Thursday, 7 November 2019

உண்மை சம்பவம் - இந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த தேஜஸ் சாதாரணமானதாக இல்லை... ”பேர் என்னம்மா?” - “தாக்ஷாயணீ”


*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*

இந்த மகர ஜோதியன்று பெரியானைவட்டம் காட்டில் சண்டி ஹோமம் நடத்துவதாக திட்டமிட்டோம்...

எப்படி திட்டமிட்டோம் என்றெல்லாம் கேட்கக் கூடாது... நமது நண்பர் மணி ஸ்வாமி கூறியது போல, இரண்டு முழுக்கிறுக்கர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்குமோ அது தான் நானும் அவரும் சேர்ந்தால் நடக்கும்.

அப்படித்தான் நானும் அவரும் சண்டிஹோமம் வைக்க ஆசைப்பட்டோம்.

காடு என்பதால் எல்லா ஏற்பாடுகளையும் முன்னரே செய்து சாமான்களையும் கடத்தியாகி விட்டது. பூஜைக்கு வேண்டிய முன்னேற்பாடுகளையெல்லாம் ஏற்கனவே செய்து விட்டோம். (அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்)

நண்பர் தியாகராஜனிடம் அவர்கள் குழுவிலிருந்து ஒரு கன்யா குழந்தையையும் சுமார் பத்தேமுக்கால் பதினொன்று வாக்கில் அழைத்துக் கொண்டு வரச்சொல்லி இருந்தேன்.

மகரசங்க்ராதியன்று (ஜனவரி 14 மகர ஜோதியன்று) காலை 5:45க்கெல்லாம் எல்லாம் தயாராக ஹோமம் துவங்கி விட்டது. துவக்கம் முதலே அம்பிகையின் ப்ரபாவம் வெளிப்படையாகவே தெரியத்துவங்கியது.

சரியாக பதினொன்றாவது அத்யாயம் வந்தது; எனக்கு எப்போதுமே இந்த “நாராயணி ஸ்துதி” எனும் 11ம் அத்யாயத்தின் மேல் ஒரு பைத்தியம் உண்டு.

அதனால் எல்லோரிடமும் “உங்கள் மனதில் உள்ள அபீஷ்டங்களையெல்லாம் ப்ரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள் “ என்று அறிவித்து விட்டு அந்த அத்யாய ஹோமத்தை துவங்கினோம்.

மிகச்சரியாக 36வது ச்லோகத்தில் அம்பிகை “வேண்டும் வரங்களை கேட்டுக் கொள்ளுங்கள்” என்று அறிவிக்கும் தருணம், பாலையாக குழந்தை ஹோம குண்டத்தின் முன் வந்து நின்றது. நாங்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனோம்.

உடனடியாக எங்கள் விரியில் இருந்த வயதான பெண்கள், அந்த குழந்தைக்கு பாவாடை சட்டையெல்லாம் அணியச்செய்து, அலங்காரங்கள் செய்து கன்யாபூஜைக்கு உட்கார்த்தி வைத்தார்கள்.

எல்லாமே ஏதோ அளவெடுத்து செய்தது போல கச்சிதமாக இருந்தது.

(நிறைய கன்யா பூஜைகள் பார்த்தபடியால் பொதுவாகவே குழந்தைகள் எப்படியெல்லாம் படுத்தும் என்பது எனக்குத் தெரியும். சில குழந்தைகள் சுற்றி எல்லோரும் அமர்ந்து பண்ணும் Ragging-ல் பயந்தும் போகும்)

ஆனால் இந்தக் குழந்தையின் முகத்தில் இருந்த தேஜஸ் சாதாரணமானதாக இல்லை...

”பேர் என்னம்மா?”
- “தாக்ஷாயணீ”

ஹோமத்தில் உட்கார்ந்து விட்ட காரணத்தால் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை.

பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் என்று கன்யாபூஜை செய்பவர் குழந்தையின் தேஜஸ்ஸில் மயங்கித் தடுமாற, அந்தக் குழந்தையோ ஏதோ பல வருடங்கள் பூஜையில் அனுபவப்பட்டவள் போல் வாங்கிக் கொண்டிருந்தாள்.

எனக்கும் மணி ஸ்வாமிக்கும் எழுந்து போய் நமஸ்கரிக்க மனம் கொதித்தது... ஆனாலும் எழ முடியவில்லை.

நைவேத்ய பாலை அவ்வளவு அழகாக உண்டு முடித்து கற்பூர ஹாரத்தியையும் தாம்பூல தக்ஷிணையையும் வாங்கிக் கொண்டாள்.

எங்கள் கண்கள் நிறைந்து மேற்கொண்டு பாராயணம் ஓடவில்லை.

எல்லாம் முடிந்து அந்தக் குழந்தை எழுந்து போன பிறகு ஒருவர் மெதுவாக என்னிடம் காதில் வந்து கேட்டார் :

“நாம சொல்லி வச்சுருந்த குழந்தையை இப்போ கூட்டிண்டு வந்தா சரியா இருக்குமான்னு கேட்டு விட்டா”

எனக்கு தூக்கி வாரிப் போட்டது; நான் ஏதோ நாங்கள் முன்கூட்டியே சொன்ன குழந்தை தான் மிகச்சரியான தருணத்தில் வந்து சேர்ந்ததாக எண்ணிக் கொண்டிருந்தோம்...


அப்படியானால் இந்தக் குழந்தை யார்? எங்கிருந்து வந்தாள்? இந்தக் காட்டுக்கு நடுவில்? அதுவும் மிகச்சரியாக அம்பிகை வரம் தரும் தருணத்தில்?

அவ்யாஜ கருணா மூர்த்தி என்ற பெயர் கொண்டவளாயிற்றே ?

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ ?

நண்பர் ஒருவர்  போட்டோ எடுத்திருந்தார்.

நாங்கள் நேரில் கண்ட அந்த தேஜஸ் போட்டோவில் வரவில்லை என்றுதான் என்னால் கூற முடியும்.


தாயே ! ஜகதம்பிகே ! பராசக்தி... நீயே துணை...


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

http://shanmatha.blogspot.com/2014/01/blog-post.html?m=1