Saturday 11 August 2018

வாழ்க்கை தத்துவம், எளிமையாக கூறப்பட்டுள்ளது

ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் அருளிய அருளுரை

ஞானம் என்னும் நான்காம் படி இரகசியம்

வாசி வசப்படுதல் என்பது நான்காம்படி. முதல் படி சரியை, இரண்டாம்படி கிரியை, மூன்றாம்படி யோகம், நான்காம்படி ஞானம்.

சரியை என்பது தாய் தந்தையிடம் அன்பு காட்டுதல், மனைவியிடம் அன்பு காட்டுதல், இனிமையாக பழகுதல், பிறர் சொத்தை அபகரிக்காமல் இருப்பது, வன்சொற்கள் சொல்லாதிருத்தல், பொறாமைப்படாதிருத்தல், பேராசைப்படாதிருத்தல், சினமில்லாதிருத்தல் ஆகிய இதெல்லாம் சரியை
மார்க்கம்.

கிரியை மார்க்கம். தெய்வம் உண்டென்று நம்புதல், அதற்குரிய ஆசானைத் தேடி அலைதல், கடவுள் ஒருவன் இருக்கிறான் என்று நம்புவான். ஆறுமுகப்பெருமானாக இருக்கலாம், விநாயகராக இருக்கலாம், யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், கடவுள் உண்டு என்று நம்புதல், தினம் வழிபாடு செய்தல், பல ஊர்களுக்கு சென்று °தலங்களில் உள்ள தீர்த்தங்களில் மூழ்குதல், கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்தல், இதெல்லாம் கிரியை மார்க்கம்.

யோகமார்க்கம். மூச்சுக்காற்றைப் பற்றி அறிதல், மூச்சுக்காற்றைப்பற்றி அறியும்போதே இந்த தத்துவங்களைப் பற்றியும் அவன் அறிய வேண்டும். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை. இதெல்லாம் தத்துவ கூறுகள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம், நல்வினை தீவினை, ஆணவம், கன்மம், மாயை என்றெல்லாம் சொல்வார்கள்.யோகம் என்பது இடகலை, பிங்கலை, சுழிமுனையைப் பற்றி அறிவதாகும்.

யோகம் - இடகலை என்பது சந்திரகலை என்றும், பிங்கலை என்பது சூரியகலை என்றும், சுழிமுனை என்பது அக்கினி கலை என்றும் சொல்வார்கள். இதையெல்லாம் அறிந்து முயற்சிப்பது யோகமாகும்.

ஞானம் - ஞானம் என்பது ஆன்மாவைப்பற்றி அறிதல். ஆன்மா மாசுபட்டிருக்கிறது. புறஉடம்பு அல்லது தூலதேகம் மும்மலத்தால் ஆனது. தூலதேகத்தை, சூட்சுமத்தை ஆட்டிப் படைப்பது ஆன்மா. தூலதேகத்தையும் சூட்சுமதேகத்தையும் பற்றி அறிவதுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதாகும். தூலத்தைப் பற்றியது புற உடம்பு. சூட்சுமம் என்பது அக உடம்பு. அது ஒளி உடம்பு. அது காரிய தேகம். ஆக காரியதேகம் புற உடம்பு. காரண தேகம் அக உடம்பு. அதைப்பற்றி அறிதல்.

ஞானத்தைப் பற்றி அறிய முற்படுகின்ற மக்கள் வாசியைப்பற்றி அறிவது யோகம். ஞானத்தைப் பற்றி அறிதல் என்பது வாசியைப் பற்றி அறிவதாகும். இதன் மூலமாக ஆறாதாரத்தை அறிய வேண்டும்.

ஆசான் உடல் மாசை நீக்குவார், நாளுக்குநாள் உடல் மாசு நீங்குதல், உடல் மாசு நீங்க நீங்க அறிவு தெளிவடைதல், ஆசான் ஆசியில் தினம் பூசித்தல், ஆசானை அறிந்து கொள்ளுதல், அவர் ஆசியால் வாசி வசப்படுதல், வாசி வசப்பட்ட பின் ஏற்படுகின்ற மாற்றங்களால் அந்த மூச்சு வசப்படும்.

ஞானம் என்ற நான்காம் படிக்கு வருவதற்கு, இவையெல்லாம் வேண்டும். இது ஞானிகள் ஆசி இல்லாமல் முடியாது. ஏதோ பல ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் காரணமாக ஒரு ஞானி கிடைப்பார். அவர் வாசி வசப்படுகின்ற முறையை சொல்லிக் கொடுப்பார். பிறகு நீ பூஜை செய்தால்தான், உள்ளே தங்குகின்ற காற்று வேலை செய்யும் என்பார்.

யாரை நீ பூஜை செய்யணும்? இந்த வாசிக்கெல்லாம் தலைவர், மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்தவர், அந்த மூச்சுக்காற்றை இலயப்படுத்தி அதன் மூலமாக உடல் மாசையும், உயிர் மாசையும் நீக்கியவர் திருவடியை பூஜை செய்ய வேண்டும். உடல் மாசு நீங்கினால், உயிர் மாசு நீங்கும். உயிர் மாசு நீங்கி ஆன்மாவை ஜோதியாக காணுதல். இது பெரிய விசயம், நான்காம் படி.