அற்புதங்கள் நிறைந்த நல்லிணக்கேஸ்வரர் ஆலயம்
சப்த கன்னிகளுக்குள் ஏற்பட்ட போட்டியில் யார் பெரியவர், யார் உயர்ந்தவர் என்பதை அறிய பல தலங்களுக்கு சென்றும் தீர்வு கிடைக்காமற்போனது.
இறுதியில் எழுச்சூரில் ஏரிக்குள் நீராடி எம்பெருமான் நல்லிணக்கேஸ்வரரை வணங்க முற்பட்ட நேரத்தில், ஏரிக்குள் நல்லிணக்கேஸ்வரர் அருட்காட்சி நல்கி, அவர்கள் அனைவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்றும் அவர்களுக்குள் போட்டி பொறாமை எழுவது நல்லதல்ல என்றும் கூறி ஆசிர்வதித்தருளினார்.
பின்னர் மகாவிஷ்ணு கருட வாகனத்திலும் பிரம்ம தேவர் அன்ன வாகனத்திலும் ருத்ரர் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி சப்த கன்னியரை ஆசிர்வதித்தார்கள்.
மும்மூர்த்திகளுடன் சப்த கன்னியர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த ஆலயத்தை தரிசிக்க, திருமணத் தடைகளும் புத்திர பாக்கிய தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சப்த கன்னியரை வணங்கி வழிபட்ட பின் எம்பெருமான் நல்லிணக்கேஸ்வரரை வழிபடுவது இந்த ஆலய வழிபாட்டு மரபு.
சூரிய பகவான் தனக்கேற்பட்ட தோஷங்களிலிருந்து விடுபட, இங்கே சூரிய தீர்த்தம் அமைத்து நீராடி, நல்லிணக்கேஸ்வரரை வணங்கி வழிபட்டார்.
ஆலயத்தின் வடக்கில் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. இதை கமல புஷ்கரணி என்றும் அழைப்பர். ஏனெனில் இது செந்தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் பேரெழில் தீர்த்தமாகும்.
கோயில் கருவறையின் பின்புறம் தல விருட்சமான பெண் பனை அமைந்துள்ளது. திருமணமாகாதவர்கள் மஞ்சள் நாணில் மஞ்சள் கிழங்கை இணைத்து, மரத்தில் கட்டி விட்டுச் சென்றால் உடனே திருமணம் கைகூடுகிறது.
ஆலயத்தின் தென்புறத்தில் இன்னொரு தலவிருட்சம், வில்வ மரம்.
மூன்றாவது, ஏரழிஞ்சல் எனும் ஒரு அபூர்வ மரம். இதன் விதைகள் முளைப்பதில்லை. மரத்திலிருந்து உதிரும் விதைகள் தாமே போய் தாய் மரத்தோடு ஒட்டிக் கொள்ளும் அதிசய விருட்சம்.
நாலாவது தல விருட்சம், கல்லால மரம். இது தென்மேற்கில் உள்ளது.
பேரெழில் நந்தியாம் எழுச்சூர் நந்தியம் பெருமானை காணக் கண்கோடி வேண்டும்.
கருவறையில் நல்லிணக்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். சிலசமயம் லிங்கத் திருமேனியின் மீது நாகப் பாம்பு சுற்றிக் கொண்டிருக்கும். நான்கு நாகங்கள் நல்லிணக்கேஸ்வரை சுற்றி வந்து பூஜிக்கின்றன.
மகான்களும் ரிஷிகளும் முனிவர்களும் பாம்பு வடிவத்தில் ஈசனை தரிசிப்பதாக ஐதீகம்.
மகா மண்டபத்தில் மூலவருக்கு இடதுபுறத்தில் தெற்கு நோக்கி அம்பாள் தெய்வநாயகி சந்நதி அமைந்துள்ளது. அபய, வரத முத்திரையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை. அம்பிகையின் கால் விரல்கள், நகங்கள் மற்றும் சேலையின் மடிப்புகள் கூட தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகும், அருளும் போட்டியிடும் சந்நதி. அருகே செல்வோரை ஆட்கொள்ளும் தெய்வநாயகியின் ஆட்சிபீடம் அது.
இத்தல நவகிரக நாயகர்கள் தத்தமது வாகனங்களோடு அமைந்துள்ளனர்.
காஞ்சி காமகோடி பீடம் 54வது ஆச்சார்யார் வியாஸாசல மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தை சந்திரமௌலீஸ்வரர் அலங்கரிக்கிறார்.
தவம் செய்ய விரும்புபவர்கள் மற்றும் மந்திர உச்சாடனங்கள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த இடமாகும்.
விஜயநகரப் பேரரசர் வீர நரசிம்மர் என்பவர் மக மாதம் (மாசி மாதம்) சுக்ல ஆண்டில் சில ஊர்களை காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாஸாசல மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தானமாகத் தந்துள்ளார். அப்படி தானமாக வழங்கப்பட்ட ஊர்களில் எழுச்சூர் பிரதானமானதாகும். அந்த தாமிரப்பட்டயம் காஞ்சி காமகோடி மடத்தில் உள்ளது.
சென்னையிலிருந்து 56 கி.மீ.; தாம்பரத்திலிருந்து 28 கி.மீ.; சென்னை தாம்பரம் காஞ்சிபுரம் சாலையில் ஒரகடம் கூட்டுரோடு (சிப்காட் தொழிற்பேட்டை) அருகில் 3 கி.மீ. தூரத்தில் எழுச்சூர் கிராமம் உள்ளது.
No comments:
Post a Comment