Saturday, 9 November 2019

நாடி சொன்ன கதை

நாடி சொன்ன கதை

காலை பதினோரு மணி அளவில், மிகவும் பிரபலமாக விளங்கிய ஒரு சினிமா கம்பனி முதலாளி என்னிடம் "நாடி படிக்க வரலாமா?" என்று கேட்டனுப்ப நானும் அகஸ்தியரின் உத்திரவைக் கேட்டு அவரை வரச் சொன்னேன்.

மிகப் பெரிய கோடீஸ்வரர் என்றாலும் மிகவும் பக்தியுடன் வந்திருந்தார்.  அவரது முகத்தில் பணக்காரக் களை பளிச்சிட்டது.  அதே சமயம் அவரது விழிகளில் கவலை ரேகை ஓடியதையும் கவனித்தேன்.

தொழில் பிரச்சனையாய் இருக்கும் என்று என்னுடைய மனம் சொன்னது.  அகத்தியரின் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.  "ஒளிமறை விண்மீன் சதயம் உதித்திட்ட வேளையில்" என்று ஆரம்பித்த அதன் சாராம்சம் இது தான்.

உன்னுடைய மகள் பர்வதகுமாரியின் பெயரைச் சூடியவள்.  வெளிநாட்டு மொழியில் சிறந்த கல்வி அறிவுடையவர்.  பேச்சிலும், எழுத்திலும் பலரை மிஞ்சிப் பதக்கம் பல பெற்றவள்.  பால் மணம் மாறாத அந்தக் குழந்தை, பள்ளிக்குச் சற்று தொலைவில் இருக்கும் படிப்பறிவில்லாத கீழ்குடிமகன் தன் வசியம் கொண்டு வர எத்தனிக்கிறான்.

ஏதுமறியாத இந்தக் குழந்தை அந்தக் கீழ்மகன் வைத்து நடத்தும் சிறு பெட்டிக்கடையில் சிறு சிறு தின் பண்டம் வாங்கத் தோழிகளோடு போவதுண்டு.  பணமும், அதிகாரமும், புகழும் மிக்க குடும்பத்தில் பிறந்த உன் மகளை கரம் பிடித்து உல்லாசமாக வாழ நினைக்கிறான்.

நாடி பார்க்கும் இந்த வேளையில் அந்த நயவஞ்சகன், பலராமர் பிறந்திட்ட மண் நகருக்குச் சென்று அதர்வண வேதத்தின் துஷ்ப்ரயோகத்தை ஒரு மிட்டாய் மூலம் பெறப் பொல்லா வழியில் சென்று கொண்டிருக்கிறான்.  நீ செய்த முன் ஜென்ம புண்ணியத்தாலும் உன் மனைவி தினம் தினம் என்னப்பன் முருகப் பெருமானை ஐந்து முக விளக்கேற்றி வணங்குவதாலும் உந்தன் மகள் அந்தப் பொல்லா வலையில் சிக்காமலிருக்க நல்ல நேரத்தில் நீ இங்கு வந்தாய்.  இனியும் ஏழு நாட்கள் உந்தன் மகளை அந்த கொடியவன் நிழல் படாவண்ணம் காத்திரு.  பின்னர் அவன் செய்த அத்தனையும் வீணாகி, பின்னர் அதுவே அவனுக்கு நற்பாடம் கற்றுக் கொடுக்கும்.  உடனே சென்று முருகப் பெருமானுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்துவிட்டு அன்னவன் காலடியில் இருக்கும் எலுமிச்சை பழத்தினை எடுத்து வீட்டின் பூசை அறையில் வைத்திரு.  இனி அச்சப்பட தேவை இல்லை.  நிம்மதியாக உறங்கலாம்" என்று விவரமாக எடுத்துரைத்தார்.

இதை படிக்கப் படிக்க அந்த பெருமகனாரின் முகம் பயத்தால் வியர்த்துக் கொட்டியது.  பேச்சும் சரியாக வரவில்லை.  கைகளில் சிறிது நடுக்கமும் ஏற்ப்பட்டதைக் கவனித்தேன்.

"நான் வந்ததும் என் பெண்ணை பற்றி கேட்கத்தான்.  ஆனால் இது இத்தனை சீரியஸ் ஆகா இருக்கும் என்று எனக்குத் தெரியாது" என்றவர் மேற்கொண்டு சில விஷயங்களைச் சொல்லி முடித்தார்.

அவரை தடுத்து நிறுத்தி "முதலில் குறுமாமுனி" சொன்னபடி முருகன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.  கெடுதல் எதுவும் நடக்காது என்று அகஸ்தியரே சொல்லிவிட்டதால், அவரே உங்கள் குழந்தைக்கு மறைமுகமாக நிழலாக இருந்து பாதுகாப்புத் தருவார்.  பின்னால் பேசுவோம்" என்று அனுப்பிவைத்தேன்.  இரட்டிப்பு மகிழ்ச்சியோடும் எதிர் கால நம்பிக்கையோடும் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

பத்து நாள் கழிந்திருக்கும்.

அந்தப் பெரியவர் கை நிறையப் பூ, பழத்தோடு முக மலர்ச்சியாக என்னைத் தேடி வந்தார்.  கூடவே அவரது மனைவியும், பால் மணம் மாறாத அவர் மகளும் மகிழ்ச்சியோடு வந்தனர்.

"அகஸ்தியர் எனக்கு நல் வழி காட்டினார்" என்று சொல்லிவிட்டு நடந்த கதையை எனக்கு விளக்கினார்.

"என் குழந்தை நன்றாகத்தான் இருந்தாள்.  திடிரென்று அவள் எதையோ நினைத்துப் பயப்படுவதாக என் மனைவி என்னிடம் சொன்ன போது, முதலில் நம்பவில்லை.  அவளுக்கு தெரியாமல் அவளது தோழிகளிடம் விசாரித்த பொழுது பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு பெட்டிக் கடை நடத்துபவன் இவளை விகல்பமாக பார்த்து பேசுவது நடந்திருக்கிறது. படிப்பறிவில்லாத அவனது வேகம், சில சமயம் தாறுமாறாகவும் பேச வைத்துப் பார்த்தால், தன் தோழிகளிடம் சொல்லிக் கவலைப் பட்டிருக்கிறாள்.

என் மனைவி, இயல்பாகவே கெட்டிக்காரி.  தன் மகளது பயத்தைக் கண்டு அவளிடம் காரணம் கேட்க, என் மகள் இதப் பற்றிக் கேட்டிருக்கிறாள்.  அவள் மழுப்பிவிட்டதால், அவள் தோழிகளிடம் கேட்டு என் மனைவி என்னிடம் சொன்னாள்.  என் குழந்தை ஏன் பயப்படுகிறாள்? என்பதைக் கேட்கவே அன்றைக்கு நான் உங்களைத் தேடி வந்தேன்" என்று முடித்தார்.

'சரி.  இப்பொழுது எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதா?" என்று கேட்டேன்.

"நீங்கள் சொன்னபடி உடனே முருகன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து அங்கிருந்து ஒரு எலுமிச்சம்பழம் எடுத்து என் பூசை அறையில் வைத்தேன்.  பின்பு வெளியூர் பயணமாக என் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அறுபடை வீடு சென்று விட்டு நேற்று இரவு தான் திரும்பினேன்.  அதற்குள் அந்தப் பையன் தன் கடையை மூடி விட்டுக் கேரளாவுக்கே சென்று விட்டான் என்கிறார்கள்.  வேறு சிலரோ அவன் விபத்தில் மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் இருக்கிறான் என்கிறார்கள்.  எது எப்படியோ இன்னும் பத்து நாளில் இப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றி விடுவேன்" என்றார் அவர்.

"அதெல்லாம் வேண்டாம்.  இனி அந்தப் பையன் உங்கள் பெண் பக்கம் திரும்பவே மாட்டான்.  குழந்தையின் படிப்பை அவள் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள். மற்றவற்றை உங்களது பிரார்த்தனையும் காப்பாற்றும், அகஸ்தியரும் பார்த்துக் கொள்வார்" என்று தைரியமாக சொன்னேன்.

அப்பொழுது "இந்தச் செய்வினை எல்லாம் உண்டா?" என்று அவரே சந்தேகப்பட்டுக் கேட்டார்.

"இதற்கு நான் பதில் சொல்ல முடியாது.  அகஸ்தியரிடமே கேட்டுவிடுவோம்" என்று நான் ஓலைச்சுவடியை எடுத்தேன்.  முறைப்படி பிரார்த்தனை செய்துவிட்டுச் செய்வினை என்பது உண்மையா? அது எத்தகைய வலிமை உடையது?  இது விதியை மாற்றிவிடுமா? இதை நம்பலாமா?  யார் யாருக்கெல்லாம் எப்போது இப்படிப்பட்ட கஷ்டம் வரும்? அதை தடுப்பது எப்படி?" மனதில் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டே படிக்க ஆரம்பித்தேன்.

"முதலில் இருக்கின்ற ஒளி விளக்கை எல்லாம் அணைத்துவிடு.  நல்லது சொல்லும் பொழுது மட்டும் விளக்கை ஏற்று.  அதுவரை யாம் கூறுவதைக் கவனமாகக் கேள்" என்றார் அகஸ்தியர்.

அவர் சொன்ன விளக்கங்கள் என்னை மட்டுமல்லாது அங்கிருந்த மற்றவர்களையும் வியக்க வைத்தது!
வெளிச்சம் என்பது நல்லதிற்கு மட்டும் பயன்பட வேண்டும்.  இருட்டு என்பது கெடுதல் செய்வதற்காக உண்டாக்கப்பட்டது என்பது மாமுனி அகத்தியரின் விளக்கம்.  எனவே நல்லது சொல்லும்போதும், நல்லது செய்யும் பொழுதும் வெளிச்சத்தில் செய்ய வேண்டும்.  கெடுதல் நினைப்பவர்கள், கெடுதல் செய்பவர்கள் இருட்டை தான் நம்புவார்கள் - என்பது பொது விதி.

செய்வினை என்பது கெடுதல் சொல்.  இதை வெளிச்சத்தில் படிக்க அன்றைக்கு அகஸ்தியர் விரும்பவில்லை.  எனவே தான் எல்லா விளக்கையும் அணைக்கச் சொன்னார்.

விளக்கும் அணைக்கப்பட்டது.

இருட்டாக இருந்தாலும் - அந்த ஓலைச்சுவடியில் அகஸ்தியர் ஒளி வடிவாக எதிர்கால அல்லது நிகழ்கால விளக்கங்களை எடுத்துக் கூறுவார்.  இது ஜீவா நாடி படிக்கிற சிலருக்கு மட்டும் கிடைக்கிற ஒரு புண்ணியம்.

எனவே, அந்த இருட்டில் படிப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை.  இதோடு இம்மாதிரி இருட்டில் படிப்பது என்பதில் முன் அனுபவமும் உண்டு.

ஒரு நாள் இரவு ஒன்பது மணி இருக்கும்.

நானும் என் நண்பரும் வெளிநாட்டிலிருந்த ஒரு நண்பருக்காக ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருந்தோம்.  அப்போது மிக வேகமாக வந்த என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஓலைச்சுவடி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு அவசர வேண்டுகோள் விடுத்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

இன்றைக்கு ஒரு பரபரப்பான சம்பவம், சென்னையில் நடந்திருக்கிறது.  ஒரு பத்திரிக்கை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.  இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.  உங்களுக்குத் தெரியும்.  நான் வெகுநாள் வாசகன்.  எனக்கு அந்தப் பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார் பதைபதைத்த குரலில்.

"இன்னொருவருக்கு நாடி படிக்கும் பொழுது இப்படிக் குறுக்கிடலாமா?" என்று அவரை கடிந்து கொண்டு, கொஞ்ச நேரம் அமைதியாக உட்காரச்சொன்னேன்.  இருந்தாலும் அவரது கையும், காலும், கண்களும் ஓரிடத்தில் நிலையாக இல்லை.  பரபரத்துக் கொண்டுதான் இருந்தன.

அந்த வெளி நட்டுக்காரருக்குத் தமிழ் மொழி தெரிந்திருந்தாலும் அகஸ்தியர் என்ன நினைத்தாரோ, தெரியாது.  வந்தவரிடமே ஓலைச் சுவடியைக் கொடுக்கச் சொல்லி விட்டார்.

முதலில் அவருக்காக நான் படித்தது அவருக்குச் சரியாக விளங்கவில்லை என்பதால், அவரிடமே கொடுக்கச் சொல்லி விட்டார் என்பது எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

அந்த ஓலைச்சுவடியை பயபக்தியுடன் வாங்கி, கண்களில் ஒற்றி, அதைப் படித்தார்.  அவரது கண்களில் வியப்புக்குறி தோன்றியது.  சில நிமிடங்களில் அதை ஆனந்தமாகப் படித்துவிட்டு அதை மேஜை மீது வைத்து சாஷ்டாங்கமாக வணங்கினார்.

பின்பு அதை முத்தமிட்டு என் கையில் திருப்பிக் கொடுத்தார்.

"என்ன சொன்னார் அகஸ்தியர்?" என்று கேட்டேன்.

அவர் மலாய் நாட்டச் சேர்ந்தவர்.  அரை குரைத் தமிழில் நடந்ததைச் சொல்வார் என்று நினைத்திருந்த போது "நான் மிகவும் கொடுத்து வைத்தவன்.  எனக்கு முதலில் நீங்கள் சொன்ன செய்யுள் விளக்கம் சரிவரத் தெரியவில்லை.  ஆனால் அந்த ஓலைச் சுவடியைத் தங்கள் என்னிடம் கொடுத்த போது, எனக்கு மலாய் மொழியிலேயே அகஸ்தியர் மிக அற்புதமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்" என்று சந்தோஷப்பட்டுச் சொன்ன போது எனக்கே இது புது அனுபவமாக இருந்தது.

இப்படி பல தடவை தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் அகஸ்தியர் அருளியிருக்கிறார்.  எல்லாமே இந்த மலாய் மொழிக்குப் பின்பு நடந்த சம்பவங்கள்.

வந்தவரை அனுப்பிவிட்டு என் நண்பரை அழைத்தேன்.

"என்ன செய்வியோ! எது செய்வியோ! தெரியாது.  நான் எல்லா இடங்களிலும் அலைந்து பார்த்து விட்டேன் எனக்கு எப்படியாவது அந்த பத்திரிக்கை வேண்டும்.  எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை" என்றார்.

"அதற்கும் இந்த ஓலைச்சுவடிக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

"எனக்கு அந்த பத்திரிக்கை எங்கு கிடைக்கும் என்று அகஸ்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

"என்ன விளையாடுகிறாய்?" என்னால் படிக்க முடியாது.  நீ இப்படிக் கேட்பது சரியில்லை" என்று கோபித்துச் சொன்னேன்.

அவர் மன்றாடினார்.  லேசில் அங்கிருந்து போவதாகத் தெரியவில்லை.  மணியோ இரவு ஒன்பதரையத் தாண்டிக் கொண்டிருந்தது.

"இதெல்லாமா அகஸ்தியரிடம் கேட்பது" என்று அங்கிருந்த பலர் முணுமுணுத்தனர்.

"ஒரே ஒரு தடவை கேட்டுப் பார்.  அப்படி அகஸ்தியர் நல்ல பதில் தரவில்லை என்றால் போய் விடுகிறேன்" என்றார்.

யார் கேட்டாலும் ஓலைச் சுவடிவைப் படிக்க வேண்டியவன் என்றாலும் என் நண்பன் இப்படியொரு கடுமையான சோதனைக்கு என்னை ஆளாக்குவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவனுக்காக நான் படிக்கப் போய், அகஸ்தியரின் கோபத்திற்கு ஆளாகக் கூடுமே என்ற பயம் வேறு எனக்கிருந்தது.  எனவே வேண்டா வெறுப்பாக ஓலைச் சுவடியை தூக்கினேன்.

"இருக்கின்ற விளக்கெல்லாம் முதற்கண் அணைத்துவிடு.  என்ன விஷயம் இஸ்லாம் பெயர் கொண்ட ஏட்டுப் பிரதியில் இருக்கிறது என்பதைச் சொல்கிறேன்" என்றாரே பார்க்கலாம்.''

நானே அசந்து போனேன்.  நண்பன் அதிஷ்டசாலிதான் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அறை விளக்கெல்லாம் அணைக்கப்பட்டன.

"என்னப்பன் ராமனின் சிலைக்கு செருப்பு மாலை போட்டு வீதியில் வலம் வந்ததை அப்படியே படம் பிடித்துப் போட்டதடா அந்தப் பத்திரிக்கை.  அதனாலே இந்த அரசு தடை போட்டுப் பறிமுதல் செய்தது.  இருப்பினும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை அப்படியே யான் உரைப்பேன்"  என்று அகஸ்தியர் மள மளவென்று ஒளி ரூபமாகச் சொல்ல ஆரம்பித்தார்.  சுமார் ஒன்றரை மணி நேரம் தலையங்கத்திலிருந்து சேலம் மாவட்ட நிகழ்ச்சியின் இந்துக் கடவுள்கள் மீது சொல்லால், செருப்பால் மாலையணிந்த நிகழ்வுகள் வீடியோ படம் போல் படம் பிடித்துக் காட்டினார்.

எல்லாம் முடிந்த பின்பு விளக்கு ஏற்ற சொன்னார் அகஸ்தியர்.  வெளிச்சம் வந்தது.

பத்திரிக்கை வாங்காமல், அதன் அன்றையச் செய்திகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய அகஸ்தியருக்கு ஆயிரம் நன்றியைச் சொன்ன அந்த நண்பர் "இதை எப்படிச் சரிபார்ப்பது?" என்று அடுத்த கேள்வியை எழுப்பினார்.

அகஸ்தியரிடம் இது பற்றி மறுபடியும் கேட்ட பொழுது "சென்னை தி நகரில் உள்ள ஒரு கடையைச் சொல்லி, அந்த கடையின் இரும்புப் பெட்டகத்தின் உள்ளே ஒரு பிரதி உண்டு.  அங்கு சென்று சரி பார்த்துக் கொள்க" என்று வழியும் காட்டினார்.

உடனே நாங்கள் அனைவரும் அந்தக் கடைக்குச் சென்ற பொழுது மணி இரவு பதினொன்றரை.

எங்களை கண்டதும் "காவலர்" என்று பயந்து என்னிடம் எந்தப் பத்திரிகையும் இல்லை என்று விரட்டி அனுப்புவதிலேயே விடாப்பிடியாக இருந்தார் அந்தக் கடை காரர்.

பிறகு நடந்தவற்றைச் சொல்லி, அவரை நம்பவைத்துக் கடைசியில் கடையைச் சாத்திவிட்டு அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்த அந்த பத்திரிகையைப் புரட்டினோம்.  நாடியில் சொன்ன அத்தனையும் அப்படியே இருந்தது.

இதை கண்டு அங்கு வந்திருந்த அத்தனை பேறும் வியந்து போனோம்.  "இனிமேல் இம்மாதிரி வேண்டுகோள்களை விடுக்கக் கூடாது" என்று அகஸ்தியர் மிகக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

என்னை பொறுத்தவரையில் இப்படியெல்லாம் ஓலைச் சுவடியைப் பயன்படுத்துவதை விட, அவரவர்கள் தாங்கள் செய்த கர்ம வினைகளைக் கண்டு பிடித்து, அதை அகற்றினால் நன்றாக இருக்கும் என்பது தான்.

இதற்கு பிறகு எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இப்படிப்பட்ட, பிரயோஜனம் இல்லாத கேள்விகள் கேட்க அனுமதிப்பதில்லை.  குறுமுனி அகஸ்தியரும் இதற்குப் பதில் சொல்வது இல்லை.

இதில் என்ன விசேஷம் என்றால், இருட்டில் பத்திரிகையின் பக்கங்களை தொடர்ந்து படித்தது, புது அனுபவம்.  இதுவரை அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதில்லை.

அந்த சம்பவத்திற்குப் பிறகு இப்பொழுதான் "செய்வினை" என்பது என்ன? அது உண்மை தானா?" என்பதை அறிய அகஸ்தியரிடம் நான் கேட்டேன்.

சாதாரணமாக நான்கு வரிகளில் அகஸ்தியரிடமிருந்து பதில் வந்து விடும் என்று தான் எண்ணினேன்.  ஆனால் அவரோ "வெளிச்சத்தை போக்கு, விளம்புகிறேன் நான்" என்று சொன்னபோது சரிதான் அன்றைக்கு தந்த பத்திரிகையின் கதிதான் என்று எண்ணிக்கொண்டேன்.
குரு
ஹனுமத்தாசன் நாடியில்