Thursday 11 June 2020

எயிற்பட்டினம்

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இது ஏதோ ஒரு காய்ந்துபோன ஊர் என்று பலரும் நினைத்திருக்கிறோம். உண்மையில் இவ்வூர் தமிழனின் தொன்மையையும், நாகரிகத்தையும், வாழ்ந்த உயர் வாழ்வினையும் பறைசாற்றும் மிகமிக முக்கியமான ஊராகும். சங்க இலக்கியங்களில் இவ்வூர் மிகவும் பெருமையாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூரிலுள்ள தொன்மையான 'பூமீசுவரர் கோயில்' எனும் இக்கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு இராசராசனாரால் கட்டப்பட்டது. உண்மையில் சங்க காலத்திலிருந்தே இங்கு ஒரு கோயில் இருந்திருக்கிறது. பின்னர் ஆழிப்பேரலையில் அழிந்துபோன இக்கோயிலை இராசராசச் சோழன் மீளக் கட்டியுள்ளார் எனவேநாம்கொள்ளவேண்டும். கோயிலின் தற்போதைய நிலை கண்ணில் நீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும், உப்பளங்களும் இருந்தும் இந்த நிலையா என எண்ணவைக்கிறது. கோயிலுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் மூலமாக நல்ல வருவாய் வந்துகொண்டிருந்தும், படிப்படியாகச் சிதிலமடையும் இக்கோயிலைப் நல்லபடியாகப் பராமரிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஏதோ, இப்பொழுதுதான் இக்கோயிலை ஒப்புக்குப் பராமரிப்பு செய்ததைப்போல் சில பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் சொத்திருந்தும் இந்த பூமீஸ்வரர் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.

இவ்வளவு பாரம்பரியம் வாய்ந்த கோயிலில் கருவறையின் வெளிச்சுவர் முழுவதும் கல்வெட்டுக்களாய் உள்ளன. இவை படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை. கோயிலின் தரையிலும் கோயிலுக்கு வெளியே உள்ள தேர்முட்டிக் கோபுரத்திலும் மிக அருமையான படிமக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள இத் தேர்முட்டிக் கோபுரத்தின் சுவரில் உள்ள இந்த அற்புதமான கற்கள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளன. இதனை ஒரு மண்டபம் போல் பின்னர் கட்டியதில், இப் படிமக் கற்களும், தூண்களிலுள்ள சிற்பங்களும் முழுக்கப் பூசி மறைக்கப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்கு உள்பட வேண்டியவை என்பதை யாரும் கருத்தில் கொள்ளவே இல்லை போலும்.

தொன்மையான இக்கோயிலிலுள்ள தூண்கள் ஒவ்வொன்றிலும் பற்பல சிற்பங்கள் உள்ளன. அவையனைத்தையும் மீண்டும் மீண்டும் சுண்ணம் கொண்டு கெட்டியாக, பட்டையாகப் பூசி, அவற்றின் நுணுக்கத்தினைக் கண்டுகளிக்கவியலாமல் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல. நாற்புறத்தும் சிற்ப வேலைப்பாடு கொண்டுள்ள இத்தூண்களின் இடையே சுவரை எழுப்பி, மூன்று புறங்களிலுமுள்ள அரிய சிற்பங்களை முழுக்கமுழுக்க மறையச் செய்துள்ளனர். ஆங்காங்கே சிமென்ட் கலவை சிற்பங்களின் மேல் அப்பிக்கொண்டு, அப்படியே அடைத்துக் கிடக்கிறது. இங்குள்ள சிலைகளின் பெருமையை அறியாத கோயிற்காப்பாளர்கள், அவற்றைப் பாதுகாக்காமல், தங்கள் நலனிலேயே அக்கறையாய்ச் செயல்படுவதும் அப்பட்டமாய்த் தெரிகிறது. பூசையும் ஏனோ தானோவென்றுதான் நடத்தப்படுகிறது. பூசாரியார் "பதினோரு மணிக்கெல்லாம் பூடனும் (போயிடனும்), இல்லீனா நா பாட்டுக்குப் பூட்டிட்டுப் பூடுவேன்' என்று 'சென்னைக்' கண்டிப்பு காட்டினார்.

சுற்றிலும்  கல்வெட்டுக்கள் மிகுந்திருந்தாலும், அவையத்தனையும் கிட்டத்தட்ட பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டினைச் சார்ந்த  எழுத்து வகையாகவே இருக்கின்றன.  சிற்சில இடங்களில் நாயக்கர் 'கைவண்ணமும்', சிற்சில இடங்களில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்களும் காணப்படுகின்றன. எனினும், தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் சதீஷ், தமிழ்நாடு தொல்லியல் துறை துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கிழக்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குழுத் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையிலான உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனக் குழுவினர் இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை  நன்கு ஆய்ந்தே இக்கோயில் இராசராசனால் கட்டப்பட்டது, அதுவும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டுவதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது என்கிற தகவலையும் அறிவித்துள்ளனர்.

ராஜேந்திர சோழன் காலத்தில் இவ்வூரில் கடல் வணிகம் மீண்டும் மிகவும் பெருகியது. அதே பகுதியில் துறைமுகம் ஒன்றும் உருவானது. விஜயநகர மன்னன் கம்பன்ன உடையார் ஆட்சியின்போதுதான் தற்போது அழைக்கப்படும் பெயரான மரக்காணம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் இவ்வூர் அக்காலத்தில்  ‘எயிற்பட்டினம்’ என்கிற மிக  அழகிய பெயரைக் கொண்டதாகத்தான் இருந்தது. அடடா! எயிற்பட்டினம் என்கிற பெயர் ஒன்று மட்டுமே போதுமே, இவ்விடத்தின் பெருமை எவ்வாறு இருந்திருக்கும் ஊகிப்பதற்கு! இருந்தாலும், இவ்வூரின் பெருமைகளை இப்பொழுது கூறலாம்.

தமிழ்நாட்டுத்தொல்லியல் துறையினரின் காலாண்டிதழில் (ஜூலை-2004), திருமதி வசந்தி என்கிற அகழாய்வாளர், எயிற்பட்டினம் என்கிற சங்ககால ஊராகக் கருதப்படுகிற இந்நகரம் கி.மு. 300ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒரு சங்ககாலத் துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது எனக் குறிப்பிடுள்ளார் என்கிறார் நரசய்யா அவர்கள். மேலும் அவர் பெரிப்ளஸ் என்கிற கிரேக்கர் எழுதிய நூலில் இதனை சோபட்மா என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார் (பக்: 125).

 ‘எயில்’ என்றால் அரண் அல்லது மதில் என்று பொருள். இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகமாகவும் இருந்துள்ளது. அதன் பிறகு ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சிக் காலத்தில் முக்கிய துறைமுகமாகவும் இருந்துள்ளது. இந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கில் கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இந்த அரண் அல்லது மதில் எங்கிருக்கிறதாம்? கேளுங்கள்.

சென்னையைச் சேர்ந்தவர் அரவிந் என்பவர், புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் செல்ல, அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் கூறுகையில்...

"தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம். தவிர, மீனவர் நலனுக்கும் இன்றைக்கு தமிழக மீனவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கும் இந்த ஆய்வுகள் மிக முக்கியம். ஏனெனில் கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களின் இடிபாடுகளால்தான் பவழப் பாறைகள் பெருமளவு உருவாகின்றன. இடிபாடுகளும் அதிலுள்ள பவழப் பாறைகளுமே மீன், குறிப்பாக சுறாக்கள் மற்றும் கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடங்கள். அங்கு மீன் வளம் அபரிதமாக இருக்கும். அதனால், கடல் கொண்ட அழிந்துபோன நகரங்களைக் கண்டுபிடித்து அங்கு கழிவுகளைக் கொட்டாமல், செயற்கையாக வெப்பத்தை ஏற்படுத்தாமல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் அரசு பாதுகாத்தால் மீன் வளம், மீனவர் நலம் காக்கப்படும்"

"மீனவர்கள் எல்லை தாண்டி சென்று ஆபத்துகளை சந்திக்க வேண்டியது இல்லை. எல்லாவற்றையும்விட இதுபோன்ற பகுதிகள்தான் சுனாமி போன்ற பேரழிவுகளின்போது பொங்கி வரும் பேரலைகளை ஆற்றுப்படுத்தி ஊரை காக்கும் அரண்களாக அமைகின்றன.
மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்"

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

இனி, மரக்காணம் என இவ்வூரை அழைப்பதனை விடுத்து, அழகிய தமிழ்ப்பெயரான ‘எயிற்பட்டினம்’ என்றே நாமிதை அழைக்கலாம். சரி, தற்பொழுது சங்க இலக்கியங்களில் இவ்வூரான எயிற்பட்டினத்தைப் பற்றி என்னவெல்லாம் கூறியிருக்கின்றன தெரியுமா?

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்றுக் கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எயிற்பட்டினம் – சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இந்தத் துறைமுகம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது.[5] சிறுபாணாற்றுப்படை நூலைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பட்ட அரசன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன். இந்த நூல் இந்த ஊரை ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ எனக் குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே இது எயிற்பட்டினம் என ஆகிறது. பெருப்ளஸ் இதனைச் சோபட்மா எனக் குறிப்பிடுகிறார்.[6] சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும்.[7]
இக்காலத்தில் ஆலம்பரக்கோட்டை [8] எனப்படும் ஊர் கோட்டைக் கொத்தள இடிபாடுகளுடன் உள்ளதை முனைவர் இளங்கோவன் [9] குறிப்பிடுகிறார். இது பிற்காலக் கோட்டை என்றாலும் இங்குதான் எயிற்பட்டினம் இருந்தது எனலாம்.

இவ்வூரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்ததாம். செருந்திப் பூக்கள் பொன் போலப் பூத்தனவாம். முண்டகப் பூக்கதிர்கள் மணிநிறம் கொண்டனவாம். புன்னைப் பூக்கள் முத்துகள் போல் கொட்டினவாம். இப்படிக் கடலோரக் கானல் வெண்மணலால் விம்மிக் கிடந்ததாம். இப்படிப்பட்ட நெய்தல் நெடுவழியில் சென்று புலவர் எயிற்ப்பட்டினத்தை அடைந்தாராம். இந்தப் புலவரால் ஆற்றுப்படுத்தப்படும் சீறியாழ்ப் பாணன் எயிற்பட்டினம் சென்றால் விரைமரங்கள் (விரைந்து செல்லும் மரக்கலங்கள்) ஒட்டகம் தூங்குவது போல் நிற்பதைக் காணலாமாம் என்றும், அங்கே தின்னுவதற்குச் சுட்ட மீனும், பருகுவதற்கு பழம்படு தேறலும் (பழச்சாற்றுக் கள்) விருந்தாகப் பெறலாமாம். என்றும், இந்த விருந்தினை நுளைமகள் என்னும் பரதவப் பெண் படைப்பாள் என்றும், இந்தப் பட்டினம் கிடங்கிற்கோமானாகிய நல்லியக்கோடனுக்கு உரியது என்றும் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

ஆழ்கடல் புதையல்:
மதில் என்றால் 'எயில்’என்று பெயர் ஆகும். அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. சங்ககாலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். இந்த ஊரை கிரேக்கர்கள் ‘சோபட்மா’(சோ பட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர், ‘சோ’என்னும் பொருள் உண்டு.

“Among the market-towns of these countries, and the harbors where the ships put in from Damirica [=Limyrike] and from the north, the most important are, in order as they lie, first Camara, then Poduca, then Sopatma; in which there are ships of the country coasting along the shore as far as Damirica; and other very large vessels made of single logs bound together, called sangara: but those which make the voyage to Chryse and to the Ganges are called colandia, and are very large. There are imported into these places everything made in Damirica, and the greatest part of what is brought at any time from Egypt comes here, together with most kinds of all the things that are brought from Damirica and of those that are carried through Paralia. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant”

4.3 பாணனுக்கு வழிகாட்டுதல்
வள்ளல் நல்லியக்கோடனின் தலைநகரம் ஓய்மா நாட்டில் இருந்த கிடங்கில் என்னும் ஊர். வறுமையுற்ற பாணனை அவ்வூருக்கு ஆற்றுப்படுத்துகிறான் (வழி கூறுகிறான்) பரிசு பெற்ற பாணன். தலைநகரான கிடங்கில் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்நகரங்களும் இம்மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளே ஆகும்.
இந்நகரங்களில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், நில அமைப்பு, மக்கள் அன்போடு அளிக்கும் விருந்து (உணவு) முதலானவை மிகத் தெளிவாகவும் சுவையாகவும் கூறப்பட்டுள்ளன. இந்நகரங்களைப் பற்றிய இச்செய்திகள் மிக விரிவாக 143 முதல் 195 வரையிலான அடிகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

4.3.1 எயிற்பட்டினம்
எயில் = மதில், பட்டினம் = கடற்கரை நகரம். மதில் நகரம் அல்லது கோட்டை நகரம். அதாவது கோட்டைகள் சூழ்ந்த கடற்கரைப் பட்டினம் என்பது பொருள். இவ்வூரின்கண், நீலவானத்தை ஒத்த அழகிய கடல் உள்ளது. இதன் கடற்கரையில் தாழை மலரானது அன்னம் போன்று மலர்ந்தது; செருந்தி பொன்போல் பூத்தது; புன்னை மரம் முத்துக்கள் போல் அரும்பெடுத்தது; கரையிடத்து உள்ள வெள்ளிய மணல் பரப்பில் கடல் பரந்து ஏறுகின்றது. இத்தகைய நெய்தல் நிலத்தின் வழிநெடுக உப்பங்கழிகள் சூழ்ந்த ஊர்கள் உள்ளன. இக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றால் மதில்களால் சூழப்பட்டதும் பொய்கைகள் நிறைந்ததுமான எயிற்பட்டினத்தை அடையலாம் என்று பரிசு பெற்ற பாணன் வறிய பாணனிடம் கூறினான்.

 விருந்து:
எயிற்பட்டினத்தில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய அகில் மரக் கட்டைகள் உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடந்தன. அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த (வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமானைப் (நல்லியக்கோடனை) பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும் அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்.

இச்செய்திகள் 146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

பெரும் மரக்கலங்கள் வந்து சென்றதோடு மட்டுமல்லாது, அவை கட்டப்பெற்ற இடமாகவும் இவ்வூர் திகழ்ந்தது என்பதற்குச் சான்றாய், இன்றும் இவ்வூரில் மீனவருக்கான படகுகள் செய்யப்படுவதனை, இவ்வூரையொட்டிய கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலேயே காணலாம். மேற்கூறிய பெருமை வாய்ந்த இவ்வூரினை, கோயிலைக் காணும் பொருட்டேனும் நாம் ஒவ்வொருவரும் சென்று காணவேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். எத்தகைய பெருமை வாய்ந்த, அறிவு வாய்ந்த இனமாக நம் தமிழினம் இருந்திருக்கிறது என்பதனை இதன் மூலமாகவாவது நாம் அனைவரும் இனியாவது உணர்ந்து விழித்தெழுந்தால், கட்டாயம் நாமிழந்த பெருமைகள் அனைத்தையும் விரைவில் மீட்டெடுக்கலாம்.

No comments:

Post a Comment