Saturday, 3 October 2020

உடல் பிணிகளை குணமாக்கும் உன்னத முறை

 நமது உடலுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது நமது உடலே அந்த பிரச்சினையைத் தீர்க்கும் வழியை மேற்கொள்கிறது. 


நமது கையிலோ காலிலோ சிறிய இரத்தக்காயம் ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம். நாம் மருந்து எதையும் உபயோகிக்காத நிலையில் அந்தக் காயம் தானாகக் குணமாகி, காயம் இருந்த தடமே தெரியாமல் மறைந்து விடுவதை நாமே பார்த்திருக்கிறோம். நமக்கு ஏற்படும் பல நோய்கள், பல உபாதைகள் நாம் எந்த மருத்துவமும் செய்யாத நிலையில் தாமே சரியாகி விடுகின்றன. நமது உடலுக்கு, அதுவே அதனைச் சீரமைத்து சரிப்படுத்திக் கொள்ளும் அறிவும், ஆற்றலும் உள்ளன.


உடல் பிணிகளை குணமாக்கும் உன்னத முறை 


யோக சிகிச்சை - 2


திருச்சி அன்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த ஒரு செய்தியை விவரித்தார். 


“எனது நண்பர் ஒருவர் நன்றாகத் தான் இருந்தார். ஒரு முறை அவர் தனக்கு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார். சோதனையில் அவருக்கு பல வருடங்களாக நீரிழிவு நோய் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.... 


சோதனை செய்யும் வரை நண்பர் நன்றாகத் தான் இருந்தார். நீரிழிவு நோயினால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகத் தெரிந்ததும் அவருக்கு ஒவ்வொரு பாதிப்பாக ஏற்பட ஆரம்பித்தது. நோயினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை விட நோயைப் பற்றிய அவரது எண்ணந்தான் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட பாதிப்புகளிலிருந்து ஒருவர் எப்படி மீள வேண்டும்?” 


இப்படி அவர் கேட்டார். 


ஒரு முறை கலாரா நோயினால் லட்சக்கணக்கானோர் இறந்து விட்டனர். நாரதர் எமதர்மனிடம் சென்று முறையிட்டார். 


“நீங்கள் ஏன் இப்படி காலராவின் மூலம் லட்சக்கணக்கானவர்களை அழித்து விட்டார்கள்?” 


- இப்படி அவர் கேள்வி கேட்டார். 


எமதர்மன் பதிவேடுகளைப் புரட்டிப் பார்த்தார். “காலரா மூலமாக லட்சக்கணக்கானவர்களை அப்புறப்படுத்தச் சொல்லி நான் ஒன்றும் உத்தரவு போடவில்லையே. காலராவில் பத்தாயிரம் பேர்களை அப்புறப்படுத்துமாறு மட்டுமே காலரா தேவதைக்கு நான் உத்தரவிட்டிருந்திருக்கிறேன்” 


- என்று கூறிய எமதர்மன், காலராவை பரப்பிய காலரா தேவதையைக் கூப்பிட்டு விசாரித்தார். 


“எமதர்மராஜாவே நீங்கள் உத்தரவிட்டது போல் பத்தாயிரம் பேர்களை மட்டுமே தான் அப்புறப்படுத்தினேன். மற்றபடி இறந்தவர்கள் அனைவரும் காலரா வந்து விட்டதோ என்று பயத்தில்தான் இறந்து விட்டார்கள். அவர்களுடைய பக்கத்திலேயே நான் போகவில்லை” 


- இப்படி காலரா தேவதை விளக்கம் கொடுத்தது. 


நோயினால் உபாதை ஏற்படுகிறதா, அல்லது நோயைப் பற்றிய எண்ணத்தினால் உபாதை ஏற்படுகிறதா? 


மேலே கண்ட இரண்டு செய்திகளின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நோயினாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன, நோயைப் பற்றிய நினைவுகளாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 


நோயினால் ஓர் உபாதையோ, பிரச்சினையோ ஏற்பட்டால் அதற்கு நாம் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். 


ஆனால் நோயைப் பற்றிய எண்ணங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? 


நோயைப் பற்றிய எண்ணங்கள் ஏற்படும்போது அந்த எண்ணங்களை அப்படியே பிரவாகமாக விட்டுவிட வேண்டுமா? 


“அந்த எண்ணங்கள் அவையாக வருகின்றன. அவற்றை நிர்வாகம் செய்ய வேண்டிய பொறுப்பு எதுவும் நமக்குக் கிடையாது” 


- என நாம் அந்த எண்ணங்கள் எவற்றையும் கண்டு கொள்ளாமல் அவை போக்கில் விட்டுவிட வேண்டுமா? 


அல்லது. “எனக்கு நோயே கிடையாது” - “நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்” 


- இப்படி நேர்மறை எண்ணங்களை - Positive Thought களை வளர்த்துக் கொள்ள வேண்டுமா? 


நமக்கு ஏற்பட்ட உபாதைகளை - நோயை நாம் எப்படி அணுகுவது? 


நமக்கு ஏற்படும் எண்ணங்கள் நமது உபாதைகளை தீவிரப்படுத்துகிறது. அதிகமாக்குகிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. 


நமது எண்ணங்களுக்கும் நமது உபாதைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. 


அந்தத் தொடர்பு சரியான முறையில் இருந்தால் சரியான விளைவும் தவறாக இருந்தால் தவறான விளைவும் ஏற்படத்தான் செய்யும். 


நமக்கு ஏற்படும் உபாதைகளுக்கும் நமக்கும் உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? 


நமக்கு ஏற்படும் உபாதைகளுக்கும், நமது எண்ணங்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? 


நாம் ஒரு கரடுமுரடான சாலையில் காலை வாக்கிங் போகிறோம். தவறுதலாக நாம் ஒரு குழியில் காலை வைத்து விட்டதால் கீழே விழுந்து விடுகிறோம். காலில் அடிபட்டு விடுகிறது. இலேசான காயந்தான். ஆனால் அடிபட்ட இடத்தில் சிறிய வீக்கமும் வலியும் ஏற்படுகிறது. 


வீக்கமும், வலியும் இப்படி ஏற்படுவது சரிதானா? அல்லது வலியும் விக்கமும் ஏற்படாமல் இருப்பது தான் சரியா? 


வலியும், வீக்கமும் இப்படி ஏற்படக் காரணம் என்ன? 


நமது உடலுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது நமது உடலே அந்த பிரச்சினையைத் தீர்க்கும் வழியை மேற்கொள்கிறது. 


நமது கையிலோ காலிலோ சிறிய இரத்தக்காயம் ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம். நாம் மருந்து எதையும் உபயோகிக்காத நிலையில் அந்தக் காயம் தானாகக் குணமாகி, காயம் இருந்த தடமே தெரியாமல் மறைந்து விடுவதை நாமே பார்த்திருக்கிறோம். 


இது எப்படி சாத்தியமாகிறது? 


நமது உடலுக்கு, அதுவே அதனைச் சீரமைத்து சரிப்படுத்திக் கொள்ளும் அறிவும், ஆற்றலும் உள்ளன. 


நமக்கு ஏற்படும் பல நோய்கள், பல உபாதைகள் நாம் எந்த மருத்துவமும் செய்யாத நிலையில் தாமே சரியாகி விடுகின்றன. 


இப்போது அதே கேள்வியை மீண்டும் கேட்போம். 


காலில் அடிபட்டதனால் ஏற்படும் வலியும், வீக்கமும் சரியானதா, அல்லது தவறானதா? அவை வரவேண்டிய காரணமென்ன? 


வலியும், வீக்கமும் நமது காயத்தைக் குணமாக்கும் நோக்கத்தில் தான் நமக்கு ஏற்பட்டுள்ளன. 


(1/3)


(2/3)


வலி மற்றும் வீக்கமானது. இரத்த ஓட்டம் மற்றும் மூளையின் உத்தரவைக் கவர்ந்து இழுப்பதற்குத் தேவையானவையாகும். 


அடிபட்ட இடத்தில், வலியோ, வீக்கமோ ஏற்படாத பட்சத்தில், அந்த அடியினால் உட்காயம் ஏதாவது ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அதுதான் கேடானது. 


வலியற்ற காயந்தான் ஆபத்தானது. 


வலியும் வீக்கமும் உதவி செய்வதற்காகவே வருகின்றன. பாதிப்பைச் சீரமைப்பதற்காகவே வருகின்றன. 


அவற்றை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? வலியாகவும் வீக்கமாகவும் வந்துள்ள உபாதைகளை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? 


நண்பனாகவா அல்லது பகையாளியாகவா? 


நமது காலில் ஆழமாக முள் ஒன்று தைத்து விட்டது. மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் அந்த முள்ளை அப்புறப்படுத்துகிறார். அவருடைய சிகிச்சை நமக்கு வேதனையைத் தான் கொடுக்கிறது. வேதனையைக் கொடுக்கும் மருத்துவரை நாம் நமக்கு வேண்டியவராக எடுத்தக்கொள்வோமா? அல்லது வேண்டாதவராக எடுத்துக்கொள்வோமா? 


அவருடைய வேலை நமக்கு உபாதையைக் கொடுக்கலாம். அவர் நமக்கு உதவி செய்யவே வந்துள்ளார். அவர் கொடுக்கும் உபாதைதான் நம்முடைய பிரச்சினையைச் சீராக்கும் சிகிச்சை. 


அவரது சிகிச்சை வேறு உபாதை வேறல்ல. இரண்டும் ஒன்றே. 


உபாதையின் வடிவிலேயே சிசிச்சை உள்ளது. 


நம் வயிற்றில் ஒரு வலி ஏற்படுகிறது. இதற்கு முன்னாலும் இப்படி வலி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இத்தகைய வலி ஏற்பட்ட சில நிமிடங்களில் நமக்கு வாந்தியும், வற்றோட்டமும் ஏற்பட்டு விட்டது. 


இப்போதும் அதே போன்ற வலி ஏற்படுகிறது. நாம் அதனை எவ்வாறு எடுத்துக்கொள்வோம்? 


வாந்தி மற்றும் வயிற்றோட்டத்துக்கான முன்னறிவிப்பாக எடுத்துக்கொள்வோமா? 


இந்த வலி இன்னும் சிறிது நேரத்தில் வாந்தியாகவும், வயிற்றோட்டமாகவும் மாறிவிடும் என்று எடுத்துக் கொள்ளவேண்டுமா? 


வயிற்றில் வலி ஏற்படுகிறதென்றால் அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். காரணம் இல்லாமல் காரியமில்லை. 


வயிற்றில், நாம் சாப்பிட்ட உணவின் காரணமாக ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. 


அதைச் சீரமைக்கும் மருந்தாக - மருத்துவராகவே நமக்கு வயிற்றில் வலி ஏற்படுகிறது. இந்த வலி இன்னும் சற்று நேரத்தில், முன்பு ஏற்பட்டதுபோல், வாந்தியையும் வயிற்றோட்டத்தையும் கொண்டு வந்துவிடும். 


- என்று நாம் அதனைப் பார்ப்போமாயின் அந்த வலியை நாம் நம் வயிற்றினுள்ள குறையைச் சீரமைக்கும் மருந்தாகப் பார்ப்பதில்லை. 


பதிலாக வாந்தியையும், வயிற்றோட்டத்தையும் கொண்டு வரும் விஷமாகவே அந்த வலியைப் பார்க்கிறோம். 


அந்த வலியை நாம் மருந்தாகப் பார்க்கும் போது அது மருந்தாக வேலை செய்கிறது. அதையே விஷமாகப் பார்க்கும்போது விஷமாக மாறி வாந்தியையும், வயிற்றோட்டத்தையும் கூட கொண்டுவந்துவிடுகிறது. 


நமக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். 


நமக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை நாம் எப்படிப் பார்ப்போம்? 


இரண்டு தினங்களுக்கு முன்னால் நமக்குத் தெரிந்த ஒருவருக்கு இதேபோல் வலி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். 


“அதேபோல் மாரடைப்பு ஏற்படுவதற்காகத்தான் நெஞ்சுவலி ஏற்படுகிறதோ?” 


- என நமக்கு வந்த நெஞ்சுவலியை நாம் எடுத்துக்கொள்வோமாயின் நமக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியை மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷமாகவே பார்ப்போம். 


- ஓர் எதிரியாகவே பார்ப்போம். 


- ஓர் அபாயகரமானதாகவே பார்ப்போம். 


உண்மையில் நமக்கு ஏற்படும் உபாதைகள் அனைத்தும் நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் மருந்தாகவே உருவெடுக்கின்றன. 


- மருந்தாகவே தோற்றுவிக்கப்படுகின்றன. 


மருந்தாகப் பார்க்கவேண்டிய ஒன்றை மருந்தாகப் பார்க்காமல் விஷமாகப் பார்ப்போமானால் அது விஷமாகவே வேலை செய்துவிடக்கூடும். 


வயிற்றில் ஏற்பட்ட வலி. அது வந்த வேலையை முடித்துக்கொண்டு மறைந்துவிடுகிறது. 


வாந்தியையும், வயிற்றோட்டத்தையும் கொண்டு வந்துவிடுமோ என அதை ஒரு விஷமாகப் பார்த்தோமானால் வாந்தியும் வயிற்றோட்டமும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 


நமக்கு வயிற்றிலோ. தலையிலோ வலி ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். 


வயிற்று வலி என்பது ஒரு நோயா? 


நம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளைச் சீரமைப்பதற்காக நம் உடல் ஏற்படுத்தும் சிகிச்சை முறையே நமக்கு நோய் போலத் தோன்றுகிறது. 


உடலில் தோன்றும் உபாதைகளெல்லாம் நோய்கள் அல்ல. அவையெல்லாம் மருந்துகளே என்று புரிந்துகொள்வதே அவற்றை யதார்த்தமாகப் புரிந்துகொள்வதாகும். 


- உள்ளபடி புரிந்து கொள்வதாகும். 


இது ஒரு நேர்மறைச் சிந்தனையா? 


இது ஒரு Positive Thinking எனக் கூறலாமா? 


இது Positive Thinking அல்ல. ஆனாலும் இது Positive Thinking - போன்று வேலை செய்கிறது. 


எப்படி? 


Positive Thinking என்பது நாமாகக் கற்பிதம் செய்வது. நல்ல நோக்கத்துக்காக அப்படிக் கற்பிதம் செய்வது. 


ஒருவர் நல்லதையே செய்வார் என நம்புவது Positive Thinking. 


(2/3)


(3/3)


நமக்கு ஏற்படும் உபாதைகள் யாவும் நமக்கு நன்மை செய்வதற்காகவே ஏற்பட்டுள்ளன. நமக்கு வேண்டாதவை என நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது நாமாகச் செய்து கொள்ளும் கற்பிதம் அல்ல. 


நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஒரு தெளிவு தான் இது. 


நமக்கு ஏற்படும் சிறிய உபாதைகளை இந்த முறையில் அங்கீகரித்து. அதனைச் சோதித்து அறிவதன் மூலமே இதனை ஒரு யதார்த்த உண்மையாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். 


தண்ணீரை வைத்து சிலர் சில சோதனைகளைச் செய்துள்ளனர். 


ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அந்தத் தண்ணீருக்கான இழிந்த பண்புகளைக் கூறி அந்தத் தண்ணீரை நாம் நம்முடைய எண்ணங்களாலும் சொற்களாலும் தூற்றினோமென்றால் நமது எண்ணமும் சொற்களும் ஏதோ ஒருவகையில் அந்தத் தண்ணீரில் பிரதிபலிப்பதை ஆய்வு செய்தவர்கள் படம் எடுத்து அளவு செய்துள்ளார்கள். 


நாம் தண்ணீரைத் தூற்றுவதால் தண்ணீரின் உள்முகக் கட்டமைப்பு  Internal Structure விகாரமடைவதாகக் கூறுகிறார்கள். 


அதே நேரம் தண்ணீருடைய சிறப்பியல்புகளை நாம் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் அந்தத் தண்ணீரிடம் வெளிப்படுத்தும் போது தண்ணீரின் உள்முகக் கட்டமைப்பு ஒரு மலரைப் போல் மலர்வடைவதாகக் கூறுகிறார்கள். 


சரி, அது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தண்ணீருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? 


நாம் தண்ணீருக்குள்ளே வாழ்ந்து கொண்டிருப்பதால் தண்ணீருக்கும் நமக்கும் ஒரு சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதென்ன சம்பந்தம்? 


நமது உடலில் 90% - தண்ணீர்தான் உள்ளது. 


ஆகவே நமது எண்ணங்கள் அனைத்தும் இந்த நீரிலும் பிரதிபலிக்கின்றன. 


- இந்த உடலிலும் பிரதிபலிக்கின்றன. 


நமக்கு ஏற்படும் உடல் உபாதைகளை நம்மைக் காக்க வரும் மருத்துவ சிகிச்சையாக மனப்பூர்வமாக அங்கீகரிப்பதும் - ஒரு யோக சிகிச்சையே. 


நாம் அளிக்கும் மனப்பூர்வமான அங்கீகாரம் நமது உடலிலுள்ள தண்ணீர் மூலக்கூறுகளிலும் பிரதிபலித்து நம் உடலும் யோக சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. 


உடல் உபாதை என்னும் சிகிச்சை ஒரு புறமும், அதனை “நமக்கு உதவிக்கு வரும் ஓர் உதவியாளராக” ஏற்றுப் புரிந்துகொள்ளும் மனோரீதியான அங்கீகாரம் இன்னுமொரு புறமும் நமக்கு ஏற்படும் உபாதையை “நம் உடல் மீது அக்கறை கொண்ட ஒன்று” என நமது உடல் என்னும் நீரில் பிரதிபலிக்கும் உடல்ரீதியான வெளிப்பாடு பிரிதொரு புறமுமாக - மூன்று வழியாக நமது உடல் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்றன. 


இந்த மும்முனை அணுகுமுறையில் நமது பிரச்சினைகளும் தீர்வடைகின்றன. 


பி.கு.: இதனை முதலுதவிக் குறிப்பாக ஏற்று பரிசீலித்துக் கொள்ளவும். 


தீவிரப் பிரச்சினைகளுக்கு தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும். 


...தொடரும்


நன்றி - ஸ்ரீ பகவத் அய்யா


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment