Wednesday, 24 April 2024

ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள்

 நம் விதியை மாற்றக்கூடிய சித்தர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


26. ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள்



[கசவனம்பட்டி, திண்டுக்கல்.]


நீங்களும், நானும் சிகரெட் புகைத்தால்தான் துன்பம் வரும். அதே சிகரெட்டை ஒரு மிகப்பெரிய மகான் புகைத்தால் அவர் விடும் சிகரெட் புகையானது துன்பங்களை கரைப்பதாக இருந்தது.


ஆம்.... அவர் சிகரெட்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார் என்றால், அந்த புகை எப்படி காற்றில் மிதந்து, பரவி, கலைந்து மாயமாகி விடுகிறதோ, அதுபோல சிகரெட் வாங்கிக் கொடுத்தவரின் தோஷங்கள், துன்பங்கள், பிரச்சினைகள், தொல்லைகள், துயரங்கள் எல்லாம் காற்றோடு, காற்றாக கரைந்து மறைந்தன.


ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள் நம்புவதற்கும், ஜீரணித்துக் கொள்வதற்கும் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் தெரியும். ஆனால் மகிமை கலந்த அந்த அதிசயம் தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.


ஒருநாள், இருநாள் அல்ல தினந்தோறும் நடந்தது. இப்போதும் கூட அந்த அதிசயம் நடந்து வருகிறது.


அந்த அதிசயத்தை அனுபவப் பூர்வமாக உணர வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கசவனம்பட்டி எனும் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்த கிராமம் திண்டுக்கல் நகரில் இருந்து மேற்கு திசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.


இந்த ஊரில்தான் சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக, மகான்களுக்கு எல்லாம் மகானாகத் திகழ்ந்த ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகள் வசித்து வந்தார். இவர்தான் சிகரெட் புகையால் பல்லாயிரக்கணக்கானவர்களின் துன்பங்களை. துயரங்களைத் துடைத்தெறிந்தார்.


இவர் பார்வைப்பட்டாலே போதும், தோஷங்கள் விலகி புத்துணர்ச்சி பெற்றதை பக்தர்கள் தம் வாழ்வில் கண்கூடாகக் கண்டனர். இந்த சித்தப்புருஷர் நிறைய பல்வேறு தனித்துவங்களுடன் காணப்பட்டார்.


இந்த புனித மகான், தனது துறவு வாழ்க்கைக்கு கசவனம் பட்டியை தேர்ந்து எடுத்துக் கொண்டார். அந்த ஊருக்கு அவர் வந்தபோது அவருக்கு 10 அல்லது 12 வயதுதான் இருக்கும்.


அவர் எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? பள்ளி சென்றாரா? எப்படி

கசவனம்பட்டிக்கு வந்தார்?

இவை போன்ற எந்த கேள்விகளுக்கும் இதுவரை யாருக்கும் விடை தெரியாது.


கசவனம்பட்டிக்கு கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டி எனும் ஊர் உள்ளது. அந்த ஊர் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க கசவனம்பட்டிக்காரர்கள் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அங்கு விவசாயம் செய்யவும், ஆடு மேய்க்கவும் சென்றவர்களின் கண்களில் மவுன நிர்வாண சுவாமிகள் தென்பட்டார்கள்.


அப்போதே சுவாமிகள் அவதூதராகத்தான் (நிர்வாண நிலை) இருந்தார். சில செடி, கொடிகளில் உள்ள இலைகளைப் பறித்து அவர் தின்று கொண்டிருந்தார்.


கசவனம்பட்டிக்காரர்கள் தினமும் அந்த சிறுவனைப் பார்த்தனர். செடி இலைகளைத் தின்ற சிறுவனைப் பார்த்ததும் அவர்களுக்கு இரக்கம் வந்து

விட்டது. தாங்கள் கொண்டு சென்ற உணவை எடுத்து சாப்பிடக் கொடுத்தனர். இப்படித்தான் கசவனம்பட்டிக் காரர்களுக்கும் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது.


உணவு கொடுத்தவர்கள், உடையையும் கொடுத்தனர். ஆனால் சுவாமிகள் உடையை ஏற்றுக் கொள்ளவில்லை. உதறித்தள்ளினார். பல தடவை இது நடந்தது. அதன்பிறகே இந்த இளைஞன் சாதாரணமானவன் அல்ல, உயர்ந்த, தெய்வாம்சம் பொருந்திய சித்தர் புருஷர் என்றும் மும்மூர்த்திகளின் பிரதிபிம்பமான மகான் என்பதையும் புரிந்து கொண்டனர்.


சக்தி வாய்ந்த மகான் என்று தெரிந்த பிறகு அவரை காட்டுக்குள் விட்டு வைப்பார்களா? அவரை தங்கள் ஊருக்குள் வந்து த ங்கி இருக்கும்படி கசவனம்பட்டிக்காரர்கள் அழைத்துச் சென்றனர்.


முதலில் ஒரு இளைஞனை முழு நிர்வாணக் கோலத்தில் பார்த்ததும், கசவனம்பட்டிக்காரர்கள் முகம் சுளித்தனர். அதிருப்தி அடைந்தனர். அருவருப்புடன் பார்த்தனர். ஆனால் மிகக்குறுகிய காலத்துக்குள் கசவனம்பட்டி மக்கள் அந்த இளைஞனை அருவருப்பாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மாறினார்கள். ஆண்டவனாகப் பார்க்கும் பக்குவத்தைப் பெற்றனர். கசவனம்பட்டி ஊருக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக இதைச் சொல்லலாம்.


என்றாலும் மவுன நிர்வாண சுவாமிகள் கசவனம்பட்டியில் தங்காமல் வேறு ஊர்களுக்கு சென்று விடுவதுண்டு. கசவனம்பட்டிக்காரர்கள் ஒவ்வொரு தடவையும் விடுவது இல்லை. தேடிக் கண்டுபிடித்து சுவாமிகளைத் தோளில் தூக்கி வைத்து தங்கள் ஊருக்கே கொண்டு வந்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு நிர்வாண சுவாமிகள் வேறு எங்கும் செல்லவில்லை. கசவனம்பட்டியே கதி என்று தங்கி விட்டார்.


யாரிடமும், எதுவும் பேசாமல் ஊரையே அவர் சுற்றி, சுற்றி வந்தார். பெயர் தெரியாததால் சுவாமிகளை அந்த ஊர்க்காரர்கள் முதலில் “பெருமாள் சாமி” என்று பெயர் சூட்டி அழைத்தனர். பிறகு நிர்வாண சாமி, மவுன சாமி என்றெல்லாம் அழைத்தனர்.


சிறுவன், இளைஞனாக மாறி நடுத்தர வயதைக் கடந்தார். ஆனாலும் அவதூதர் (நிர்வாணம்) நிலை மாறவில்லை. கசவனம்பட்டி தெருக்களில் இரவு-பகலாக அவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்தார்.


அந்த ஊர் மக்கள் அவரை பார்க்கும் பார்வையே நாளடைவில் மாறியது. அவரது நிர்வாணக் கோலத்தை கண்டு யாரும் கேலி-கிண்டல்

செய்யவில்லை. தங்கள் வீட்டு பாலகனாக நினைத்து உபசரித்தனர்.


சுவாமிகளும் ஏழை-பணக்காரர், சாதி, சமயம் வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. அவர் விரும்பும் வீட்டுக்குள் சென்று கூழோ, கஞ்சியோ கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டார். நீண்ட நாட்களுக்குப்பிறகுதான் அவர் வினை அறுக்க வந்த கண்கண்ட தெய்வம் என்பதை அந்த ஊர் மக்கள் முழுமையாக புரிந்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் மவுன நிர்வாண சுவாமிகளின் பக்தர்களாக மாறினார்கள்.


மவுன சுவாமிகள் தவம் இருந்ததில்லை. மந்திரங்கள் முழங்கியது இல்லை.


புராணங்கள் படித்ததில்லை. ஆனால் உலகின் அத்தனை விஷயங்களும் அவருக்குத் தெரிந்திருந்தது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசி ஆச்சரியப்படுத்தினார்.


ஒரு காலகட்டத்தில் மவுன நிர்வாண சுவாமிகள் தன்னிடம் வருபவர்களை அடித்தார். கல்லைத் தூக்கி எறிந்தார். தாம்பூலத்தில் பூ, பழம் வைத்துக் கொடுத்தால் எட்டி உதைத்தார்.


முதலில் பக்தர்கள் வருத்தப்பட்டனர். பிறகுதான் தெரிந்தது.... மவுன நிர்வாண

சுவாமிகள் கொடுக்கும் ஆசீர்வாதமே அதுதான் என்பது. எனவே தொடர்ந்து காபி, சிகரெட் கொடுத்து ஆசி பெற்றனர்.


ஒரு பக்தர் அவரிடம் சென்று விட்டால் உடனே சுவாமிகள் குச்சியை எடுத்து தரையில் ஏதேதோ கிறுக்கலாக எழுதுவார். என்ன எழுதுகிறார் என்பதே யாருக்கும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் நிர்வாண சுவாமிகள் பக்தர்களின் தலையெழுத்தையே அதில் மாற்றி எழுதுகிறார் என்ற விஷயம் தெரியவந்தது.


அவ்வாறு எழுதும் குச்சிகளை சில சமயம் சுவாமிகள் பக்தர்க ளிடமே கொடுத்து விடுவதுண்டு. அந்த குச்சிகளை இப்போதும் சில பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜித்து வருகிறார்கள். சுவாமிகள் புகை பிடிப்பதையும் முதலில் பக்தர்கள் சாதாரணமாகத் தான்

நினைத்தனர். ஆனால் சிகரெட் சாம்பலை எடுத்து விபூதியுடன் கலந்து பூசிக்கொள்ள, வெற்றி மீது வெற்றி வருவதை பக்தர்கள் உணர்ந்தனர். இதனால் நிர்வாண சுவாமிகளிடம் ஆசி பெற வரும் பக்தர்கள் சிகரெட்டுடன் வரத் தொடங்கினார்கள்.


மக்களின் பிரச்சினைகள், நோய்களை சுவாமிகள் மிக எளிதாக தீர்த்து வைக்கும் தகவல் மெல்ல மெல்ல மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் பரவியது. கசவனம்பட்டிக்கு சரியான வழித்தடம் இல்லாத நிலையிலும் மற்ற ஊர்களில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். பிரச்சினைகள் தீர்ந்து மனஅமைதி பெற்றுத் திரும்பிச் சென்றனர்.


சுவாமிகள் இரவில் தங்குவதற்கு முத்தாலம்மன் கோவிலில் படுக்கையுடன் வசதி செய்து கொடுத்தனர். முத்தாலம்மன் கருவறையில் அமரும் சுவாமிகள் சில சமயம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை.


அவரது மவுனமும், நிர்வாணக் கோலமுமே உலக வாழ்வியலை மக்களுக்கு உணர்த்தியது. எல்லையற்ற பரம்பொருளின் வெளிப்பாடாக அவர் திகழ்ந்தார். கசவனம்பட்டியில் சாமியார் போல இருந்த ஒருவருக்கு நிர்வாண சுவாமிகள் மீது பொறாமை ஏற்பட்டது. "இவரைப் பேச வைத்து காட்டுகிறேன். பாருங்கள்" என்று கூறி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விநாயகர் கோவிலுக்குள் தள்ளி பூட்டி விட்டார். மறுநாள் விடிந்ததும் கோவிலைத் திறந்து பார்த்தால் உள்ளே சுவாமிகள் இல்லை.


வெளியில் தூரத்தில் நிர்வாண சுவாமிகள் சிகரெட் பிடித்தபடி சிரித்துக் கொண்டே வந்தார். ஊரே ஆச்சரியத்தில் மூழ்கியது. சுவாமிகளை கோவிலுக்குள் அடைத்த சாமியார் காணாமலே போய் விட்டார்.


இப்படி எத்தனையோ ஆச்சரியங்களை நிகழ்த்திய சுவாமிகள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மகான்கள் எல்லாம் தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் கூறினார்கள். புரவிப்பாளையம் கோடி சுவாமிகள், "மகான்களுக்கு எல்லாம் மகான்" என்று நிர்வாண சுவாமிகளைப் புகழ்ந்தார். திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள், ஜோதி என்றும், துருவ நட்சத்திரம் என்றும் சுவாமிகளை புகழ்ந்தார். திருவண்ணாமலை விசிறி சுவாமிகள் யோகிராம் சுரத்குமார் கூறுகையில், "நான் ஒரு அலை என்றால் கசவனம்பட்டி நிர்வாண சுவாமிகள் கடல்" என்றார்.


விசிறி சுவாமிகளை ஒரு தடவை சிவகாசியைச் சேர்ந்த ராஜதுரை நாடாரும், எஸ்எஸ்டி சண்முகமும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் விசிறி சுவாமிகள், "இன்றிரவு கசவனம்பட்டி சென்று நிர்வாண சுவாமிகளைப் பாருங்கள். உங்களுக்கு அங்கு ஒரு அற்புதம் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். உடனே ராஜதுரை நாடாரும், சண்முகமும் கசவனம்பட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு நிர்வாண சுவாமிகள், பழனி பாலமுருகனாகக் காட்சி அளித்தார்.


வத்தலக்குண்டு அருகில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராசாமணி அய்யர் தொழுநோயின் உச்சக்கட்ட கொடூர பிடியில் இருந்தார். அவரை நிர்வாண சுவாமிகள் ஒரே நாள் இரவில் குணமாக்கி எல்லாரையும் பிரமிக்க வைத்தார்.


நிறைய பக்தர்கள் கனவில் சென்று சுவாமிகள் அதிசயங்கள் நடத்தி உள்ளார். கன்னியாகுமரியில் ஆதிபராசக்தியின் அவதாரமாகத் திகழ்ந்த மாயம்மா ஒரு தடவை மவுன நிர்வாண சுவாமிகளைப் பார்த்து விட்டு, “இந்த மகான் சூரியன்" என்று புகழ்ந்தார்.


கசவனம்பட்டியைச் சேர்ந்த உடைச்சரத்தேவர் மனைவி பூங்கணியம்மாள் பிரசவ வலியில் துடித்தபோது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது எங்கிருந்தோ வந்த நிர்வாண சுவாமிகள் பிரசவம் நடத்தப்பட்ட வீட்டுக்குள் சென்று கீழே தரையில் அமர்ந்தார்.


அடுத்த நிமிடம் சிக்கல்கள் விலகி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மவுனகுரு என்று சுவாமி பெயரையே வைத்தனர்.


திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவராக இருந்த வரும், தற்போது பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனராக உள்ள கா.பேச்சியம்மாள்

வாழ்வில், சுவாமிகள் நடத்திய அற்புதங்கள் ஏராளம். இந்த

அற்புதங்களையெல்லாம் மவுன நிர்வாண சுவாமிகள் டிரஸ்ட் செயலாளர் ஆனந்தன் தொகுத்து பெரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார். பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து தற்போது கும்பகோணத்தில் வசித்து வரும் கண்ணன், பழனியில்

மளிகைக்கடை வைத்திருக்கும் ஜெயபால் இருவரும் தங்கள் நண்பர்களுடன் ஒரு தடவை காரில் சுவாமிகளை பார்க்க சென்றனர். வழியில் ஒரு சாக்கடைக்குள் சுவாமிகள் உட்கார்ந்து இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கேயே ஓரமாக நின்றனர்.


அந்த சாக்கடை நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாம். பேராசிரியர்

கண்ணனுக்கு வயிற்றை புரட்டுவது போல இருந்ததாம். ஆனால் சுவாமிகள்

சுமார் 1 மணி நேரம் மிகவும் சுகமாக சா க்கடைக்குள் மூழ்கி இருந்தாராம்.


பிறகு வெளியில் வந்த சுவாமிகள் ஒரு டம்ளரில் சாக்கடையை எடுத்து, வந்து முகர்ந்து பார்த்து விட்டு, ஜெயபாலிடம் கொடுத்து “ம்... குடிடா” என்றாராம். ஜெயபாலும் அதை வாங்கிக் குடிக்க அந்த சாக்கடை தண்ணீர் இளநீர் போல இனித்ததாம். நிர்வாண சுவாமிகளின் பாதத்தில் படிந்திருந்த விபூதியை பிரசாதமாக எடுத்துச்

சென்று பலர் பலன் அடைந்துள்ளனர். 1982-ம் ஆண்டு ஆண்டு அக்டோபர்

தொடக்கத்தில் சில பக்தர்களுக்கு சுவாமிகள் தமது ஒளிவடிவைக் காட்டி

அருள்பாலித்தார். அடுத்த சில தினங்களில் (22-10-1982) சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். அவர் உடல் மறுநாள் ஜீவசமாதி வைக்கப்படும் வரை ஆன்ம ஒளியாக மிளிர்ந்தது.


அவர் ஜீவசமாதி வைக்கப்பட்டபோது மேகக் கூட்டங்கள் திரண்டு வந்து குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்ததுபோல அடைமழை பெய்தது. 2 கருடன்கள் வட்டமிட்டுச் சென்றன.


கசவனம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் எதிரில் ஜீவசமாதி வைக்கப்பட்டுள்ள இடத்தில் காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து அங்கு ஜீவசமாதி ஆலயம் கட்டியுள்ளனர். அங்கு

சுவாமிகளின் பெரிய மூலவர் சிலை உள்ளது. ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிறு உற்சவர் சிலையும் உள்ளது.


பிரதோஷ நாட்களில் அந்த உற்சவர் சிலையை வெள்ளிப் பல்லக்கில் வைத்து பிரகார வீதியுலாவாக எடுத்து செல்கிறார்கள். பவுர்ணமி, அமாவாசை மற்றும் வியாழக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். தினமும் 5 கால பூஜை நடக்கும் இந்த சமாதி ஆலயத்தில் ஐப்பசி மூல நட்சத்திர தினத்தன்று குரு பூஜை நடத்துகிறார்கள்.


ஜீவசமாதி கருவறை முகப்பில் சிவன், விஷ்ணு. பிரம்மா சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாண சுவாமிகள் மும்மூர்த்தியாக இருந்து அருள்வது போல அது உள்ளது. மூலவர் சிலையில் நிறைய பக்தர்கள் தங்கள் ஜாதக ஜெராக்சை வைத்து வேண்டுதல் செய்து செல்கிறார்கள். இந்த வழிபாடு ஜாதகத்தில் உள்ள குறைகளை, தோஷங்களை நீக்க உதவுகிறதாம். சுவாமிகளுக்கு தேங்காய் உடைத்தும் வழிபடுகிறார்கள்.


ஓம்! ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமியே போற்றி!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🕉️🙏ஓம் நமசிவாய🙏🕉️


🙏அற்புதன் காண்க

அநேகன் காண்க

சொற்பதம் கடந்த

தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாச்

சேட்சியன் காண்க

பக்தி வலையில்

படுவேன் காண்க

ஒருவன் என்னும்

ஒருவன் காண்க🙏


🕉️🙏திருச்சிற்றம்பலம்🙏🕉️


🦚நன்றி! நன்றி!! நன்றி!!!

நற்பவி! நற்பவி!! நற்பவி!!!


அவனருளால் வாழ்வோம் வளமுடன்!


அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய !🦚


https://www.facebook.com/share/QxmgCXSF39pJWxxR/?mibextid=oFDknk

No comments:

Post a Comment