*முதலைக்கு அருள்*
*ஆலங்குடி பெரியவா* என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றைச் சுற்றியும் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீ மத் பாகவதமே அவரது உயிர்மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீ மத் பாகவதம் சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து அனவரதமும் ஸ்ரீ மத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம் வந்து,
நீங்க ரொம்ப அழகா பாகவதம்சொல்றேள். திகம்பரரா இருந்துண்டு சொல்றதால பொது மக்களும், பெண்களும் வந்து கேக்கணும்னு ஆசையிருந்தாலும், சங்கடப்படறா.
என்றதும்,
அப்டின்னா சந்நியாசம் வாங்கிக்கறேன். எல்லாரும் பாகவதம் கேக்கணும் அவ்ளோதான்
என்று சொல்லி சந்நியாசம் வாங்கிக்கொண்டுவிட்டார்.
ஒரு சமயம் ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட நாஸ்திகனான ஒருவன்,
முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னா விட்டுடுமாம். என்ன கதை விடறார் இவர் என்று நினைத்தான்.
பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை ஸ்நானம் செய்யப்போவார். ஒரு நாள் அவரை சோதனை செய்ய வேண்டி, அந்த துஷ்டன், ஊர்க்குளத்தில் ஒரு குட்டி முதலையைக் கொண்டு வந்து விட்டுவிட்டான்.
சரியாக பெரியவா ஸ்நானம் செய்யும் படித்துறையில் அவன் முதலையை விடவும், அவர் ஸ்நானத்திற்கு வரவும் சரியாக இருந்தது. பெரியவா ப்ரார்த்தனை செய்து, நீரைப் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு நீரில் காலை வைத்ததும் முதலை அவரது காலைக் கவ்வியது.
குருதியாறு ஓட ஆரம்பித்தது. யார் காலையோ முதலை கவ்வியதுபோல்
பெரியவா, பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த துஷ்டன் அவரருகில் வந்தான்.
பெரியவரே, அன்று உபன்யாசத்தில் சொன்னீங்களே. ஸ்லோகம் சொன்னா முதலை விட்டுடும்னு. சொல்றதுதானே. மறந்துபோச்சா?
என்று கேலி செய்தான்.
*காலை முதலை கல்விக் கொண்டிருக்கும் போதும் கதறாமல் அவர் வேடிக்கை பார்ப்பது அவன் புத்திக்கு எட்டவில்லை.*
அப்போதுதான் பெரியவருக்குப் புரிந்தது, அவன் சோதனை செய்ய வந்தவன் என்று.
ஓ, சொல்றேனே என்று கூறி
ஏவம் வ்யவஸிதா புத்த்யா ஸமாதாய மனோஹ்ருதி|
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்ஜன்மனி அனுஸிக்ஷிதம் ||
என்று ஸ்ரீ மத்பாகவதத்தில் அஷ்டமஸ்கந்தம், மூன்றாவது அத்யாயத்தில் வரும் கஜேந்திர ஸ்துதியை கானம் செய்ய ஆரம்பித்தார்.
சரியாக
சந்தோமயேன கருடேன ஸமுஹ்யமான:
சக்ராயுதோப்யகமதாசு யதோ கஜேந்த்ர:||
அதாவது,
பகவானான ஹரி கருடன் மீதேறி விரைந்து வந்து, முதலையின் மீது சக்கரத்தை ஏவி கஜேந்திரனைக் காத்தான்
என்ற வரியை பெரியவா சொல்லும்போது அவரது காலைப் பிடித்திருந்த முதலை திடீரென வெட்டுப் பட்டது போல் துடிதுடித்து இறந்தது.
பார்த்துக்கொண்டேயிருந்த அந்த நாஸ்தீகனுக்கு பயம் வந்துவிட்டது.
அவரது காலைப் பிடித்துக்கொண்டான்.
மன்னிச்சிடுங்க ஸ்வாமி, தெரியாம தப்பு பண்ணிட்டேன். பெரியவங்களை சோதிக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியல.
என்று கதறி அழுதான்.
பெரியவா என்ன செய்தார்?
தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டுவிட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா.
நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா சரிபாக்கறது ஒரு தப்பா. அழாத. என்றார்.
இப்படிக்கூட ஒருவர் இருக்கமுடியுமா? முதலை கடித்து காலில் குருதி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, எவன் அதற்குக் காரணமோ அவனிடம் இவ்வளவு கருணையோடு ஒருவர் பேசமுடியுமா?
சாதுக்களால் மட்டுமே இயன்ற விஷயம் அது.
அவன் அழுதுகொண்டே சொன்னான்.
நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வரதைத் தாங்கமுடியாது..
பெரியவா அவனைக் கருணை பொங்கப் பார்த்துவிட்டுச் சொன்னார்,
நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேறன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலைப் படாதே
நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களை இந்த உடலின் வழியாத்தானே பாக்கறேன். என்னை நீங்க மன்னிச்சுட்டது நிஜம்தான்னா, என்னுடைய சமாதானத்துக்காகவது வைத்தியம் பண்ணிக்கணும்.
சரி, உனக்காக வைத்தியம் பண்ணுவோம். ஆனா, நான் சொல்ற வைத்தியந்தான். சரியா?
சரி.
அதற்குள் இன்னும் சிலர் வந்துவிட்டனர்.
பெரியவா சில மூலிகைகளின் பேரைச் சொல்லி,
அதையெல்லாம் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துண்டு வா. கொதிக்கற எண்ணெய்யை இந்தப் புண்ணில் விட்டா சீக்கிரம் சரியாகும்.
அவர் வாயால் சொன்னதற்கே, கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டாற்போல் துடித்துப் போனார்கள் அனைவரும்.
முதலை கடித்து ரணகளமாயிருக்கும் காலில் கொதிக்கும் எண்ணெய்யை விடுவதா?
பெரியவா? இதென்ன முரட்டு வைத்தியம்?
இதைப் பண்றதா இருந்தா பண்ணுங்கோ. இல்லாட்டா வேற வைத்தியம் வேண்டாம்.
அத்தனை பேரும் உறைந்துபோயிருக்க,
மூலிகையையும் எண்ணெயையும் கொண்டுவரச் சொல்லி, தானே காய்ச்சி, அதைக் கொதிக்க கொதிக்க தன் காலில் சிரித்த முகத்துடன் தானே விட்டுக்கொண்டார் ஆலங்குடி பெரியவா.
அவரது காலில் புண்ணும் வெகு சீக்கிரமாக குணமாகிவிட்டது.
சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்த ஆலங்குடி பெரியவரின் சமாதி முடிகொண்டானில் உள்ளது. இவர் முடிகொண்டான் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்.
Sri Math Bagavath Paravasana Mandapam https://maps.app.goo.gl/W2pcDRKDS58wzEYv6
🌹 👣 🕉️ 🙏
-ஜெகத்குரு பீடாதிபதி
பரமாச்சாரியார்
காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஹர ஹர ஹர சங்கரா!
ஜெய ஜெய ஜெய சங்கரா!
சிவ சிவ சிவ சங்கரா!
*குருவே சரணம்*
*குருவே துணை*
*குருவே போற்றி!.*
அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை பெரியோர் பாட்டில் பிழை சொன்னேன் இந்தப் பாட்டில் கருத்து சொல்வதற்கு அடியேனுக்கு தகுதி இல்லை
ReplyDelete