Thursday, 14 June 2018

சேவல் விருத்தம்

அருணகிரியார் அருளிய ஸ்ரீ சேவல் விருத்தம் 

10) மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகி டெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்டதுண் டப்படக்
கர்ச்சித் திரைத் தலறியே
காரைக் பிளந்தசுரர் மாரைப் பிளந்துசிற
கைக் கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமயவரை தருகுமரி
துடியிடைஅ நகை அசலையாள்
சுதக் முருகன் மதுரமொழி இபவநிதை குறவநிதை
துணைவன் என திதய நிலையோன்

திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செககண நகக்கண எனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
வேல்திருத் துவசமே.

மகர மீன்கள் மிகுந்து வாழ்கின்ற கடல்வற்றிடவும் ஆதிசேடன்
என்னும் பாம்பின் தலைகள் நடுங்கவும் மலைகள் கிடுகிடுவென
குலுங் கிடவும், சிகரங் களைக் கொண்ட உறுதியான மேரு மலையின்
முகடு படபடவெனக் கலங்கவும் மதயானைகளின் உயிர்
சிதறவும், மேலுலகம் முதலான அண்டங்கள் பல்வேறு
துண்டுகளாய் சிதறவும், காரை நகர் பிளந்து அரக்கர் மாந்தன்
மார்பைப் பிளந்துதன் இறகுகளை அடித்து ஆடிடுவது
எதுவெனின்

சுகவடிவான விமலை, சுடலை, பராசக்தி, இமவரசன் பெற்ற
குமாரி, உடுக்கையன்ன இடையுடைய பாவ மற்றவள்,
மலையரசி ஆகிய அம்பிகையின் திருக்குமாரன் முருகன்
இனிமையான மொழி பேசும் தெய்வயானை, குறமகள், வள்ளி
ஆகிய இருவரின் கேள்வன், என் உள்ளத்தே என்றும்
நிலைத்து நிற்பவன், திகுடதிகு குடதிதிகுடட செககண செககண
என்ற தாள வரிசையுடன் அழகிய நடனம் புரிந்திடும்
மயிலில் வருகின்ற குமார மூர்த்தியும் உயர்வான
குருநாதருமான குமரகுருபரனின் அழகிய கொடியிலுள்ள
சேவலேயாம்.

ஓம் ஹ்ரீம் ஸௌம் சரவணபவ தேவாய நம!!
ஓம் ம்ரீம் மயூராய நம!!