Saturday, 6 February 2021

கணபதி காலம் என்றே அதிகாலைக்கு பெயர் உண்டு.

 #கணபதி_ஹோமம்...


பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் சூர்ய காலடி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி இல்லம் ஒன்று இருந்தது.


 வசதி மிக்கவரான இந்த நம்பூதிரிக்கு தென்னந் தோப்பு ஒன்று இருந்தது.


 மூத்தசெக்கன் என்னும் காவலாளியின் பொறுப்பில் அது இருந்து வந்தது.


 அவனும் எஜமானர் மீது விசுவாசம் கொண்டவன்.


 உண்மையே பேசுவான். மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டான்.


 எஜமானரின் பொருளை தன் பொருளாக பாதுகாத்தான்.


 மரத்தில் இருந்து முற்றிய நெற்றுக் காய்கள் காற்றில் அடித்து விழும்.


 அந்த காய்கள் காவலாளிக்கு உரியதாகும்.  


ஒருநாள் மார்கழி மாத இரவில் செக்கனுக்கு குளிர் தாங்க முடியவில்லை.


 தென்னை மட்டைகளை குவித்து தீ மூட்டினான்.


 இரவு முழுவதும் கண்விழிக்கவே பசிக்க ஆரம்பித்தது.


 நெற்றுக்காய் இரண்டை எடுத்து உரித்து, கொப்பரைகளை பிரித்தான்.


 அதை தீயில் சுட்டு சாப்பிட்டான்.


 தினமும் இரவு இதை வழக்கமாக்கினான்.  


ஒரு நாள் தேங்காய் சாப்பிடும் போது பின்புறத்தில் இருந்து துதிக்கை நீண்டது. 


பயத்துடன் தேங்காய் துண்டுகளை துதிக்கையில் வைத்தான்.


 தேங்காயை இழுத்துக்கொண்டு தும்பிக்கை மறைந்தது.  


''யானை இல்லாமல் தும்பிக்கை மட்டும் எப்படி வரும்? தேங்காயை மட்டும் வாங்கி போனது எப்படி? யானை தோப்புக்குள் புகுந்தால் மரங்களுக்கு சேதம் ஏற்படுமே'' என யோசித்தபடி இருந்தான்.


 மறுநாள் காலையில் மீண்டும் தும்பிக்கை நீண்டது.


 தேங்காயை அதில் வைத்தபடி பார்த்தபோது அழகான யானை குட்டி ஒன்று தலை, காலைகளை அசைத்தபடி இருந்தது.


 அவனையும் அறியாமல் அன்பு ஏற்படவே, கட்டித் தழுவினான்.


 நாளும் இது தொடர்கதையானது. 


அதிகாலையில் வரும் யானைக்குட்டி தேங்காய்களை வாங்கி சாப்பிட்டு செல்ல ஆரம்பித்தது.  


ஒருநாள் சூர்யகாலடி இல்லத்தின் நம்பூதிரி வெளியூர் சென்று ஊருக்கு திரும்ப நேரமாகி விட்டது.


 வீட்டுக்கு செல்ல தென்னந்தோப்பு வழியாக வந்தார்.


 இருட்டுக்குள் சற்று தொலைவில் செக்கன் தேங்காய்களை சுடுவதையும், அவன் யாரிடமோ கொடுப்பதையும் கண்டார்.


 மனதிற்குள் மந்திரம் ஜபித்தபடி வந்த அவர், குட்டி யானை ஒன்று தேங்காய்களை வாங்கி சாப்பிடுவதைக் கண்டு அதிசயித்தார்.  


''எனக்கு இந்த யானைக் குட்டியை கொடுப்பாயா?'' எனக் கேட்டார்.  


விசுவாசத்துடன், ''தாராளமாக அழைத்துச் செல்லுங்கள் சுவாமி'' என்றான்.  


நம்பூதிரியும் சந்தோஷத்துடன் நிறைய பொன், பொருள் அளித்ததோடு வீடு, நிலத்தையும் உரிமையாக்கி பத்திரம் எழுதி தருவதாக தெரிவித்தார்.


 அங்கிருந்த நெருப்பு மூட்டும் தொட்டி, நெற்றுத் தேங்காய்களை கையில் எடுத்துக் கொண்டார்.


 யானையை தடவிக் கொடுத்தபடி அழைத்துச் சென்றார்.


 தேங்காய்களை சாப்பிடக் கொடுத்துக் கொண்டே நடந்தார்.


 வழியில் யானை தன் தலையை அசைத்தபடி அதிசயப்படும்படி நம்பூதிரியுடன் பேசத் தொடங்கியது.


 '' நீ எனக்கு பிரியமானவன். அதே போல உன் காவலாளி செக்கனும் எனக்கு பிரியமானவன். அதிகாலை வேளையில் யார் எனக்கு மட்டையும், கொட்டாங்குச்சியும் கொண்டு ஹோமம் செய்வதோடு தேங்காய்களை ஹோமத்தில் ஆஹுதி அளிக்கிறார்களோ, அவர்களுக்கு ஐஸ்வர்யம் அளிப்பதாக சங்கல்பம் செய்திருக்கிறேன். இதை செக்கன் அறியாமலேயே தொடர்ந்து செய்து என் அருளுக்கு பாத்திரமாகி விட்டான். உன் மூலமாக அனைத்து ஐஸ்வர்யங்களை அடைவான். தென்னந்தோப்பு உன்னுடையது அல்லவா? உனக்கும் என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றது.  


மந்திர சாஸ்திரத்தில் சிறந்த நம்பூதிரிக்கு யானை வடிவத்தில் இருப்பவர் விநாயகப்பெருமான் என்பது புரிந்தது.


 சாஷ்டாங்கமாக சுவாமியின் காலில் விழுந்து வணங்கினார். 


தன் இல்லத்தில் மந்திர பூர்வமாக ஹோமம் நடத்தினார்.


 ''இனி உன் இல்லத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பேன். எனதருள் என்றும் உனக்குண்டு. எல்லா நலங்களையும் பெற்று வாழ்வாய்'' என வரம் அளித்தார்.  


நம்பூதிரியும் அதன்பின் விநாயகர் சிலையை வீட்டில் பிரதிஷ்டை செய்து கணபதி ேஹாமத்தை அடிக்கடி நடத்த தொடங்கினார்.


 இன்றும் சூர்ய காலடி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி, விசேஷ நாட்களில் யானையின் முன்னிலையில் ஹோமம் நடக்கிறது.  


அதிகாலையில் கணபதி ஹோமம் நடத்தும் காரணம் இதுவே! 


ஏனெனில் கணபதி காலம் என்றே அதிகாலைக்கு பெயர் உண்டு.


 எளிய மனிதரான செக்கன் குளிருக்காக தீ மூட்டியதையே தனக்குரிய ஹோமம் நடப்பதாக கருதி காட்சியளித்து விநாயகர் அருள்புரிந்தார்.


 அப்படியானால் வேதம் வகுத்த முறைப்படி கணபதி ஹோமம் செய்பவருக்கு விநாயகர் அருளை வாரி வழங்குவார் என்பது நிதர்சனம் அல்லவா?


ஸ்ரீ அரவிந்த் ஸுப்ரமணியம் ஸ்வாமி


அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம்  🐘

No comments:

Post a Comment