Monday, 17 June 2019

அருள்மிகு ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோவில்,கோட்டைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்

🌻🐚🌻🐚🌻🐚🌻🐚🌻
*இன்றைய கோபுர தரிசனம்...*

*அருள்மிகு*
 *ஸ்ரீ சென்றாயப் பெருமாள்* *கோவில்,கோட்டைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்*

பாலகனாய் வந்த பெருமாள் !
மலைக்கோயில் தரிசனம்,

'ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் பாடிய அந்த வாமனன் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் மீசையும் தாடியுமாகத் திருக்காட்சி தரும் கோவில் தான் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது அமைந்திருக் கிறது இந்தக் கோயில்.

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அவர் எப்போதும் சதா சர்வ காலமும் பெருமாளையே நினைத்து தியானித்து வந்தார்,

ஶ்ரீ மந் நாராயணன் ஒருவனே பரமாத்மா, அவரால் படைக்கப்பட்டது தான் இந்த பிரபஞ்சமும், உயிர்களும், அவன் காலடி அடைவதே வாழ்வின் லட்சியம் என்று சொல்வார்.

ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம்! கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.

இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோயில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்யவேண்டும் என்றும் கூறி னான் அந்த பாலகன்.

வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோயிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். இன்றளவும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தாடி, மீசையுடன் காட்சி தரும் பெருமாள்!

குழந்தை வடிவில் வந்து சென்னம நாயக்கருக்கு அருள்புரிந்த இறைவன், அவர்களின் அடையாளமான தாடி மீசையுடனே காட்சி தருகின்றார். தற்போது அந்த வம்சத்தில் ஒன்பதாம்

தலைமுறையைச் சேர்ந்த கண்ணன் என்கிற சென்னம நாயக்கர், கோயிலில் பூஜைகள் செய்து வருகிறார். இந்த ஊருக்கு பாலகனான சென்றாயப் பெருமாள் வந்து சேர்ந்தது பற்றி ஒரு சுவையான நிகழ்ச்சியை ஊர்மக்கள் சொல்கிறார்கள்.

பாலக வடிவில் இருந்த இந்தப் பெருமாளின் விக்கிரஹம் ஒருகாலத்தில் போடிநாயக்கனூர் அரண்மனையில் பூஜிக்கப்பட்டு வந்ததாம். பின்னர் அந்த விக்கிரஹம், வீரவண்டி என்னும் கிராமத்தில் இருந்த ஒரு ஏழைப் பெண் ணின் கைகளில் கிடைக்கப் பெற்றது.

அந்த விக்கிரஹத்தின் அருமை தெரியாத அந்தப் பெண், அதை ஆமணக்கு விதைகளைச் சேகரித்து வைக்கும் பானையில் போட்டுவைத்தாள். அத்துடன் அதை மறந்தே போனாள். பிறகு ஆமணக்கு விதைகளை வாங்க வந்த வியாபாரிகளிடம், தான் சேகரித்து வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பானையுடன் கொடுத்து விட்டாள்.

வியாபாரிகள் அந்தப் பானையுடன் கோயில் உள்ள காட்டு மலைப் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, பானையில் சிலையாக இருந்த விக்கிரஹம் பாலகனாக வெளிப்பட்டு வியாபாரிகளை அதிர்ச்சிக்கும் ஆச்சர்யத்துக்கும் ஆளாக்கியது. பின்பு அந்தச் சிறுவன் மலை உச்சிக்குச் சென்று விட்டான். அந்தச் சிறுவன் வடிவில் இருந்த பெருமாள்தான் சென்னம நாயக்கருக்கு அருள் புரிந்ததாக ஊர்மக்கள் சொல்கிறார்கள்.

திருத்தலச் சிறப்பு

மூலவர் சென்றாயப் பெருமாள் முறுக்கு மீசை, தாடியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக் கின்றார். சமீபத்தில்தான் பிரச்னம் பார்த்து, தாடி மீசையுடன் இருக்கும் பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் ஏந்திய திருப்பதி வேங்கடாசலபதி போன்று அலங்காரம் செய்யப்பட்டு, அந்தக் கோலத்திலேயே அருட்காட்சி தந்துகொண்டி ருக்கிறார் சென்றாயப் பெருமாள்.

பாலகன் என்பதால் இறைவனுடன் 'தாயார்’ வீற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும், மக்களாக விருப்பப்பட்டு திருவுருவக் கவசத்தின் மார்புப் பகுதியில் லட்சுமி முகம் பதித்து வணங்குகின்றனர். தல விருட்சமாக 'உசிலை மரம்’ தெய்விகமாகக் கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

பெருமாளுக்கு உகந்த ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனைப் பாடல்கள், கிருஷ்ண லீலைகள் போன்றவற்றைப் பாடிக் கொண்டாடுகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா (அடுத்த திருவிழா 2020ம் வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்) மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார். கிட்டத்தட்ட 500 படிகள் கொண்ட மலை உச்சியில் வீற்றிருக்கும் சென்றாயப் பெருமாளுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் படிபூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜெயந்தி இங்கு மிகவும் விசேஷம்! ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வழிபாடு

குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, குடும்பம் தழைக்க பெருமாளிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல்களை வாய்விட்டுச் சொல்லி குறி கேட்பதன் மூலம் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை.

இறைவன் காட்சி தந்ததாக நம்பப்படும் இடத்தில், எட்டெழுத்து மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய’ என்பதை நினைவுகூரும் வகையில் எட்டுத் தூண்கள் கொண்ட தியான மண்டபம் பிரார்த்தனைக் கூடமாக விளங்குகிறது.

அதேபோல், ஒரு மண்டலத்தைக் குறிக்கும் விதமாக கோயில் பிராகாரம் 48 தூண்களுடன் அமைந்துள்ளது. இந்தப் பிராகாரத்தை ஒரு முறை சுற்றி வருவதன் மூலம் ஒரு மண்டல விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்குமாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை; சனிக்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை.

வாழ்நாளில் 1008 கோபுர தரிசனம் செய்தவர்களுக்கும், 108 கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம:
🐚🌻🐚🌻🐚🌻🐚🌻🐚