மாத சிவராத்திரி கிரிவல மஹிமை
திருஅண்ணாமலை கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்
பல ஆலயங்களிலும் பாலாலயம் செய்து கொடிமரம் மற்றும் கோயில் குடமுழுக்குத் திருப்பணிகள் அரைகுறையாக நின்றிருக்கும். ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் பிரசித்தி பெற்ற “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திட, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) இல்லாத ஆலயங்களில் கொடிமரம் அமையவும், குடமுழுக்குப் பணிகள் தொடர்ந்து நிகழ்ந்து நிறைவு பெறவும் இறைச்சித்தம் துரிதமாகக் கைகூடும்.
ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் ஒரு இறைலட்சியத்தைப் பெற உதவும் சித்ரபானு ஆண்டின் தை மாத சிவராத்திரி கிரிவலம், நிலையான உத்தியோகம், தொழில் அமைந்திட உதவும் மாத சிவராத்திரி கிரிவலம், திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போல் சிறப்புடையதே அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசித் திதியிலான மாத சிவராத்திரி கிரிவலம்.
இறைலட்சியம் ஒன்று உங்கள் வாழ்க்கைக்குத் தேவையே!
ளௌகீகமாக, வாழ்வில் பெரு நிலைகளை அடைய எவ்வளவுதான் பேராசைகளை, மனப்போராட்டங்களை ஒரு மனிதன் வளர்த்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு இறைலட்சியம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இதுவும் இறைப் பணியைச் சார்வதாக அமைவதே சிறப்புடையதாம். “நான் G.M, MD ஆக வேண்டும்; பல கம்பெனிகளுக்கு அதிபதியாக வேண்டும், அயல்நாடு செல்ல வேண்டும்” – இவையெல்லாம் சாசுவதமான பலன்களைத் தரும் இலட்சியமாகாது, ஏனெனில் இந்த இலட்சியங்கள் எல்லாம் உடல் ஆரோக்யம், செல்வ நிலை, வயது, குடும்பச் சூழ்நிலை, பழக்க வழக்கங்கள், தொழில், உத்தியோகம் இவற்றுக்கேற்ப மாறுபடும். இப்படியாக நிரந்தரம் இல்லாத ஒன்று எப்படி வாழ்க்கையின் இறைலட்சியமாக ஆக முடியும்?
ஆனால் இறை லட்சியத்தை அனைவரும் பெற்றுக் கடைபிடித்தாக வேண்டும் என்பதை உணர்த்திடவே, இறை ஆணையாய்ப் பூவுலகிற்கு வந்த திருஅண்ணாமலைச் சித்தரே கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் ஆவார். சாதாரணக் குடும்பத்தில் பிறப்பு கொண்டு, தம் யோகத் திறன்களை வெளிக்காட்டாது, மக்களோடு மக்களாய் வாழ்ந்து எண்ணற்றோருக்கு அருள்வழி காட்டிய அருட்பெரும் சித்தர்களில் ஒருவராவார்.
சத்குருவாம் கருடக் கொடிச் சித்தரின் அரவணைப்பு!
கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் திருஅண்ணாமலையில் ஒரு சாதாரண விவசாயியாகத் தோன்றியவர். அவருடைய காலத்தில் திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீப ஜோதியைத் தரிசிக்க வந்த பல சித்தர்கள், பலரும் அறிந்துணரும் வண்ணம் மானுட வடிவில் வந்த போது, அதில் கருடக் கொடிச் சித்தரானவர் இந்த விவசாயியை அழைத்து,
“ஏனப்பா, உன் வாழ்வின் இறைலட்சியம் என்ன?” எனக் கேட்டார்.
“இதுவரையில் அடியேன் வாழ்க்கையின் லட்சியமாக எதையும் எடுத்துக் கொள்ளாது இருந்து விட்டேன்! இப்பெருங்குறையைச் சுட்டிக் காட்டிய நற்பெரியவரான தங்களுடைய திருவடி நிழலில் அடியேன் சாசுவதமாக நிலைக்க வேண்டும் என்பதே அடியேனுடைய இறை இலட்சியமாகட்டும்!” என அந்த விவசாயி கூறி வேண்டிடவே,
“நான் இந்தக் கொடிக் கம்பத்தின் கீழ் நின்று உனக்கு அளிக்கும் அபூர்வமான இறைலட்சியம் யாதெனில் இக்கொடி மர நிழலில் யாமளிக்கும் சாயாம்ருதுள யோகபாவன சக்தியைப் பெற்று எப்போதும் அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலிலேயே உறைந்து பிரபஞ்ச ஜீவன்களின் நலன்களுக்காகப் பஞ்சாட்சரம் ஓதுவேன் என இறைலட்சியம் பூண்டு அடிமுடி காணாதோனை அறிவாய்!” என ஞானச் சித்த குருவாய் மலர்ந்து உபதேசித்தார். அன்றைய சூரிய உதயம் முதல் திருஅண்ணாமலை ஆலயக் கொடி மர நிழலிலேயே அமர்ந்து தம் குருநாதராம் கருடக் கொடி சித்தர் உபதேசித்த ருத்ராம்ருத பஞ்சாட்சர மந்திரப் பீஜாட்சரங்களை ஓதி கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயர் பூண்டார்.
கொடிமர நிழலே சரணம், சரணம்!
சூரிய அயன கதிக்கேற்ப, வெயிலின் ஓட்டத்திற்கு ஏற்ப, கொடிமர நிழல் எந்தத் திசையில் நகர்கின்றதோ, இவரும் அதன்படி திரும்பி, பத்மாசனத்தில் அமர்ந்து, தியானித்து, நிழலும், நிஜமும் பற்றி ஆத்ம விசாரம் செய்து கொடிமர நிழலிலேயே பல்லாண்டுகள் உறைந்து எப்போதும் பஞ்சாட்சர பீஜாட்சரங்களை ஜபித்தமையால் பலவித யோக நிலைகள் அவருக்குத் தாமாகவே கிட்டின!
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தம் சிறு சுரைக் குடுவையில் அவர் உணவு ஏற்பார். அதுவும் எவரேனும் அவருக்குத் தானாக முன் வந்து உணவு அளித்தால்தான் அவ்வுணவையும் ஏற்பார். எவரும் பிட்சை அளிக்காவிடில் அந்நாள் விரத நாளாய் அமைந்து விடும். அவரைச் சோதனை செய்வதற்காகப் பலரும் வறண்ட சோறு, முந்தா நாள் மீந்த சோறு, வடிகஞ்சி நீர், அழுகிய பழங்கள் எனப் பலவற்றை அளித்தாலும் எதையும் இன்முகத்துடன் ஏற்றிடுவார். ஆனால் அவருடைய மிகச் சிறிய சுரைக் குடுவை ஒரு முறை பிட்சையில் நிரம்பி விட்டால் அதற்கு மேல் அவர் பிட்சை கொள்வது கிடையாது. கொடி மர யோக சக்திகள் அவரிடம் பரிபூரணமாக வியாபித்தமையால் அவருடைய தேகத்திற்கு நிழல் ஏற்படுவது கூட மறைந்து அவர் மலம், மூத்ராதிகளையும் கடந்த அருட்பெரும் சித்தராகவும் பிரகாசித்தார்.
அமாவாசை மற்றும் முதற் பகுதித் தேய்பிறை இரவுகளில் கூட, பல சமயங்களில் ஸ்ரீசந்திர பகவான் அவருக்குக் கொடிமர நிழல் தந்து அற்புதங்களைப் புனைந்தார். இவ்வாறு 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருஅண்ணாமலை ஆலயக் கொடிமர நிழலிலேயே வாசம் பூண்ட சித்தர்பிரானே கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயரும் பூண்டு மக்களுக்கு அருணாசல கிரிவல மகிமையை உரைத்து, நல்வழிகளைப் போதித்து, மாத சிவராத்திரி கிரிவல மகிமைகளையும் உணர்த்தினார். ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அவர் மேற்கொள்ளும் அருணாசல கிரிவலத்தில் பல கிராமங்கள், நகரங்களில் இருந்து திரளும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு அபூர்வமான பலாபலன்களைப் பெற்றனர்.
நிழலில் சித்தர் கண்ட நிஜங்கள்!
தம் குறைகளைத் தன்னிடம் ஒப்புவிக்க வருவோரை முதலில் திருஅண்ணாமலைக் கிரிவலம் வர வைத்து, அவர்களுடைய நிழலின் தன்மைகளைப் பொறுத்துத் தக்க பிராயச்சித்தப் பரிகாரங்களை அருளினார் சித்தர்பிரான். பகல் பொழுது போக, அமாவாசை ஒட்டிய திதிகளில் வெளிச்சம் இராது கொடிக் கம்ப நிழல் அமையாத போது இரவெல்லாம் தொடர்ந்து மணிக்கணக்கில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அமாவாசை கிரிவலம், மற்றும் மாத சிவராத்திரி கிரிவலத் தாத்பர்யங்களைப் பற்றி நன்கு எடுத்துரைத்தார்.
விசேஷமாகச் சில நாட்களில், குறிப்பாக அமாவாசையன்று வரும் பல சூரிய கிரண நாட்களிலும், மழை, பனிக்கால மேக மூட்ட நாட்களிலும் அவருக்கென விசேஷமாகக் கொடிக் கம்ப நிழல் அமைவது கண்டு பலரும் அதிசயித்தனர்.
விண்வெளியில் பரந்திருக்கும் எண்ணற்ற வேத மந்திர சக்திகளில் பொலியும் திருவருட் சக்தியைத் தன் தண்டு ரேகா கிரணங்கள் மூலமாகப் பூமிக்கு இறக்கி பக்தர்கட்கு அருள்பாலிக்கும் முறையே கொடிக் கம்ப இறைச் சூத்திர இலக்கணமாகும். எந்த மரத்தால் கொடி மரம் கட்டப்பட வேண்டும். அதில் எத்துணை வளையங்கள், தர்ப்பைச் சுற்றுகள் அமைய வேண்டும் என்பதற்கான கொடிக் கம்பக் கும்பாபிஷேக இறை நியதியில் வல்லவராய் கொடிக் கம்ப நிழலடிச் சித்தர் திகழ்ந்தார்.
பல ஆலயங்களிலும் கொடி மரமில்லாத போது சாஸ்திரரோக்தமாய்க் கொடிக்கம்பம் நிறுவிடப் பல அரிய இறைப் பணிகளை ஆற்றினார். பழைய கொடி மரங்களை எவ்வாறு விஸ்ர்ஜனம் செய்தல் வேண்டும் என்பதற்கு இறைநியதிகளை வகுத்துத் தந்தவரும் இவரே! இன்றும் பல ஆலயங்களில் கொடிக்கம்பம் இல்லாது சோபையற்று இருப்பது மிகவும் வேதனைக்குரியதே! இவ்வாலயங்களில் தக்க முறையில் கொடிக்கம்பம் அமைய வேண்டுமெனில் அனைவரும் மாத சிவராத்திரி நாளில் “கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் பிரானே போற்றி!” எனத் துதித்து அவரை எண்ணி ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிய “ஒளிக்கும் இருளுக்கும்” என்று தொடங்கும் மிகவும் சக்தி வாய்ந்த “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு கிரிவலம் வந்தால் கொடிமரம் அமைவதற்கான நல்வரங்கள் கிட்டும். வாழ்வில் நாட்டம் இல்லாது ஏனோதானோ என்று வாழ்வோருக்கும் ஆன்மீக ரீதியாக சிரத்தை கிட்டும்.
நிழல் காணா நித்தியச் சித்தர்!
அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலில் உறைந்திருந்த இச்சித்தர் பிரான் நடக்கும் போது இவருக்கு நிழலே ஏற்படாததற்குக் காரணம் இவருள் பூத்த காந்தவட ஜோதியாகும்! நிழலே ஏற்படாத சித்புருஷர்களுக்கும், மஹான்களுக்கும் “ஜோதிவடச் சித்தர்கள்” என்று பெயர். ஜோதிவடச் சித்தர்களில் தலைசிறந்து விளங்கிய கொடிமர நிழலடிச் சித்தர்பிரான் 1623ஆம் ஆண்டு வாக்கில் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் வாழ்ந்தவராவார்.
அக்காலச் சித்திரபானு ஆண்டின் மாத சிவராத்திரியின் போது கொடிமர நிழலில் தோன்றிய அருணை ஜோதி ஒன்றால் ஈர்க்கப் பெற்று கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் ஜீவ சமாதி பூண்டு இவர் ஐக்கியமானார். இவர் பூமியில் மறைந்து ஜீவசமாதி அடைந்தபோது அவ்விடத்தில் ஒரு கொடிமரம் தானாகவே தோன்றி நெடுங்காலம் இருந்து வந்தது. இக்கொடிக் கம்பத்தைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றோர் ஒரு சிலரே!
ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே – தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடிவாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டக் கொடி
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் – கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.
ஆழ்ந்த பக்தியுடன் அண்ணாமலையைக் கிரிவலம் வந்து “கொடிமர நிழலடிச் சித்தரே போற்றி!” எனத் துதித்து சத்சங்கமாக ‘கொடிக்கவித் துதியை’ ஓதி வர, கொடி மரம் இல்லாத கோயில்களில் கொடிமரம் அமையும் வண்ணமும், ஏனைய இறைப் பணிகள் பூர்த்தியாதலும் இறையருளால் வந்தமையும்.
‘கொடிக்கம்ப நிழலடிச் சித்தரே போற்றி’
தொழில், அலுவலகம், வீட்டில் எனப் பலவாறாக தேக சக்திக்கு மீறி ஓவராக உழைத்து வாழ்வில் இயந்திரமாக ஓடியாடி மனசாந்தமின்றி வாழ்தல், சம்பந்திகளுடன் சச்சரவு கொண்டு திருமண வாழ்வில் அமைதி இழத்தல், கணவன் அல்லது மனைவிக்கு உள்ள நெடுங்கால நோயால் மனஅமைதி இல்லாது இருத்தல், வீடு நிலபுலன்கள் பிறர் கையில் அகப்பட்டுத் திண்டாடுதல், பிறர் சொல்வதைக் கேட்டு நல்வாய்ப்புகளை இழத்தல் போன்றவற்றிற்குத் தீர்வுகளைப் பெற, தைமாத கிரிவலத்தில் திருஅண்ணாமலை கொடிமர நிழலடிச் சித்தரே தூல, சூக்கும, காரண வடிவுகளில் கிரிவலம் வரும் நன்னாளில் “கொடிமர நிழலடிச் சித்தா போற்றி” எனச் சித்தர் பிரானின் சிந்தனையுடனும் “கொடிக்கவி” ஓதியும் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வர வேண்டும்.
இந்நாளில் சிவராத்திரி தூபம், ஸ்ரீம்ருத்யுஞ்சயர் தூபம் ஏற்றி பஞ்சாட்சர நாமம் ஓதி கிரிவலம் வருதலால் நெடுங்காலமாகத் தீர்வடையாதிருக்கும் அபிலாக்ஷைகள், நல் விருப்பங்கள் மலர்ச்சி பெறும்.
No comments:
Post a Comment