Thursday 19 March 2020

ஹரிச்சந்திரன் சரித்திரம்

*ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்.*

சூரிய வம்ஸம்  சரித்திரம் தொடர்கிறது :

*ஹரிச்சந்திரன் சரித்திரம் :*

*மக்கட்பேறற்ற ஹரிச்சந்திரன் மனம் வருந்தி நிற்க, நாரத முனிவரது உபதேசத்தால் வருண தேவரைச் சரணம் பற்றி பிரார்த்தித்தான்.*

*"எனக்குப் புதல்வன் பிறக்கட்டும்.*
*அவ்வாறு வீரனான ஒரு புதல்வன் பிறந்தால், அவனையே யாகப்பசுவாக வைத்து, உன்னை ஆராதிப்பேன்"*

*என்று வேண்டினான்.*

*வருணனும் அவ்வாறே அனுக்ரஹித்து, அவரது திருவருளால், இவனுக்கு "ரோஹிதன்" என்கிற புதல்வன் பிறந்தான்.*

*புத்திரன் பிறந்ததும் வருணதேவன் தோன்றி,*

 *"ஹரிச்சந்திரனே !*
*உனக்குக் குழந்தை பிறந்தான் அல்லவா ?*
*நீ வாக்களித்தபடி அவனை யாகப்பசுவாகக்  கொண்டு இப்பொழுது எனக்கான யாகத்தைச் செய்"*

*என்றார்.*

*இதைக்கேட்ட ஹரிச்சந்திரன்,*

*"பகவானே !*
*யாகப்பசுவான இவனுக்கு பத்து தினங்கள் கழிந்தால்தானே பிறந்ததால் உண்டான தீட்டு/ஜனனாசௌசம் கழிந்து சுத்தமாகும்"*

*என்றான்.*

*பத்து தினங்கள் கழித்துத் திரும்பி வந்த வருணதேவன்,*

*"இப்பொழுது யாகம் செய்யலாமே ?"*

*என்று கேட்க,*

*"யாகப்பசுவிற்கு, அதாவது குழந்தைக்கு பற்கள் முளைத்தால்தானே சுத்தமாகும்.*
*அதற்குப் பிறகு யாகம் செய்யலாம்"*

*என்று பதில் அளித்தான்.*

*அவ்வாறே பற்கள் முளைத்த பின் வருணதேவன் வந்து கேட்க,*

*"முளைத்த பால்பற்கள் விழுந்தால்தானே சுத்தமாகும்.*
*அதன்பிறகு யாகம் செய்யலாம்"*

*என்று அரசன் பதில் அளித்தான்.*

*அதேபோல பால்பற்கள் விழுந்ததும்,*

*"திரும்பவும் பற்கள் முளைத்தபின்தானே இந்தக் குழந்தை யாகத்திற்கு யாகப்பசுவாக முடியும்"*

*என்று கூறினான்.*

*பின் பற்கள் முளைத்தபின்,*

*"இந்தக் குழந்தை க்ஷத்திரியன்.*
*எப்பொழுது கவசம் அணிந்து யுத்தம் செய்ய திறமை பெறுகிறானோ, அன்றுதானே யாகப்பசுவாக உபயோகிக்க ஏற்றவனாக ஆவான்"*

*என்றான்.*

*இவ்வாறாக தன் மகனிடம் பேரன்பும் பாசமும் கொண்ட மன்னன் , ஏதோ ஒரு காரணம் கூறிக் காலம் கடத்தி வந்தான்.*

*வருணதேவனும் காத்திருந்தார்.*

*தன் தந்தை, தன்னையே யாகப்பசுவாக்கி, வருணதேவனுக்கான யாகத்தைச் செய்யப் போகிறார் என்பதை அறிந்த ரோஹிதன், தன் உயிரைக் காத்துக் கொள்ள எண்ணி, வில்லைக் கையில் ஏந்திக் கானகம் சென்று விட்டான்.*

*இவ்வாறு மன்னன் காலம் கடத்தவே, வருணதேவன் கோபம் கொண்டு, ஹரிச்சந்திரனுக்கு "மஹோதரம்" என்னும் வியாதியை அளித்தான்.*

*(மல, முத்திரம் வெளியேற்ற முடியாத/விஸர்ஜனம் செய்ய முடியாத வியாதியே "மஹோதரம்" எனப்படும்.)*

*தன் தந்தை வியாதியால் துன்புறுவதைக் கேள்விப்பட்ட, ரோஹிதன் தன் நகரம் திரும்ப, வழியில் இந்திரன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.*

இந்திரன் கூறுகிறான் :

*"குழந்தாய் !*
*யாகப்பசுவாக அருந்து, நீ இறப்பதைக் காட்டிலும் புண்ணிய நதிகளில் நீராடி, புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று, அங்குள்ள பகவானை வணங்கி வழிபட்டு, இந்த பூமியை வலம் வருதல் மிகமிகப் புண்ணியமான செயல்"*

*என்று உபதேசித்தான்.*

*இவ்வாறாக ரோஹிதன் ஆறு வருஷங்கள் வனத்திலேயே இருந்து விட்டு ஏழாவது வருஷம் தன் நகருக்கு திரும்பி வரும் வேளையில், "அஜிகர்த்தர்" என்கிற முனிவரிடமிருந்து அவரது நடுப்பிள்ளையான "சுனச்சேபன்" என்பவனை விலைக்கு வாங்கி வந்து, அவனையே யாகப்பசுவாக வைத்துக் கொள்ளுமாறு தன் தந்தையிடம் கூறினான்.*

*மன்னன் ஹரிச்சந்திரனும் அவ்வாறே "நரமேதம்" என்னும் யாகத்தைச் செய்து, வருணன் முதலிய தேவர்களுக்கு அவியுணவை அளித்தான்.*

*அதனால் "மஹோதரம்" என்ற வியாதியிலிருந்து விடுதலை அடைந்தான்.*

தன் உயிரைத் தியாகம் செய்த "சுனச்சேபன்" பெருமை பற்றி விச்வாமத்திரர் பின்னர் விளக்குகிறார்.

*தன் மனைவியோடு சத்தியத்திலேயே உறுதியாக நின்ற ஹரிச்சந்திரனுக்கு விச்வாமித்திரர் என்றுமே நிலைத்து நிற்கும் தத்துவ ஞானத்தை உபதேசித்து அருளினார் :*

விச்வாமித்திரர் ஹரிச்சந்திரனுக்கு உபதேசித்த "மோக்ஷ வழி" :

*இதன்படி ஹரிச்சந்திரன் அன்னமயமான மனத்தைப்  பிருத்வி தத்துவத்திலும்,*

*பிருத்வியை தண்ணீரிலும்,*

*தண்ணீர்த் தத்துவத்தை அக்னி/ஒளியிலும்,*

*ஒளியை வாயு தத்துவத்திலும்,*

*வாயுவை ஆகாயத் தத்துவத்திலும்,*

*ஆகாயத் தத்துவத்தை அஹங்காரத்திலும்,*

*அஹங்காரத்தை மஹத் தத்துவத்திலும் லயிக்கச் செய்து,*

*அங்கேயே ஞானகலையைத் தியானித்து, அதன் வாயிலாக அஞ்ஞானத்தைத் தீக்கிரையாக்கினார்.*

Highlight :

*பின், மோக்ஷ இன்பத்தின் அனுபூதி/அனுபவத்தினால் ஞானகலையையும் தகர்த்தெறிந்து, உலகியல் பந்தங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று, வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத ஸதாநந்த சிதாத்மாவான நிஜ ஸ்வரூபத்தில் நிலைத்து நிற்கலானார்.*

*அதாவது, "ஜீவன் முக்தர்" ஆனார்.*

Examples for ஜீவன்முக்தர் :

*1.ஸதாசிவ பிரம்மேந்திரர்.*

*2.ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.*

*3.ஶ்ரீரமண மஹரிஷி.*

குறிப்பு :

*இவைகள் பலருக்கு புரியாமல் இருந்தாலும், இவைகள் தற்காலத்தில் லௌகீக, குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்குத் தேவையில்லாத /சம்பந்தம் இல்லாத ஒன்று என்று எண்ணி  ஒதுக்காமல்,  ஶ்ரீவியாஸர், ஶ்ரீசுகர் போன்ற மஹரிஷிகளின் வாக்கில் வந்ததைப் படிப்பதே புண்ணியத்தைத் தரும் என்ற நோக்கில் படித்துப் பயன் பெறவும்.*

 சூரிய வம்ஸத்தில் ஸகர மன்னன் சரித்திரம் தொடரும்.

ஆதாரம் :
ஶ்ரீமத் பாகவத மஹாபுராணம்,
Volume----2,
ஸ்கந்தம்----9,
அத்தியாயம்---7,
ஸ்லோகம்----8 to 27.
பக்கம்---661 to 663.
Gita press,
Gorakhpur publication.

*சித்தர்கள் ஆகமம்*