Sunday, 14 February 2021

ஶ்ரீவள்ளிமலை ஸ்வாமிகள்

 அருணோத்ரியின் ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் 

ஶ்ரீவள்ளிமலை ஸ்வாமிகள்..்


அன்னதானம் செய்வதில் வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு மிகுந்த விருப்பம்..

ஒரு நாள் சஷ்டியன்று சென்னையில் ஒரு பக்தரின் இல்லத்தில் ஸமாராதனை நடத்த ஸங்கல்பம் செய்தார்.  

அப்போது சென்னை கந்தஸ்வாமி கோவில் அருகில் "கொசக்கடை சாமியார்" என்ற மஹான் வாழ்ந்து வந்தார்...


ஸமாராதனைக்கு முதல் நாள்,  

வள்ளிமலை ஸ்வாமிகள் அந்தக் கோவிலுக்கருகில் சென்ற போது,  

அவர் காதில் விழும்படியாக 

"சொத்து அடித்துக் கொண்டு போக வந்திருக்கான். எல்லாம் நாளைக்கி கிடைக்கும்" என்று அந்த கொசக்கடை ஸாமியார் தனக்குத்தானே பேசிக்கொண்டார்...  

அதை தெய்வ வாக்காகவே ஸ்வாமிகள் நினைத்தார். மறுநாள் சஷ்டி ஸமாராதனைக்கு நிறையப் பேர் வந்தார்கள்...


கடைசியில் ஒரு தொண்டு கிழவரும் வந்து "ரொம்பப் பசிக்குது. சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்டார். உடல் முழுவதும் தொழுநோயால் அழுகிச் சொட்டிக் கொண்டிருந்தார். ஒரே துர்நாற்றம்! அவரைப் பார்க்கக்கூட எல்லாரும் அருவறுப்படைந்தனர். 


ஸ்வாமிகள் அறியாததா? 


பந்தியில் எல்லாருடனும் அவரை உட்கார வைத்தால், அனாவஶ்யமான பேச்சுக்கள் எழும் என்பதால், அவரை தனியாக ஒரு அறையில் அமரச்செய்து தன் கையாலேயே வயிறார உணவு படைத்தார்... 

சமாராதனை முடிந்ததும், வைக்கத்தஷ்டமி மாதிரி, ஸ்வாமிகள் எல்லா எச்சில் இலைகளிலும் புரண்டு விட்டு, அந்த கிழவர் உண்ட இலையிலும் புரண்டார்...


அடுத்த க்ஷணம் அவருடைய நினைவு தப்பியது!  ஒரு பேரொளி தர்சனமானது! அந்த ஒளி உருமாறி அங்கே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் நின்றார்! 


ஸ்வாமிகளைப் பார்த்து, 

"இதெல்லாம் என்னடா? போகலாம் வாடா!" என்று கூறி அவரது சிகையையும், பூணூலையும் களைந்து எறிவது போலவும், "நீ மேலான பதவியை அடைவாய்" என்று வாழ்த்தியது போலவும் தோன்றியது. கொசக்கடை ஸாமியார் சொன்ன மாதிரி, குருவருள் என்னும் பெரிய சொத்தை அன்று அடைந்தார்.... 


சற்று முன் வந்த தொழுநோய் கிழவர் வேறு யாருமில்லை, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளே! என்பது ஸ்வாமிகளுக்கு தெரிந்தது. சிஷ்யனை ஸோதிக்க குருதேவர் நடத்திய சோதனை! 

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ஸ்வாமிகள் காவியுடை தரிக்காவிட்டாலும், உள்ளத்தளவில் தீவிர ஸன்யாஸியாகவே இருந்தார்.  

பூணூலைக் களைந்து, அன்ன ஆகாரம் இன்றி, கச்சாலீஸ்வரர் கோவிலில் போய் அமர்ந்து விட்டார். 


"நீ வள்ளிமலைக்கு போ! 

அப்புறம் நானும் அங்க வரேன்!.." 


ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் கட்டளைப்படி, வள்ளிமலைக்கு வந்து திருப்புகழ் மணத்தை உலகெல்லாம் பரப்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள். 


ஒருநாள் ஒரு வயோதிகர் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் தங்கியிருந்த குகைக்கு வந்து, "எனக்கு ரொம்ப பசிக்கிறது..... ஏதாவது குடுங்கள்" என்று கேட்டார். 


உடனே ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்த கஞ்சியை எடுத்து அவருக்கு தரும்படி, சிஷ்யர்களிடம் கூறினார்.  

அவர்கள் அந்தக் கஞ்சியை எடுத்து வந்து அந்த வயோதிகர் முன்னால்  வைத்தனர்.


ஆச்சர்யமாக, ஒரே மூச்சில் மூணு படி கஞ்சியையும் குடித்துவிட்டு, 

வெளியே போனவர் மாயமாக மறைந்துவிட்டார். சிஷ்யர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை! 


அன்றிலிருந்து, தினமும் வள்ளிமலை ஆஸ்ரமத்தில், அந்த வயோதிகருக்காக அன்னம் வைக்கும் வழக்கமானது.  

இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், அந்த பெரியவருக்காக நிவேதனமாக வைக்கப்படும் அன்னத்தை, ஒரு கீரிப்பிள்ளை வந்து சாப்பிடும்.


இந்த கீரிப்பிள்ளை ஸ்வாமிகள் யார்?....


சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் ராத்திரி நேரங்களை மயானத்தில் கழிப்பார். அங்கிருந்த வெட்டியானுக்கு ஸ்வாமிகள் மேல் கரை காணா அன்பு, பக்தி! ஸ்வாமிகளும் அவனுடன் அவ்வப்போது ஏதாவது பேசுவார். 


தெருவில் ஏதாவது பிண ஊர்வலம் போனால், தாரை தப்பட்டைகளோடு சிலர் அந்தப் பிணத்தின் பின்னால் ஆடிக்கொண்டே போவார்கள். 

சில சமயம், ஸ்வாமிகளும் அந்த ஊர்வலத்தில் குதித்துவிட்டு ஓடிவிடுவார்... 


அப்படி ஸ்வாமிகள் ஆடிய ஊர்வலத்தில் பிணமாக போனவர்களுக்கு, 

நிச்சயம் இனி மறுபடியும் பிணமாக கிடக்க வேண்டிய பிறவியே இல்லாது போகும்!


அம்மாதிரி சாவு ஊர்வலத்தில் ஸ்வாமிகள் ஆடிக்கொண்டே வரும் போது,  

அப்படியே திடீரென்று ஒரு கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்து விடுவார். “தீட்டோடு வருகிறாரே!”... என்று யாருமே சங்கடப்பட மாட்டார்கள். 


“ஆஹா! மணமக்களை ஆசீர்வதிக்க சாமீ வந்துதே!..”. என்று  என்று நினைத்து சந்தோஷப்படுவார்கள். 


ஆனால் ஸ்வாமிகள் யாரையும் பார்க்காமல், நேராக சமையல் நடக்கும் பின்கட்டுக்கு போய், அங்கு பெரிய கோட்டையடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரை, தன் கால்களால் தட்டி தள்ளிக் கொட்டிவிடுவார்!


"ஏன் சாமீ இப்படி பண்ணுது?.." என்று அங்கிருப்பவர்கள் கேட்டால்.... 


"அதுக்குள்ள பாம்பு இருக்குடா!.." என்று கூறுவார். 


தரையில் கொட்டிய சாம்பாரில் பார்த்தால், வாஸ்தவத்திலேயே, ஒரு பாம்பு விழுந்து இறந்து கிடக்கும்! 

அத்தனை பேருக்கும் உயிர்ப்பிச்சை போட்டாரே! என்று நமஸ்காரம் பண்ணி,

புது வேஷ்டி ஜதையை கல்யாண வீட்டில் கொடுப்பார்கள். அதையும் மேலே சுத்திக்கொள்ளுவார்.


ராத்திரி மயானத்துக்கு வந்ததும்,  

அந்த வெட்டியானிடம் புது வேஷ்டியைக் குடுத்துவிட்டு, அவனுடைய அழுக்கு கந்தல் வேஷ்டியை, தான் வாங்கி கட்டிக்கொண்டு போய்விடுவார். 


அந்த வெட்டியானுக்கும் ஸ்வாமிகளுக்கும் மத்தியில் ஒரு பரஸ்பர அன்பு, ஆழமாக இருந்தது.


ஸ்வாமிகள் மஹா ஸமாதி அடைந்த போது, அவருடைய பிரிவைத் தாங்காமல் அழுத பல்லாயிரக்கணக்கான பக்தர்களில்,  

இந்த வெட்டியானும் ஒருவன்! 

சதா சர்வதா அவரையே எண்ணியெண்ணி ஏங்கி அழுது கொண்டிருந்தான்...


கருணாமூர்த்தி இல்லையா?  

அவன் கனவில் வந்தார்...  

அவனை அன்போடு தழுவிக் கொண்டார்...


"என்னை பாக்கலைன்னு வருத்தப்படாதே! நான்..... வள்ளிமலையில இருக்கேன்! அங்கே போ! உனக்கு தர்சனம் தரேன்!.."


கனவுதானே! என்று அவன் நினைக்கவில்லை...  

உடனே மறுநாளே கிளம்பி வள்ளிமலைக்கு சென்றான். ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகளிடம், தனக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் இங்கு தர்சனம் தருவதாக சொல்லியிருக்கிறார் என்று கூறினான். காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தான்...


சாயங்காலம் பாறை மீது பெரியவருக்காக நிவேதனம் வைப்பதை பார்க்கச் சென்றான். 

அப்போது அங்கு அந்த கீரிப்பிள்ளை வந்தது! 


சுற்றி நின்றவர்கள் திருப்புகழ் பாடினார்கள்....

கீரிப்பிள்ளையும் அன்னத்தை சாப்பிட ஆரம்பித்தது...


அடுத்த க்ஷணம், கீரிப்பிள்ளை மறைந்து, அங்கு அந்த வெட்டியானின் ஆப்தரான சேஷாத்ரி ஸ்வாமிகள் அங்கே அவனுக்கு காட்சியளித்தார்.


"சாமீ! சாமீ! என்னை மட்டும் அங்க தனியா விட்டுட்டு, இங்கே எதுக்கு சாமீ வந்தீங்க?.."


பக்தி பரவஸத்தில் கதறி அழ ஆரம்பித்தான்! 


அந்த வெட்டியானுக்கு எந்த சாஸ்த்திரமோ, தர்மமோ தெரியாது!  

களங்கமில்லாத அன்பு மட்டுமே வைத்தான்!  


அதேபோல் ஒரு சமயம் ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் திருவண்ணாமலைக்கு சென்று பகவானின் சந்நிதியில் திருப்புகழ் பாடினார். அதன் பின், சேஷாத்ரி ஸ்வாமிகளை தேடி கண்டுபிடித்து, தரிசனம் செய்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்...


"அடியேன் நாளைக்கு வள்ளிமலை போகறதுக்கு உத்தரவு தரணும்"


"டேய்! நானும் வள்ளிமலைக்கு வரேண்டா! என்னையும் அழைச்சிண்டு போடா!.."


ஸ்வாமிகள் குழந்தை போல் கூறியதும், வள்ளிமலை ஸ்வாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! 


குருநாதர்... சித்தம் போக்கு சிவன் போக்காச்சே! 


மறுநாள் காலையில், ஸ்வாமிகளிடம் வந்து நின்று, "ரயிலுக்கு போகலாமா?..." என்று பரிவோடு அழைத்தார்.


"ஓ! வரேனே!.." 


அற்புதமான குருநாதர், அற்புதமான சிஷ்யருடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலிலும் ஏறி உட்கார்ந்து கொண்டார். 


ரயில் கிளம்பியதும், சட்டென்று குருநாதர் மட்டும் எழுந்து கீழே குதித்து விட்டார்! 


வள்ளிமலை ஸ்வாமிகளுக்கோ பெருத்த ஏமாற்றம்!


"டேய்! நீ வருத்தப்படாத போ!  

நான் வள்ளிமலைக்கு வந்து சேந்துடறேன்" 


ரயிலோடு ஓடிவந்து சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, சேஷாத்ரி ஸ்வாமிகள் ஓடிவிட்டார். 


வள்ளிமலை ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்ததும், பொங்கியம்மனுக்கு பூஜை செய்துவிட்டு திரும்பிய ஸ்வாமிகள்,  

தன் எதிரில் தன் குருநாதரான சேஷாத்ரி ஸ்வாமிகள் நிற்பதைக் கண்டு ஆனந்தமும், பிரமிப்பும் அடைந்தார்!


"குருநாதா! பிரபோ!.."


அலறிக்கொண்டு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தால், அங்கே குருநாதரைக் காணவில்லை! 


அவர் நின்ற இடத்திலிருந்து ஒரு குட்டி அணில்பிள்ளை துள்ளிக் கொண்டு ஓடியது!


ஸ்ரீ சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே!!!


No comments:

Post a Comment