Friday, 23 February 2018

திருமுருகநாதஸ்வாமி. முயங்குபூண்முலைவல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை.


சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
____________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல............................)
_____________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர் எண்: 261*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜திருமுருகநாதசுவாமி திருக்கோயில், திருமுருகபூண்டி:*
_____________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* திருமுருகநாதஸ்வாமி.

*💥இறைவி:*
 முயங்குபூண்முலைவல்லியம்மை, ஆலிங்க பூஷணஸ்தனாம்பிகை.

*🌴தல விருட்சம்:* குருக்கத்தி.

*🌊தல தீர்த்தம்:* சண்முக தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,ஞான தீர்த்தம்.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர்- ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.

*🛣இருப்பிடம்:*
கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து ஐந்து கி.மி. தொலைவில், அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி ஆலயம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு திருமுருகநாதஸ்வாமி திருக்கோயில்,
திருமுருகபூண்டி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
PIN - 637 211

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8. 00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

*கோயில் அமைப்பு:*
நொய்யல் ஆற்றின் வடபகுதியோரமாக அமைந்து, மேற்கு நோக்கியபடி அருளும் தலம் இத்திருமுருகன் பூண்டி.


மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோயிலில் மற்ற கோயில்களைப் போல நுழைவு கோபுரம் கிடையாது.

கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பத்தூடன் அமையப் பெற்றிருந்தது.


சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுடன் நான்கு புறமும் உயர்ந்ததான மதில் சுவர்களைக் கொண்டு அமைந்திருந்தது.

இரண்டு பிராகாரங்களுடன் இந்தக் கோயில் அமைந்திருக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து உள் புகுந்தோம்.

கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில்  தரிசனம் தந்தார்.
மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதியில் காட்சி தந்தார்.

முன்நின்று, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதுபோல அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்து வைத்திருந்தனர்.

கருவறை விமானத்தை நோக்கியபோது,  அழகிய சுதைச் சிற்பங்கள் காட்சியளித்தன. கண்டு இன்புற்று நடந்தோம்.

உட்பிராகாரத்தில் நிருதி விநாயகரைக் கண்டு விட்டோம். சடுதியில் காதுகளைப் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

இதனையடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்கள் இருக்க, நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்து, சண்முகர், துர்க்கை, பைரவர், ஆகிய சந்நதிகளுக்குச் சென்று வணங்கிப் பிரார்த்தித்து நகர்ந்தோம்.

மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி இருந்தது.

ஐந்தடி அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கமாக ஐந்து திருமுகங்களும், பின்பக்கமாக ஒரு முகமும் உடையதாக அமைந்து காட்சியருளிக் கொண்டிருந்தார். ஆனந்தித்து வணங்கி மகிழ்ந்து திரும்பினோம்.

மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்திருந்தது.

அம்மையை கண்குளிர தரிசனம் செய்து மனங்குளிர ஆராதித்து வணங்கி, அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

கோயிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தம் அமைந்திருக்கிறது.

கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் அமைந்து இருக்கிறது.

சித்த பிரமை பிடித்தவர்களை இந்த தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவரச் செய்கிறார்கள்.

இவ்விதம் வணங்கித் தொழ, அவர்களுடைய சித்த பிரமை நீங்குவது என்பது பக்தர்களின் கண்கூடு.

*தல அருமை:*
புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.

சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.

கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே" என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன.

பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று.

ஆக,  இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.

இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோயில் என்ற ஒரு கோவிலும் உள்ளது.

இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது.

இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக ளங்குகிறது.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

*வேடுபறி திருவிழா:*
திருமுருகன் பூண்டியில் எழுந்தருளியுள்ள திருமுருகநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் வேடுபறி திருவிழா  பிரசித்தமானது.

*ஆலயப் பழமை:*
தொல்லியல் துறையின் ஆய்வுகளின்படி திருமுருகன் பூண்டியை புராதன நகரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

*தல சிறப்பு:*
சூரபத்மனை வதைத்த முருகன் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க, தன் கையாலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்ட தலம் இது.

நிந்தா ஸ்துதி என்பது இறைவனை நிந்தனை செய்வது. இறைவனே தன்னிடம் நட்பு பாராட்டிய பெருமைக்கு உரியவர் சுந்தரர்.

அப்படிப்பட்ட சுந்தரரே தன்னுடைய நண்பரான சிவபெருமானை, நிந்தனை செய்து திட்டி பதிகம் பாடுகிறார். இதுவும் இறைவனின் திருவிளையாடல் இது.

சிவனின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாக கருதப்படுகிறது.

பாண்டிய மன்னன் ஒருவனுக்கு, வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதை எண்ணி வருந்தி, இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான்.

இது குறித்து சிற்ப காட்சிகள் இங்கு காணப்படுகின்றன.

இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவரின் சிற்பமும் இங்கு அமையப் பெற்றிருந்தது.

*திட்டுப் பாடல் கேட்க நினைத்த இறைவன்:*
தன்னுடைய காதலுக்கு சிவபெருமானையே தூதாகச் செல்லச் சொன்னவர் சுந்தரர்.

பெருமானுக்கும் சுந்தரருக்கும் இடையே அப்படியொரு அன்யோன்யமான நட்பு இருந்து வந்தது.

பெருமானின் பெருமைகளை ஒவ்வொரு ஆலயத்திலும் பாடிவருவார் சுந்தரர்.

சுந்தரர் தனக்கு என்ன தேவையோ அதை தன்னுடைய நண்பரான பெருமானிடமே நேரடியாக கேட்டுப் பெறக்கூடியவர்.

இந்த வழக்கத்துக்கு மாறாக, சுந்தரருக்கு மன்னர் ஒருவர் பொன்னும், அளவிடமுடியாத பரிசுகளும் அளித்து அவரை வழியனுப்பி வைத்தார்.

பெரும் பொருட் செல்வத்தோடு கோவை, அவினாசியில் இருக்கும் *கூப்பிடு பிள்ளையார்* கோயிலில் இரவு தங்கினார் சுந்தரர்.

ஒவ்வொரு முறையும் வாழ்த்தி வணங்கி பாடிவந்த தன்னுடைய நண்பர் சுந்தரரை, தம்மை இதுவரை திட்டிப் பாடவில்லையே என நினைத்த சிவபெருமானார் அதற்காக ஒரு திருவிளையாடல் புரிகிறார்.

தம்முடைய பூத கணங்களுடன், வேடனாகச் சென்று சுந்தரர் அறியாவண்ணம் அவரிடம் உள்ள பொருட்களை கவரச் செய்து விட்டார்.

மறுநாள் கண் விழித்த சுந்தரர், தம்மிடம் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

சிவபெருமானை நோக்கி, நீ இருக்கும் சந்நதியிலேயே இப்படியெல்லாம் நடக்குமா? என கோபத்தோடு கேட்டார்.

*எந்துற்கு எம்பிரான் நீரே…* எனத் தொடங்கி பத்து பதிகங்களால் வசைபாடி பாடுகிறார்.

உடனே அவரின் முன் தோன்றிய இறைவன், நண்பரே!, நீர் என்னைத் திட்டிப் பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று கூறியதோடு, களவாடிய பொருட்களைப் போல் இரண்டு மடங்கு அதிகம் செல்வத்தைக் கொடுத்து, சுந்தரருக்கு அருள் பாலித்தார்.

*கதை சொல்லும் சிற்பங்கள்:*
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் இந்தச் சம்பவத்தை விளக்கும் வகையில், சிவன் வேட்டுவனாக வில்லோடு நிற்பதைப் போலவும், சுந்தரர் கோபமாக இறைவனுடன் வாதிடுவது போல ஒரு சிற்பம் உள்ளது.

மற்றொரு சிற்பமாக, மகிழ்ச்சி தவழும் முகத்தோடு சுந்தரர் இருப்பதையும் போன்றும் ஒரு சிற்பமும் உள்ளன.

இந்த புராணச் சம்பவத்தை ஒட்டியே ஆண்டுதோறும் இக்கோயிலில் வேடுபறி திருவிழா விமரிசையாக நடத்தப்படுகின்றது.

*பரிகார ஆலயம்:*
இன்றும், சிவன், பொருட்களைத் திருடி வந்து மறைத்து வைத்த, வேடுவ பறிகுழி கோயிலில் இருக்கிறது நாம் சென்றால் காணமுடியும்.

திருட்டு, மனநோய், திருமணத் தடை என எத்தகைய இடர்களையும் தீர்க்கும் ஆலயமாக இருக்கிறது.

சுந்தரமூர்த்தி நாயனார், சிவனை திட்டிப் பாடிய பத்துப் பாடல்களையும், பாடி வணங்க, நினைத்த காரியம் கைகூடும் என்பதும் ஐதீகம்.

*சுந்தரர் தேவாரம்:*
பண்: பழம் பஞ்சுரம்.

1.🔔கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

🙏எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, திடுகு என்றும் , மொட்டு என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம். இம்மாநகரிடத்து இங்கு, சிறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்?

2.🔔வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால்,  இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

3.🔔பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அப்பாவிகள், பாவம் என்பதொன்றையறியாராய் விலங்குகளையே கொன்று தின்று, நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். இதன்கண் நீர், இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று, இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

4.🔔பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, குற்றமுடைய வேடுவரே கூடி, ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய், வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அவர்கள், கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு, வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம். உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால், அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

5.🔔தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு, அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

6.🔔விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?

7.🔔வேத மோதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓத மேவிய ஒற்றி யூரையும்
உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு
முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரண மேது காவல்கொண்
டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், வேதத்தை ஓதிக்கொண்டு, வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு, வெள்ளிய கோவணத்தை உடுத்து, பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர். அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்?

8.🔔படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, உமை என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர். முடவரல்லீர், ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர். அன்றியும், நீர், விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்?

9.🔔சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.

🙏எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், மொந்தை என்னும் வாச்சியத் தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?

10.🔔முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.

🙏தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற, பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர்.

     திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*

*☎தொடர்புக்கு:*
04296- 273507

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *கொடுமுடிநாதர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி.(கொடுமுடி.)*
_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment