Tuesday, 16 June 2020

குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை... 'கடும் நோய் தீர்க்கும் யோகினி ஏகாதசி' விரதம் ...

குபேரன் கொடுத்த சாபம் நீக்கிய "யோகினி ஏகாதசி" விரத மகிமை...
'கடும் நோய் தீர்க்கும் யோகினி ஏகாதசி' விரதம் ...
நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட....


'ஆஷாத' (Ashadha) மாதம், (June / July) தேய் பிறையில் (கிருஷ்ண பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "யோகினி ஏகாதசி" (அ) ஆஷாத கிருஷ்ண பட்ச ஏகாதசி (Yogini Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது.

யோகினி ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்:
யுதிஷ்டிரர் ஒருமுறை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்; பரம்பொருளே, ஓ மதுசூதனா, ஜேஷ்ட மாதத்தில் வரக்கூடிய 'நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை பற்றி எமது பாட்டனாரும், ரிஷிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாஸதேவரிடம் கேட்டு அறிந்தோம். அதன் பிறகு, ஆஷாத  மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியின் பெயரினையும், அதன் சிறப்புக்களையும், தங்கள் மூலமாக கேட்டு அறிந்து கொள்ள விழைகிறோம்... பரந்தாமா, எங்களுக்கு அதன் பெருமைகளை கூறுங்கள் என்று, யுதிஷ்டிரர், ஸ்ரீ கிருஷ்ண பகவானை வேண்டுகிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...

ஓ, அரசர்களில் சிறந்தவனே, 'ஆஷாத மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசியின் பெயர் 'யோகினி' ஏகாதசி ஆகும். ஒருவரது நரக வாழ்க்கையில் இருந்து மோக்ஷத்தை அளிக்க வல்லது இந்த யோகினி ஏகாதசி, அதன்  மகிமை பற்றி புராணங்களில் உள்ளவற்றை கூறுகிறேன், கேள் என்று கூறி, ஸ்ரீ கிருஷ்ணர் தொடர்ந்த உரையை, நாம் இங்கு விவரிக்கின்றோம் ...

'அழகாபுரி' என்ற அற்புத நகரை ஆண்டு வந்தார் யக்ஷர்களின் மன்னரான 'குபேரன்'. இவரே தேவர்களின் செல்வத்திற்கு எல்லாம் அதிபதியாகவும், அவர்களுக்கு எல்லாம் 'பொருளாளராகவும் ' விளங்கி வந்தார். (ஆம், உங்கள் மனதில் எழும் வினா சரி தான்...திருப்பதி பெருமாளுக்கே கடன் கொடுத்த அதே 'குபேரன்' தான்...)

குபேரன் ஒரு மிகச்சிறந்த சிவ பக்தன் ஆவார். தினசரி சிவபூஜை முடிக்காமல் வேறு எந்த வேலையையும் தொடங்க மாட்டார். அந்த அளவுக்கு, அதி தீவிர சிவ பக்தர்... குபேரன், தனது நித்ய சிவ பூஜைக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து வைத்து, சரியான முறையில் உதவி புரிவதற்காகவும், மிக முக்கியமாக, தினசரி நந்தவனத்தில் (Flower Garden) இருந்து நறுமணம் மிக்க மலர்களைப் பறித்துக் கொண்டு வருவதற்காகவும், யக்ஷ குலத்தினைச் சேர்ந்த 'ஹேமமாலி' என்ற இளைஞனை பணியில்  வைத்திருந்தார். 

ஹேமமாலியின் மனைவி பெயர் 'ஸ்வரூபவதி', அவள் பெயருக்கு ஏற்ப  மிகச்சிறந்த பேரழகியாகவும் நீண்ட கருநிறக் கண்களையும் கொண்டவளாக இருந்தாள். ஹேமமாலி தனது மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தான். தினசரி தனது அரண்மனைப் பணிகளை முடித்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காது தனது இல்லம் சென்று விடுவான்.

ஹேமமாலியின் மிக முக்கியப் பணியே, தினசரி அதிகாலை 'மானஸரோவர்' ஏரி சென்று அதன் அருகில் பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் இருந்து நறுமணம் மிக்க மலர்களைப் பறித்து வந்து, சிவபெருமானது பூஜைக்காக தனது எஜமானர் குபேரனிடம் கொடுப்பது தான். அதன் பின் பூஜைக்குத் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைப்பது தான்.

தினசரி, இந்த வேலைகளை எல்லாம் ஒழுங்காக செய்து கொண்டிருந்தான் ஹேமமாலி.

வழக்கம் போல, அன்று ஒரு நாள் அதிகாலை, மானஸரோவர் ஏரி சென்று நந்தவனத்தில் பூக்களைப் பறித்துவிட்டு, அதனைப்பார்த்த பொழுது, அவனுக்கு பூஜை செய்ய வேண்டிய சிவபெருமான் நினைவு வருவதற்குப் பதிலாக, அவனது மனைவி 'ஸ்வரூபவதி'யின் கண்கள் நினைவுக்கு வந்தது. அவனுள் காம உணர்வு தோன்றியது. உடனே, தனது அரண்மனைக் கடமையை மறந்தான்,  உலகை மறந்தான்,  பூஜைக்காகப்  பறித்த பூக்களுடன் தனது இல்லம் நோக்கி சென்றான். தனது மனைவியுடன், நேரம் போவதே தெரியாமல் மோகத்தில் மூழ்கினான்.

அழகாபுரி அரண்மனையில், வழக்கம் போல, குபேரன், சிவ பூஜைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்க; மலர்கள் வரவில்லை, ஆனால், ஹேமமாலி எப்படியும் உரிய நேரத்திற்குள் மலர்களைக் கொண்டு வந்து விடுவான் என்று மனதில் எண்ணியவாறே, மற்ற பூஜைகளை தொடங்கினார் குபேரன். சிவபெருமானுக்கு மற்ற அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் முடிந்தும், மலர்கள் வந்தபாடில்லை. வேறு வழியின்றி, வேறு மலர்களைக் கொண்டு குபேரன் பூஜையை நிறைவு செய்தார்.

இருப்பினும் வழக்கமாக சாற்றக்கூடிய மலர்களை அணிவிக்கவில்லையே என்ற கோபம், குபேரனின் கண்கள் சிவப்பாகும் அளவுக்கு கொப்பளிக்கத் தொடங்கியது. தனது காவலாளிகளை ஏவி விட்டு, ஹேமமாலியை எங்கு இருந்தாலும் உடனே பிடித்து வர உத்தரவிட்டான். நேரம் செல்லச், செல்ல குபேரனின் கோபம் மிக அதிகமாகியது. காவலாளிகள் அவனை நந்தவனம் முழுவதிலும்  தேடி, அங்கு எங்கும் கிடைக்காததால், அதன் பின்பு அவன் வீட்டிற்கு தேடிச்சென்றனர். அங்கு இருப்பதை அறிந்து, அவனிடம், காவலாளிகள்  மன்னர் கோபத்துடன் கட்டளையிட்டு, அவனை  அழைத்து  வரச் சொன்ன தகவலை உரைத்தனர். அதன் பின்பு தான் ஹேமமாலி, மயக்கத்தில் இருந்தவனுக்கு  சுய நினைவு வந்தவன் போல  நடந்ததை உணர்ந்தான்.

ஐயகோ, சிவபூஜைக்குரிய மலர்களைக் கொய்தும் அதனை பூஜையில் சேர்க்காமல், நான் மனைவியின் மேலுள்ள மோகத்தால், இங்கு வந்து விட்டேனே, என்ன நேரப்போகிறதோ? மன்னர் என்ன செய்யப் போகிறாரோ? என்ற அச்சத்துடனேயே  காவலாளிகளுடன் அரண்மனைக்கு சென்றான்.

அவனை, குபேரன் முன்பு கொண்டு போய் நிறுத்தினர் காவலாளிகள். நடுங்கியவாறே நின்ற ஹேமமாலியிடம், கடும் கோபத்துடன் நடந்த நிகழ்வுகளைக்  கேட்டறிந்த குபேரன், மேலும் சினம் கொண்டவராய்...
"ஓ மூடனே, உன் மனைவி மேலுள்ள மோகத்தால், மிக உயர்ந்த சிவபூஜையைக்கூட நீ மறந்து சென்றாய்... இதற்கு தண்டனையாக, உன் உடல் முழுவதும் 'குஷ்ட ரோக' நோய் தொற்றி, நீ யக்ஷ குலத்திலிருந்து  விலகி, காடுகளில் சுற்றி   அவதிப்படக்கடவது" என்று சாபம் அளித்தார். 

ஹேமமாலி  எவ்வளவோ மன்றாடியும், குபேரன் மன்னிக்க மறுத்து விட்டார், அதனால், அவரது சாபமும் உடனே பலிக்கத்தொடங்கியது. மிக அழகனாக இருந்த 'ஹேமமாலி' உடல் முழுவதும் 'குஷ்ட ரோகம்' ஏற்பட்டு, அழகாபுரி நகரத்திலிருந்து மறைந்து வேறு ஒரு காட்டிற்குள் வந்து விழுந்தான். 

பின்னர் அந்த, திக்கு தெரியாத காட்டில் உணவின்றி, நீரின்றி பல நாட்கள் அலைந்து, திரிந்து, ஆங்காங்கு  கிடைக்கும் கனிகளையும், இலைகளையும் புசித்து வாழத் தொடங்கினான். தான் செய்த தவற்றை எண்ணி வருந்தியவாறே, ஒவ்வொரு நாளும், கால் போன போக்கில், கானகத்தில் சுற்றினான்.
தினமும் நன்றாக சுகபோக வாழ்வு வாழ்ந்தவன், தற்பொழுது நரக வேதனை கொண்டவனாய், அலைந்து கொண்டிருந்தான். 
இருப்பினும், பலநாட்கள் அவன் சிவபூஜைக்கு உதவி புரிந்திருந்த காரணத்தால், அவன் சேர்த்திருந்த புண்ணியம், அன்று ஒரு நாள், அவனை ஒரு ஆஸ்ரமத்தின் அருகில் கொண்டு வந்து சேர்த்தது.
ஆம், கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த ஹேமமாலி, அவனை அறியாமலே ஒரு ஆஸ்ரமத்தினை அடைந்திருந்தான். பின்னர், தனது நோயின் நிலையால் சற்றே தள்ளி நின்று, யாருடைய ஆஸ்ரமம், யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கவனித்தான். சிறிது நேரத்தில், அது  'மேரு மலையில்' உள்ள ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் ஆஸ்ரமம் என்று புரிந்து கொண்டான்.

(மார்க்கண்டேய மகரிஷி, ப்ரம்மாவின் 7 கல்ப வருஷங்கள் வாழக்கூடியவர்.) அவரைக்கண்டதும், சாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து, ஆசிர்வதிக்கும் படி வேண்ட, மகரிஷியும், யாரப்பா நீ ? இப்படி ஒரு பொல்லாத நோய் உனக்கு வரும் அளவுக்கு நீ செய்த பாவம் என்ன என்று கேட்டார்?

மகரிஷியிடம், நடந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல், மறைக்காமல் கூறி, மேலும் மோகத்தால் தான் செய்த தவறை, தற்பொழுது உணர்ந்து விட்டதாகவும், இனி அதுபோல் ஒரு பிழை தன் வாழ்வில் நேராது என்றும், தான் படும் இந்த வேதனையைத் தீர்க்க ஒரு உபாயம் கூறி அருளுமாறும்,  இரு கரம் கூப்பி வேண்டினான்.

மார்க்கண்டேய மகரிஷி  என்ன உபாயம் கூறினார் ?
மார்க்கண்டேய மகரிஷியும், தனது மனக்கண்ணிலேயே  ஹேமமாலியின் உள்ளத்தில் உள்ளதை உணர்ந்தார், அவன் கூறுவது அனைத்தும் உண்மை என்று அறிந்தார். 

அதனால், ஹேமமாலியிடம் இரக்கம் கொண்டவராய்; நீ செய்த செயல் பெரும் குற்றம் ஆகும், அதற்கு உண்டான தண்டனையைத் தான், நீ இவ்வளவு காலம் அனுபவித்திருக்கிறாய், இப்பொழுது உனது பூர்வ புண்ய பலன் காரணமாக இங்கு வந்துள்ளாய், இனி இந்த நிலையில் இருந்து வெளிவர, 'ஆஷாத' மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று முழு விரதம் இருந்து பகவான் விஷ்ணுவை வேண்டுவதன் மூலமும், அந்த புண்ய பலன் மூலமும் நீ முழுதுமாக இந்த நோயின் பிடியில் இருந்து விடுபடலாம், உனது பழைய யக்ஷ வாழ்வினையும் அடையலாம் என்று கூறி ஆசி வழங்கினார்.

இதனைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஹேமமாலி, அவருக்கு மீண்டும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவருக்கு நன்றி கூறி ஆஸ்ரமம் விட்டு வெளியே வந்தான். மகரிஷி கூறியபடியே, ஆஷாத மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று முழு நம்பிக்கையுடன் முழு உபவாசம் இருந்து, பகவான் விஷ்ணுவை முழு நேரமும் மனதில் ஜெபம் செய்து அன்று இரவு முழுவதும் உறங்காமல் இருந்து அடுத்த நாள் துவாதசி அன்று தனது விரதத்தை பூர்த்தி செய்தான்.

அந்த புண்ய பலன் காரணமாக, அவனது குஷ்ட ரோக நோய் நீங்கியது, மேலும் அவன் மீண்டும் யக்ஷ குலத்தின் அழகாபுரி நகரை அடைந்து மகிழ்ச்சியான வாழ்வை தொடங்கினான்.

இவ்வாறு, யோகினி ஏகாதசி மகிமையை, யுதிர்ஷ்டிரரிடம் கூறிய ஸ்ரீ கிருஷ்ண பகவான், மேலும் கூறுகையில்; ஹே, அரசர்களில் சிறந்த யுதிர்ஷ்டிரா, "யார் ஒருவர் இந்த யோகினி ஏகாதசியை முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் கடைப் பிடிக்கிறார்களோ அவர்களது அனைத்து பாவங்களையும் என் மனதுக்கு ப்ரியமான 'ஏகாதசி தேவி' அழிக்கிறாள். அதன் மூலம் அவர்கள் நல்வாழ்வு பெறுகிறார்கள்" என்று கூறி அருளினார்.

யுதிர்ஷ்ட்ரா, அவ்வாறு இந்த விரதத்தை மிகவும் பக்தி, சிரத்தையுடன் கடைபிடித்தவர்கள், 88,000 அந்தணர்களுக்கு அன்னமிட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த அளவிற்கு புண்ணியத்தினையும் பெறுவார்கள் என்று கூறி அருளினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

இவ்வாறு, இதன் பெருமைகளை யுதிர்ஷ்டிரரிடம்  கூறிய ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் கூறுகையில், ஓ யுதிஷ்டிரா, இந்த 'யோகினி ஏகாதசி' விரத கதையினைப் படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.



இவ்வாறு யோகினி ஏகாதசி மகிமை பற்றி "ப்ரம்ம-வைவர்த்த- புராணம்" விளக்குகிறது.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'யோகினி ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.)
வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு அருந்தி விரதம் இருக்கலாம்.
வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம்.
(இப்போது சீன வைரஸ் காரணமாக) இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...   
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள். 

Editors Note:


(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}  ஒவ்வொரு ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று  'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...) 

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (W03)


ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு: 
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...)

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய...

No comments:

Post a Comment