Thursday, 16 February 2023

சிவபுராண பொருள் விளக்கம்

 சிவபுராண பொருள் விளக்கம்


திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க! அதன் வடிவாக

விளங்கும் இறைவன் திருவடி வாழ்க!

இமைக்கும் நேரமும்கூட என் மனத்தினின்றும்

நீங்காதவனின் திருவடி வாழ்க!

திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை

ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க!

ஆகம வடிவாகி நின்று இனிமையைத்

தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க!

ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடிவாழ்க! 05


மனஓட்டத்தைத் தொலைத்து, என்னை அடிமை

கொண்ட முழுமுதற்கடவுளது திருவடி மேம்படுக!

பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக்கழல்

அணிந்த திருவடிகள் மேம்படுக!

தன்னை வணங்காத அயலவர்க்கு எட்டாதவனாய்

இருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக!

கைகூப்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற

இறைவன் திருவடிகள் மேம்படுக!

கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரப்

பண்ணுகின்ற சிறப்புடையவனது திருவடி மேம்படுக!

*1 பிஞ்ஞகன் -பிறை, கங்கை,அரவம் முதலிய தலைக்கோலங்களை உடையவன், 10


ஈசனது திருவடிக்கு வணக்கம்; எம் தந்தையின்

திருவடிக்கு வணக்கம்.

ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்.

நிறைந்த மங்களம் உடையவனது திருவடிக்கு வணக்கம்.

அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற

மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்.

நிலையாமை உடைய பிறவியை ஒழிக்கின்ற

அரசனது திருவடிக்கு வணக்கம்.

சிறப்புப் (அழகு)பொருந்திய திருப்பெருந்துறையின் கண்

எழுந்தருளியுள்ளநம் கடவுளின் திருவடிக்கு வணக்கம். 15


தெவிட்டாத (வெறுக்காத) இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணை உடையவனுக்கு வணக்கம்.

சிவபெருமானாகிய அவன், என் மனதில் நிலைபெறிருந்ததனால்

அவனுடைய திருவருளாலே அவனுடை திருவடியை வணங்கிச்

சிந்தை (மனம்) மகிழும்படி சிவனது அநாதி முறைமையான பழைமையை முற்பிறப்பில் செய்யப்பெற்ற வினைகளுள்

முகந்து கொண்ட வினை முழுமையும்

*3நீங்க யான் சொல்லுவேன்.

*2 மோய- மோசனம் என்னும் வடசொல்லின் திரிபு.

*3'ஓய' என்று கொண்டு 'கெட' என்றும் பொருள் கொள்வதுண்டு. 20


நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான்,

தன் அருட்கண் காட்ட, அதனால் அவன் திருமுன்பு வந்தடைந்து,

நினைத்தற்கு அரிய அழகுவாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், வானமாகி நிறைந்தும், மண்ணாகி நிறைந்தும்,

மேலானவனே! இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி,

மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே!

உன்னுடைய மிக்க சிறப்பைக் கொடிய வினையை உடையவனாகிய யான், புகழ்கின்றவிதம் சிறிதும் அறிகிலேன். 25


புல்லாகியும் பூடாகியும், புழுவாகியும், மரமாகியும்,

பலவிலங்குகள் ஆகியும், பறவையாகியும், பாம்பாகியும்,

கல்லாகியும், மனிதராகியும், பேயாகியும்,

பூதகணங்களாகியும், வலிய அசுரராகியும், முனிவராகியும்,

தேவராகியும் இயங்குகின்ற இந்த அசையாப் பொருள், அசையும்

பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே... 30


எல்லாப் பிறவிகளிலும் பிறந்து, யான் மெலிவடைந்தேன்,எம்பெருமானே!

உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக்

கண்டு, இப்பொழுது வீடு பேறு பெற்றேன்,

நான் உய்யும்படி என் மனத்தில் பிரணவ உருவாய் நின்ற மெய்யனே! மாசற்றவனே! இடப வாகனனே! 1 மறைகள்

ஐயனே! என்று துதிக்க, உயர்ந்து ஆழ்ந்து, பரந்த நுண்பொருளானவனே! (எங்கும் வியாகபமாய் நிற்பவனே) 35


வெம்மையானவனே தண்மையானவனே,

ஆன்மாவாய் நின்ற குற்றமற்றவனே!

நிலையாத பொருள்கள் யாவும் என்னைவிட்டு

ஒழியக், குருவாய் எழுந்தருளி,

மெய்யுணர்வு வடிவமாய் விளங்குகின்ற உண்மை ஒளியே!

எவ்வித அறிவும் இல்லாத எனக்கு இன்பத்தைத் தந்த இறைவனே!

அஞ்ஞானத்தின் வாதனையை நீக்குகின்ற நல்ல ஞானமயமானவனே! 40


தோற்றம், நிலை, முடிவு என்பவை இல்லாதவனே!

எல்லா உலகங்களையும் படைப்பாய், நிலைபெறச் செய்வாய்,

ஒடுக்குவாய் அருள்செய்வாய்! பிறவியிற் செலுத்துவாய்,

அடியேனை உன்தொண்டில் புகச் செய்வாய்!

மலரின் மணம் போல, நுட்பமாய் இருப்பவனே!

தொலைவில் இருப்பவனே, அண்மையில் இருப்பவனே!

சொல்லும், மனமும் கடந்து நின்ற வேதப்பொருளாய் உள்ளோனே! 45


கறந்த பாலும் சர்க்கரையும், நெய்யும் கூடினது போல

சிறந்த அன்பரது மனத்துள் இன்பம் மிகுந்து நின்று

எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எங்கள் பெருமானே!


*4 ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க,

அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே! எம்பெருமானே!

வலிய வினையை உடையவனாகிய என்னை..


*4 நிறங்கள் ஐந்து . இறைவன் ஐந்து பூதங்களிலும் நிறைந்திருக்கிறான்.

ஐந்து பூதங்களுக்கும் நிறங்கள் உண்டு.

அவை மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும்,

நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும் வானுக்குப்

புகைமையும் எனச் சாத்திரங்கள் கூறும்.


''பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல்

சிகப்பு வன்கால் கருமை, வளர்வான் தூமம்''என்பது

உண்மை விளக்கம். மேலும் சிவபெருமானின் திருமுகங்கள் ஐந்தும்,

ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம் உடையதாய் இருப்பதையும் இது குறிக்கும் என்பர்.


ஈசானம்- படிகநிறம்; தத்புருஷம்- பொன்நிறம்;

அகோரம்-கருநிறம்; வாமம்-குங்குமம் அல்லது செந்நிறம்;

சத்யோசாதம்- அதிவெள்ளை நிறம். 50


மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய

(இருள் மாய) ஆணவம் கெடுதற் பொருட்டு,

புண்ணியம், பாவம் என்கின்ற, அறுதற்கு

அருமையாகிய கயிற்றினால் கட்டப்பெற்று,

வெளியே தோலால் மூடி, எவ்விடத்தும் புழுக்கள்

நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,

மலம் ஒழுகுகின்ற *5 ஒன்பதுவாயிலை

உடைய உடம்பாகிய குடிசை,

குலையும்படி, ஐந்து புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,


.*5. செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய், கருவாய், எருவாய் 55


உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே, மாசற்றவனே!

உன் பொருட்டுப் பொருந்தின அன்பை உடையேனாய்,

மனம் கசிந்து உருகுகின்ற நன்மை இல்லாத சிறியேனுக்குக்

கருணை புரிந்து பூமியின் மேலே எழுந்தருளி,

நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்குத், 60


தாயினும் மேலாகிய தயையை உடையவனாய்

நின்ற உண்மைப்பொருளே! களங்கமற்ற, சோதியாகிய மரத்தில்

பூத்த பூப்போன்ற சுடரே! குருமூர்த்தியே!

(ஒளியாய் இருப்பவனே!) தேனும், அரிய அமுதமும் போல இனியவனே!

பாசமாகிய தொடர்பை அறுத்துக் காக்கின்ற ஆசிரியனே! அன்போடு கூடிய

அருளைச் செய்து, என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழியப்.. 65


பெயராமல் நின்ற பெருங்கருணையாகிய பெரிய ஆறே!

தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே!

ஆராயதார் மனத்தில் மறைகின்ற

(உன்னை உணராதவர்க்குத் தோன்றாமலே இருக்கின்ற) ஒளியை உடையவனே!

என் மனத்தை நீர்போல் உருகச்செய்து, என் அரிய உயிராய் நின்றவனே!

சுகமும் துக்கமும் இயற்கையில் இல்லாதவனே!

அன்பர் பொருட்டு அவற்றை உடையவனே! 70


அன்பர்களிடத்து அன்புள்ளவனே, கலப்பினால்

எல்லாப் பொருள்களும் ஆகித், தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற பேரொளியை உடையவனே !

(சக்தியாய் நிற்பவனே! ஒளி-சக்தி; சிவஞான சித்தியார்)

செறிந்த (நிறைந்த) இருளானவனே! புறத்தே வெளிப்படாத பெருமையுடையவனே!*6 முதல்வனே!

முடிவும் நடுவும் ஆகி, அவையல்லாதும் இருப்பவனே! இழுத்து

(வலிய வந்து உலகியல் வாழ்வைத் தடுத்து) என்னை ஆட்கொண்டருளிய

எனக்கு ஞானத்தந்தையான பெருமானே!

மிகுந்த உண்மை ஞானத்தால் சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்......


*6 துன்னிருளே தோன்றாப் பெருமையனே. உயிர்கள் போல்

ஆணவமலத்தால் அணுகப் பெறாத பெருமைஉடையவனே என்றும் பொருள் சொல்லப்பெறுகிறது.. 75


எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய காட்சியே!

ஒருவரால் நுட்பம் ஆக்குதல் இல்லாத,

இயல்பாகவே நுட்பமாகிய அறிவே!

இறப்பும் பிறப்பும்), நிற்றலும்

(இன்ப துன்ப நுகர்ச்சிகளும்) (அறவடிவினனே!)


எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே!

(உயிர்கள் உன்னுடைய நிலையை முழுவதும் காண்பதற்கு இயலாத)

பெரிய ஒளியே! மகாநதி போன்ற இன்பப் பெருக்கே!

(பேரின்பத்திற்குக் காரணமானவனே!) அப்பனே!

மேலோனே!நிலைபெற்ற தோற்றத்தை உடைய, விளங்குகின்ற ஒளியாகியும்,

சொல்லப் பெறாத நுட்பமாகிய அறிவாகியும்...

-மிகுந்து வளர்ந்து நின்ற என்ரும் பொருள்சொல்வர். 80


மாறுபடுதலை உடைய உலகத்தில்,வெவ்வேறு பொருளாய்க்

காணப்பெற்று வந்து அறிவாய் விளங்கும்

தெளிவானவனே! தெளிவின் தெளிவே! என் மனத்துள்

ஊற்றுப் போன்ற, பருகுதற்கு அரிய அமிர்தமே! தலைவனே!

வெவ்வேறு விகாரங்களை உடைய ஊனால் ஆகிய உடம்பின்

உள்ளே தங்கிக் கிடக்கப் பொறுக்கமாட்டேன் எம் ஐயனே! சிவனே! ஓலம் என்றுமுறையிட்டு... 85


வணங்கி, நின் திருப்புகழை ஓதியிருந்து,

அறியாமை நீங்கி அறிவுருவானவர்கள்,

மறுபடியும் இவ்வுலகில் வந்து வினைப்பிறவியை அடையாமல்,

வஞ்சகத்தை உடைய ஐம்புலன்களுக்கு இடமான

உடம்பாகிய கட்டினை அறுக்க (அடியோடு நீக்க) வல்லானே! நடு இரவில்

(செறிந்த இருளில்) மிகுந்து (சூக்கும) நடனம் செய்கின்ற இறைவனே!

திருத்தில்லையில் ஆடல் வல்லானே!

தென் பாண்டி நாட்டை உடையவனே! 90


துன்பப் பிறவியை அறுப்பவனே!

ஓலம் என்று முறையிட்டுத்

துதித்ததற்கு அருமையானவனை, யான் அறிந்த அளவில்

போற்றித் துதித்து, அவனது திருவடியின்மீது

பாடிய பாட்டின் பொருளை அறிந்து துதிப்பவர்,

சிவநகரத்தில் உள்ளவராய்ச், சிவபெருமன்

திருவடிக்கீழ்ச் சென்று எல்லோரும் துதிக்க,

வணங்கி நிலை பெறுவர்

No comments:

Post a Comment