Tuesday, 7 September 2021

சிவபுராணம் விளக்க உரை

 திருச்சிற்றம்பலம்


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி  

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே -எல்லை  

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்  

திருவாசகம் என்னும் தேன்.


#எட்டாம்திருமுறை -#திருவாசகம் - #திருப்பெருந்துறை -#ஸ்ரீமத்மாணிக்கவாசகர் -#சிவபுராணம்

#1


திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபிரான் ஞானகுருவாக எழுந்தருளி திருவாதவூரருக்கு சிவஞானங் காட்டி திருவடி தீட்சை வழங்கிய பின் அருளிச்செய்த திருவாசகம் 


சிவபெருமானே திருவாதவூராரை மாணிக்கவாசகர் என திருநாமம் சூட்டி பின் மாணிக்கவாசகர் சிவபெருமானின் அநாதி பெருமையை சொல்ல சொல்ல அந்த இறைவனே தம் திருமேனி திருக்கரத்தினால் எழுதப்பட்ட திருவாசகம்


சிவபிரானது அநாதி முறைமையான பழமை


அஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத அநாதி காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம்.


#சிவபுராணம்


#நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

- - - - -

பொழிப்புரை:

"திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! திருவைந் தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க! இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க! திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தி யினது திருவடி வாழ்க! ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க! ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க! 


#வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

- - - - -

பொழிப்புரை:

"மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக! பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக! தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாத வனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக! கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக! கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக!


#ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

- - - - -

பொழிப்புரை:

ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவ பிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.


#ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்

அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20

- - - - -

பொழிப்புரை:

"தெவிட்டாத இன்பத்தைக் கொடுக் கின்ற மலைபோலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். 

சிவபெரு மானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், 

அவ னுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினைமுழுமையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்."


#கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

- - - - -

பொழிப்புரை:

"நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், 

வானமாகி நிறைந்தும் மண்ணாகி நிறைந்தும் மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே! உன்னுடைய மிக்க சிறப்பை, கொடிய வினையை உடையவனாகிய யான், புகழுகின்ற விதம் சிறிதும் அறி கிலேன். 


#புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

- - - - -

பொழிப்புரை:

"புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும் பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும், பூதகணங்களாகியும், வலிய அசுரராகி யும், முனிவராகியும், தேவராகியும் இயங்குகின்ற இந்த நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள் களுள்ளே


#எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

- - - - -

பொழிப்புரை:

"எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன். எம் பெருமானே! இப்பொழுது உண்மையாகவே, உன் அழகிய திருவடிகளைக் கண்டு வீடு பெற்றேன். நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடபவாகனனே! மறைகள், ஐயனே என்று துதிக்க உயர்ந்து ஆழ்ந்து பரந்த நுண் பொருளானவனே! 


#வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

- - - - -

பொழிப்புரை:

"வெம்மை யானவனே! தண்ணியனே! ஆன்மாவாய் நின்ற விமலனே! நிலையாத பொருள்கள் யாவும் என்னை விட்டு ஒழிய, குருவாய் எழுந்தருளி மெய்யுணர்வு வடிவமாய், விளங்குகின்ற உண்மை ஒளியே! எவ் வகை யான அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே! அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே!


#ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

- - - - -

பொழிப்புரை:

"தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே! எல்லா உலகங்களையும் படைப்பாய்; நிலை பெறுத்துவாய்; ஒடுக்குவாய்; அருள் செய்வாய்; அடியேனைப் பிறவியிற் செலுத்துவாய்; உன் தொண்டில் புகப் பண்ணுவாய்; பூவின் மணம் போல நுட்பமாய் இருப்பவனே! தொலைவில் இருப்பவனே! அண்மையில் இருப்பவனே! சொல்லும் மனமும் கடந்து நின்ற வேதப் பொருளாய் உள்ளவனே! 


#கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

- - - - -

பொழிப்புரை:

"சிறந்த அன்பரது மனத்துள் கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடின போல இன்பம் மிகுந்து நின்று, எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே! ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, 


#மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

- - - - -

பொழிப்புரை:

"மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்


#விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

- - - - -

பொழிப்புரை:

"உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே மாசற்றவனே! உன்பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய், மனம் கசிந்து உருகுகின்ற நன்மையில்லாத சிறியேனுக்குக் கருணைபுரிந்து பூமியின்மேல் எழுந்தருளி நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத் 


#தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

- - - - -

பொழிப்புரை:

"தாயினும் மேலாகிய அருள் வடிவான உண்மைப் பொருளே! களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, பூப்போன்ற சுடரே! அளவிலாப் பேரொளியனே! தேனே! அரிய அமுதே! சிவபுரத்தை யுடையானே! பாசமாகிய தொடர்பையறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய அருளைச் செய்து என் மனத்தில் உள்ள வஞ்சம் அழிய, 


#பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

- - - - -

பொழிப்புரை:

"பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய நதியே! தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ஆராயாதார் மனத்தில் மறைகின்ற ஒளியை யுடையானே! என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிராய் நின்றவனே! சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே! 

"அன்பர் பொருட்டு அவைகளை உடையவனே!


#அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

- - - - -

பொழிப்புரை:

"அன்பர்களிடத்து அன்புடைவனே! கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி, தன்மையினால் அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை யுடையவனே! நிறைந்த இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே! முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே! என்னை இழுத்து ஆட்கொண்டருளின எமது தந்தையாகிய சிவபெருமானே! மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும், 


#நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

- - - - -

பொழிப்புரை:

"எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே! ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத இயற்கையில் நுட்பமாகிய அறிவே! போதலும் வருதலும் நிற்றலும் இல்லாத புண்ணியனே! எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே! காண்பதற்கரிய பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே! அப்பனே! மேலோனே! நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும் சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகி யும் 


#மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

- - - - -

பொழிப்புரை:

"மாறுபடுதலையுடைய உலகத்தில் வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து, அறிவாய் விளங்கும் தெளிவானவனே! தெளி வின் தெளிவே! என் மனத்துள் ஊற்றுப் போன்ற பருகுதற்குப் பொருந்திய அமிர்தமே! தலைவனே!வெவ்வேறு விகாரங்களையுடைய ஊனாலாகிய உடம் பினுள்ளே தங்கிக் கிடக்கப்பெற்று ஆற்றேன் ஆயினேன். எம் ஐயனே! சிவனே! ஓ என்று முறையிட்டு 


#போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

- - - - -

பொழிப்புரை:

"வணங்கித் திருப்புகழை ஓதியிருந்து அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, வினைப் பிறவியையடையாமல், வஞ்சகத்தை யுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை அறுக்க வல்லவனே! நடு இரவில் கூத்தினைப் பலகாலும் பயிலும் தலைவனே! தில்லையுள் நடிப்பவனே! தென்பாண்டி நாட்டையுடையவனே! 


#அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து 95

- - - - -

பொழிப்புரை:

துன்பப் பிறப்பை அறுப்பவனே! ஓவென்று முறையிட்டுத் துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்க, சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ் சென்று நிலைபெறுவர்.

- - - - -

#ஸ்ரீமத்மாணிக்கவாசகசுவாமிகள்


புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி

No comments:

Post a Comment