Saturday, 6 April 2019

பாடல் - தயை புரிவாய், தாமோதரனே

தயை புரிவாய், தாமோதரனே,
தமியேன் வந்தேன்; தடுத்தாட் கொள்வாய்!
இயைந்தே நானும், இவ்விடம் வந்தேன்;
எம்பெருமானே! எனை மீட்டருள்வாய்!

திரிந்தேன் நானும், திசை அறியாமலே,
பிரிந்தேன் உன்னை, பெருந்துயர் வீழ்ந்தேன்;
மறந்தேன் உன்னை, மண்ணில் உழன்றேன்−
பிறந்தேன், இறந்தேன், பிறவிகள் தொடர்ந்தேன்!

எந்நாள் நானும், உனை வந்து சேர்வேன்?
எந்நாள் நீயும், எனையே ஏற்பாய்?
அந்நாள் அன்றோ, ஆவியும் குளிரும்; அந்த−
பொன்னாள் வந்தால், இந்த ஜென்மமும் மிளிரும்!

நோயாம் வல்வினை, நாளும் துரத்த−
போயும், வந்தும், பிறவியில் சுழன்றேன்;
நாயேன் நலிந்தேன், நலிந்தே போனேன்...
ஆய் நீ, ஆதலால், அடைக்கலம் தருவாய்!

இனியும் உடல் எனும் நோய் வருத்தாது−
இரு கரம் நீட்டி, உன் கழல் சேர்ப்பாய்!
கனிவாய் என்னை, உன்னுள் ஒளித்து−
கொடுமையும், கூற்றும் தீண்டாதருள்வாய்.