கரூர் மாவட்டம் திருஈங்கோய்மலை அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஶ்ரீ மரகதாசலேஸ்வரர்🙏🙏
*இத்தலம் அம்பாளின் சக்தி பீடமாக கருதப்படுகிறது
*51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம்.ரத்தினாவளி சக்தி பீடம் எனப்படுகிறது
*தீர்த்தம் : - அமிர்த்தீர்தம்
*திரு வெங்கி மலை
திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது
*கருவறையில் பச்சை நிற கல்லால் ஆன ரூபத்தில் காட்சி தருகிறார்.மரகதக்கல்லால் அமைந்ததால் சிவபெருமான் மரகதாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். *அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர்.
*ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள் வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால் அர்த்தநாரீஸ்வரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வரவே, தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும் சக்தியை இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் தண்டம் போன்ற கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.
*இதன் மூலம் ஆதியில் அம்பிகைக்கு ஈசன் இடப்பாகம் கொடுத்த இடம் இத்தலமே யென்றும், அதன் பின்னரே திருசெங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்டார் என்றும் கூறப்படுகிறது
*அம்பிகை மரகதவல்லி கருவறையில் முகப்பு மண்டபத்தில் ஒரு புறம் சிறிய லிங்கம் மற்றும் ஒரு அம்பிகை உள்ளனர். இதுவே அம்பாள் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது.
*நந்திக்கு முன் பலி பீடம் உள்ளது இந்த அம்பிகை சக்தி பீடத்தில் ஒன்றென கருதப்படுகிறது.
*வாட்போக்கி, குளித்தலை, ஈங்கோய் மலை மூன்றும் சோமாஸ்கந்த வடிவம் போன்றது. வாட்போக்கி – சிவபெருமான், குளித்தலை - கந்தன், ஈங்கோய்மலை – அன்னை பார்வதி. இந்த சோமாஸ் கந்த வடிவத்தினை ஒரே நாளில் தரிசித்து பிறந்த பயனை அடையலாம்.
*நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்
*ஐநூறு படிகள் கொண்ட இந்த மலையின் முகப்பில் ஒரு சுதை வளைவுடன் கூடிய மதில் சுவரும் அதனை அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது. *இறைவன் அம்பிகை இருவரும் கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ளனர், இறைவனின் இடப்புறம் அம்பிகை உள்ளார். கோபுரம் வழி பிரகாரத்தில் உள்ளே நுழையும்போது சன்னல் ஒன்றும் அதில் ஒரு விநாயகர் தரிசனம் அடுத்து பிரகார வலத்தில் முதற்கோயில் விநாயகருடையது இறைவன் கருவறை கோட்டத்தில் நர்த்தன விநாயகர். அடுத்து முருகன் சிற்றாலயம் உள்ளது.
*இந்த மலையின் அடிவாரத்தில் பதினென்சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். *அருகில் விளக்கு தூண் ஒன்று இருபது அடி உயரத்தில் படிகளின் துவக்கத்தில் உள்ளது.
*தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று
புளிய மரம் நாடகம்
*ஒருமுறை இறைவனை காண சுந்தரர் வருகிறார், அப்போது நண்பராகிய அவரை சிறிது அலைக்கழிக்க எண்ணிய இறைவன் தலவிருட்சமான புளியமரத்தில் மறைந்து கொள்கிறார், சுந்தரர் பலவாறு வேண்டியும் காட்சி கொடுக்கவில்லை, மாறாக பாடியதற்காக ஒரு பொன் புளியங்காயை அவரிடம் எறிகிறார். இறைவன் புளியமரத்தில் இருப்பதை அறிந்து கொண்ட சுந்தரர். எனக்கு காட்சியளிக்காமல் இடம் கொடுத்த புளியமரம் இனி யாருக்கும் மறைவிடமாக இருத்தல் வேண்டாம் என கூறி சென்றுவிடுகிறார். அது முதல் இத்தலத்தில் புளியமரங்கள் காய் இல்லாது போயிற்று
*இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு ஒரு வரலாறு ஒன்று உண்டு.
*ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார முனிவர், ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , " தாங்கள் முன்பு ஒருமுறை மரகதாசல மகிமை பற்றி சுருங்கக் கூறி அருளியுள்ளீர்கள். தற்போது அதனை விரிவாகக் கூறி அருளவேண்டும் " என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான் அத்தலப் பெருமையை விரிவாகக் கூறியருளினார்.முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொண்டு, வாயுவைச் செல்ல முடியாமல் தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு செல்ல வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு வேகத்தோடு, அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள் ஐந்தைப் பிடுங்கியவாறு தென்திசை நோக்கிச் சென்றான். அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின. அவற்றுள் ஒன்றே, மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின் அம்சமாகப் புளிய மரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும் கூறுவர்
ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டபோது ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.
*ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ள தலமான திருவாட்போக்கியிலும் , நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் வீழ்ந்தன எனப்படுகிறது.
*காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு பலர் பலனடைகின்றனர்.
*அகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.
பார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
*பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து , சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான் . விஷ்ணுவும் இப்பெருமானை வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் இங்கு ஈசனை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளனர்
*ஓங்காரம் அன்னது என நின்றான் மலை (நக்கீரர்)
என எல்லோருக்கும் பரம குருவாய் உள்ள ஓங்கார உருவான ஓங்காரேசுவரன் ஓங்காரப் பொருள் என்ன என்று உனக்குத் தெரியுமோ என்று ஆசிரியன் மாணவனைக் கேட்பது போல் முருகனது ஓங்கார ஞானத்தைச் சோதித்த போது முருகன் ஓங்காரப் பொருளான லிங்கப் பரம்பொருளைத் தொழுது ஓங்காரப் பொருளின் காதில் ஓங்காரப் பொருள் இன்னது என்று கூறினான்
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகர் ஓங்காரத்து நாதர் என போற்றிப் புகழ்ந்த ஈசன்
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி எனப்புகழ்கிறார் மாணிக்கவாசகர்
*பூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே, உமையாளொடும் ஈங்கோய் மலையாரே என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர்
*திருமந்திரத்தில் திருமூலரும் இலிங்க நல்பீடம் இசையும் ஓங்காரம் என ஈங்கோய் நாதனைப் புகழ்கிறார்
*தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க வேண்டி, கிருத யுகத்தில் பிரமதேவன் இத் தலத்தை அடைந்து பிரம தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம்மஞானம் எனத் தொடங்கும் மந்திரத்தை ஜபித்தவனாக அதில் ஸ்நானம் செய்து, திருப் புளிய மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப் பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தான பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள் இம்மை மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர்
*இங்கு சிவராத்திரி தினத்தில் பிரம்ம தீர்த்த ஸ்நானம் செய்து நறு மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை அர்ச்சித்தால், பிற தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும் என்கின்றனர். புளிய மரத்தடியையும் பெருமானையும் ஒருங்கே வலம் வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள் எனவும் சிலாகித்து கூறுகின்றனர்.முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச் செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளிய விருக்ஷத்தை நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும்.
மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தின் பெரும் சிறப்பு.
இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
*இத்தலம் போக மோக்ஷத்தைத் தரவல்லது. கார்த்திகை சுக்கிர வாரத்திலும் பொதுவாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயசான்னம் தானம் செய்தால், துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பர். நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள். இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில் உயர்ந்தவனாவான். சிவபெருமானையும் மரகதாம்பாளையும் நியமத்துடன் வழிபட்டால் முக்தி கிடைக்கும் எனப்படுகிறது
*இத்தலத்தில் துர்க்கையை உக்கிரமாகவும்,சாந்தமாகவும் தரிசிக்கலாம்.
#அம்பலத்தரசன்
No comments:
Post a Comment