Friday 22 June 2018

பட்டிவிநாயகர்

சிவாயநம

திருச்சிற்றம்பலம்

பட்டிவிநாயகர்

அருள்மிகு பட்டிவிநாயகர் பேரூர் தல விநாயகர் ஆவார். பட்டிப்பெருமான் திருக்கோயிலிலிருந்து நொய்யல் ஆற்றுக்குப் போகும் பாதையில் சிறிது மேற்குப்புறம் தள்ளியுள்ளது. இவரது திருக்கோயில். சுற்றுவட்டார மக்கள் பட்டீசுவரன், பட்டியப்பன் என்று பேரூத்தலத்து இறைவன் பெயரை வைத்துக்கொள்ளுவது போலத் தலவிநாயகரான இவர் பெயயரையும் தங்கள் குழந்தைகளுக்கு வைப்பர்.

பட்டிவிநாயகர் கோயில் மிகப் பழங்காலத்தது. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரைப் போல இப்பிள்ளையாரும் உளியால் செதுக்கப்படாதவர். ஆவார். தானே தோன்றிய (சுயம்பு) மூர்த்தி ஆவார். இவரது கருவறையின் கீழ் நச்சுப் பொய்கை இருப்பதாகக் கூறப்பெறுகிறது. ஆனால் இதற்கான எழுத்துச் சான்று ஏதும் இல்லை.

பேரூர்ப் பட்டிப் பெருமான் திருக்கோயிலுக்கு வருவோர் முதலில் தல விநாயகரான பட்டிவிநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் ஏனைய மூர்த்திகளை வழிபட வேண்டும். பேரூர்ப்புராண ஆசிரியரான கச்சியப்ப முனிவர் இவருக்கே முதலில் கடவுள் வணக்கம் பாடியுள்ளார்.

மிகப்பழங்காலத்தில் பேரூர்ப் பகுதி அடர்ந்த காடாக இருந்தது. அரச மரங்களே நிறைந்து இருந்தன. இதனால் பேரூருக்கு அரசவனம் என்னும் பெயரும் உண்டு. இக்காட்டில் மாடுகள் அடைக்கப்படும் ஒரு பெரிய பட்டி ஒன்று இருந்தது. மாடுகளோடு காமதேனு என்ற தெய்வப்பசுவும் அதன் கன்றான பட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. கன்றின் கால் பாம்புப் புற்றில் சிக்கிக் கொள்ளக் காமதேனு தன் கொம்பால் புற்றினை இடித்தது. உள்ளிருந்த இறைவன் தன் திருமுடியில் கன்றின் கால் தழும்பையும், காமதேனுவின் கொம்புத் தழும்பையும் ஏற்றார். பட்டியில் இருந்ததால் பட்டிப்பெருமான் ஆனார். காமதேனுவின் மகள் பட்டியால் வெளிப்பட்டதால் பட்டிப் பெருமான் எனவும் அழைக்கப்பெற்றிருக்கலாம். இத்தலத்தில் இருப்பதால் விநாயகப் பெருமானும் பட்டிவிநாயகர் என்றே அழைக்கப்பெறுகிறார்.

*கங்கையும் பனிவெண் திங்களும் விரைத்த கடுக்கையந் தொங்கலும் அரவும்*

*தங்கு பொற்சடையும் முக்கணும் தாதை தாணு என்று உணர்த்த மென்மலர்க்கை*

*அங்குச பாசமணிந்து வெற்பு உயர்த்த ஆரணங்கு அன்னை என்றுணர்த்தி*

*வெங்கலி முழுதும் துமித்தருள் பட்டிவிநாயகன் சேவடி பணிவாம்*

என்று கச்சியப்ப முனிவர் வழி நின்று பணிந்து பட்டிவிநாயகர் அருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்