Monday 11 June 2018

உமாபதிசிவம் அருளிய "கொடிக்கவி"

*உமாபதிசிவம் அருளிய "கொடிக்கவி"*

*மெய்கண்ட சாத்திரம்*
[திருநெறி/11/1-4 - 12/06/18]

குறிப்பு: *"இன்று தில்லை கூத்தபிரான் சன்னதியில் ஆனித்திருமஞ்சன மஹோற்சவ கொடியேற்றம்"*🙏🏻🙏🏻

*"முட்டாத முச்சந்தி மூவாயிரவர்" என்னும் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவரான உமாபதி தீக்ஷிதர்"* ஒருநாள் சிற்சபை பூசைமுறையை நிறைவு செய்து கொண்டு, ஆச்சார்யருக்கு உரிய விருதுகளான குடை, விளக்கு, தீவர்த்தி உள்ளிட்டவைகளுடன் தம் இல்லத்திற்கு சிவிகையில் சென்றார்

அது சமயம் திருக்கயிலாய மரபில் வந்த *"மெய்கண்டாரது சீடரான அருணந்தி" சிவாச்சார்யாரின் சீடர்களுள் ஒருவரான "மறைஞான சம்பந்த சிவம்"* தில்லையில் உள்ள ஓரிடத்தில் இருக்க அவ்வழியே பல்லக்கில் சென்ற *"உமாபதி தீக்ஷிதரின் ஆன்மபக்குவம் அறிந்து "பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுது பாரீர்"* என்ற உபதேச வாக்கினை மொழிந்தனர்

அதுகேட்டு பக்குவம் பெற்ற உமாபதியார் மறைஞான சம்பந்தரிடம் தன்னை சீடனாக ஏற்று சிவஞான போதத்தெளிவு தருமாறு வேண்டினார், ஆயினும் மறைஞான சம்பந்தர் உமாபதியாரை கண்டு கொள்ளாமல் தில்லையின் ஒரு நெசவாளர் தெருவழியே நடந்து சென்றனர், உமாபதியாரும் அவ்வண்ணமே பின்தொடர்கையில்

நெசவாளர்கள் நூலுக்கு பாவிட வைத்திருந்த கேழ்வரகு கூழினை பசிமிகுதியால் வாங்கிப் பருகினார் மறைஞானசம்பந்தர், *"அதுசமயம் அவரது கையிடுக்கு வழியே வழிந்த கூழினை "சிவப்பிரசாதமென வாங்கி பருகினார் உமாபதி தீக்ஷிதர்", உடனேயே குருவின் உச்சிஸ்டம் வழியே சிவஞானம் சம்பந்திக்கப் பெற்ற உமாபதி தீக்ஷிதர் அதுமுதல் "உமாபதி சிவாச்சார்யார்"* என்ற திருநாமத்துடன் மெய்கண்ட சந்தான பரம்பரையில் ஒரு உபதேச சீடரானார்.

இவற்றின் உட்பொருள்கள் பற்றி ஆராயாத தில்லை வாழந்தணர்கள், *"உமாபதியார் தங்களிலும் தாழ்ந்த குலத்தவரது உச்சிஷ்ட்டம் உண்டதால்  அவரை சாதிப்பிரஷ்ட்டம் செய்து விளக்கி வைத்தனர்"*

உமாபதியார் தில்லைக்கு கிழக்கே கொற்றவங்குடியில் ஆசிரமம் அமைத்து சீடர்களுக்கு சைவசித்தாந்த முப்பொருள் உண்மையை விளக்கி வந்தனர், ஆயினும் *"இவர்தம் பெருமையை உலகறிய வேண்டி திருவுளம் பற்றினார் தில்லை கூத்தபிரான்"*

அவ்வருடம் *"தில்லையில் ஆனித்திருமஞ்சன மஹோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செய்தனர் மூவாயிரவர்கள், ஆயினும் அதிசயமாக கொடி ஏறாமல் இருந்தது, அதுபோது "உமாபதி வந்தால் கொடியேறும்" என்ற வான்வாக்கும் எழுந்தது*

உடன் மூவாயிரவரும் சென்று உமாபதியாருக்கு உரிய மரியாதைகள் செய்து அழைத்து வரவே உமாபதியார் கொடிமரத்தின் அருகில் நின்று *"ஔிக்கும் இருளுக்கும்"* என்று எடுத்து நான்கு பாடல்கள் பாடினார்.

*கொடிதானாகவே ஏறியது ஆனித்திருமஞ்சனமும் சிறப்பாக நடைபெற்றது"*

அதுமுதல் ஆனித்திருமஞ்சன கொடியேற்றத்தில் கொடிக்கவி பாடி வழிபாடு செய்யப்படுவதும் தில்லையில் மரபாக தொடர்கிறது. நான்கு பாடல்களே இருந்தாலும்  இப்பாடல்களில் அடங்கியுள்ள சித்தாந்த நுட்பங்கள் ஏராளம்!! ஏராளம்!! ஆதலால் இதனை ஒரு மெய்கண்ட சாத்திரமாகவே சைவசமயம் கொண்டுள்ளது

இப்பதிவினில் பாடலுக்கான பொருள் இருந்தாலும் தக்க ஆசிரயரின் மூலமே புரிந்து கொள்ள இயலும்

*"தில்லையில் ஆனித்திருமஞ்சனத் திருவிழா கொடியேறும் இன்றைய நாளில் இப்பாடல்கள் நம் சிந்தனைக்கு*

*பாடல்*

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடமொன்று மேலிடிலொன்று
ஒளிக்கும் எனினும் இருளடராது உள்ளுயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனுந் திரிமலத்தே
குளிக்கும் உயிரருள் கூடும் படிக்கொடி கட்டினனே.

பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து)
இருளாம் வெளியே திரவே(து) - அருளாளா
நீபுரவா வையமெலாம் நீஅறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
தாக்கா துணர்வரிய தம்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்கும் அருள்நல்கக் கொடி.

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.

*பொருள்*

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஆணவத்துக்கும் ஞானத்துக்கும் இடம் ஒன்றே ; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளித்து நிற்கும், ஆணவம் மேலிட்ட காலத்து ஞானம் ஒளித்து நிற்கும் ; எனினும் இருள் அடராது ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளித்து நின்றாலும் ஞானத்தை ஆணவம் பொருந்தாது ; உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் பூர்வ வாதனா விசேஷத்தாலே உள்ளே கிடந்த சிவஞானம் சற்று விளங்குமானாலும் மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கு மல்லாமல் அது கொண்டே நீங்கமாட்டாது ; உயிர் அருள் கூடும்படி கொடிகட்டினனே இப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கிற ஆன்மா அருள் கூடும்படிக்குத் தீட்சைக் கிரமங்களினாலே மலங்களைப் போக்கத் துவசங்கட்டினேன்.

பொருளாம் பொருள் ஏது பொருளிலே அழியாத பொருள் ஏது ; போது ஏது கிரணமாகிய சுத்தி ஏது ; கண் ஏது கண்போல ஆன்மா ஏது; இருளாம் வெளி ஏது இரவு ஏது அஞ்ஞானமாகிய சகல கேவலந்தான் ஏது; அருளாளா அருளையுடையவனே ; நீ புரவா வையமெலாம் நீ அறிய வையமாகிய மலமாயாதி கன்மங்களிலே பொருந்தாமல் ஆன்மாக்களினிடமாகப் பொருந்தியிருக்கிற தேவரீர் அறிய ; கோபுர வாசற் கொடி கட்டினேன் கோபுரவாசலிலே கொடி கட்டினேன்.

வாக்காலும் ... தன்மையனை வாக்கு மனங்களாலும் ஒரு காலத்திலுந் தாக்காமல் அறிதற் கரிதாகிய தன்மை யுடையவனை ; நோக்கி விசாரித்துப் பார்த்து ; பிறித்து பகுக்கு மிடத்து ; அறிவு ... கொடி அறிவுக்கறிவா யிருக்கிறதைப் பிரியாமற் குறித்து அருள் பொருந்தத்தக்கதாகக் கொடி கட்டினேன்.


அஞ்செழுத்தும் ... நாலெழுத்தும் சிவாயநம என்கிற அஞ்செழுத்தும், ஓம் ஆம் ஒளம் சிவாயநம என்கிற எட்டெழுத்தும், ஓம் நமசிவாய என்கிற ஆறெழுத்தும், ஓம் சிவாய என்கிற நாலெழுத்தும் ஆன இப்படி உச்சரிக்கிற விதிப்படியே உச்சரித்து ; பிஞ்செழுத்தும் ... நெஞ்சழுத்தி விதிப்படி உச்சரிக்கிற முறைமையை விட்டுப் பஞ்சாட்சரத்தினுடைய சொரூபத்தை யறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரமாகிய பராசத்தியையும் மேலைப் பெருவெழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தையும் தன்னுடைய இருதயத்திலே வைக்கில் ; பேசும் ... கொடி பேசும் எழுத்தாகிய வகாரமாகிய சத்தி பேசா எழுத்தாகிய சிகாரமாகிய சிவத்தை இரண்டறக் கூசாமல் அழுத்துவிக்கக் கொடி கட்டினேன்.