சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கரூரில் வாழ்ந்துவந்த மகான்களில் ஒருவர் கருவூர் சித்தர். சாதாரண குடிமக்கள் மத்தியில் ஆன்மிக விழிப்புணர்வை உருவாக்கியவர் கருவூர் சித்தர். குழந்தை பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார் கருவூரார். இவரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, கோவில்களில் விக்கிரகங்கள் செய்து வாழ்ந்துவந்தார்கள். ஒரு சமயம் போகர் திருவாடுதுறைக்கு வந்தார். அவரைச் சந்தித்த பிறகு போகரின் சீடரானார் கருவூரார். குருவின் சொல்படி நடந்து பல நற்காரியங்களை கருவூரார் செய்து வந்தார்.
ஒருமுறை தில்லை நடராஜரைக் கலப்படமில்லாத சொக்கத் தங்கத்தில் விக்கிரகமாக உருவாக்க வேண்டும் என்று மன்னர் இரணிய வர்மன் உத்தரவிட்டார். செம்போ அல்லது வேறு உலோகமோ கலக்காமல் 48 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் மன்னர் கூறினார். ஆனால் சிற்பிகள் முயன்றும் விக்கிரகத்தைச் செய்ய முடியவில்லை. மன்னர் கொடுத்த கெடுவில் 47 நாட்கள் வீணாகிவிட்டன.
தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், கரூவூராருக்கு விக்கிரகம் செய்ய வழிமுறைகளைச் சொல்லி வழியனுப்பினார். 48-வது நாளும் வந்ததால் சிற்பிகள் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தனர். மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.
“கவலை வேண்டாம். மன்னரின் விருப்பப்படி நடராஜரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளிடம் கூறினார்.
சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாதபோது உன்னால் எப்படி முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.
“என்னால் முடியும். இன்னும் ஒரு மணி நேரத்தில் செய்கிறேன்” என்றார் கருவூரார்.
விக்கிரகம் செய்ய ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார் கருவூரார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்தது. வெளியே வந்த கருவூரார்,”போய்ப் பாருங்கள், விக்கிரகம் செய்தாகிவிட்டது” என்று சொன்னார்.
உள்ளே சென்றதும், கருவூராரால் வடிவமைக்கப்பட்ட ஆடலரசனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர். அப்போது அங்கு வந்த மன்னரும் சிலையின் அழகில் மயங்கி சிற்பிகளை பாராட்டினார்.
ஆனால் உண்மையில் சிலை செம்பு கலந்தே செய்யப்பட்டதையும், சிற்பிகளுக்கு பதிலாக கருவூரார் சிலையை வடிவமைத்ததும் மன்னருக்குத் தெரியவந்தது. உடனே கருவூராரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மன்னர். இதன் பின்னர் போகர் அங்கு தோன்றினார்.
“செம்பு கலக்காமல் எப்படி தங்க விக்கிரகம் செய்ய முடியும்” என மன்னரிடம் கேள்வி எழுப்பினார். “நாள் ஆக சுத்தத் தங்கத்தில் இருந்து வரும் ஒளி, பார்வையைக் குருடாக்கிவிடாதா” என்ற அறிவியல் தத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
“அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். போனது போகட்டும். இந்தா நீ தந்த தங்கத்துக்கு அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.
“அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக்கொள்” என்று கூறிவிட்டு போகர் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார். மன்னர் போகரின் காலில் வீழ்ந்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்
No comments:
Post a Comment