Monday, 30 January 2023

காரணமின்றி காரியமில்லை.

 MNo 2227


நாம் குடியிருக்கும் வீட்டில் தெய்வ சக்திகள் நிறைந்திருக்கிறது என்பதை நமது வீட்டிற்கு வரும்  பறவைகள் மற்றும் சில பிராணிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


நமது வீட்டில் தெய்வ சக்தி அதிகம் குடி இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும்,  எதிராளிகள் நமக்கு செய்யும் பில்லி சூனியமும், நம்மை தொடரும் எதிர்மறை எண்ணங்களும் (Negative thought), எதிர்மறை அதிர்வுகள் (Negative Vibrations)  ஆகிய எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் நம் இல்லத்திற்குள் புகுந்து நம்மை ஒன்றும் செய்யாது. மகிழ்ச்சியினை, நிம்மதியான தூக்கத்தை, அமைதியான மனதினை,  வீட்டிற்குள் நுழையும் போதே நமது இல்லம் தருவதாக நமது மனது உணரும். 


என்ன காரியமாக இருந்தாலும் சட்டென்று முடித்து என் வீட்டில் படுத்துறங்கும் நிம்மதியான தூக்கம் வேறு எங்கும் கிடைக்காது.. நான் கிளம்புகிறேன் என நிறைய பேர் பரபர பயணம் செய்யும் காரணம் புரிந்திருக்குமே..(Home sweet Home. There is no place like Home)


சில செயல்கள் செய்வதன் மூலம் நமது இல்லத்தில் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன. 


வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் ஏதோ ஒரு மண் மீது ஒரு புதுவீடு கட்டி குடி போகிறார். அவர் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண்ணின் அடியில் என்ன இருந்தது, எது வாழ்ந்தது, எது இறந்தது, மண்ணிற்கு அடியில் மனித உடலோ அல்லது வேறு  என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு கிடையாது. ஆனால், சில பறவைகளுக்கு அதைப்பற்றிய ஞானம் நிறைய உண்டு. குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் அதிகம் உண்டு. இதனால் தான் சிட்டுக்குருவியை வீட்டில் கூடு கட்ட வரும் போது கலைக்க சிறுவர்கள் சென்றால்.. ஏலேய் அடைக்கலாங்குருவி கூடு கட்டட்டும்..விரட்டாதே என பெரியவர்கள் சொல்வார்கள்.. 


வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என சில ஆகம அனுஷ்டானங்களால்  கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அதிகமாக குடியிருக்கும் இல்லங்களை அறியும் ஆற்றல் உள்ளது என  சொல்லப்படுகிறது. 


புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த தெய்வீகமான ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.


உங்கள் வீட்டில் மாடியிலோ அல்லது வேறு இடத்திலோ பறவைகளுக்கு தானியம் போடுங்கள்.  இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம். இது போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும். 


ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனை விட  சிட்டுக்குருவி, புறா, அணில், மைனா, கீரி, நாய், சேவல் போன்ற   உயிரினங்களுக்கு ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீட்டினில் கூடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை நாம் குடியிருக்கும் வீட்டில் கொண்டு வருவதற்கான செயல்.  ஜீவாதார ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இந்த பிராணிகள் தெய்வீக  மற்றும்  சாதகமான சக்தியை நமது வீட்டிற்கு கொண்டு வருபவை. இந்த பிராணிகளை நாம் அலட்சியமாக விரட்டக்கூடாது. இவையெல்லாம் நமது வீட்டிற்கு  வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.  சாப்பிடும் போது வாயிலில் காத்து நிற்கும் நாய்க்கு தன் கையால் சோறு வைக்கும் முந்தைய தலைமுறை பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் விளக்கம் கிடைக்கும்.. 


வீட்டின் கான்கீரிட் மாடி தளத்திலோ அல்லது பழைய மரக்கட்டை பொதிந்த மட்டுப்பாவு வீட்டு கூரைகளிலோ மோட்டுவாழி என்ற பெயரில் கருநீல வண்ண இறகு கொண்ட குழவி மண்ணால் கூடு கட்டுவதை பார்த்திருப்பீர்கள்.. ஒட்டடை அடிக்கிறேன்,  துப்புரவு செய்கிறேன் என தயவு செய்து அந்த கூட்டை அழிக்காதீர்கள். அந்த மோட்டுவாழியாக உங்கள் வீட்டுக்கு வந்திருப்பது  வேறு யாருமல்ல.. வந்தது சாட்சாத் இறைவனின் ஜீவ சக்தி தான்.. அந்த கூடு கட்டியிருக்கும் தருணத்தில் உங்களது குடும்பத்தில் யாரேனும் கருவுற்றிருப்பார்.. அல்லது நீங்கள் நினைத்த காரியம் கை கூடும் என சொல்லும் தெய்வ நிமித்தமாகவே இறைவன் உங்கள் இல்லம் வந்திருப்பார்.. 


காரணமின்றி காரியமில்லை.

No comments:

Post a Comment