Monday, 4 November 2019

திருமூலர் பெருமானின் வரலாறு

காலத்தால் மறைக்கப்பட்ட திருமூலர் பெருமானின்  வரலாறு இன்று சித்தர்களின் குரலில்.....

திருமூலர் குரு: நந்தி
காலம்: 3000 ஆண்டுகள், 13 நாட்கள்
சமாதி: சிதம்பரம்

63 நாயன்மார்களில் ஒருவர். மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி அடைந்தார்.

திருக்கைலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல் பூண்ட திருநந்தி தேவரது திருவருள் பெற்ற மாணாக்கருள், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சுந்தரநாதர் என்னும் சிவயோகியார் ஒருவர் இருந்தார். இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் முதலானவராகிய அகத்தியருக்கு அடுத்தவர் இவர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். இவரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.

இவர் அகத்திய முனிவரிடத்தில் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, திருக்கைலாயத்திலிருந்து புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம் (கேதார்நாத்), பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களை தரிசித்துவிட்டுக் காஞ்சி நகரையடைந்தார். அப்போது சுந்தரநாதன் என்ற பெயருடன் விளங்கிய இவர், தில்லையில் இறைவனின் அற்புதத் திருக்கூத்தைக் கண்டு மகிழ்ந்தார். இது 8000 வருடங்களுக்கு (கி.மு. 6000) முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். தில்லைத் திருநடனங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தெற்கு கரையினை அடைந்து, உமையம்மையார் பசுக் கன்றின் வடிவில் இறைவனை நோக்கித் தவம் செய்து, அத்தவத்தால் மகிழ்ந்த இறைவனார் இறங்கி வந்து அம்மையை அனைத்து எழுந்து இருவரும் திருமணக் கோலத்தில் அருள் புரியும் திருத்தலமான திருவாவடுதுறையை அடைந்தார்.

திருவாவடுதுறையில் உள்ள கோமுத்தீஸ்வரர் ஆலய இறைவனை வழிபட்டுவிட்டுத் திரும்பச் செல்லும் போது, காவிரிக் கரையில் ஓர் இடத்தில் பசுக் கூட்டங்கள் கதறி அழுவதைக் கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே பசுக்களை மேய்க்கும் இடையர் குலத்தில் பிறந்த மூலன் என்பவன், அவனுடைய விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி வந்து வருந்திக் கண்ணீர் விட்டன. பசுக்களின் துயர்கண்டு மனம் இரங்கிய சிவயோகியார் அவற்றின் துன்பம் துடைக்க எண்ணினார். எனவே, தம்முடைய உடலை மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் முறையில் தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் செலுத்தினார். இறந்து கிடந்த மூலன் உறக்கத்தில் இருந்தவன் போல சட்டென்று கண் விழித்து திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து, அவரது உடலினை நக்கி, முகர்ந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலரும் பசுக்களின் களிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிராற மேய்ந்த பசுக்கள், காவிரியாற்றின் நீர்த் துறையிலே இறங்கித் தண்ணீர் பருகிவிட்டு கரையேறி, அவற்றின் தினசரி வழக்கப்படி அவற்றின் ஊரான சாத்தனூரை நோக்கி நடக்க ஆரம்பித்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற திருமூலர், பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம், வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த திருமூலரைத் தம் வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ, தான் அவளுடைய கணவன் அல்ல என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அதைக்கேட்டு வியப்புற்ற அவள், தன் கணவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அந்த ஊரில் உள்ள பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். ஊர்ப் பெரியவர்கள் வந்து விசாரிக்க, திருமூலர் தான் ஏற்றிருந்த மூலனின் உடலிலிருந்து உயிர் விலகி ஒரு இறந்த ஆட்டின் உடலில் சென்று தாம் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்துக் காட்டிவிட்டு, மறுபடியும் மூலனின் உடலில் புகுந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட அவ்வூர்ப் பெரியவர்கள், மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அனைவருக் கலைந்து சென்றபின், திருமூலர் தாம் மறைவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த தமது திருமேனியைத் தேடினார். அது அங்கு இல்லாததைக் கண்டு ஆச்சரியமடைந்தவர், பின்பு யோக நிலையில் அமர்ந்து தனது மேனியைப் பற்றிய உண்மையை உணர முயன்றார். இறைவன் அருளிய வேத ஆகமப் பொருள்களைத் தமிழிலே வகுத்து உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைவன் தம் உடலை மறைத்து அருளியுள்ளார் என்பதை உணர்ந்து கொண்டார். அவ்வாறே இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டார் திருமூலர்.

சாத்தனூரிலிருந்து புறப்பட்ட திருமூலர், மீண்டும் திருவாவடுதுறையிலுள்ள கோமுத்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்து, மூலவர் பெருமானைப் பணிந்துவிட்டு, கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள அரசமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். ஆண்டிற்கு ஓரு முறை கண் விழித்து ஒரு பாடல் எழுதிவிட்டு மீண்டும் தியானத்தில் இருப்பார். இவ்வாறாக மூவாயிரம் ஆண்டுகள் தியானம் செய்து, உலகோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உய்யும் பொருட்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளையும் வகுத்தும், தொகுத்தும், விரித்தும் மூவாயிரம் பாடல்களாக வழங்கினார். இந்த மூவாயிரம் பாடல்கள் முதலில் ‘தமிழ் மூவாயிரம்’ என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த சான்றோர்கள், திருமந்திரத்தில் நிரம்பியிருந்த மந்திரங்களும், சில தந்திரங்களும், மனித ஸ்தூல சரீரத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், அதை “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்று மாற்றி வைத்தாரகள்.

திருமந்திரத்தில் ‘ஐந்து கரத்தினை’ என்று தொடங்கும் விநாயகர் வணக்கப் பாடல், தற்காலத்தில் தான் திருமூலரின் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது. அவர் காலத்தில் சைவ சமயத்தில், சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்தவொரு காரியங்களையும், இலக்கியங்களையும், அல்லது நூல்களையும் தொடங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, சிறுத்தொண்டர் என்று போற்றப்படுகிற பரஞ்சோதி என்கிற மன்னர், வடக்கில் வாதாபி வரை சென்று, அங்கு போரிலே வெற்றி கொண்டு, அந்தப் பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியைத் தமிழகத்துக்குத் தான் திரும்பும்பொழுது கொண்டு வந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயிற்றுப் பகுதி இன்று இருப்பது போல தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதும் வரலாறு. இந்த வரலாற்றுக்குச் சான்றாக, பழைய கணபதியின் தொப்பையில்லாத திருவுருவம் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கிலாந்தில் இருக்கும் அருங்காட்சியகத்திலும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

திருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானைப் போற்றிப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆகமங்களின் சாரம். இது பாயிரம் தவிர்த்து ஒன்பது தந்திரங்களாக அமைந்துள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக, தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம். இது, சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது. இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர், பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு. இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின், திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார்.

பிற்குறிப்பு:
*************

திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு. 5000) என்ற போதும், திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 700) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது. திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை. யாரும் அறியாதவாறு, தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில் தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்துவிட்டார். அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்), தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி. 700), அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான, திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார். அவர், தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில், திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார். அப்போது கோயிலுக்குள் நுழைந்தவுடன், இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய, அதனால் ஈர்க்கப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம், ‘இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே! என்ன என்று பாருங்கள்’ என்று கூறி, மண்ணைத் தோண்டச் செய்து, அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார். அவற்றை படித்து, உணர்ந்து, அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அனைவருக்கும் அருளிச் செய்தார்.

பிற்காலத்தில் வந்த சேக்கிழார் பெருமான், அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றித் தான் எழுதிய பெரிய புராணத்தில் திருமூலரை நாற்பத்து ஆறாவதாகச் சேர்த்து, திருமூலரின் வாழ்க்கை வரலாற்றையும், திருமந்திரப் பாடல்களின் குறிப்பையும் எழுதி வைத்தார். அவருக்குப் பின் வந்த நம்பியாண்டார் நம்பி, சைவ சான்றோர்கள் பலர் அருளியிருந்த சைவத் திருமுறைகளை ஒன்றாகத் தொகுத்த போது, திருமூலர் அருளிய திருமந்திரத்தையும் பத்தாவது திருமுறையாகத் தொகுத்து அருளினார்..

      - திருமந்திர whatsaap  வகுப்பில் இருந்து
        சித்தர்களின் குரல் shiva shangar