இராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 54
வாழியெதிராசன் வாழஎம்பெருமானார்
திருமலை திருப்பதி ஆஸ்தானத்திற்கு வந்து சேர்ந்த இராமானுஜர் பெரிய திருமலைநம்பிகளிடம் இராமாயணத்தை கற்றுக் கொண்டாரா?
🌺🌺 திருமலை தரிசனம்
திருமலை ஆஸ்தானத்திற்கு வந்து சேர்ந்த இராமானுஜர், திருமலையின் ஏழு மலைகளையும் கீழிருந்தவாறே தரிசித்தார். திருமலை அடிவாரத்திலுள்ள பன்னிரெண்டு ஆழ்வார்களையும் சேவித்தார். கீழத்திருப்பதியில் ஜீயர் மடங்கள் உண்டு. கீழத்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். அவரையும் சேவித்துக் கொண்டார் இராமானுஜர். விட்டல ராஜா மற்றும் 30 சிஷ்யர்களுக்கு திருநாமம் சூட்டினார்.
திருச்சானூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பத்மாவதியான அலர்மேல் மங்கை தாயாரையும் கண் குளிரச் சேவித்துக் கொண்டார். அனைத்தையும் சேவித்தபின், திருமலை ஏழாவது மலையில் குடிகொண்ட ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும். இராமானுஜரோ 'திருமலையில் கால் பதித்து நடப்பதா?' என்று மலையேறிச் செல்லாமலேயே இருந்தார். ஏனெனில், திருமலையின் ஏழுமலையும் எம்பெருமான் ஸ்ரீநிவாசப்பெருமாளின் திருவுருவம் தானே. இங்கே மலையே பெருமாளாக உருவெடுத்துள்ளார். ஆகையால், திருமலைக்கு மலையேறிச் செல்ல தயங்கினார் இராமானுஜர்.
நான் திருமலை ஸ்ரீநிவாசனை கீழிருந்தே சேவித்துக்கொள்கிறேன் என்று பிரார்த்தித்துக் கொண்டார். ஆனால், ஏழுமலையானின் திருவுளம் வேறாக இருந்தது. கீழ்த்திருப்பதியில் தங்கியிருந்த இராமானுஜரை திருமலைக்கு வருமாறு ஆணையிட்டார் ஏழுமலையான்.
ஏழுமலைகளையும் தன் கால் பதிக்காமல் முட்டி போட்டுக்கொண்டு சென்றார். 'ஆழ்வார்கள், தேவாதி தேவர்கள், ஏழுமலையான் திருவடி பட்ட இடங்களை என் கால்களால் மிதிப்பதா?' என்று, தன் இரு கால்களையும் மடக்கி முட்டி போட்டுக்கொண்டு தவழ்ந்தே ஏழுமலைகளுக்கும் சென்றார். மலையேறும் பொழுது இராமானுஜரின் கால்கள் முறிந்தன. அந்த இடத்திற்கு முழங்கால் முறிச்சி என்று பெயர் ஏற்பட்டது. இன்றும் திருமலையில் 'முழங்கால் முறிச்சி' என்ற இடம் இருக்கிறது. இதைக்கண்டு பொறுக்க முடியாத ஏழுமலையான், "பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ வைகுண்டம் வரும் பொழுது ஆதிசேஷனின் மேல் கால் பதித்து வர வேண்டும். ஆதிசேஷனின் மேல் மிதித்து, அதன் பின் தான் வைகுண்டப்பதியான என் மடியில் அமர்வார்கள். அதுபோல, நீரும் இம்மலையில் காலடி பட நடந்து வாரும்" என்று ஏழுமலையான் சொல்ல, அதன் பின் இராமானுஜர் திருமலைக்கு நடந்து சென்றார்.
திருமலைக்கு இராமானுஜர் வருவதை அறிந்த பெரிய திருமலைநம்பிகள், அவரே மேலிருந்து கீழிறங்கி வந்து இராமானுஜரை வரவேற்றார். இராமானுஜர் விண்ணப்பிக்கிறார், "யாரோ ஒருவரை அனுப்பியிருந்தால் போதாதா? தேவரீரே எழுந்தருள வேண்டுமா?" என்றார். அதைக்கேட்ட பெரிய திருமலைநம்பிகள், "இந்த ஊரில் இருக்கும் நான்கு வீதிகளிலும் தேடிப்பார்த்துவிட்டேன், என்னை விட தாழ்ந்தவன் கிடைக்கவில்லை. அதனால்தான் நானே தங்களை அழைக்க வந்தேன்" என்றாராம்.
தன் மருமகன் என்றும் பாராமல், வயதில் பெரியவன் என்றும் எண்ணாமல், அவரே வந்து தன்னைத் தாழ்ந்தவன் என்று சொல்வது மிகச்சிறப்பாகும். நாம் முதலில் சொல்வோமா? உன்னை விட "நான் தாழ்ந்தவன்" என்று? ஆனால், நம்பிகளோ அவ்வாறு கூறிக் கொள்கிறார். இராமானுஜரிடம் தண்டம் சமர்ப்பித்து திருமலைக்கு அழைத்துச் செல்கிறார். இராமானுஜரும் திருமலையைத் தரிசிக்க ஆரம்பித்தார்.
திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கும் நிகழ்வை நாளைய பதிவில் காணலாம்.
ஸ்ரீமதேஇராமநுஜாய நம:!!!!
உய்ய ஒரு வழிஉடையவா்
🌹திருவடிகள்🌹
🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி*
.. இன்று யான் இறையும்___
வருந்தேன் இனி எம் இராமாநுசன்.*
மன்னு மாமலா்தாள்__
பொருந்தா நிலையுடைப்புன்மை
யினோா்க்கு ஒன்றும்நன்மை
செய்யா*
பெருந்தேவரைப் பரவும்.*பெரியோா்
தம் கழல்பிடித்தே!!!!!!!
🌹🌹🌹🌹🌹🌹
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவர முநயே நம:
பெரிய திருமலை நம்பி வைபவம்
திருநக்ஷத்திரம் : வைகாசி ஸ்வாதி.
திருநக்ஷத்திர திருநாள்
பிதாமஹஸ்யாமி பிதாமஹாய
ப்ராசேதஸாதேஸபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தமதேஸிகாய
ஸ்ரீஸைலபூர்ணாய நமோ நமஸ்தாத் ||
விளக்கம் :(பிரமனுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே "அப்பா" என்று கூப்பிடப் பெருகையாலே) உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய் , ஸ்ரீபாஷ்யகாரருக்குச் (ராமாநுஜர்) சிறந்த ஆசாரியராய், அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப் பலகால் (பலவகை) வணக்கம்.
ஸுமுகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக வைகாசி ஸ்வாதியில் திருமலையில் அவதரித்தவர் இவ்வாசாரியர். இவர் எம்பெருமானாருக்கு (ராமாநுஜர்) மாமா ஆவார். இவர் தம் சகோதரிகளில் மூத்தவளான "பூதேவி" என்னும் காந்திமதியை ஸ்ரீபெரும்பூதூர் கேசவ ஸோமயாஜியாருக்கு மணம்செய்து கொடுத்தார். அவர்களுக்குப் பிறந்தவர் ஸ்ரீராமாநுஜர். இளையவளான ஸ்ரீதேவியை மதுரமன்கலம் கமலநயன பட்டருக்கு மணம்செய்து கொடுத்தார். அவர்களுடைய குமாரர்கள் எம்பார் என்னும் கொவிந்தரும், அவர் தம்பி சிறிய கோவிந்தப் பெருமாளும் ஆவர். இவர் எம்பெருமானாருக்குக் கீழத்திருப்பதியில் ஒருவருட காலம் ஸ்ரீராமாயணத்தைக் காலக்ஷேபம் ஸாதித்தார். திருவேங்கடமுடையான் இவரைத் திருத்தகப்பனாராக அபிமானித்தார். சைவராக மாற்றபெற்று, காளஹஸ்தியில் உள்ளங்கை கொணர்ந்த நாயனாராய் இருந்த மருமகன் கோவிந்தரை (எம்பார்) மறுபடி ஸ்ரீவைஷ்ணவராகத் திருத்தினார் இவர். தம் குமாரர்களான பிள்ளை திருமலைநம்பியையும், பிள்ளானையும் இரு குமாரத்திகளையும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார்.
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த"அமலானாதிபிரான்" என்னும் திவ்யப்ரபந்தத்திற்கு "காட்டவே கண்ட பாதகமலம்" என்று தொடங்கும் தனியனை அருளிச்செய்தவர் பெரிய திருமலைநம்பி.
திருநக்ஷத்திரத் தனியன் :
ஸ்ரீமல் லக்ஷ்மண யோகீந்த்ர ஸ்ரீராமாயண தேஸிகம் |
ஸ்ரீஸைலபூர்ணம் வ்ருஷப ஸ்வாதி ஸஞ்ஜாத மாஸ்ரயே ||
வாழித்திருநாமம் :
வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யனிராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்கதிருமலையார்க் கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்பறிந்தோன் வாழியே
திருமலைநம்பிகள் உபயதிருவடிகள் வாழியே.
பெரியதிருமலைநம்பி திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
இன்னும் அனுபவிப்போம்...
உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!
No comments:
Post a Comment