Wednesday, 14 February 2018

கீரிமலை– நகுலேஸ்வரம்

*இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்-5*
****************************************

*கீரிமலை– நகுலேஸ்வரம்*
*****************************

கீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம் பற்றிய வரலாறு.

ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.

உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின் வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களைவிட்டு நீங்காமல் நிறைந்திருக்கும் இத்திருக்கோயிலைப் பற்றிய அற்புத வரலாற்றை இப்போது படியுங்கள்.

இலங்கையிலுள்ள புராதனமான சிவாலயங்களுள், யாழ்ப்பாணத்திலுள்ள கீரிமலைச் சிவன் கோயில் முக்கியமானதாகும். இது மிகவும் பழைமையானது.

நகுலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் என்னும் பெயர்களும் இத் திருத்தலத்துக்கு உண்டு.

இக் கோயில், ஆதிகாலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்ந்துவந்த நகுலேசப் பாசுபதர்களினால் அமைக்கப்பட்டதென்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். (ஆனால், ஆதிகாலத்துக் கோயில் 1621ம் ஆண்டு, போர்த்துக்கேய ஆட்சியாளர்களால் முற்றிலுமாக இடித்து அழிக்கப்பட்டது.

மேலும், அந்த ஆதிக் கோயிலில் இருந்த கருவறைத் திரு உருவச் சிலைகளும் மற்றும் வழிபாட்டுப் பொருட்களும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்து போயின.

இக் காரணங்களால், கீரிமலைச் சிவன் கோயிலைப் பற்றிய முழுமையான உண்மை வரலாற்றை அறிய முடியவில்லை.

எனினும், அந்த ஆதிகாலம் தொட்டு மக்களிடையே வழிவழியாகப் பரவிவந்த வரலாற்றுக் கதைகளிலிருந்தும், பிற கோயில்களின் வரலாற்று ஏடுகளில் இருந்தும், முந்திய ஆட்சியாளர்கள் எழுதிவைத்த பதிவேடுகளிளிருந்தும் இக் கோயிலின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.)



இலங்கைத் தீவின் சகல திசைகளில் இருந்தும், தென் இந்தியாவிலிருந்தும் மக்கள் தல யாத்திரையாக இக் கோயிலுக்கு வந்தார்கள். மேலும், இத் திருக்கோயில் சமுத்திரக் கரையில் அமைந்திருப்பதால், நீத்தார் (இறந்தோர்) கடமைகளான அந்தியேட்டி, திவசம், சபிண்டீகரணம், அஸ்தி சஞ்சயனம் முதலிய கிரியைகளுக்குச் சிறப்பாகவுள்ள புண்ணியத்தலமாகவும் விளங்குகின்றது.

இக் கோயிலின் அதிசய வரலாற்றைப்பற்றி, யாழ்ப்பாணம் மயில்வாகனப்புலவர் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்.
முற்காலத்திலே, நகுல முனிஎன்னும் ஒரு முனிவர் இருந்தார். அவரது முகம் கீரியின் முகத்தைப்போன்று காட்சியளித்ததால், மக்கள் யாவரும் அவரைப் பழித்ததுடன், யாரும் அவருடன் பேசவும் அஞ்சினார்கள்.

மக்களின் பழிப்புக்கு அஞ்சி, உலகையே வெறுத்த ஒரு துறவியாகி, ஒதுங்கி வாழ்ந்து வந்தார். அவர் அப் பகுதியிலுள்ள மலைச் சாரலிலே சில காலம் தங்கியிருந்து, தீர்த்தமாடி வந்தபோது, இறைவன் அருளாலும், அந்தத் தீர்த்தத்தின் மகிமையாலும் அவரது கீரி முகம் நீங்கி, இயல்பான மனித முகம் அவருக்கு உண்டானது.

அதனால், அந்தத் தலமும், அந்தக் கடற்கரைத் தீர்த்தமும் தெய்வீக அருள் பெற்றவை என்பதை உணர்ந்த அந்த முனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கித் தவம் புரியத் தீர்மானித்தார்.

அவருக்கு, அந்தத் தலத்திலே கீரி முகம் மாறியதால், அந்தத் தலத்துக்குக் கீரிமலை என்று பெயர் உண்டாயிற்று. அந்த முனிவரின் தெய்வீகமான புகழ் ஊரெங்கும் பரவியது. அவரை வணங்கி, அவரது ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக, திரளான பக்தர்கள் அங்கே வந்து, கீரிமலைத் தீர்த்த்தத்தில் நீராடி, அவரை வழிபட ஆரம்பித்தார்கள்.

அதைக்கண்டு, அவ்வூர் அரசன் மக்கள் வழிபடுவதற்கு உகந்ததொரு அழகான சிவன் கோயிலை அங்கே கட்டுவித்தான். அந்தக் கோயிலின் ஈஸ்வரன் திருத்தம்பலேஸ்வரர் என்றும், அம்பாள் திருத்தம்பலேஸ்வரியம்பாள் என்றும் அழைக்கப்பட்டார்கள். ஆயினும், கீரிமுகம் கொண்ட முனிவரின் பெயரால், அந்தத் தலத்தை மக்கள் நகுலேசர் கோயிலென்றும், அம்பாள் கோயிலை நகுலாம்பிகையம்மன் கோயிலென்றும் அழைத்தார்கள். (நகுலம் = கீரி).

நகுலேஸ்வரம் யாழ்ப்பாணத்தின் மிகவும் புராதனமான தலங்களுள் ஒன்று என்பதை முன்னர் பார்த்தோம். அங்குள்ள சமுத்திர தீர்த்தமானது, அங்கு தீர்த்தமாடும் பக்தர்களுக்குப் பாவ விமோசனங்களையும், இராஜயோகம் முதலான இம்மைப் பலன்களையும் கொடுக்க வல்லது.

சுசங்கீதன் என்ற கந்தருவன், இராவணனின் யாழை உபயோகித்து இசை வழிபாடாற்றி, இறைவனிடமிருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொண்டான்.

கைலாச புராணத்தில் காணப்படும் இக் கதையின் மூலம், யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மக்கள் வாழ்க்கை பரவத் தொடங்கியதற்கு முன்பாகவே நகுலேஸ்வரம் அங்கே நிலைபெற்று விளங்கியது என்பதை அறியக்கூடியதாக உள்ளது.

கீரிமலைத் தலத்தின் மகிமையை மாருதப்புரவல்லி கதை மிகவும் சுவையாக விளக்குகின்றது.

தென் இந்தியாவில், சோழ தேச அதிபதியாகிய திசையுக்கிர சோழன் என்பவனுக்கு, மாருதப்புர வல்லி என்னும் மகள் இருந்தாள். அவள் முகம் மனித முகமாக இல்லாமல், குதிரையின் முகத்தைப்போல இருந்தது.

மேலும், அவளுக்குக் குன்ம வியாதி பீடித்திருந்ததால், அவளது உடல் மெலிந்து, மிகப் பலவீனமாயிருந்தாள். சோழ தேசத்திலிருந்த பிரபல வைத்தியர்கள் எவராலும், அவளைக் குணப்படுத்த முடியவில்லை. அவள் வாலிப வயதடைந்து, மணப்பருவம் எய்தியும், யாருமே அவளைத் திருமணம் செய்ய முன்வரவில்லை.

மகளின் நோயையும், கவலையையும் கண்டு, தந்தை மிக்க கவலையுற்றான். அப்போது, சாந்தலிங்கன் என்னும் ஒரு சந்நியாசி அவளைச் சந்தித்து, “மகளே, நீ இனிமேல் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கோயில்களைத் தரிசித்து, அங்குள்ள புனித தீர்த்தங்களில் தீர்த்தமாடி வந்தால், இறைவன் அருளால் உன் நோயும், உன் தந்தையின் கவலையும் தீரும் ” என்று அறிவுரை கூறினார்.

அதன்படி, மாருதப்புரவல்லி தன் நெருங்கிய சில தோழிகளோடும், சில உண்மையான காவலர்களோடும் தீர்த்த யாத்திரை புறப்பட்டு, சோழ சாம்ராஜ்யத்திலுள்ள கோயில்களை முறைப்படி தரிசித்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராடியும் வந்தாள். அவ்வாறே, அவள் யாழ்ப்பாணம் வந்தடைந்து, கீரிமலை நகுலேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றிக் கேள்வியுற்று, அங்கே வந்து சேர்ந்தாள்.

அங்கே தவம் செய்துகொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு, அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கித் தன் குறைகளையெல்லாம் கூறி அழுதாள். அவளைத் தேற்றி, ஆறுதல் கூறிய நகுல முனிவர், கீரிமலைத் தீர்த்தத்தின் மகிமைகளைக் கூறி, அவளை அங்கேயே தங்கித் தீர்த்தமாடி, இறைவனை வணங்கிவருமாறு கூறி ஆசீர்வதித்தார்.

நகுல முனிவரின் ஆசிர்வாதத்துடன், மாருதப்புரவல்லி அங்கேயே தன் தோழிகளோடும், காவலர்களோடும் கூடாரம் அமைத்துத் தங்கித் தினமும் கீரிமலைத் தீர்த்தத்தில் பயபக்தியுடன் நீராடி, நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் அன்புடன் வழிபட்டு வந்தாள்.

இறைவனின் அருளால், சில நாட்களிலேயே அவளது குதிரை முகம் மாறி, பேரெழில் மிக்க இளம் பெண்ணுக்குரிய முகம் அமைந்தது.

அவளது உடல் நோய் நீங்கி, வலிமையும், வனப்பும் பெற்றது. இதைக் கண்டு, மாருதப்புரவல்லியும், அவளுடன் வந்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, அந்த நற்செய்தியை அவளின் தந்தைக்கும், ஏனையோர்க்கும் அறிவித்துவிட்டு, மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அச் சந்தர்ப்பத்தில், கதிரைமலையிலிருந்து, உக்கிரசிங்க மகாராஜன் தன் படை பரிவாரங்களுடன் நகுலேசர் கோயிலைத் தரிசிக்க வந்தான். நகுலேசரின் சந்நிதியில், பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்த மாருதப்புரவல்லியைக் கண்டான்.

அவளது பேரழகையும், தெய்வ பக்தியையும் கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்து, நகுல முனிவரின் ஆசீர்வாதத்துடன் அங்கேயே அவளை வெகு சிறப்பாக மணம் செய்துகொண்டான்.

இருவரும் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ்ந்து, நகுலேஸ்வரரை வாழ்நாள் முழுவதும் பக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தனர்.

கீரிமலைத் தீர்த்தம் தீராத நோய்களையும் தீர்க்கவல்லது என்பதற்கு மாருதப்புரவல்லியின் கதை போன்று மேலும் பல கதைகள் உள்ளன.

ஆதி காலத்து நகுலேஸ்வரத்திலே, மூன்று பிராகாரங்களும், ஐந்து கோபுரங்களும் இருந்தன என்பது ஐதீகம். கி.பி.ஆயிரத்து அறுநூற்று இருபத்தொன்றாம் ஆண்டிலே, யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், நகுலேஸ்வரம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முதலிய ஏராளமான இந்துத் திருக்கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

அங்கிருந்த விலையுயர்ந்த பூஜைக்குரிய பொருட்களையும், வழிபாட்டுப் பொருட்களையும் கொள்ளையடித்தனர். அக்காலத்தில், கீரிமலை நகுலேஸ்வரர்மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த பரசுபாணி ஐயர் என்பவர், கீரிமலைத் தலத்திலிருந்த ஆலயங்களின் விக்கிரகங்களையும், பூஜைக்குரிய பாத்திரங்களையும் ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்தார்.

இவ்வாறு பலரும், இறைவன்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, இறைவனுக்குரிய பக்திப் பொருட்களை அன்னியர்கள் கைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக அவற்றை மண்ணில் புதைத்ததாகவும், ஆழமான கிணறுகளில் போட்டு மூடி வைத்ததாகவும் வரலாற்று ஏடுகள் உரைக்கின்றன. ( இந்தியாவிலும், அன்னியர் ஆட்சியின்போது இவ்வாறே நடந்தது. )

அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட விக்கிரகங்களில் சில, மண்ணைத் தோண்டும்போது அல்லது கிணறுகளைத் தூர் வாரும்போது கிடைக்கப்பெற்று, மீண்டும் கோயில் கண்டன.

ஆனால், கீரிமலைச் சிவன் கோயிலுக்குரிய விக்கிரகங்களும், பூஜைப் பொருட்களும் இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை. இது நம் துரதிர்ஷ்டமே.

ஏறக்குறைய நூற்றெண்பது வருடங்களின்பின், ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டாம் ஆண்டு, யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்களின் பெருமுயற்சியால், இக்கோயிலை மீண்டும் கட்டிஎழுப்புவதற்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு, மன்மத வருடம், ஆனி மாதத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆனால், ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு, அக்கோயில் தற்செயலாகத் தீப்பிடித்து எரிந்தது.

அதன்பின்னர், பல இந்துமத அபிமானிகள் முன்னின்று உழைத்து, கோயிலை மீண்டும் அழகுறக் கட்டியெழுப்பி, ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்துமூன்றாம் ஆண்டில், கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

கீரிமலைச் சிவன் கோயில் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், கோபுர வாயில், பரிவாரத் தேவர் சந்நிதிகள், பிராகாரம் எனும் அமைப்புகளுடன், சிவாகம விதிகளுக்கும், சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமைய உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்கு, ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் ஒரே லிங்கத்தில் அமைக்கப்பெற்ற சகரலிங்கம் காட்சியளிக்கின்றது.

நிருத்த மண்டபத்தின் வட திசையில் நடராஜரின் திருவுருவம் தெற்கு நோக்கியவண்ணம் அமைந்துள்ளது.

இரண்டாம் பிராகாரத்தின் வட புறத்தில், துர்க்கை அம்மன் சந்நிதி காட்சியளிக்கின்றது. நவராத்திரி விழாவும், மானம்பூ விழாவும் அங்கே சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

பிராகாரத்தின் உள்ளே, விநாயகர், முருகப்பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தம், மகா விஷ்ணு, மகா லக்ஷ்மி, பஞ்ச லிங்க வடிவிலான பரமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றன.

கிழக்கிலே, பைரவர் சந்நிதியும், நவக்கிரகங்களின் சந்நிதியும் காணப்படுகின்றன.

நகுலேஸ்வரத்தில், சிவாகம விதிமுறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சித்திரைப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மானம்பூ, புரட்டாசிச் சனி வாரம், ஐப்பசி வெள்ளி, கார்த்திகை விளக்கீடு, மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாயில் ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்தரம் முதலான தினங்களில் சிறப்பான உற்சவங்கள் நடைபெறும்.

ஆடி அமாவாசை நாளில், பக்தர்கள் பெருங் கூட்டமாக வந்து தீர்த்தமாடி இறைவனைத் தரிசனம் செய்வார்கள்.

கீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயிலில், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.

கீரிமலை நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வணங்கிப் பிணிகள் யாவும் நீங்கப்பெற்று, நலமுடன் வாழ்வோமாக.

No comments:

Post a Comment