ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே. - திருமூலர்
அண்டம் என்று சொல்லப்படும் வெட்டவெளி, பிருத்திவி, அப்பு, தேயு, வாயு, வெளி என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. அதனால்தான் அங்கிருந்து வரும் இந்த உயிர்களும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
நமது பஞ்சஞானேந்திரங்கள் என்று அழைக்கப்படும் ஐம்பொறிகளும் அவற்றின் செயல்களான ஐம்புலன்களும் பஞ்சபூதங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இந்தத் தத்துவத்தை உணர்ந்துகொண்டு, இந்தப் பிண்டத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்யுங்கள் என்ற கருத்தைத்தான் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் தமது மெய்யன்பர்களுக்குப் போதித்தார்.
பக்தர்களைக் கவர்ந்த வசீகரம்
1936-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பதி என்ற ஊரிலுள்ள காளியம்மன் கோவிலில் திடீரென்று ஒருநாள் கோவணத்துடன் தோன்றிய சுவாமிகளின் முகவசீகரம் அந்த ஊர் மக்களைக் கவர்ந்திழுத்தது. அவர் எங்கு பிறந்தார், எங்கிருந்து வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை.
அவரை இறைவனின் அவதாரமாகக் கருதிய அந்த ஊர்மக்களின் அன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு அவரை அங்கேயே தங்கவைத்தது. திருமூலர் கூறிய சிவசித்தரின் இயல்புகளை முழுவதுமாகப் பெற்றிருந்த சுவாமிகள், தம்மை நாடி வந்தவர்களுக்கு உபதேசங்கள் செய்ததுடன் அதிசயங்களையும் நிகழ்த்திக்காட்டினார்.
காசி, அயோத்தி என்று பல இடங்களுக்குச் சென்றுவிட்டு நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் ஒரு மலைக்குகையில் சிறிது காலம் தவமியற்றினார். மீண்டும் தமிழகத்துக்கு ’ வந்து, கணக்கன்பதியில் தங்கியிருந்த போது அவரது மெய்யன்பர்கள் அவரது அனுமதியுடன் 1938-ம் ஆண்டு அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையை நிறுவினர்.
“ கரணங்கள் நான்கும் தனக்குள் ஒடுங்கிடில்
கருமம் இல்லையென்று பாரு”
அதாவது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தகரணங்களும் அவற்றால் ஆட்டிவைக்கப்படும் பஞ்சஞானேந்திரியங்களையும் அடக்கினால் வினைகள் தீரும். வினைகள் தீர்ந்தால், நாம் எடுத்த பிறவியின் நோக்கம் புலப்படும் என்றார்.
அத்துடன் அகங்காரம் நீங்க சாந்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள் என்றார். அடங்காமல் அலைந்துகொண்டிருக்கும் சித்தத்தை அடக்க, ஏகம் என்ற எங்கும் நிறைந்திருக்கும் சிவத்தைப் பற்றிக்கொள்ளவும் கூறினார். புத்தி தெளிவு பெற சத்தியத்தைப் பற்றிக்கொள்ளுங்கள்; பின்னர் மனம் தானாகவே இறையுடன் ஒன்றும் என்று போதித்தார்.
உடல் நீங்கிய தருணம்
1945-ம் ஆண்டு சென்னை மாகாண கவர்னரின் கேம்ப் கிளார்க் தனகோபால் அவர்களுடன், சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அரசினர் மாளிகையில் தங்கியிருந்தார். கவர்னர் பொறுப்பில் இருந்த ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், தமது உடலிலிருந்து ஆன்மாவை விலக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக அறிவித்தார்.
அதன்படி,1946-ம் ஆண்டு நவம்பர் மாதம், 19-ம் நாள் மாலை ஐந்தரை மணிக்கு சுவாமிகள் விதேக முக்தி அடைந்தார்.
சச்சிதானந்த சற்குரு சுவாமிகள் ஒளிவடிவாக இன்றும் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் இருந்து, தம்மை நாடி வருபவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
சுவாமிகளைத் தரிசிக்க
No comments:
Post a Comment