Tuesday, 9 February 2021

உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன

 அழகர் மலை” என்பது மதுரைக்கு வடக்கே 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோவில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.


பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோவில் உள்ளது. இம் மலையில் பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி அளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதை சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.

இச்சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது. இங்கு கோவில் கொண்டு உறைகின்ற இறைவன் “அழகர்” என்று போற்றப்படுகிறார்.இவரே வடமொழியில் “ சுந்தரராஜன்” என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதார மாகிய ராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பெயர் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது.

அழகர் என்பதற்கு அழகுடையவர், அழகானவர் என்று பொருள். மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத்தலத்தில் எழுந் தருளியுள்ள மூர்த்திக் கும் கூடலழகர் என்னும் பெயர் ஏற்பட்டி ருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத்தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை (நாகப்பட்டினம்) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் (மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாத பழமை உடையது.மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங் களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.

அபரஞ்சி தங்கத்தில் அழகர்

மதுரைக்கு அருகில் உள்ளது அழகர்மலை. இத்தலத்து பெருமாளுக்கு கள்ளழகர் என்று பெயர். இவரது உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.

உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில். அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment