் பிராணயாமத்தை ஆரம்பிக்கிறார்களோ ... அப்போதெல்லாம் மருந்து தயாரிப்பு நடக்கும் ... 


எப்பொழுதெல்லாம் மருந்து தயாரித்தல் நடைபெறுகிறதோ ... அப்பொழுதெல்லாம் ... தியான உணர்வும் நடைபெற்றுக் கொண்டே வரும்.


இது தியானம் செய்யும் வகைமுறை. இதைத் தவிர தியானம் வேறு எப்படி செய்தாலும் விரக்தி நிலை மட்டுமே நிலைக்கும்.


உலக விஷயங்களில் பயம் ஏற்பட்டு தியானத்திற்குள் ஒளிந்து கொள்வது என்பது ... உலக விஷயத்திலும், தியானத்திலும் இரண்டிலுமே நம் செயலுக்கு நியாயம் கற்பிக்க இயலாமல் போய்விடும்.


உலக விஷயம் மட்டுமே செய்து அதில் உன்னத உயர்வு அடைந்தாலும் ... ஒரு கட்டத்தில் ... வெறுமையும், விரக்தியும் வந்து சேரும்.


தியானமும், தொழிலும் ஒருங்கே செய்தால் இரண்டிலுமே நிபுணத்துவம் பெற முடியும் என்று இருக்கையில், ஒன்றை விடுத்து ... மற்றொன்றை மட்டும் செய்வானேன்?


இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ... இரண்டாவதான விஷயம். 


இரண்டாவதாக உடன்நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டிய செயலானது, உலக வாழ்வுடன் சம்மந்தப் பட்டதாகவும், மிகவும் பிடித்தமானதாகவுமாக இருக்க வேண்டும்.


உதாரணத்திற்கு, பெட்டிக்கடை வைத்திருப்பவராக இருந்தால் ... கடை திறந்து விற்பனைக்கு முன் ... தன் தியான பயிற்சியை எடுத்துக் கொண்டு ... அதே உணர்வோடு விற்பனையை ஆரம்பிக்க வேண்டும். 


தியான உணர்வுடனேயே, நாள் முழுதும் தொடர்ந்து இருக்க வேண்டும். 


இப்படியே கொஞ்ச நாள் இப்படியே செய்து வந்தால் ... கடையைத் திறக்கும் போதே தியான உணர்வு எழுச்சி பெறும்.


நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக தியானமும், பெட்டிக் கடையும் அபரிதமான வளர்ச்சிபெறும்.


லௌகீக காரியத்தை வெறுத்து தியானத்தில் ஒளிந்து கொள்ளுதலோ,


லௌகீக விஷயத்தை மட்டுமே கவனித்து வந்து ... தியானத்தை அசட்டையாக இருந்து விடுவதோ ... சிறுபிள்ளைத்தனம்.


இரண்டுமே ஒன்றுக்கொன்று நிரப்பி .. Complementary என்று இருக்கையில் ... ஒன்றை விடுத்து மற்றொன்றை மட்டுமே செய்வானேன்.


இன்னொன்று... தியானத்தின் மேல்நிலை என்பது அதுவாகவே நிகழ வேண்டும்.


Offside பந்து போட்டாச்சி, அடுத்ததாக full toss போட்டுட்டாருல்ல ... அடுத்த பந்து yorker தான் போடுவாரு'னு, எதிர்ப் பார்த்து காத்திருக்க கூடாது. எதிர்ப்பார்க்கவும் முடியாது.


ஆரம்பிக்கறது மட்டுமே நம் வேலை, எங்கெல்லாம் இட்டுச் செல்லுமோ இட்டுச் செல்லட்டும்.


இன்னது வருமா அடுத்து? என்று மூளை செயல்பாட்டின்கண் ... எதிர்ப்பார்த்து காத்திருத்தல் என்பது ... நீங்கள் objective conscious-க்கு போக மறுத்து வருகிறீர்கள் என்று அர்த்தம்.


உதாரணத்துக்கு, நமது நோக்கம் சமீரணனாக இருக்கலாம். ஆனால் ... நாம் சமீரணனை எதிர்ப்பார்த்து காத்திருக்க கூடாது ... அது அதுவாகவே நிகழ வேண்டும்.


வேலியில  சுருக்கு கயிறு போட்டு ... 


ஓணான் கழுத்துல மாட்டி ... 'ஓணான் மாட்டிடுச்சு' ஓணான் கெடைச்சிடுச்சி'னு சின்ன பசங்க கூவற காரியம் கெடையாது .. தியானம் என்பது !...


சுருக்கைக் கட்டி வேலியில் வைத்துவிட்டு ... நம்ம பாட்டுக்கு, நம்ம வேலையில  ஈடுபட்டுட்டு இருக்கணும் ... சுருக்குல ஓணான் விழுந்தே தீரும்னு நம்பணும் ... 


நிச்சயம் அந்த சுருக்கினில் ... 


அந்த ஓணான் .... 


விழுந்தேத் தீரும் !!!


(செப்படு வித்தையிலிருந்து...)


பகிர்வு நன்றி; Manekshaw Thandapani T

No comments:

Post a Comment