யோகம் என்ற சகமார்க்கம் இறைவனைத் தனது தோழனாக நினைத்து, பரம்பொருளோடு ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
அட்டாங்கம் என்னும் எட்டு யோக நிலைகளைக் கடந்து, ராஜ ஞான யோகத்தில் பேரின்பம் அடைந்தவர்களே மகான்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.
வாவியெல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணீறு
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈதுசிவ லோகம் என்று என்று மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர்”
என்று பட்டினத்தார் போற்றும் திருவொற்றியூரில் ஜீவசமாதியில் வீற்றிருக்கிறார் மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.
பைரவ உபாசகரிடம் உபதேசம்
ஆந்திர மாநிலம் அனந்துபூர் மாவட்டத்திலுள்ள உருவிகொண்டா என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட இராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் குலத்தைச் சேர்ந்தவர்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டதால் துறவை மேற்கொண்டு பெல்லாரியில் எரிதாதா சுவாமிகளிடம் சில காலம் சீடராக இருந்தார். நேபாள மன்னராக இருந்த பைரவ உபாசகர் ராஜாராம் சுவாமிகளிடம் உபதேசம் பெற்றார். பின்னர் கும்பகோணத்திற்கு அருகில், வலங்கைமானை அடுத்த பாடகச்சேரியைத் தமது இருப்பிடமாகக் கொண்டார் . இங்கு தமது யோக வலிமையைப் பலப்படுத்திக்கொண்டார்.
பைரவ உபாசகராக இருந்த இராமலிங்க சுவாமிகள் ஒருமுறை முன்னூறு பேருக்கு உணவு தயாரிக்குமாறு கூறினார். சமைத்து முடித்ததும், இலைகளைப் போடச் செய்துவிட்டுத் தமது கையிலிருந்த கோலால் தரையில் தட்டியதும், பல திசைகளிலிருந்து நூற்றுக்கணக்கான நாய்கள் வந்து இலையின் முன் அமர்ந்து உண்டுவிட்டுச் சுவாமிகளைச் சுற்றிவந்து விடைபெற்றுச் சென்றனவாம்.
இவர் ஓரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றியதாகவும் செய்திகள் உள்ளன. ரசவாதத்திலும் ஈடுபாடுள்ளார். பின்னர் கும்பகோணத்தில் காரைக்கால் சாலையிலுள்ள முத்துப்பிள்ளை மண்டபத்தில் சுமார் பதினைந்து ஆண்டு காலம் தங்கியிருந்து தமது பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
ஆலய வழக்கைத் தீர்த்தவர்
கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது நாகேஸ்வரன் ஆலயத்தைச் செப்பனிட்டார். இந்த ஆலயத்தைச் செப்பனிட்டு முடித்ததும் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒருவழக்கு நடந்தது. அந்த வழக்கின் தீர்ப்பு நாளன்று சுவாமிகள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில், கும்பகோணத்தில் உள்ள ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தம்மை வைத்துப் பூட்டச் செய்தார். தாம் அழைக்கும் வரை திறக்க வேண்டாம் என்று கூறினாராம். அடுத்த நொடி அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்தார். மாலையில் சுவாமிகள் அழைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்த பக்தர்கள், சுவாமிகள் தம் கையில் தீர்ப்பின் நகலுடன் வெளிவருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து எந்தத் தடைகளுமின்றி நாகேஸ்வரன் ஆலயக் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்.
அதன் பின்னர் இறைவனது திருவுளப்படி திருவொற்றியூர் சென்று, சத்திய ஞான சபையினைத் துவக்கி உபதேசங்களைச் செய்தார்.
தாம் முக்தியடையும் காலம் வந்துவிட்டதைத் தமது பக்தர்களுக்கு அறிவித்து, “நான் மறைந்தாலும் என்னை நம்பி இருப்பவர்களுக்கு என்றும் துணையாக இருப்பேன்” என்று கூறினார். அவர் அறிவித்தபடி விரோதி ஆண்டு ஆடி மாதம் 14-ம் நாள் (29-7-1949) வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சுவாமிகள் தங்கியிருந்த முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையில் இவரது ஆன்மா பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியிருக்கிறது.
ஸ்தூல உடலில் இருந்த போது ஒரே நேரத்தில் இரு இடங்களில் காட்சியளித்த சுவாமிகளுக்கு, தமது ஆன்மாவை இரண்டு இடங்களில் நிலைநிறுத்தித் தமது பக்தர்களுக்கு அருள்புரிவதும் சாத்தியம்தானே.
சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க
திருவொற்றியூர் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திலிருந்து பட்டினத்தார் கோயில் தெருவில் சில அடிகள் நடந்தால் சுவாமிகளின் ஜீவசமாதியை அடையலாம்.
No comments:
Post a Comment