Monday, 2 November 2020

திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்

 இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் 

#உலகம்மன்_சமேத_காசி_விஸ்வநாதர்_ஆலயம்:


திருநெல்வேலி மாவட்டம் திருக்குற்றால மலைச்சாரலில் சித்திரா நதிக்கரையில் உள்ள தென்காசியில் உலகம்மன்  சமேத காசி விஸ்வநாதர் ஆலயம்


அமைந்துள்ளது. அரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னன் 1467ம் ஆண்டு இந்த ஆலயத்தை அமைத்ததாக இங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. தலபுராணம், இந்த தென்காசி திருத்தலம் சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவநல்லூர், ஆனந்தகூத்தனூர், தென்புலியூர் செண்பக் பொழிலூர் என்ற திருப்பெயர்களை கொண்டதாகக் கூறுகிறது.


தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் நாள்தோறும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வர விரும்பினான். இவன் எப்பொழுதும் வணங்கி வழிபடும் முருகப் பெருமான் ஒருநாள் அவனது கனவில் தோன்றி ‘ககன குளிகையை’ அவன் கையில் கொடுக்க அதை அவன் வாயிலிட்டுக்கொண்டு, பிறர் கண்களிலிருந்து மறைந்து தினமும் வான் வழியாக பறந்து சென்று காசி விஸ்வநாதரை வழிபட்டு விட்டு சூரியன் உதிக்கும் முன்னர் திரும்பிவிடுவது வழக்கம். ஒருநாள் மனைவியும் அவனும் சேர்ந்து சென்று காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் என்று பெயரிட்டு திருக்கோயில் அமைத்து, அந்த ஊருக்கு தென்காசி என்று பெயரிட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது.


 

வடகாசியைவிட இந்த தென்காசி புனிதமானது என்று சொல்லும் புராணம், ‘காசியில் இறந்தால்தான் முக்தி. ஆனால் தென்காசியிலோ பிறந்தால் இருந்தால் இறந்தால் முக்தி’ என்றும் சொல்கிறது. இந்த சிவாலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் சகாப்தம் 1369க்குப் பின்னர் ஆனி மாதம் 13ம் நாள் சனிக்கிழமை இரவு மீன லக்னத்தில் கருவறையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் இந்த நாளை 10.6.1467 என்று கணித்து கூறியுள்ளனர்.


இரண்டு பெரிய யானைகள் பெரிய தேர் ஒன்றை இழுத்துச் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது, ஆலயம். நந்திமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவை, கலைக்கூடங்கள் என்று சொல்லுமளவுக்கு கடவுளர் திருவுருவங்கள், விலங்குகள், பறவைகள் என கவின்மிகு சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்குள்ள தூண்களில்  திருமாலின் அவதார சிற்பங்கள், அனுமன் திருவுருவங்களைக் காணலாம். வடக்கு பிராகாரத்தில் பராக்கிரம பாண்டியன் அமைத்த  காசி கிணறு வற்றாமல், இன்றும் சுரந்து கொண்டேயிருக்கிறது. கங்கையை நினைவு கூறும் வகையில் அவன் இந்த கிணற்றை அமைத்ததாக கூறுவதுண்டு.


கருவறைக்குள் காசி விஸ்வநாத லிங்கம் போன்றே காட்சியளிக்கும் தென்காசி லிங்கப் பெருமானை மன்னன் தன் கோட்டையிலிருந்து பார்த்து வழிபடும்படி கோட்டையில் சில ஏற்பாடுகளை அவன் அமைத்திருந்தான். தற்போது இது மேட்டுத் தெரு எனப்படுகிறது. இன்றும் நாம் காசி விஸ்வநாதரை இங்கிருந்து தரிசிக்க முடியும். அம்மன் சந்நதியில் இறைவி உலகம்மை, அருள் பொலியும் திருமுகத்துடன் வலக்கையில் தாமரை மலர், கிளி ஏந்தி இடக்கையை தொங்கவிட்டு பத்ம பீடத்தில் ஆடை அணிகலன்களுடன் நின்ற நிலையில், எழில் ததும்ப பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.


காசி விஸ்வநாதருக்கும் உலகம்மைக்கும் இத்தனை புகழ் மிக்க பெருங்கோயிலை எடுத்த பராக்கிரம பாண்டியன், ‘இக்கோயில் இறைவன் அருளால் என்றும் நிலைத்து நிற்கும். ஆயினும் இது ஒருவேளை பழுதுபட்டால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பனிடுபவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன் என்றும் உலகத்தார் முன்னிலையில் இவ்வாறு விழுந்து வணங்குவதுடன் மேலும் மேலும் விருத்தி செய்வோரின் திருவடியிலும் என் திருமுடியை தாழ்த்தி இறைஞ்சுவேன்’ என்றும் உருகி கல்வெட்டிலும் பொறித்து வைத்துள்ளான்.


ஒன்பது நிலையுடன் கூடிய பெரிய ராஜகோபுரம். தொல்லியலாரின் ஆய்வுப்படி 3.11.1457ல் கால் கோளிடப்பட்டு பின்னர் வந்த மன்னர் பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் என்பவரால் 1518ல் கோபுரப்பணி நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. அவனது காலத்திற்குப் பின் அப்பகுதி சேர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டு, சேர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் தென்காசி கோயில் மற்றும் கோபுரத் திருப்பணிகள் செய்து 1524ல் குடமுழுக்கு செய்துள்ளான்.


 அதன்பிறகு 1792-1824க்குள் பாளையக்காரர்கள் வெள்ளையர்களின் ஆவணங்களை அழிப்பதற்காக வைத்த நெருப்பு, கோபுரத்தை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. பெருமழை பொழிந்தபோது பேரிடி விழுந்து கோபுரம் அழிந்ததாகவும் கூறுவதுண்டு.


அதன்பின் 150 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போதைய வானளாவிய ராஜகோபுரம், சுவாமி, அம்மன் பரிவார தேவதைகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போதைய ராஜகோபுரத்தில் 800 அழகிய சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆறுகால வழிபாடுகள் கொண்ட இந்த தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோத்சவம், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆவணி மூலம், தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசி மாத பிரம்மோத்சவத்தை ஆரம்பித்து வைத்தவன் பராக்கிரம பாண்டியன் என்பதால் இன்றும் முதல் மரியாதை அவருக்கே!

No comments:

Post a Comment