குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என்பார்கள். ஆனால், நம் பாரத தேசத்தைப் பொறுத்தவரை குமரன் மட்டுமல்ல... குறைவில்லா அருளை வழங்கக்கூடிய சித்தர்களும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். இதற்கு ஆதாரமாக இந்திய தேசத்தில் உள்ள எண்ணற்ற மலைகளைச் சொல்லலாம். காலாங்கிநாதர், சட்டைமுனி, ராமதேவர், கோரக்கர் இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களோடு சம்பந்தப்பட்டது சதுரகிரி. பாம்பாட்டிச் சித்தர் தவம் இருந்து ஸித்துக்கள் புரிந்த இடம் மருதமலை. பின்னாக்குச் சித்தர் வசித்த பேறு பெற்றது சென்னிமலை. சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்ற எண்ணற்ற தவசீலர்கள் வாழ்ந்து, இறையருள் பெருகிய பூமி திருவண்ணாமலை. ஆதிசங்கரர், மகா அவதார் பாபாஜி போன்ற எண்ணற்ற மகா புருஷர்கள் உலவிச் சிறப்பித்த பிரதேசம் இமயமலை. தவிர வெள்ளியங்கரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற எண்ணற்ற மலைகள் எல்லாம் சித்தர்கள் அருள் நிரம்பிய சிலிர்க்க வைக்கும் சாகசச் சிகரங்கள்!
இந்த வரிசையில் மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும் காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெரியரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரம் கொண்டது இந்த மலை. இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளன. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.
இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன.
மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும் காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம். இதன் செயலாளராக இருந்து வருபவர் இரா. தட்சிணாமூர்த்தி. மாயாண்டி சுவாமிகளுடன் உடன் இருந்து அவர் இட்ட திருப்பணிகளை எல்லாம் செய்து முடித்த இருளப்பக் கோனாரின் கொள்ளுப் பேரன் இவர்.
இரா. தட்சிணாமூர்த்தி நம்மிடம், எங்கள் குலத்தையே வாழ வைத்து வரும் மாயாண்டி õசுவாமிகள் தன் காலத்தில் கண்ட கனவு ஒவ்வொன்றையும் அவரது அருளாசியுடன் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறோம். அவரது திருவாக்கின்படி மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம் கல் திருப்பணியாக அமைந்திருக்கிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது. இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி-சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு. இதை எல்லாம் செய்வது நாங்கள்தான் என்றால், அது உண்மை அல்ல. சுவாமிகள் எங்களுடன் இருந்து ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றுக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டும் என்றார் அடக்கத்தோடு.
எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை?
சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்துவிட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமாள் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும் காண முடியும். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும்.
மாயாண்டி சுவாமிகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இந்த மலைக்கே அதிபதியாகத் திகழ்பவரும், பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவருமான காகபுசுண்டரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
பெறற்கரிய மிக அபூர்வமான ஆற்றல்களையும் தவ வலிமையையும் தன்னகத்தே கொண்டவர் காகபுசுண்டர். இவர் சாதாரண பிறப்பல்ல... சிவபெருமானின் அற்புத சக்தியால் தோன்றியவர் என்பதை போகரும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
உரைத்துமே புசுண்டரது பிறப்பைக் கேளாய்
உகந்த மதுவுண்டுஅன் னங்களிக் கும்போது
பரைத்துமே பரிதிமுதல்சோ மனையும் தரித்த
பராபரமும் பார்ப்பதியும் பார்த்தா ரத்தை
நிறைத்துமே சிவகளைதான் காகம்போல
நேர்ந்தணைய அன்னமங் கேநிறைகர்ப்ப மாயிற்றே
இரைத்துமே இருபதிற் றொன்று பிள்ளை.
அதாவது போகருடைய இந்தப் பாடல் சொல்லும் பொருளும் கதையும் இதுதான்.
புசுண்டரது பிறப்பைப் பற்றிச் சொல்கிறேன். கேள... (காகபுசுண்டர் என்பது பிற்போடு வந்த பெயர். ஆதியில் இவர் பெயர் புசுண்டர்) தேவலோகத்தில் ஒரு முறை சிவனுக்கும் சக்திதேவிக்கும் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆடலும் பாடலும் அமர்க்களப்பட்டன. வந்திருந்தோருக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. அப்போது அங்கிருந்த சுண்டன் என்கிற காக்கையும், தேவியின் பரிவாரங்களை ஏழு அன்னப் பறவைகளும் மது உண்ட மிகுதியால் கூடிக் களித்தன. இதனால் ஏழு அன்னங்களும் இருபத்தோரு அன்னக் குஞ்சுகளையும், ஒரு காகத்தையும் முட்டையாக இட்டுக் குஞ்சு பொரித்தன. அந்தக் காக்கைக் குஞ்சே- பின்னாளில் காகபுசுண்டர்.
காகபுசுண்டரின் முதல் அவதாரம் இதுதான். இதன் பின்னர் பாம்பு, மனிதன் என்று எண்ணற்ற அவதாரம் எடுத்தார். எத்தனையோ கல்பம் வாழ்ந்தார். எத்தனையோ பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும், எத்தனையோ பிரமாக்கள், விஷ்ணுக்கள், சிவபெருமான்கள் அழிந்து போனதையும், பிரளய காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாக சிருஷ்டிக்கப்படும்போது இருந்த ஒரே ஒரு ஜீவன் -காகபுசுண்டர் மட்டுமே! ஸ்ரீராமபிரானின் ஞானகுருவான வசிஷ்ட மகரிஷிக்கே பல அரிய அற்புதங்களைச் சொல்லிக் கொடுத்தார். வசிஷ்டரின் ஏழாவது பிறவி இது என்று அவருக்கே சொல்லி, திகைப்பை ஏற்படுத்தியவர் காகபுசுண்டர். நான்கு யுகங்களும் மாறி மாறி வந்ததை, தான் நான்கு முறை பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார். இதே செய்தியை,
சேதமொன்று மில்லாமல் மவுனமுற்று
சிறப்பாக எத்தனையோ யுகங்கள் கண்டு
வேதமென்ற பிரம்மத்தி லடங்கிக் கொண்டு
வெகு கோடியுகங்கள் வரை இருந்திட்டேனே
என்று இவரைப் பற்றிக் குறிப்பு சொல்கிறது காகபுசுண்டர் பெருநூல் காவியம்.
பங்குனி மாத உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தார் காகபுசுண்டர் என்பது ஒரு குறிப்பு. ஞான காவியம், காகபுசுண்டர் பெருநூல் காவியம், காகபுசுண்டர் மெய்ஞான விளக்க சூத்திர்ம, உபநிடதம்- இப்படிப் பல நூல்களை எழுதி உள்ளார் இவர். காகபுசுண்டர் இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதே சித்தர் வழிபாட்டாளர்களின் நம்பிக்கை. காகபுசுண்டரின் மனைவி பெயர் பகுளாதேவி என்றும், தம்பதி சமேதராக இருவரும் கள்ளக்குறிச்சி அருகே தென் பொன்பரப்பு என்கிற கிராமத்தில் சமாதி அடைந்ததாகவும் ஒரு தகவல் (மாறுபட்ட கருத்தும் உண்டு).
ஆக, காகபுசுண்டரின் வரலாறு, மிகப் பெரிது. அதற்குள் நாம் போக வேண்டாம். மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கும் இந்தக் காகபுசுண்டர் மலைக்கு மச்சமுனி வந்து, உபதேசம் பெற்றுச் சென்றதாகவும் ஒரு குறிப்பைச் சொல்கிறார்கள் திருப்பரங்குன்றத்துக்காரர்கள். இருக்கலாம்தானே! மதுரைக்கும் மச்சமுனிக்கும் தொடர்பு இருப்பதாக நூல்கள் தெரிவிக்கின்றன. மச்சமுனி சமாதி ஆனதே திருப்பரங்குன்றம் மலைதான். மலைக்கு மேல் அவரது சமாதி இருக்கிறது என்கிறார் மதுரை அன்பர் ஒருவர். அப்படி இருக்கும்போது தனக்கு உபதேசம் செய்த காகபுசுண்டர் குடிகொண்ட மலையை எந்நேரமும் தான் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக, மச்சமுனி இங்கே சமாதி ஆகி இருக்கலாமே (முரண்பட்ட கருத்துகளும் உண்டு).
வாருங்கள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் வருவோம்!
மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில்- அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும் ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரிகர்களும் பயன்படுத்தி வந்தனர்.
கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்த புருஷர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்தச் சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
மாயாண்டி சுவாமிகளின் அவதாரத்துக்கு வருவோம். கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர்- கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழில். தவிர, உள்ளூரில் இருந்த ஐயனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858 ஜூலை) ஆண் குழந்தை பிறந்தது. அகிலத்தையே ஆளப் பிறந்த அந்த மகவுக்கு மாயாண்டி எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே இறை ஞானம் கிடைக்கப் பெற்றது மாயாண்டிக்கு. பெற்றோரும் இதை உணரும் சம்பவம் ஒன்றும் விரைவிலேயே நடந்தது.
தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்துவிட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்துவிட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது.
குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்துகொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக்கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர்.
பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிடகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் பார்த்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும் அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி.
இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவர் மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி.
மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனைச் செய்துவிட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு- இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார்.
அவரைச் சந்தித்து, தன்னைச் சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகிவிட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும் மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்!
கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம் ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது.
சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார்.
காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உடையவர்- க. இருளப்ப கோனார். மதுரை வடக்கு மாசி வீதியில் தாளமுத்துப் பிள்ளை சந்தில் வசித்து வந்தார் இவர். இருளப்ப கோனாருக்கும் மாயாண்டி சுவாமிகளுக்கும் இருந்த தொடர்பு அவரது காலத்தோடு முடிந்துவிடாமல், அவரது சந்ததியில் வந்த சேதுமாதவ கோனார், ராமலிங்க கோனார், தட்சிணாமூர்த்தி கோனார் என்று இந்தப் பரம்பரையே மாயாண்டி சுவாமிகள் திருத்தொண்டில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. தற்போது சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக (நான்காவது தலைமுறை) இருந்து வருபவர் க.இ.சே. ராமலிங்கக் கோனார்.
இருளப்ப கோனாரின் தந்தையார் கருப்பண்ண கோனாரை வளர்த்தவர் சுப்ரமண்ய கோனார். இவர் மதுரையில் அந்தக் காலத்தில் சிட் பண்ட் நடத்தி வந்தவர். சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு ஏற்பட்டதும், கருப்பண்ண கோனாரின் வாழ்க்கையில் ஒரு பிரகாசம் கூடியது. ஒரு கட்டத்தில் இருளப்ப கோனாரையும் தன் பங்குதாரராக ஆக்கிக்கொண்டார் சுப்ரமண்ய கோனார். மாயாண்டி சுவாமிகள் சம்பந்தப்பட்ட ஆன்மிகத் தொண்டுகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு சுப்ரமண்ய கோனாரின் தொடர்பு கருப்பண்ண கோனாருக்கு உதவியது என்றால், அது தெய்வீகச் செயலே! கருப்பண்ண கோனார் காலத்துக்குப் பின், அவரது இறைப் பணிகளைத் தொடர்ந்தார் அவரது திருமகனான இருளப்ப கோனார்.
துவக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர் இருளப்ப கோனார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உத்ஸவ காலத்தில் சுவாமி வீதி உலாவின் போது தீவட்டி பிடித்து, அதற்குக் கூலியாக காலணா சன்மானத்தைப் பெற்று வாழ்ந்து வந்தவர் இருளப்ப கோனார். கூலியாகக் கிடைக்கும் காசு, அன்னை மீனாட்சி இட்ட பிச்சை என்பதாக அகமகிழ்வார் இருளப்ப கோனார். அப்படி இறைப் பணி செய்து சம்பாதித்த பணத்தையும் தெய்வீகக் காரியங்களுக்கே செலவழித்தார். சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்ந்து தன்னால் முடிந்த தான தர்மங்களையும் நந்தவன கைங்கர்யங்களையும் செய்து வந்தார். ஆடி அமாவாசை தினத்தன்று மதுரை அழகர் கோயிலில் இருளப்ப கோனார் துவக்கி வைத்த அன்னதானச் சேவை இன்றும் நடந்து வருகிறது. சுந்தர ராமானுஜ தாசர் என்றே இருளப்ப கோனாரின் பரம்பரை இன்றளவும் போற்றப்படுகிறது. இந்தப் பட்டத்தை இருளப்ப கோனாருக்கு வழங்கியவர் ஸ்ரீரங்கம் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளோடு இணைந்து அவரது நந்தவனக் கைங்கர்யத்துக்கு உதவினார். நந்தவனப் பணிகள் மேலும் சிறப்பதற்கும் தடை இல்லாமல் நடப்பதற்கும் நிலங்களை வாங்கிக் கொடுத்தார். இருளப்ப கோனாரின் அரும் பணிகளைப் பார்த்து வியந்த மதுரகவி சுவாமிகள் அவருக்கு சுந்தர ராமானுஜ தாசர் என்கிற பட்டத்தை அளித்து கௌரவித்தார். வைணவப் பணிகளைப் பெருமளவு செய்து கொண்டிருந்ததால் ராமானுஜ தாசர்; மதுரையில் அழகர் கோயிலுக்கு சேவை செய்து கொண்டிருந்ததால், அங்குள்ள பெருமாளின் திருநாமமான சுந்தர்ராஜ என்பதில் இருந்து சுந்தர என்பதைச் சேர்த்து, சுந்தர ராமானுஜ தாசர் என்று இருளப்ப கோனாரை அழைத்தார் மதுரகவி சுவாமிகள். ஸ்ரீரங்கத்திலேயே பல காலம் தங்கி இருந்து, மதுரகவி சுவாமிகளின் திருப்பணிகளுக்கு உதவி, அவர் திருவரசு (மகா சமாதி) ஆன பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்தார் இருளப்ப கோனார்.
மதுரைக்கு வந்த இருளப்ப கோனார், தனது ஆன்மிகப் பணிகள் இனிதாகத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார். ஒரு நாள் கீழப்பூங்குடி மிளகாய்ச் சித்தர் என்கிற ஞானியைச் சந்தித்தார். இருளப்பா... திரிகால ஞானி ஒருவர் மதுரைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி என்பது அவர் பெயர். ஆரப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், கூடல்மலை போன்ற பகுதிகள்தான் அவரது நித்திய வாசம். அவரைத் தேடிப் போய் தரிசனம் செய். உன் வாழ்க்கை சிறக்கும்? என்று சொல்லிப் போனார்.
மிளகாய்ச் சாமியார் சொன்னதன்படி மாயாண்டி சுவாமிகளைத் தரிசித்து, அவரையே தன் குருவாக ஏற்பதற்குப் பெரும் விருப்பம் கொண்டார் இருளப்ப கோனார். இதற்கு இவருக்கு உதவியவர்- மூக்கையா சுவாமிகள். இவர் இருளப்ப கோனாரின் உறவினரும்கூட. மூக்கையா சுவாமிகளுடன் போய் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளைச் சந்தித்தார். மொளகா சாமீ ஒன்னை அனுச்சானா? என்று கேட்டுவிட்டு, இருளப்ப கோனாரை ஆசிர்வதித்து, தன் அருட் பணிகளில் இணைத்துக் கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இருளப்ப கோனார் தன் காலத்தில் திரட்டிய செல்வத்தைக் கொண்டு திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் நிறைய இடங்களை வாங்கி, மாயாண்டி சுவாமிகளின் அறிவுரைப்படி ஆன்மிகம் மற்றும் அறப் பணிகளைப் பிற்காலத்தில் நடத்தலானார்.
மாயாண்டி சுவாமிகள் வெளி உலகுக்குத் தெரிய வந்த காலத்தில் கோரிப்பாளையத்தில் சின்னதாக ஒரு மடம் அமைத்து அங்கு தங்கி இருந்தார் அவர். இது 1904-1905-களில். வைகைப் பாலத்துக்கு அருகே (அப்போதே இந்தப் பாலம் இருந்தது) இந்த மடம் அமைந்திருந்தது. அப்போது ஒரு நாள் பாலத்தில் இருந்து இறங்கிப் பயணிக்கும்போது இந்த ஏரியாவில் (கோரிப்பாளையத்தில்) மணிச் சத்தமும் பஜனை முழக்கமும் கேட்கிறதே... என்ன நடக்கிறது? என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், குதிரையை விட்டிறங்கி, மாயாண்டி சுவாமிகளின் மடத்தை ஒரு நாள் எட்டிப் பார்த்திருக்கிறார்.
திடீரென மடத்துக்குள் நுழைந்த ஆங்கிலேய பிரபுவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் மாயாண்டி சுவாமிகளின் பக்தர்கள். காரணம் அந்தக் காலத்தில் பல ஆங்கிலேயர்கள் இந்து மத வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்து வந்ததுதான். கோயில் சொத்துக்களைக் கபளீகரம் செய்தும் வந்தார்கள் சில துரைமார்கள்.
மடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்தவாறும் வழிபாடுகளைக் கண்டு பிரமித்தவாறும் மாயாண்டி சுவாமிகளின் முன்னால் வந்து நின்றார் பிரபு. சுவாமிகளின் பக்தர்கள் பதைபதைப்புடன், சாமீ... நம்ம எடத்தைக் காலி பண்றதுக்கு வந்திருக்காரு போலிருக்கு என்றனர். மாயாண்டி சுவாமிகள் சிரித்துக் கொண்டே, டேய் அப்பு... நீங்க நெனைக்கிற ஆளு இல்லேடா இவன்... பூர்வ ஜன்மம் அவனை இங்கே இழுத்திட்டு வந்திருக்கு என்று பலருக்குப் புரிந்தும் புரியாமலும் பேசிய சுவாமிகள், பிரபுவைத் தன் அருகே வரவழைத்துப் பேசினார். ஒரு சில கேள்விகள் கேவ்வார் பிரபு. மடத்தின் செயல்பாடுகள் பற்றிச் சொன்னார் சுவாமிகள்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆங்கிலேயப் பிரவுக்கு என்ன ஆனதோ, தெரியவில்லை. பொசுக்கென்று மாயாண்டி சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்தார். சுவாமிகளின் பக்தர்கள் பெரிதும் வியந்து, அதன் பின்னர்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். வந்த ஒரு சில நிமிடங்களிலேயே மாயாண்டி சுவாமிகளின் சக்தியை உணர்ந்து கொண்டார் ஆங்கிலேய பிரபு. அதுவரை முறையான பட்டா இல்லாமல் அங்கே நடந்து வந்த மடத்துக்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் தந்தார் பிரபு (இப்போதும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதன் முதலாக அமைத்த இந்த கோரிப்பாளையம் மடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது). இதன் பிறகு காகபுசுண்டர் மலையில் மாயாண்டி சுவாமிகள் பெரிய அளவில் ஆன்மிகப் பணிகளைத் துவக்கியபோது அந்த ஆங்கிலேய பிரபுவே பல சந்தர்ப்பங்களில் நேரில் வந்து உதவி இருக்கிறாராம்.
இந்த ஆங்கிலேய பிரபு என்றில்லை. பல ஆங்கிலேய அதிகாரிகள் சுவாமிகளின் அனுக்ரஹத்துக்கு ஆளாகி உள்ளார்கள். சுவாமிகளின் மகத்துவம் அறியாமல் அவரை அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கிய சில வெள்ளைக்கார அதிகாரிகள்கூட, இவரது ஸித்த வேலைகளைப் புரிந்து கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அருளாசியும் பெற்றிருக்கிறார்கள்.
ஒரு முறை மதுரையில் இருந்து மானாமதுரைக்கு ரயிலில் பயணித்தார் மாயாண்டி சுவாமிகள். லௌகீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள்தான் டிக்கெட் எடுத்து பயணிப்பார்கள். மகான்களுக்கு ஏது டிக்கெட்? சித்தம் போக்கு சிவம் போக்கு என்பதாக சுவாமிகள் ஒரு மூலையில் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்போது வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வந்து அனைவரிடமும் சோதனை செய்து கொண்டிருந்தார். அதன்படி, மாயாண்டி சுவாமிகளிடம் வந்து, டிக்கெட்... டிக்கெட்.. என்று கேட்டார். சுவாமிகளிடம் இருந்து பதில் இல்லை. தியானத்தில் இருந்த சுவாமிகளை வலுக்கட்டாயமாக எழுப்பி, டிக்கெட் எங்கே? என்று கடுமையான குரலில் கேட்டிருக்கிறார். மாயாண்டி சுவாமிகளின் முகத்தில் புன்சிரிப்பைத் தவிர, வேறு பதில் இல்லை. பிறகு, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
கடுப்பான வெள்ளைக்கார பரிசோதகர், இவரை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற முடிவுடன், அடர்ந்த ஒரு காட்டுப் பிரதேசத்தில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். உடன் இருந்த பல பயணிகள் கேட்டுக்கொண்டும், அவர்களின் வேண்டுகோளை மதிக்காமல் சுவாமிகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார் பரிசோதகர். கொடிய மிருகங்கள் உலவும் ஆள் அரவமே இல்லாத அத்துவானக் காடு அது!
வருத்தமும் கோபமும் மகான்களுக்கு ஏது? எதைப் பற்றியும் கவலைப்படாமல், சற்றுத் தொலைவு நடந்து சென்று, அங்கிருந்த பிரமாண்ட ஆல மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார் சுவாமிகளை விட்டுச் செல்லப் போகிறோமே? என்கிற பரிதாபத்துடன் பயணிகளான அவரின் பக்தர்கள் சிலர் கண்களில் நீர் கசிய பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரயில் மீண்டும் புறப்படுவதற்காக விசில் ஊதப்பட்டது; பச்சைக் கொடி காட்டப்பட்டது. ஆனால், ரயில் புறப்படுவதாக இல்லை. எப்படிப் புறப்படும்? அகிலத்தையே இயக்கும் வல்லமை கொண்ட ஒரு மகானை இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு விட்டு எப்படி அந்த ரயில் புறப்படும்? நெடு நேரத்துக்கு ரயிலைப் பரிசோதித்துப் பார்த்தும், அது புறப்படுவதாகத் தெரியவில்லை. ரயில்வேயில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு மட்டும் இதன் காரணம் புரிந்தது. சுவாமிகளை இறக்கிவிட்டதனால்தான் இப்படி அவஸ்தைப்படுகிறோம். வாருங்கள். அவரிடம் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு, அவரையும் அழைத்து வந்து ரயிலைக் கிளப்புவோம் என்று சொல்ல... வண்டியின் டிரைவர் உட்பட சில பணியாளர்களும் பயணிகளும் ஆல மரத்தின் அருகே சென்றனர்.
தியானத்தில் இருந்த சுவாமிகள் திடீரெனக் கண் திறந்தார். என்ன அப்பு. கூட்டமா வந்திருக்கீங்க.. வண்டி மானாமதுரைக்குப் போகணுமா? என்று கேட்டார் புன்னகையுடன். அனைவரும் டிக்கெட் பரிசோதகரின் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஆமா சாமீ... மானாமதுரைக்குப் போகணும். இந்த இடம் பயங்கரமான காடா இருக்கு. பல பேரு குடும்பம் குட்டியோட இருக்கோம் என்று கெஞ்சி குரலில் சொல்ல... அப்படியா... இதோ வந்திட்டேன் அப்பு... என்றபடி துள்ளிக் குதித்து ஓட்டமாகக் கிளம்பிய சுவாமிகள் வண்டியில் ஏறிக் கொண்டார். ஒரு மூலையில் அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார். இறங்கி வந்தவர்கள் அனைவரும் ஏறிக்கொள்ள, அடுத்த விநாடியே எந்த மக்கரும் செய்யாமல் ரயில் பெரும் சத்தத்துடன் கிளம்பியது.
மானாமதுரை வந்தது. சுவாமிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்ட அந்த வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர், ஓட்டமும் நடையுமாக வந்து, சுவாமிகள் பிளாட்பாரத்தை விட்டு வெளியே போவதற்குள் அவரது திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். இப்படி சுவாமிகள் செய்த ஸித்து வேலைகளை நிறைய சொல்லலாம்.
மாயாண்டி சுவாமிகளின் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள் எண்ணற்றவை.
மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் ராமசாமி என்கிற அந்தணர் தன் இல்லாளுடன் வசித்து வந்தார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். ஒரு நாள் இவர்கள் இல்லத்துக்கு எழுந்தருளினார் மாயாண்டி சுவாமிகள். தம்பதியரை ஆசிர்வதித்து, உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறப்பான். உலகம் மேன்மை அடைவதற்கு வேள்விகள் செய்வான். மாதா புவனேஸ்வரியின் அருளைப் பூரணமாகப் பெறுவான் அவன். சிறு பிராயம் வரை அவன் உங்களிடம் இருப்பான். பிறகு அவன் இந்த உலகத்துக்கே சொந்தம் ஆவான். அவனுக்கு சுப்ரமணியம் என்று பெயர் வை என்று சொல்லிப் போனார்.
அதன்படி ராமசாமி தம்பதிக்குப் பத்தாவது பிள்ளையாகப் பிறந்த சுப்ரமணியனே, ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆனார். மாயாண்டி சுவாமிகளின் திருவாக்குப்படி மாதா புவனேஸ்வரியின் அருளுக்குப் பாத்திரமானார். சேலம், புதுக்கோட்டை, சென்னை சேலையூர் போன்ற இடங்களில் ஸ்கந்தாஸ்ரம் அமைத்து, மாபெரும் வேள்விகள் நடத்தி, ஸித்தி ஆனதை பக்தர்கள் அறிவார்கள்.
காசு கொடுத்த இவன் பேச்சை உலகமே கேட்கும் என்று மாயாண்டி சுவாமிகளே ஆசிர்வதித்த சிறுவன்தான், பிற்காலத்தில் கிருபானந்த வாரியார் ஆனார்! இந்த நன்றியை மறக்காத வாரியார் சுவாமிகள் 1987-ஆம் ஆண்டு நடந்த சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டு, அவரது சிறப்புகளைக் கூட்டத்தார் மத்தியில் சிலாகித்துப் பேசினார்.
இருளப்ப கோனாருக்கு ஆயுள் பலம் குறைவாக இருப்பதாகவும் அவரது வாழ்வு இருபத்தாறு வயதுக்குள் முடிந்துவிடும் என்றும் சில ஜோசியர்கள் அவரிடம் சொல்லி இருந்தார்கள். இதைக் கேட்டு மனக்கவலையில் இருந்த காலத்தில்தான் மாயாண்டி சுவாமிகளை கோரிப்பாளையத்தில் சந்தித்தார் இருளப்ப கோனார். திரளான பக்தர்கள் கூடி இருந்த அந்த மடத்தின் சூழ்நிலையைப் பார்த்ததும், மெய் மறந்தார் இருளப்ப கோனார். மாயாண்டி சுவாமிகளின் திருவடிகளில் தன்னை சமர்ப்பித்தார். மணக்கும் மலர் மாலைகள் மலைபோல் குவிந்து கிடக்க, அவற்றின் இடையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் சுவாமிகள் (சுவாமிகள் பெரும்பாலும் இதே நிலையில்தான் அமர்ந்திருப்பார்). இருவரும் பார்வையால் பேசிக் கொண்டனர்.
மாயாண்டி சுவாமிகள் திடீரென இருளப்ப கோனாரைப் பார்த்துச் சிரித்தார். என்ன அப்பு... ஜோசியக்காரன் சொன்னதைக் கேட்டு கவலையில் இருக்கியா? உனக்கு ஆயுள் உண்டு. இன்னும் நீ நிறைய அறப் பணி செய்ய வேண்டி இருக்கே என்று சுவாமிகள் திருவாய் மலர... இருளப்ப கோனார் அதிசயித்து அவரைப் பார்த்தார் ஒருவருடைய ஆயுளையே மாற்றும் திறன் மகான்களுக்கு உண்டு என்பது, இருளப்ப கோனார் வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டது. அதற்கான நிரூபணமாக, கட்டிக்குளத்துக்கு மேற்கே கருப்பனேந்தலில் தான் உருவாக்கிய தியான மடத்துக்கு இருளப்ப கோனாரை அழைத்துச் சென்றார் மாயாண்டி சுவாமிகள். ஒரு மண்டல காலம் இருவரும் அங்கேயே தங்கினார்கள். விதிப்படி இருளப்ப கோனார் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளை சுவாமிகளே அனுபவித்தார். ஒரு நாள் முழுதும் மூடிய குழிக்குள் குத்துக்காலிட்டு அமர்ந்து கடும் நிஷ்டையில் அமர்ந்தார். எவரையும் தன் அருகில் வர அனுமதிக்கவில்லை.
மறுநாள் காலை குழிக்குள் இருந்து வெளியே வந்த மாயாண்டி சுவாமிகள், இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொன்னார். அப்பு... இனிமே ஒனக்குப் பிரச்னை இல்லை. ஆயுள் பலம் கூடிடுச்சு. தயங்காம ஆன்மிகப் பணி செய்.
தன் உடலில் ஏதோ புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தார் இருளப்ப கோனார். ஆம்! இனி, அவரது புதுப் பிறவி அந்த நிமிடத்தில் இருந்து துவங்கியது. தன் வாழ்நாளையே நீட்டித்துத் தந்த மாயாண்டி சுவாமிகளுக்குத் தன்னையே என்றென்றும் அர்ப்பணிக்க வேண்டும் என்கிற நன்றிக் கடனால், சுவாமிகளின் இறுதிக் காலம் அவரை விட்டு நீங்காமல் இருந்தார் இருளப்ப கோனார். இருந்த இடத்தில் இருந்தபடியே இருளப்ப கோனாருக்கு காசி தரிசனத்தைத் தன் ஸித்து வேலையால் செய்து காண்பித்தார் சுவாமிகள்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று 1928-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 6-ம் தேதி இருளப்ப கோனார் உட்பட தன் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார் மாயாண்டி சுவாமிகள். அதன்படி, 1930-ஆம் வருடம் புரட்டாசி மாதம் 11-ஆம் தேதி இருளப்ப கோனாரின் இடது தோளில் சாய்ந்து, அப்பு... இந்த சட்டையைக் கழற்றிவிடலாமா? என்று கேட்டுவிட்டு, சமாதி யோகத்தில் ஆழ்ந்தார். சுவாமிகளது ஆன்மா இறைவனுடன் இணைந்தது.
திருக்கூடல்மலையில் சுவாமிகள் தொடங்கிய பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார் இருளப்ப கோனார். அடிவாரத்தில் ஸ்ரீவிநாயகரும் (மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதி மேல் இந்த விநாயகர் தான் பிரதிஷ்டை ஆகி இருக்கிறார்), மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணியும் (1909-ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாக தினத்தன்று) பிரதிஷ்டை ஆனார்கள்.
சித்த புருஷரான காகபுசுண்டர் தவம் இருந்த மலை என்று திருக்கூடல் மலையைக் கொண்டாடியவர் மாயாண்டி சுவாமிகள். இந்த மலை பிரபலமாக வேண்டும் என்பதில் சுவாமிகளுக்குக் கொள்ளை ஆசை இருந்தது. தன் பக்தர்களிடம் இப்படிச் சொல்வாராம்... மலைக்கு மேல் குடிகொண்ட தண்டபாணி தெய்வத்துக்குக் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருச்சுற்று மதில், பிராகாரம், மயில் மண்டபம், மூன்று நிலை ராஜ கோபுரம் போன்றவை அமைக்கப்பட வேண்டும். பெரும் பகுதி வேலை கருங்கல் திருப்பணியாய் அமைய வேண்டும். நான்கு கால பூஜை நடக்க வேண்டும். இயன்றவர்கள் பொருளுதவி தர வேண்டும் என்று குறிப்பிடுவாராம். மகானின் திருவாக்கு பொய்யாகுமா?
காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல்மலையின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகமும் முடிந்து விட்டது. மதுரைக்கே ஒரு மாபெரும் அடையாளமாக, ஸ்ரீதண்டபாணி சுவாமி கோயில் விளங்கி வருகிறது. சுவாமிகள் தன் காலத்தில் வைத்து வணங்கிய ஸ்ரீஆறுமுகன், ஸ்ரீநடராஜர், ஸ்ரீதுவாரபாலர்கள் ஆகியோரின் மண் சிலைகளும் மலை மீது தரிசனம் தருகின்றன. தவிர இந்த மலையில் குடிகொண்ட உத்ஸவர் ஸ்ரீநவநீதப் பெருமாள் ஆடிப்பௌர்ணமியை ஒட்டி, வருடா வருடம் மானாமதுரை வரை வலம் செல்வார். சுமார் 250 கிராம மக்கள் இந்த தரிசனத்தில் திளைப்பார்கள். சுவாமிகளின் சூட்டுக்கோலும் ஜோதியுடன் இந்த யாத்திரையில் செல்லும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் தங்கி, கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்படும். இந்த வைபவம் தென்மாவட்ட மக்களுக்கு ஒரு மாபெரும் வரப்பிரசாதம்.
தகவல் : மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்துவிடும். இங்கு தான் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைந்துள்ளது