#கேள்வியும்_பதிலும்.
#கேள்வி:
திருமண் காப்பு எல்லா நேரத்திலும் அவசியமா?
கர்மா செய்யும் போது மட்டும் அணிந்தால் போதாதா?
சாதாரண நேரத்தில் ஶ்ரீசூர்ணம் மட்டும் அணிந்தால் போதும் தானே?
விளக்கவும்...
#பதில்:
திருமண் காப்பு என்பதை விட ஊர்த்வ புண்டரம் என்று அழைப்பதே மகத்துவமானது.
ஊர்தவம் என்றால் மேல் நோக்கி
என்று அர்த்தம்.
பொதுவாக ஶ்ரீவைணவர்களுக்கு எல்லா வைதிக கர்மாக்களுக்குமே திருமண் காப்பு என்பது முக்கிய அங்கமாகும்.
அதை தரிக்காமல் வைதிக கர்மாக்களைச் செய்தால் வீணே என்பதை பல நூல்களை கொண்டு ஸ்தாபனம் செய்கிறார்கள் நம் சித்தாந்த ஆச்சாரியார்கள்.
அவற்றில் அடியேன் அறிந்தவரையில் முக்கியமான சில விளக்கங்கள்.
காலையிலும மாலையிலும் ஹோமம் பூஜை முதலியவற்றை செய்யும் போதும் திருமண் காப்பு தரித்தவனே பரிசுத்தமானவன் ஆகிறான் என போதாயநர் ரிஷிகூறிஉள்ளார்.
திருமண் காப்பு இல்லாவிட்டால் ஶ்ரீவைணவன் ஒரு கர்மாவும் செய்ய தகுதியற்றவனாகிறான் என்று பராசர்ய ஸம்ஹிதா என்ற நூல் கூறுகிறது.
யஜ்ஞம் தானம் தபஸ் ஹோமம் போஜனம்(உணவு உண்ண ) பித்ரு தர்ப்பணம் போன்றவை எல்லாம் செய்ய திருமண் காப்பு இல்லாவிட்டால் அந்த செயல் வீணாகும் என பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
பிரம்மச்சாரி, குடும்பஸ்தன், வானப்ரஸ்தன், ஸந்யாசி எல்லாரும்
திருமண் காப்பு தரிக்க வேண்டும்
இதையும் பிரம்மாண்ட புராணம் சொல்லுகிறது.
பூவுலகில் இருந்து மகாபாபம் செய்பவர்களையும் எந்த புண்ட்ரமானது (மேல் நோக்கி) நல்ல கதிக்கு அழைத்து செல்கின்றதோ அதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் எனப் பெயர்.
அதை விடாமல் தரிக்க வேண்டும்
ஸ்ரீ நாரதீயம் என்ற நூல் கூறுகிறது.
திருமண் காப்பு ( திருநாமம்) என்பது ஶ்ரீவைணவர்களால் முன் நெற்றியில் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ சின்னம்.
இதையே திருமண் காப்பு தரித்தல்
என்று நாம் கூறுகிறோம்.
வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும்.
வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன் ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
தீபத்தை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறோம்.
ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும்.
இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது.
எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் செயலையும் தூய்மையாக்குகிறது.
வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில் திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் அதை எப்போதும் நாம் தரித்திருக்க வேண்டும்.
ஸ்வாமி நம்மாழ்வார் தம்
திருவாய் மொழியில்
நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத்தொழுவார்
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே என்கிறார்
#அதன்_அர்த்தம்
ஒற்றை பிறை அணிந்தவனானா
அதாவது சந்திரசேகரனாகிய சிவபெருமானும்
நான்முகனும் ( பிரமதேவனும்)
இந்திரனும் (தேவேந்திரனும்)
மற்றை அமரரும் எல்லாம்
(மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்)
வந்து என் நெற்றியுள்
( நெற்றியில் படிந்திருந்து)
நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி
அதாவது என்னையாள்கின்ற மலரொழுங் கமைந்த பகவானின் திருவடிகளை (தங்கள் தலையிலே) சூடிக்கொண்டு)
கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை (செறிந்த திருத்துழாயாகிற வளையமணிந்த எம்பெருமானை)
தொழுவார்( வணங்காநிற்பர்கள்).
அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான் எனது உச்சி உளான்
(என் தலையின்மேலேயானான் என்கிறார்) நமக்கு கவலையில்லை.
எனவே பகவானை நம் தலைமேல் இருக்க செய்ய எப்போதும் திருமண் காப்பு அணிவது நலம்.
காலை தீர்த்தாமாடிய பின்பும்
மதியம் மாத்யாஹனியம் செய்யும் முன்பும்
( சரியாக திருமண் காப்பு தெரியாத பட்சத்தில்)
மாலையில் அலுவலகம் சென்று வந்த பின்போ,
அல்லது சாதாரணமாகவே முகம் கை கால் அலம்பி திருமண் காப்பு தரிப்பது உச்சிதம்.
எந்த காரணத்தை கொண்டும் பகவானையும் பிராட்டியையும் (ஶ்ரீ) பிரிக்கும் முகமாக ஶ்ரீசூர்ணம் மட்டும் அணிவது தவறான ஒரு செயல்.
காரணம் பகவானிடமிருந்து தாயாரை பிரித்ததால் இராவணன் பட்ட அழிவு நமக்கு தெரியும் தானே.
எனவே எக்காரணம் கொண்டும் திருமண் இன்றி ஶ்ரீசூர்ணம் மட்டும் தரியாதீர்கள்.
அதனால் வாழ்வில் நலம் கிட்டாது.
தாயார் இன்றி பகவான் இல்லை.
எனவே தாயாரை பிரித்தால் பகவத் அனுகூலமும் கிட்டாது
ஶ்ரீவைணவர்களான ஆன நாம் எப்போதும் திருமண் காப்பு அணிந்தே காட்சி தருவோம்.
தீட்டு காலங்களில் என்னிடம் இருந்து ஶ்ரீ ( சுபம்) விலகியுள்ளது என குறிக்கவே வெறும் திருமண் அணிகிறோம்.
அதாவது தாயரை பிரிந்து பகவான் துன்பப்பட்டது போல் துக்கத்தில் உள்ளோம் என்பதை குறிக்கவே விடு திருமனை சீதக நாட்களில் தரிக்கிறோம்.
பிறப்பின் போது பகவானே உம்மை விட்டு இந்த ஆத்மா பிரிந்து மீண்டும் இப்பூலகில் ஜனித்து விட்டதே என்ற வருத்தத்திலும்
இறப்பின் போது பகவானே எங்களுடன் இருந்து பழகிய அந்த ஆத்மா தன்னுடன் எங்களையும் உம்மிடம் சரணடைய அழைத்து செல்லாமல் சென்றுவிட்டதே என்ற வருத்தத்திலும்
பகவானே தாயரை பிரிந்து தேவரீர் எப்படி துன்பப்பட்டீரோ அதுபோல் துன்பமடைகிறோம் என்பதை குறிக்க விடுதிருமண் இடுகிறோம்.
எனவே எக்காரணம் கொண்டும் திருமண்காப்பு இன்றியோ
ஶ்ரீசூர்ணம் மட்டும் தரித்து கொண்டோ இராதீர்.
துக்க காலத்தில் விடுதிருமனுடனும்
சாதாரண காலத்தில் திருமண் காப்புடனும் இருக்க பழகுங்கள்.
தன்யோஸ்மி....
ஜெய் ஶ்ரீராம்!
No comments:
Post a Comment