Monday, 9 November 2020

கோரக்கர் சித்தர் வழிபட்ட கோயில் - குறண்டி கிராமம்

 கோரக்கர் சித்தர் வழிபட்ட கோயில்

குறண்டி 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


        கோகர் சித்தர்கோயில்     

அகத்திய முனிவர், போகர் முனிவர்களின் சீடர்களில் ஒருவராக விளங்கியவர் கோரக்கர். இவருக்கான கோயில் குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள குறண்டி கிராமத்தில் அமைந்துள்ளது. வயல்வெளிகளுக்கு நடுவே உள்ளது, உள்ளே நாகர் சிலைகள், சிவலிங்கம் போன்ற அமைப்பும், அணையாவிளக்கும் உள்ளது. இவை தவிர கால பைரவருக்கு தனி சந்நதி உள்ளது. கோரக்கர் சித்தர் வழிபட்டத்தலம் என்கின்றனர். இங்கு கோரக்கரின் திருப்பாதம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் பாம்பு ஒன்று காவல் காப்பதாகவும் இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். தினசரி இங்கு வழிபாடுகள் நடக்கின்றன. தமிழக இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் இக்கோயில் உள்ளது.


கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவனரும் ஆவார். இவரை வடநாட்டில் ‘நவநாத சித்தர்’ எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் தமிழகத்திலும் இவர் மிக பிரபலமானவராகத் திகழ்கின்றார். கோரக்கரின் சீடர் கொடிவழியில் வந்தோர் வடநாட்டில், கோரக்கநாதியர், தர்சனியர், கண்பதர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர். இவர் வாழ்ந்த காலம் பொதுவாக 11ம் 12ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எனக் கொள்ளப்படும் போதும், அவர் இறப்பை வென்றவர் என்ற நம்பிக்கை அவரை வழிபடுவோர் மத்தியில் காணப்படுகின்றது.

சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கர் புகழ் இந்தியா முழுவதும் பரந்து காணப்படுகிறது. கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக தொன்மங்கள் உரைக்கின்றன. தமிழ் மரபில், மச்சமுனி வழங்கிய அருட்சாம்பலை, சந்தேகத்தில், அடுப்படியில் போட்ட பெண்ணின் கோரிக்கைக்கு ஏற்ப பத்து வயதுப் பாலகனாக இவர் சாம்பலிலிருந்து எழுப்பப்பட்டதாக மரபுரைகள் நிலவுகின்றன. அன்று கார்த்திகை மாதம் ஆயில்யம் என்பதால் அன்று பிறந்தவர் ஆவார். மாசிமகப் பூரணையில் உலக நன்மைக்காக பிரம்ம முனியுடன் இணைந்து கோரக்கர் செய்த வேள்வியைக் குழப்ப தேவர்களால், இருள்தேவி, மருள்தேவி ஆகிய இரு தேவமகளிர் அனுப்பப்பட்டதாகவும், அவர்களின் சாபத்தால், அவர்கள் இருவரும் சிவமூலி - பிரம்மபத்திரம் எனும் இரு மயக்கு மூலிகைகளாக மாறியதாகவும் வாய்மொழிக்கதைகள் சொல்கின்றன.

இப்படி வாழ்ந்த கோரக்கர், போகர் பழநியில் பாசாண முருகன் சிலை

 செய்ய உதவிவிட்டு ஐப்பசிப் பரணியில், போரூரில் அல்லது திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லூரில் சமாதி அடைந்ததாகவும் பல்வேறு தொன்மங்கள் உள்ளன. கோரக்கர் வாழ்ந்தது 11ம் நூற்றாண்டு எனப்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் போதும், சில சான்றுகள் அவர் 10 முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டவர் என்றும் எண்ணச்செய்கின்றன. வடநாட்டில் பஞ்சாப் அல்லது கிழக்கிந்தியப் பகுதியில் அவதரித்த கோரக்கர், ஆரம்பத்தில் பௌத்தராக இருந்ததாகவும், யோகம், சைவம் என்பவற்றில் ஈர்ப்புக்கொண்டு பின் சைவராக மாறியதாகவும் சொல்லப்படுகின்றது. தேரூர் கிராமத்தில் இருந்து 1.3 கி.மீ தூரத்தில் கோரக்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது. சுசீந்திரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் இக்கோயில் அமையப்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment