Wednesday 10 June 2020

விடயபுரம் சட்டாம்பிள்ளை சுவாமிகள்:

விடயபுரம் சட்டாம்பிள்ளை சுவாமிகள்:

1880 ஆம் ஆண்டு திரு சின்னசாமி அகமுடையார் என்பரின் மகனாகப் பிறந்தவர்தான் விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள். இராமசாமி என்ற திருப் பெயர் சூட்டப்பட்டவர் தம்முடைய சிறு வயதிலேயே வேளான்மைத் துறையில் சிறந்து விளங்கினார்
அவர் ஏன் மாரியம்மன் மீது அதிக பக்தி செலுத்தினார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த அன்னை அவர்களுடைய குலதெய்வம். மேலும் அந்த ஆலயத்தில் உள்ள சிலை அவர்களுக்குக் கிடைத்ததும் சுவையான கதை.

ஸ்ரீ சட்டாம்பிள்ளை சுவாமிகளுடைய பாட்டனார் ஒரு வேட்டைக்காரர். அவர் ஒரு முறை உடும்பு ஒன்றைப் பிடிக்க ஒரு உடும்பை கொன்று விட்டேன் என்று எண்ணி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த பொழுது அங்கு உடும்பு இல்லை. மாறாக ஒரு இரத்தம் வழிந்து கொண்டு இருந்த அம்மன் சிலை கிடைத்தது. தான் எதோ தவறு செய்து விட்டேன் என மனம் வருந்தியவர் அம்மனிடம் வேண்டினார் ' அம்மா, நான் தவறாக இந்த காரியத்தை செய்து உன்னைக் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடம்மா. இனி நீதான் எங்களுடைய குலதெய்வம் " என மனமுருகிப் பிரார்த்தித்து அன்று முதல் அந்த சிலையையே தம் குலதெய்வமாக பூஜக்கத் துவங்கினார். இரத்தமும் அதிசயமாக நின்று போனது. அதனால்தான் சுவாமிகளுக்கு அந்த அன்னை மீது பக்தி அதிகம் இருந்தது.

இப்படியாக வளர்ந்து வந்தவர் அப்பாசாமி நாயுடு என்ற ஒரு பண்ணையாரிடம் வேலையில் அமர்ந்தார். அறுவடை செய்த நெல்லை பக்கத்து ஊரில் இருந்த அரவை மில்லில் கொண்டு போய் அரைத்து வருவார். இந்த காலத்தில் உள்ளது போல அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. மாட்டு வண்டியில்தான் போக வேண்டும்.

ஒரு முறை அப்படிப்பட்ட வேலையை முடித்து விட்டு அடுத்த ஊரில் இருந்து சட்டாம் பிள்ளை சுவாமிகள் மாட்டு வண்டியில் தம்முடைய ஊருக்குத் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வழியில் ஒரு இடத்தில் திடீர் என மாடுகள் இரண்டும் மிரண்டு பிடித்து ஓடத் துவங்க வண்டி நிலை குலைந்து கீழே சாய்ந்தது. சுவாமிகள் கீழே குதித்து விட்டார். அவர் கீழே குதித்ததுதான் தாமதம், அவர் முன் எதோ ஒரு உருவம் தோன்றி அட்டகாசமாகச் சிரித்தது.

பயந்து நடுங்கினார் சுவாமிகள். சாதாரணமாக இரவு வேளைகளில் மோகினிப் பிசாசுகள் தனியே வருபவர்களை பிடித்துக் கொள்வது உண்டு. ஆகவே மனதை திடப்படுத்திக் கொண்ட சுவாமிகள் அன்னை மாரியம்மனை வேண்டத் துவங்கினார். ' அன்னையே என்னைக் காத்தருளம்மா " என புலம்ப. எதிரில் இருந்த உருவமோ ' கவலைப் படாதே மைந்தா நான் உன்னை ஆட்கொள்ளத்தான் இங்கு வந்தேன்.

 இனிமேல் நீதான் என்னை பிரதிபலித்துக் கொண்டு இருப்பாய் " என்று கூறவும் பயந்து போனவர் தன் சுய நினைவை இழந்து விட்டார். ஊருக்கு சென்றவர் திரும்ப வரவில்லையே என அவரைத் தேடி வந்தவர்கள் நினைவு இழந்து கிடந்த அவரை பேய், பிசாசு ஏதும் பயமுறுத்தி இருக்கும் என நினைத்து அவரை ஊருக்கு திரும்பி அழைத்துப் போய் மந்தரித்தனர். ஆனால் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தது போல சுவாமிகள் எழுந்தார். தன் வேலைகளை மீண்டும் செய்தவண்ணம் இருக்கத் துவங்கினார்.

காலம் ஓடியது . வயது ஏற ஏற அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது. ஒரு நாள் வீட்டில் இருந்த அனைவரும் ஊரில் நடந்து கொண்டிருந்த விழாவுக்குச் சென்று இருந்தனர். சுவாமிகள் வீட்டில் இருந்தார். அந்த வீட்டில் மற்றொரு இளம் பெண்ணும் திரு விழாவுக்குப் போகாமல் வீட்டில் இருந்தாள். இரவு வந்தது. சட்டாம் பிள்ளை மனதில் எதோ ஒரு துடிப்பு, அந்தப் பெண்ணை அடைய துடித்தார். அவள் இருந்த அறையைத் தட்டியும் கதவைத் திறக்காததினால் வெறி கொண்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செனறவர் அவளை நெருங்கிய பொழுது அந்தப் பெண் பரிதாபமாக குரல் எழுப்பிக் கதறினாள் ' வெள்ளம் கிணற்றுத் நீரை அடித்துக் கொண்டு போவது இல்லை அய்யா. ஏன்னை விட்டு விடுங்கள். " அந்த நிகழ்ச்சியே அவருக்கு ஞானம் தந்தது. வெள்ள நீர் வந்து கிணற்று நீருடன் கலந்து விட்டால் எது வெள்ளத்தினால் வந்த நீர் எது கிணற்று நீர் என தண்ணீரைப் பிரித்துப் பார்க்க முடியுமா ?

கிணற்று நீரை அசுத்தங்கள் கலந்து வரும் வெள்ள நீர் அசுத்தப் படுத்தி விடாதா? நம்மிடம் உள்ள நல்ல குணத்தை அசுத்தப் படுத்திக் கொள்வது முறையாகுமா ? மனம் எண்ணியது. அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

இனி தன் மனதை புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணியவர் அயராது உழைக்கத் துவங்கினார். பண்ணையார் அவருடைய வேலைத் திறமையை மெச்சி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தார். காலம் உருண்டது. ஒரு நாள் அவருடைய கனவில் மாரியம்மன் தோன்றினாள். தனக்கு ஒரு ஆலயம் அமைத்து அதற்கு பக்கத்தில் குளமும் தோண்டி தன்னை ஆராதிக்கும்படிக் கட்டளை இட்டாள்.

ஆலயம் அமைக்கப் பணத்திற்கு எங்கே போவது. ?
நேரடியாக பண்ணையாரிடம் சென்றார். தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினார். ஒரு வார்த்தைக் கூட மறுப்புக் கூறாமல் பண்ணையார் சட்டாம் பிள்ளைக்கு அந்த ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய ஆலயம் எழுந்தது. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது.

மாரியம்மன் அன்னை அவருக்கு பலமுறை கனவில் வந்தாள். கட்டளை பிறப்பிக்கத் துவங்கினாள். ஆலயத்திற்கு பெரும் திரளான மக்கள் வரலாயினர். பூஜைகள் தொடர்ந்து நடந்தன. கோவில் மெல்ல மெல்ல புகழ் பெறத் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களுக்கு அன்னையின் பிரசாதம் என்ற பெயரில் கஞ்சி ஊற்றப்பட்டது. அங்கு வந்த மக்களுடைய மனதில் சட்டாம் பிள்ளை ஒரு அவதாரப் புருடராகத் தோன்றவே தமது குறைகளை அவரிடம் வரத் துவங்கினர். வந்தவர்களிடம் 'ஆயி உங்களை பார்த்துக் கொள்வாள் கவலைப்பட வேண்டாம்" என ஆறுதல் கூறி அனுப்புவார். வீபுதி தருவார். வியாதிகள் குணமாகத் துவங்கின.
விடயபுரத்தில் இருந்த மகானுடைய புகழ் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் துவங்கியது. மக்கள் கூட்டம் பெருகியது. பலர் அவரிடம் வரலாயினர். அப்படி வந்து அவரிடம் குணம் அடைந்தவர்களில் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த மாயவரம் ராஜம் ஐயர் என்ற இசை மேதையும் அடக்கம்.

அந்த மகான் நாளடைவில் பல அபூர்வமான சாதனாக்களைப் பெற்றார். பாம்பு மற்றும் தேள்கடி போன்றவை நிமிடத்தில் குணமாயிற்று. பன்னிரண்டு வருடம குளத்து நீரை மட்டுமே பருகி கடுமையான தவத்தில் இருந்தார். பண விஷயத்தில் கண்டிப்பானவர். ஆத்தாளின் பணத்தை முறையாக வைக்க வேண்டும் என்பார். எவரிடமும் தனிப்பட்ட முறையில் தனக்கோ ஆலயத்திற்கோ எந்த பண உதவியையும் பெற்றது இல்லை.

அவருடைய சக்திகள் எப்படிப்பட்டவைத் தெரியுமா ? ஒரு முறை ஒரு மந்திரவாதி அவர் ஊருக்கு வந்து அனைவரையும் தொந்தரவு செய்வது உண்டு. ஒருமுறை அவன் ஒருவருடைய வீட்டில் இறந்தவருக்கு வருட சடங்கு நடந்து கொண்டு இருந்த பொழுது அவனுக்கு சடங்கு முடியும் முன்னரே சோறு போடவில்லை என்பதற்காக அந்த சடங்கில் செய்திருந்த அனைத்து உணவையும் சாப்பிட முடியாத அளவு அசிங்கமாக்கி விட்டான். அதைப் பற்றி மகானிடம் சிலர் மனம் வருந்தி கூறினர்.

 மற்றொரு முறை அந்த மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து மக்களை துன்புறுத்த முயன்றான். அவர் மீது அவன் ஏவிய மந்திரம் பலன் இன்றிப் போனது. வந்தது கோபம் மகானுக்கு. அவர் அவனைப் பார்த்து கத்தினார் " இன்னும் இருபத்தி நாலு மணிக்குள் ஊரை விட்டு ஓடி விடு இல்லை எனில் தலை வெடித்து இறப்பாய் " அந்த மந்திரவாதியிடம் இருந்த அனைத்து சக்திகளும் அழிந்து போனது மட்டும் இல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல ஆகி அந்த ஊரை விட்டே ஓடினான். பிறகு அவன் அங்கு வரவே இல்லை.

மற்றோரு சம்பவம். ஸ்வாமிகளைக் காண ஒரு பெண்மணி வந்துவிட்டு அவரிடம் வீபுதி பெற்றுக் கொண்டு சென்றார். ஊர் திரும்பும் வழியில் திருடர்கள் வழி மறித்து நகைகளைப் பறிக்க முயல அவர் மகானை நினைத்து பிரார்தித்தார், அவ்வளவுதான் அருகில் வந்த திருடர்கள் கால்கள் நடக்க முடியாமல் இருந்த இடத்தில் இருந்து முன்னேறவும் முடியாமல் மரம் போல நின்று விட்டனர். பெண்மணி ஊருக்கு பத்திரமாகத் திரும்பினார்.

மேலும் தொண்டையில் சதை வளர்ந்து பேச முடியாமல் இருந்த பெண்மணிக்கு வீபுதி தந்து நொடிப் பொழுதில் அவருடைய வியாதியை குணப்படுத்தினார். இறந்து போக இருந்தவருடைய உயிரை இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகமாக்கிக் காட்டி உள்ளார். பல மைல் தொலைவில் இருந்து வந்து கொண்டு இருந்த ஒரு பக்தர் லாரி மோதி இறக்க இருந்த சமயத்தில் தான் மாரியம்மன் ஆராதனை நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்தவண்ணம் சூஷ்ம உருவில் சென்று அவருடைய உயிரை காப்பாற்றி உள்ளார்.

இப்படிப்பட்ட மகான் 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதி அடைந்தார். இன்றைக்கும் விடயபுரம் சென்று அவருடைய சமாதியில் பிரார்தனை செய்யும் பக்தர்களைக் காத்தருளி வருகின்றார்.

No comments:

Post a Comment