அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் :
பொள்ளாச்சியை அடுத்த சண்முகபுரத்தில் பாலாற்றங்கரையில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், பாலாற்றின் கரை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் அணைக்கட்டு செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ., தூரத்தில் பாலாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் அணைக்கட்டு, வால்பாறை செல்லும் பேருந்துகளில் ஆஞ்சநேயர் கோயில் ஸ்டாப்பில் இறங்கி சற்று தூரம் நடந்து கோயிலுக்கு செல்லலாம்.
கோயில் சிறப்பு :
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரகார தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது.
கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடக நாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்றுவரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்து செல்வதாக அக்காட்சியை நேரில் கண்ட பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயில் திருவிழா :
ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஆடி மற்றும் தை அமாவாசை, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல், கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய வருடத்தின் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று திருமஞ்சனம், சதகலசாபிஷேகம் நடைபெறுகின்றன. மார்கழி தனுர் மாத பூஜை, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சிறப்பு வழிபாட்டு நாட்களாக உள்ளன.
பிரார்த்தனை :
இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்குகிறது, எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றியடைகிறது, பயம் நீங்குகிறது, நற்புத்தி, சரீர பலம், செயலில் கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குச்சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. தவிர கடன் தொல்லை, விரோதிகள் தொல்லைகளும் நீங்குகிறது.
நேர்த்திக்கடன் :
வேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு துளசி, வடை, வெற்றிலை மாலை சாற்றி, அவல், சர்க்கரை நைவேத்தியம் படைத்தும், சிறப்பு அபிஷேகங்கள் செய்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. மேலும் வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.
No comments:
Post a Comment