வெடிச் சத்தம் ஒலிக்கும் வெள்ளக்கோயில்!
கொங்கு மண்டலத்தில் உள்ள இருபத்து நான்கு நாடுகளில் ஒன்று ‘காங்கேய நாடு’. கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளக் கோயில் என்ற ஊரில் அமைந்திருக்கிறது வீரகுமாரசுவாமி திருக்கோயில். அக்காலத்தில் காங்கேய நாட்டுக்கு உட்பட்டதாக இருந்த இவ்வூர், அப்போது வெள்ளைக்கோயில் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அது மருவி ‘வெள்ளக் கோயில்’ என்றானதாகவும் செவிவழித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்தர் சபை
ராஜகோபுரவாயில் என்று அழைக்கப்படும் திருக்கோயிலின் முதன்மை நுழைவாயில், கோயிலின் வடக்குத் திசையில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பெரும்பாலும், ராஜ கோபுரத்தில் இருந்து பார்த்தோமே யானால், மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறை நன்றாகத் தெரியும். ஆனால், இக்கோயிலின் ராஜகோபுரத்தில் இிருந்து பார்த்தால், கருவறை தெரியாது.
மூலவரின் கருவறை வடக்கு நோக்கியே அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்மண்டபங்களின் கிழக்குப்புறம் ஐம்பூதங்களின் சிலைகள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. முன் மண்டபத்தில் இருந்து உள்நோக்கிப் பார்த்தால், கன்னிமார் சந்நிதியும் பதினெண் சித்தர்கள் சிலைகளும் கண்ணுக்குப் புலப்படும். இந்தப் பதினெண் சித்தர்கள் எழுந்தருளியிருக்கும் இடம் ‘சித்தர் சபை’ என அழைக்கப் படுகிறது. தலவிருட்சம் - கறுக்கட்டான் மரம்.
வீரகுமாரசுவாமி
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்புவரை காடுகளாக இருந்த இவ்விடத்தின் தெற்குப் பகுதியில் அப்போது புற்று ஒன்று இருந்திருக்கிறது. ஒருமுறை, அந்தப் புற்றின் அருகில் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருக்க, பாம்பு வடிவத்தில் உடலும், மனித வடிவத்தில் தலையும் கொண்ட ஓர் உருவம் அந்தப் புற்றிலிருந்து வந்து, பசுவின் மடியிலிருந்து பாலைப் பருகியதாம். அந்த உருவத்துக்கு வீரகுமாரசுவாமி என்று பெயரிட்டு, சிலை வடித்து, வழிபடத் தொடங்கியிருக்கிறார்கள். வீரகுமாரசுவாமி பாதக் குறடு கவசம் அணிந்தும், இடுப்பில் தாங்குச்சையும், உடைவாளும், குத்துவாளும், வலது கையில் சூலாயுதமும் கொண்டு, கன்னி தெய்வமாகக் காட்சியளிக்கிறார். இவர் கன்னி தெய்வமாகக் காட்சி தருவதால், பெண்கள் யாரும் கோயிலுக்குள் செல்வது கிடையாது. பெண்கள் உள்ளே செல்லக்கூடாது என்று எந்தவிதக் கட்டுப்பாடும் இங்கு இல்லை. ஆனாலும், பெண் பக்தர்கள் உள்ளே சென்று மூலவரை தரிசிப்பது இல்லை எனத் தாங்களாகவே முடிவெடுத்து, கடைப்பிடித்தும் வருகிறார்கள்.
வேண்டுதலை நிறைவேற்றும் வெடி வழிபாடு!
பொட்லி போடுதல் என்ற சிறப்புப் பரிகாரம் காலங்காலமாகவே இக்கோயிலில் நடைபெற்று வருகிறது. பொட்லி என்பது ஒரு வகை வெடி ஆகும். இக்கோயிலில் வெடிக்கப்படும் பொட்லி வெடியின் சத்தம் வீரகுமாரசுவாமிக்கு விருப்பமான ஒன்று! தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் வீரகுமாரசுவாமியை தரிசித்துவிட்டு, கோயிலின் எதிரே உள்ள பொட்லி போடும் மண்டபத்துக்குச் சென்று, தங்களின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பொட்லி போடுவார்கள். இந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு வீரகுமாரசுவாமி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். பொதுவாக திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பொட்லி வெடி போடுவது வழக்கம்.
மகனாக ஏற்றுக்கொண்ட செல்லாண்டியம்மன்!
இக்கோயிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செல்லாண்டியம்மன் திருக்கோயில். புற்றுமண்ணால் உருவானவர்தான் வீரகுமாரசுவாமி என்றாலும், மக்களைக் காத்தருளும் அவரை செல்லாண்டியம்மன் தன் மகனாகவே பாவித்து வந்தாராம். எனவே, செல்லாண்டியம்மனை வணங்கிய பிறகு வீரகுமாரசுவாமியை வணங்கினால், வேண்டியவை அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
உங்கள் கவனத்துக்கு
ஸ்வாமி: வீரகுமாரசுவாமி
சிறப்பு தரிசனம்: செல்லாண்டியம்மன்
சிறப்பு வழிபாடு: பொட்லி போடுதல் எனும் வெடிவழிபாடு
பலிக்கும் பிரார்த்தனைகள்: திருமண வரம், பிள்ளைப்பேறு
நடை திறக்கும் நேரம்: காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது?: கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கோவையில் இருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் உள்ளது வெள்ளக்கோயில். கோவையில் இருந்து கரூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வெள்ளக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். அருகிலேயே அமைந்திருக்கிறது ஆலயம் தவிர, ஈரோட்டில் இருந்தும் செல்லலாம். அந்த ஊரில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment